Monday, October 2, 2017

மினி பேட்டி -- பேசும் புதியசக்தி

செப்டம்பர்'17 பேசும் புதியசக்தி இதழில் என் மினிபேட்டி ஒன்று வெளியானது. அந்த பேட்டியை முழுமையாக வாசிக்க விரும்புபவர்களுக்காக, கேள்விகள் எஸ்.செந்தில்குமார்.

1.        உங்களுக்கு பிடித்த எழுத்தாளர் யார் எதற்காக அவரைப்பிடிக்கும்

காலந்தோறும் ரசனைக்கும் வாசிப்பின் வேகத்திற்கும் பிடித்த எழுத்தாளர்கள் மாறிக் கொண்டேயிருக்கிறார்கள். ஒரு சமயம் பட்டுக்கோட்டை பிரபாகராக இருந்தார். பிறிதொரு சமயம் எம்.எஸ்.உதயமூர்த்தியாக இருந்தார். புதிய எழுத்துகள் பரிச்சயம் ஆகும்போது மாறியபடியே இருக்கிறது இந்த பிடித்தல். முன்பு அசோகமித்திரனும், சுந்தர ராமசாமியும், இப்போது ஜெயமோகன். சு.வேணுகோபால், கண்மணி குணசேகரன் போன்றவர்களின் எழுத்துகள் பிடித்தாலும், ஜெயமோகன் சொல்லும் முறைகளையும், தேர்ந்தெடுக்கும் கதைகளையும், அதன் களங்களையும் மாற்றிக் கொண்டேயிருக்கிறார். வாசகனின் முன்முடிவுகளை உடைத்துவிடுகிறார். வாசகனின் சிந்தனை வேகத்தை மீறிச் செல்லும் வேகம் அசாத்தியமான அவரது அனுபவ வீச்சாலும் வாசிப்பு திறத்தாலும் எளிதாக கடந்துவிடுகிறார். ஆகவே ஜெயமோகனே இப்போதைய தெரிவு.

2.        இதுவரை உங்களுக்குப் படித்ததில் பிடித்தது எந்த புத்தகம்? காரணம் என்ன?

தலைமுறைகள், விஷ்ணுபுரம், ஆரோக்கிய நிகேதனம், ஏணிப்படிகள், போரும் அமைதியும், தூங்கும் அழகிகள் இல்லம் என்று பிடித்தவைகள் கலவையாக இருந்தாலும் நாவல் இலக்கியத்தின் உச்சமாக இருக்கும் தல்ஸ்தோயின் போரும் அமைதியும் எனக்கு பிடித்தமானதாக என்றும் இருக்கிறது.
காரணம் அதன் களம், பாத்திரங்களின் வேறுபாடுகள், ஒவ்வொரு பாத்திரமும் அதனளவில் முழுமையானதாக கொண்டிருந்தல் என்று நிறைய சொல்லலாம். அதிகாரம் அளிக்கும் மனநிலையும், எளிய மனிதர்களின் பெருதிரள் மனநிலையும் என்று ஒவ்வொரு கோணத்திலும் நாவல் விரிந்து செல்லும். பியர், ஆந்த்ரே, குட்டுசோவ், நடாஷா என்றும் எனக்கு மறக்க முடியாத பாத்திரங்கள்.

3.        நீங்கள் திறந்த மனதோடு சொல்லுங்கள் இதைப்போல நாமும் எழுதவில்லையே என பொறாமைப்படுகிற புத்தகம் உண்டா?

நிறைய உண்டு. கவபட்டா எழுதிய தூங்கும் அழகிகள் இல்லம் பொறாமையாக நினைத்திருக்கிறேன். அதே போன்று எழுதவேண்டும் என்கிற எண்ணம் அதை படித்ததுமே எழுந்தது. ஜெயமோகன் எழுதிய விஷ்ணுபுரம் மற்றொரு முக்கிய நூல். ஒரு கனவை வீஸ்தீரமான பரப்பில் விரித்து வைக்கும் முடிவின்மையின் அழகுள்ள நாவல். அதன் வடிவம், உருவகம், சாராம்சம் அனைத்தும் பொறாமைக் கொள்ள வைக்கிறது. கண்மணி குணசேகரனின் சிறுகதைகள் சில, இப்படி கதைகள் இன்னும் எழுதவில்லை என்று பொறாமை கொள்ள வைத்திருக்கிறது.

4.        உங்களது பொழுது போக்கு என்ன?

முன்பு ஸ்டாம்பு சேகரிப்பு இருந்தது. இப்போது வெறும் புத்தக வாசிப்புதான். சில சமயங்களில் பழைய பாடல்களை கேட்பதுண்டு.

5.        தற்சமயம் என்ன எழுதுகிறீர்கள் என்ன வாசிக்கிறீர்கள்

கி.ராஜநாராயணன் எழுத்துக்களை முழுமையாக வாசித்துக் கொண்டிருக்கிறேன். சமீபமாக மூன்று சிறுகதைகள் எழுதியிருக்கிறேன். ஒரு குறுநாவலும் ஒரு நாவலும் எழுதிக் கொண்டிருக்கிறேன்.