Wednesday, March 7, 2018

எஞ்சும் இருள் (சிறுகதை)



இந்தியாவிற்கு விமானத்தில் வரும்போதே 'பல்பு கதையை சொல்லுங்க' என்றாள் வாணி. அவள் முன்பே பலமுறை கேட்டுவிட்ட கதை. நீண்ட பயணத்தின் அசதியை போக்க வேண்டி வேடிக்கையான சீண்டலும், போலியான கண் சிமிட்டல்களுமாக கேட்டாள். ஆனால் புதிய கதையை சொல்லும் அதே ஆர்வம் மனதில் இருந்தது. முழுவதையும் மாறாத புன்னகையுடன் கேட்டுவிட்டு அதே களிப்போடு, 'சின்ன புள்ளையில ரொம்ப வால்பையனாத்தான் இருந்திருக்கீங்க' என்றாள். காதில் ஹெட்போனில் பாட்டு கேட்டபடி வந்த ஹரீஷும் கதை முடிந்தபோது கதை குறித்த தன் ஆர்வத்தை வெளிப்படுத்தும் விதமாக ஹாஹாஹா என்று தன்பாட்டிற்கு சத்தமெலுப்பினான். அக்கதையை சொல்வதில் இதுவரை எனக்கு சலிப்பு வந்ததில்லை. சொல்லும் ஒவ்வொரு சமயமும் ஏதோ ஒரு புதிய விஷயத்தை நான் கண்டடைகிறேன். பார்த்திராத கோணமும், தவறவிட்ட பார்வையும் ஆழ்மனதிலுருந்து அப்போதுதான் எழுந்துவருவதாக தோன்றும்.
ஆனால் தஞ்சாவூர் வந்த ஒரிரு நாட்களிலேயே பல்பு கதையை அவளிடம் சொல்லியிருக்க தேவையில்லை என தோன்றிவிட்டது. சென்ற இடங்களில், உறவினர்களிடம் எல்லாம் பல்பு கதையை நான் சொல்லாமலேயே பேச ஆரம்பித்து விட்டாள். மறைவாக வைத்திருக்க வேண்டும் என நினைத்தது, எல்லோருக்கும் தெரியும்படி பேசி விரிவான ஏதோ ஒரு கதைப்பாடல் போல உருவாக்கிவிட்டாள்.