Tuesday, October 3, 2017

அலர் (சிறுகதை)


மதியதூக்கத்தை கெடுத்துவிட்டது அந்த செய்தி. மற்றநாளாக இருந்தால் அலுவலகம் முடிந்துவிட்டு வந்தபின்தான் தெரிந்திருக்கும். மதியஉணவுவை முடித்துவிட்டு வழக்கம்போல வாசலில் வந்து வேடிக்கை பார்த்த நேரத்தில் தெருவில் நடந்து சென்றுக் கொண்டிருந்த வெங்கட் விடுபட்டதை யோசிக்கிறவனாக திரும்பி விஷயம் தெரியுமா’ என்றான். தெரியாதது ஒரு குற்றம்போல் அவனுக்கு பட்டிருக்கவேண்டும். ‘என்ன?’ என்று கேட்டவுடன் மெதுவாக நான் நின்றிருந்த வாசல்வரை வந்து அவன் எப்போதும் இருக்கும் கலகலப்பு தோரனையை மெனக்கெட்டு திருத்தியதுபோல் தீவிரமான முகக்குறிகளோடு 'மூன்றாம் தெரு குணசேகரன் இருக்காருல்ல, ஹைஸ்கூல் வாத்தியாரு, அவர் பொண்டாட்டி இன்னிக்கு 12 மணிக்கு ஆக்ஸிடன்ல செத்துபோயிடுச்சி' என்றான். அவன் சொன்ன விதத்தாலே அந்த செய்தி தூக்கிவாரிப்போட்டது. போனவாரமாக இருக்கலாம், குணசேகரன் உடல் நலம் இல்லாமல் இருந்த அவர் மனைவியை வண்டியின் பின்னால் வைத்து கிருஷ்ணன் கோயில் தெரு வழியாக டாக்டர் வீட்டிற்கு அழைத்து சென்ற சித்திரம் நினைவிற்கு வந்தது. அவர் மனைவி நாற்பது வயது பெண்மணி, எப்போது சோர்ந்து இருப்பது போன்று அமைதியாக காணப்படும் முகம். சிரிக்கும்போதுகூட சிரிக்கலாமா என்று யோசித்துவிட்டு சிரிப்பதுபோல இருக்கும். யாரிடமும் அதிர்ந்துகூட பேசுபவரல்ல அவர். அப்படிப்பட்டவரும் நேர்ந்த சோகம் சற்று அதிக அதிர்ச்சியாக இருந்தது. பதற்றம் வெளிப்படுத்தாமல் ‘என்ன ஆச்சு’ என்றேன். 'சரியா விவரம் தெரியல, இன்னிக்கு தொம்மங்குடி சைடுல பொண்டாட்டியோட டூவீலர்ல போயிருக்காரு, பின்னாடி வந்த பஸ்சு பிரேக் பிடிக்காம அவங்க மேல மோதிருக்கு போல, அதுல ரெண்டு பேருக்கும் அடி, அவருக்கு கொஞ்சம் அடி, அந்தம்மா மண்டையில அடிப்பட்டு அப்படியே ஸ்பாட்லே காலி’. சொல்லும்போது எந்த சொல்லும் மாறிப் போய்விடக்கூடாது என்கிற பயம் இருப்பதுபோல சரியாக மிக நிதானமாக கைகளைக்கூட அடக்கமாக வைத்துக்கொண்டு பேசினார். 'தெரு ஜனமே ஆஸ்பிடலுக்குதான் போயிருக்கு, ஆனா பொழைக்க வைக்க முடியலையாம், சரி நா வாரேன்' என்று முக்கிய விஷயம் நினைவு வந்தவன்போல் அவசரமாக கிளம்பினான். அவன் போவதையே நெடுநேரம் ஏன் என்று தெரியாமல் கவனித்துவிட்டு உள்ளே சென்றேன்.
வண்டியை இன்று சர்வீஸ் விடவேண்டும். ஆனால் வண்டியை எடுக்கவே பயமாக இருந்தது. ரோட்டில் சிதறி ஓடும் ரத்த வெள்ளம்தான் கற்பனையில் ஓடியது. இறந்த பெண்மணியின் கணவரான குணசேகரன் வயதில் மூத்தவர். பேட்மிட்டன் விளையாட போகும்போதெல்லாம் சந்தித்திருக்கிறேன். நல்ல ப்ளேயர், நின்று விளையாடுபவர். நல்ல உடற்கட்டை இந்தவயதிலும் கொண்டிருப்பவர். இனி உடல்மீதான அக்கறையை அவர் பேணமுடியுமா என சந்தேகம் ஏனோ தோன்றியது. இன்று முழுவதும் அவர் ஒழுங்கற்ற மனநிலையில்தான் இருக்க போகிறார். விசாரிக்க வரும் மக்களை பார்க்க நிச்சயம் அவருக்கு சங்கடமாக இருக்கும். ஓடிஒழியவும் முடியாத சங்கடம். மனைவி மரணத்திற்கு காரணமாக இருந்தவராக பார்க்கப்படும் ஒருவரை மற்றவர்கள் என்ன சமாதானம் சொல்லப் போகிறார்கள். காலமெல்லாம் அந்த குற்றவுணர்ச்சி அவருக்கு இருக்கப்போகிறது. எதை செய்தாலும் அது அவரை ஏதோ ஒருவகையில் காயப்படுத்தபோகிறது. மகள் திருமணம், வளைகாப்பு, அவள் குழந்தை காதுகுத்து என்று எதை அவர் முழுதிருப்தியுடன் செய்ய முடியாது. அடுத்த தெருவில்தான் இருக்கிறார். அவரை முதலில் பார்க்க வேண்டும், தோளில் கைபோட்டு அவருக்கு சமாதானமாக எதாவது பேசவேண்டும் என தோன்றியது.
மாலை புவனாவின் காபியை எதிர்ப்பாக்காமல் வெளியே கிளம்பினேன். கிருஷ்ணன் கோயில் வாசலில் நின்றிருந்த சோமு மாமாவின் முகம் என்னைக் கண்டதும் லேசாக சோகமடைந்தது. கோயில் திண்ணையில் அவரை அடிக்கடி பார்க்கமுடியும். உள்ளே கோயில்மணியின் ஓசை மூச்சுவாங்கல் போல விடாது ஒலித்துக் கொண்டிருந்தது. 'கொடுத்துவைக்கல பாரேன், விதிக்கு முன்னாடி ஒன்னுமே இல்ல நாமெல்லாம். ரெண்டு இட்லி சாப்பிடகூட முடியல, என் பால்ய நண்பன், ரெண்டு பேரும் காலேஜு வரைக்கும் ஒன்னா படிச்சோம். அவன் பொன்னு அடுத்த மூணுமாசத்துல கல்யாணம் அதுக்குள்ள இப்படி' என்றார். என் முகத்தில் தெரிந்த பரிதாபத்தை கண்டு சோமுமாமாவின் முகம் கோபத்தால் கன்றிப்போனது 'கால்மேல பின்னாடி வீலு ஏறி இறங்கிடுச்சு. கால் அப்படியே தூண்டாயி தனியே வந்துடுச்சாம் பரிதாபம் போ'. அப்படி உயிரோடு இருந்திருந்தால் இன்னும் அதிகம் கஷ்டத்தை அனுபவித்திருக்க வேண்டியிருக்கும் போனதே நல்லது என அவருக்கு சமாதானம் கூறினேன். அங்கே விநாயகம் வந்துவிட்டார். அவருக்கு எந்த இடத்தில் எப்போது மக்கள் கூடுகிறார்கள் என்கிற விவரம் தெரிந்துவிடும். அங்கே உடனே பிரசன்னமாகிவிடுவார். 'ஒரு பையன் இருக்கிறானாம் இங்கிலாந்துலயோ சீங்கப்பூர்லயோ, அவன் வரத்துக்கு வெயிட்டிங், அவன் வந்து என்ன சண்ட போட போறானோ, ஏற்கனவே அவன் அம்மாவ சரியாக கவனிச்சுக்க மாட்றீங்கன்னு சண்ட போட்டுத்தான் போயிருக்கான்'. காய்கறியோ எதையோ வாங்க அந்த பக்கம் போய்கிட்டுருந்த நவநீதம் 'அதெல்லாம் சரியாயிடும்பா, என்ன பன்றது நாம் நெனைக்கிறதெல்லாம் நடந்துடுமா' என்றார். ‘அதெப்படிங்க’ என்று நவநீதத்திற்கு எதிராகவும் விநாயகத்திற்கு ஆதரவாகவும் ஒருவர் அங்கு வந்துவிட்டிருந்தார். பேச்சின் வளர்ச்சியில் லயித்து எதையாவது சொல்லவேண்டும் என்கிற ஆவல் வந்தது. ஆனால் நினைத்திருந்தவைகள் தேவையற்ற வெற்று வார்த்தைகளாகவே இருந்தன. அவர்கள் முன்னமே நான் நினைத்தவைகளை பேசினார்கள். பேச எதுவும் கிடைக்கவில்லை.
குணசேகரனை கண்டு சற்று ஆறுதலாக பேசவேண்டிய வார்த்தைகளை கோர்வையாக நினைத்துப் பார்த்துக்கொண்டேன். வீட்டிற்கு வந்து புவனாவிடம் சொன்னதும், மறுத்தால் நான் கேட்கப்போவதில்லை என்று முடிவுக்கு வந்துவிட்டவள் போல் 'எதாவது சாப்பிட்டு காபி குடிச்சுட்டு போங்க, அங்க சாப்பிட எதுவும் கொடுக்கமாட்டங்க, அப்புறம் உங்க இஷ்டம்' என்றாள். நான் சாப்பிட போகவில்லை என சொல்ல வந்தவன் பேசாமல் குழப்பமாக வெளியே கூடத்தில் வந்து அமர்ந்துக் கொண்டேன். நினைக்க நினைக்க மனதில் சலிப்பும் வெறுப்பும் வளர்ந்துக் கொண்டேயிருந்தது. சற்று நேரத்திற்கெல்லாம் தெரு அமைதியாகிவிட்டிருந்தது, கேலி, கிண்டல்கள், உச்சதொண்டை விளிப்புகள் இல்லாமலும், தேவையற்ற பேச்சுகள் பரிமாறிக் கொள்ள வேண்டாம் என்பது போலவும் இருந்தது.
வீட்டுவேலைக்கு வரும் மல்லிகாக்காவிற்கு சில விவரங்கள் தெரிந்திருந்தன. வரும்போதே பதறியவள்போல புடவை சரசரக்க வேகமாக வந்தாள். 'அவரு கொஞ்சம் அவசரபட்டுடாராம், திருப்பதுல கொஞ்சம் நிதானமா போயிருந்தா தப்பிச்சிருக்கலாமாம். மெதுவா போங்க மெதுவா போங்கன்னு அப்பகூட அவரு பொண்டாட்டி சொல்லிச்சாம், பின்னாடி சக்கரம் வயித்துமேல ஏறி, குடலெல்லாம் வெளியே வந்துடுச்சாம், கடைசியா என்னய இப்படி பண்ணீடிங்களேன்னு கதறி அழுதுச்சாம் அந்த பொம்பள' என்று கூறினாள் மல்லிகாக்கா. புவனா அதிர்ச்சியாக அவளை பார்த்தபடி ‘ரோட்ல ஜனங்க மெதுவா போவகூடாதா? அப்படி என்ன அவசரம் இவங்களுக்கு’ என்றாள். உள்ளேபோய் 'என்ன சொல்றீங்க அக்கா, கால்ல ஏறிடுச்சுன்னுல சொன்னாங்க’ என்றேன். ‘அது இல்லையாம் தெரியாம சொல்லியிருப்பாங்க, இப்ப நான் கேட்டுட்டு அந்த தெருவழியாதான் வந்தேன். அந்த வீட்டு ஜனங்களே சொன்னாங்க' என்றாள்.
பொதுவாக நாம் பேசினாலும் நின்று பேச கூச்சபடும் மல்லிகா அக்கா இன்று இயல்பைவிட்டு கலகலப்பாக பேசுகிறார். மனிதர்களுக்கிடையே இருக்கும் பேதங்களை குறைத்து நட்பாக்கிவிட்டிருக்கிறது இந்த விபத்து. ஆனால் மிகுந்த சங்கடத்தை ஏற்படுத்தின அவரின் வார்த்தைகள். சில கணவன்மார்களின் பொறுப்பற்ற தன்மையால் பெண்களின் முன்னால் ஆண்கள் சங்கோஜப்பட்டு நிற்கவேண்டியிருக்கிறது. ஆனால் குணசேகரன் அறிந்து எதையும் செய்திருக்க வாய்ப்பில்லை. தன் கண்முன்னால் எதிர்பாராத ஒன்று நிகழும்போது அவர் என்ன செய்துவிடமுடியும். செய்யாத தவறுக்காக அவர் மூலையில் அமர்ந்து அழுதுக்கொண்டிருப்பார்.
ஒலிப்பெருக்கியோடு ஆட்டோ அங்கங்கே நின்று ஆடியபடி தெருவழியாக வந்தது. திடீரென புழுதிபறக்க வேகத்தை கூட்டி பின் மீண்டும் மெதுவாக வந்து அது முக்கிய செய்தி என தெருவாசிகளுக்கு உணர்த்தியது அந்த ஆட்டோ. 'மரண செய்தி!, மூன்றாம் தெருவை சேர்ந்த குப்பல் வீட்டு மருமகளும், குணசேகரன் அவர்களின் மனைவியுமான திருமதி கே.பத்மா இன்று காலை இயற்கை ஏய்தினார். அன்னாரது இறுதி ஊர்வலம் நாளை மதியம் 2 மணியளவில் அவர்களது இல்லத்திலிருந்து புறப்படும் என்பதனை ஆழ்ந்த வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.' வார்த்தையின் உச்சரிப்பை சிலஇடங்களில் கூட்டியும் குறைத்தும் கேட்பவர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தினார் அறிவிப்பாளர். பத்தடி தள்ளிப்போனபின் மீண்டும் முதலிலிருந்து ஆரம்பித்தார். ஆட்டோவின் பின்புறம் ஆழ்ந்த இரங்கல் என்று போட்டு பிறப்பு இறப்பு தேதியோடு அவர் படம் இடம்பெற்ற போஸ்டர் நாலு சட்டங்களுக்கிடையே தொங்கியது. களையான முகம். குங்குமம் வைத்த வட்டமுகம், சாந்தத்துடன் இந்த மரணத்தை முன்பே அறிந்தவர் போல் சிரித்துக் கொண்டிருந்தார்.
பைக்கோடு நின்று போகும் ஆட்டோவை பார்த்துக் கொண்டிருந்த ராஜேஷ், சாவியை திருகி எஞ்சினை அணைத்துவிட்டு 'நேத்துகூட என்கிட்ட பேசிகிட்டு இருந்தாங்கலே' என்று திரும்பி என்னைப் பார்த்து கூறினார். மையமாக தலையசைத்தேன். 'சேப்பா, கட்டயா கொஞ்சம் பூன கண்ணா இருப்பாங்களே, இந்த லெஷ்மி ஜவுளிக்கடை அம்மாதானே இவங்க' என்று சந்தேகப்பட்டார். 'ஆமாங்க அவங்கதான்' என்றார் பழைய பேப்பர்காரர். ஆட்டோவிற்கு வழிவிட தள்ளுவண்டியை ஓரமாக நிறுத்திவிட்டிருந்தார். ராஜேஷ் இன்னும் திறந்த வாயுடன் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை. இந்த அம்மா வண்டி ஓடிக்கிட்டு இருக்கும்போது இறங்கபாத்துதா இல்ல, இவரு வண்டிய விட்டுடாரா தெரியல, இவங்க விழுந்தத பார்த்து பஸ்சுகாரன் எப்படியெல்லாமோ திலுப்பி பாத்துருக்கான். பிரேக்மேல ஏறி நின்னுகூட, என்ன, நிக்காம பின்னாடி வந்து வீலு அந்தம்மா மண்டமேல ஏறிடுச்சு, எல்லாம் தலவிதிங்க'.
ஒரு முறை நண்பனின் அப்பா பைக்கில் செல்லும்போது பின்னால் வந்த சரக்கு லாரி அவரை இடித்து கீழே தள்ளி பத்தடி இழுத்து சென்று அவர் பிட்டத்தின் மீது நின்றது முன்சக்கரம். விபத்து நடந்தபின் அதைக் கண்டு கதறி அழுத நண்பன் மனநிலையை நினைக்கும்போது இன்று மனதை கலவரப்படுத்துகிறது. அவனிடம் நல்லதாக சாந்திப்படுத்தும் விதமாக நாலு வார்த்தைகூட அன்று பேசவில்லை. குணசேகரனிடம் அப்படி இருக்ககூடாது. இன்று முடியாதபட்சத்தில் நாளை அவசியம் அவரிடம் பேசவேண்டும். நாளை அலுவலகத்தில் ஆடிட்டிங் வேலை, இருந்தாலும் லீவோ, முன்அனுமதியோ எடுத்துக் கொள்ளவேண்டும்.
அன்று மாலையே நாளை அலுவலகத்திற்கு பர்மிசன் எடுத்துக்கொள்வதைப்பற்றியும் குணசேகரன் வீட்டு இழவிற்கு செல்வதன் அவசியத்தைப் பற்றியும் புவனாவிடம் முதலில் எடுத்துக் கூறினேன். முன்பே தெளிவாக அவளுக்கு சொல்லிவிடுவது செல்லும்போது இடையூறு இல்லாமல் இருக்கும் எப்போதும்போல் ‘மகன பள்ளிகூடத்துல விட்டுட்டு எங்கேயோ போங்க’ என்றாள்.
இரவில் அமைதியாக தூங்க முடியவில்லை. எண்ணங்களை முடிந்தளவு கட்டுப்படுத்தி தேவையற்றவைகளை யோசிக்காமல் இருக்க முயற்சித்தேன், நடுவே புத்தகங்களை புரட்டிக் கொண்டிருந்தேன். ரோஜாப்பூ அல்லது செவந்தி மாலையாக சுமங்கலியான அவர் மனைவிக்கு வாங்கிச் செல்லவேண்டும். குணசேகரனைப் பார்த்து ஆறுதலாக ஒரு வார்த்தை பேச முடியவில்லை என்றாலும் கனிவாக ஒரு பார்வையாவது பார்க்க வேண்டும். கனவா நினைவா என்று தெரியாமல் படுத்துக்கிடந்தேன். ஒரு கெட்ட கனவு வந்து பதறி எழுந்தமர்ந்தேன். அந்த கனவு என்ன என்று யோசித்தும் நினைவிற்கு வரவில்லை. சரியா தூங்கலையா என்று காலையில் எழுந்ததும் புவனா கண்களை கவனித்துவிட்டு கேட்டாள்.
மூன்று வீடு தள்ளி இருக்கும் நூலகத்திற்கு காலையிலேயே கூட்டமாக இருந்தது. கையெழுத்திட்டபோது பத்தாவது எண்ணாக இருந்தது. முக்கியமான ஒன்றை அவர்கள் காரசாரமாக பேசிக்கொள்வது எதைப் பற்றி என முதலில் புரியவில்லை. போக்குவரத்து, ஆம்புலன்ஸ், மருத்துவமனை, வீடு என்று விஷயங்கள் போனபோதுதான் அது குணசேகரனின் மனைவி பற்றியது என புரிந்தது. அந்த செய்தி பேப்பரில் வந்திருக்கிறது என அவர்களின் பேச்சினுடே புரிந்தது.
'அந்த ஆக்ஸிடென்ட் பேப்பரல்ல வந்திருக்கா என்ன' என்று கேட்டபோது பேச்சு நின்று அமைதி நிலவியது. அந்த குழுவில் புதியவர்களை சேர்க்க விரும்பாதவர்கள்போல யாரும் பதிலளிக்கவில்லை. யார் சொல்வது என்கிற யோசனையை உடைத்து ஒருவர் 'ஆமா எல்லா பேப்பர்லேயும் வந்திருக்கு, பேப்பர்காரன் சும்மா விடுவானா' என்றார்.
சில பேப்பர்களை தேடி இறுதியில் வட்டார செய்தி வந்த ஒரு பேப்பரில், ‘நேற்று மதியம் தொல்காப்பியர் சதுக்கம் பகுதியில் ஒரு மினி பஸ் ஸ்கூட்டி மோதலில் கே.பத்மா (45) என்கிற பெண்மணி இறந்தார். ஸ்கூட்டியை ஓட்டிவந்த காயத்ரி (22) லேசான காயத்துடன் உயிர் தப்பினார். மினி பேருந்தை ஸ்கூட்டியில் வந்தவர்கள் பின்பக்கமாக இடித்ததால், பின்னால் பயணம் செய்த பத்மா நிலைதடுமாறி கிழேவிழுந்தார். தலையில் பலமாகஅடிபட்ட அவரை மருத்துவமனை எடுத்து செல்லும் வழியில் இறந்தர்.’
எல்லா தினசரியிலும் இதே செய்தி ஒரு சொல்கூட மாறாமல் வந்திருந்தது. அங்கிருந்தவர்களின் பேச்சுகளில் வெளிப்பட்ட விரக்தி நேர்மையானதாக இருந்தது. சரியாக வண்டி ஓட்டத்தெரியாத பெண்ணை அனுப்பியது தவறு என்று ஒரு பேச்சு வந்தது அதுவே சரி என்றும் விவாதிக்கப்பட்டது. அதை தவிர்த்திருக்க பல்வேறு யோசனைகள் பரிமாறப்பட்டன. எல்லோருக்கும் ஒரு பார்வை இருக்கிறது. வந்திருக்கிற செய்திகூட எந்தளவிற்கு உண்மையாக இருக்கும் என தெரியவில்லை. என் பங்கிற்கு எதாவது சொல்லவேண்டும் என நினைத்தேன் யோசிக்கும் முன்பே அவர்கள் பேசிவிடுவதால் எப்போதுபோல பேசுவதற்கு எதுவுமில்லாமல் அவசரமாக வீட்டிற்கு நடந்தேன்.
வாசலில் நின்றிருந்த புவனா 'எங்கெல்லாம் தேடுறது, எங்க போயிட்டிங்க. அவர் வீட்டுக்கு போகலையா? பையனும் ரெடி, உங்களுக்காக தான் வெயிட்டிங், சீக்கிரம் கிளம்புங்க' என்றாள். யூனிபார்மில் மகன் விஷ்வா சிரித்தபடி நின்றிருந்தான். 'இல்ல நா போகல' என்றேன். அவள் 'ஏன்' என்று இழுத்தது எரிச்சலாக இருந்தது. ‘ஏன்னா?’ சத்தமாக கத்தினேன். ‘ஏன்னு சொல்லிட்டு போங்க’ என்று பின்னாடியே வந்தாள். ‘பொண்டாட்டிய கொலை பண்ணுன ஆளையெல்லாம் போய் பாப்பாங்களா? விடு, ஆபீசுல முக்கியமான வேலை கிடக்கு, ரெடியாயிட்டு வாரேன் இரு.' என்று அவசரமாக குளிக்க செல்ல ஆயத்தமானேன்.
(உயிர் எழுத்து ஏப்ரல் 17 இதழில் வெளியான கதை.)

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

மனதை கனக்கச் செய்யும் கதை
நன்றி