Thursday, January 11, 2018

தெய்வமரம் (சிறுகதை)



பெரிய சாலையில் மாலைஒளி படும்படி அமர்த்தலாக அமைந்திருந்ததுமங்களவிலாஸ்வீடு. மழைக்கும் வெய்யிலுக்கும் சோர்ந்து காரைகள் பெயர்ந்த பழையபாணி வீடு. அந்த இடம் வந்ததும் தன்னையறியாமல் தலைதூக்கிப் பார்த்துவிடுவது சிவமணியனின் வழக்கம். ஏதோ ஒரு பய உணர்ச்சியோடுதான் அந்த வீட்டிற்குள் நுழைவான் சிவமணியன். அந்த வீடு தரும் அமைதியின்மையை அவனால் புரிந்து கொள்ள முடிந்ததில்லை. முத்தையாவிற்குப் பரம்பரையாக வந்திருக்கும் சொந்த வீடு அது. முத்தையா சாந்தியைத் திருமணம் செய்து கொண்டு வந்தபின்னே வீட்டிற்கு வண்ணப்பூச்சு அடிக்கப்பட்டது. அதற்குமுன் இதைவிட மோசமாக இருந்தது. காம்பவுண்ட் சுவரைத் தாண்டி நீண்ட வாசற்படியில் சரியாகக் கண் தெரியாத முத்தையாவின் அம்மா எப்போதும் அமர்ந்திருப்பாள். உள்ளே வருபவர்களை நோக்கி அவள் எதையோ சொல்கிறாள் எனத் தோன்றும். மாறாத கண்களுடன் வெற்றிலை பாக்கு மெல்வதை உள்ளே வருபவர்கள் தாமதமாகப் புரிந்துக் கொள்வார்கள். இன்று அந்த இடத்தில் முத்தையா அமர்ந்திருந்தார். ஏதோ சிந்தனையில் அமர்ந்திருப்பவன்போல உடலிலிருந்து நகர்த்தி வேறு திசையில் முகத்தை வைத்துக்கொண்டிருந்தான்.

Wednesday, January 3, 2018

நெருஞ்சி 2017 விருது



சிறுகதை தொகுப்பிற்கான வாசகசாலை விருது 2016 டிசம்பரில் கிடைத்தது. நெருஞ்சி விருது 2017ல் அதே டிசம்பரில். விருதுகள் குறித்த எந்த எண்ணமும் அப்போது இருந்திருக்கவில்லை. அதுகுறித்த உற்சாக மனநிலை நினைக்கும்தோறும் வந்துவிடுகிறது. ஒரே நூலுக்கு கிடைத்திருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி. நெருஞ்சி விருது நாவலுக்கான விருது பெற்ற சோ.தருமன் போன்ற மூத்த படைப்பாளியுடன் சிறுகதை விருதை நான் விருதை பெற்றேன் என்பதை வரும் நாட்களில் நினைத்துக் கொள்வேன் என நினைக்கிறேன். அதுவும் தஞ்சையின் இலக்கிய அரசியல் உலகில் என்று இருக்கும் சி.நா.மீ உபயதுல்லா போன்ற பெரியவர் கைகளிலிருந்து பெறுவேன் என்று நினைக்கவில்லை.

நெருஞ்சி விருதை அளிக்கும் முத்தமிழ் விரும்பி நான் அறிந்தவரல்ல. அவரது இலக்கிய செயல்பாடுகள் நீண்டு நெடிய தன்னார்வ தொண்டுள்ளம் கொண்டது. பரபரப்பை தக்கவைத்துக் கொள்ளும் மனநிலையை உடையதல்ல அது. அவர், நந்தி செல்லதுரை, இளையபாரதி, தென்பாண்டியன் போன்றவர்கள் இலக்கிய பரிசளிப்புகளில் எதையாவது செய்யவேண்டும் என முனைப்புடன் தொடங்கிய விருது. முன்பு கோவையிலிருந்து செயல்பட்ட நெருஞ்சி இப்போது திருச்சியிலிருந்து செயல்படுகிறது.