Saturday, June 11, 2016

முன்னுரை: சாமத்தில் முனகும் கதவு சிறுகதை தொகுப்பு



எழுதுவதைத்தவிர வேறு கதியில்லை என்று வந்தபோதுதான் எழுத ஆரம்பித்தேன். அதுவும் எழுதி என்ன ஆகபோகிறது என்கிற‌ பெரும்தயக்கதோடு. இத்தனைக்கும் என் சிறுவயது லட்சியம் எழுத்தாளன் ஆவதாகத்தான் இருந்தது. சிறுவயதில் என் வீட்டை சுற்றியுள்ள என் வயதொத்த சிறுவர்களுக்கு இட்டுக்கட்டி கதைகளைகூறி சந்தோஷப்படுத்திய‌ இடமான‌ சித்தி விநாயகர் கோவிலில் அமர்ந்து வேண்டிக் கொண்டது இன்றும் நினைவிருக்கிறது. மேஜைமுன் அமர்ந்து பேனா பிடித்து வடக்கே பார்த்து யோசிக்கும் என் சித்திரம் அப்போதிருந்தே என்மனதில் இருக்கிறது. படிப்பு, வேலை, அலைச்சல்க‌ள், என்று தேவையற்ற வேலைகளில் நான் ஈடுபடுவேன் என்று இன்றுவரை நினைத்ததில்லை. எழுத்தாளனுக்கு தேவையான அகங்காரமும், எந்த வேலையும் சரியாக செய்ய தெரியாமையும் எப்போதும் என் வாழ்வில் தொடர்ந்து வருவதை அவதானித்து இருக்கிறேன். என் சிறுவயதில் என் அம்மா ஒளித்துவைத்து பென்சிலால் பேப்பரில் இருபக்கங்களிலும் கதை எழுதுவதை கவனித்திருக்கிறேன். ரொம்பநாள் வரை கதையெழுதி பிரசுரிக்க அனுப்பியிருக்கிறார். இதுவரை ஒரு கதையும் வந்ததில்லை. இந்த ஒற்றை ஆதாரத்தைத் தவிர என் குடும்பவகையில் எழுத்தாளர் என்று யாருமில்லை. என் அம்மாவின் ஆசை, அவர் மனதோடு கூறிய ஆசிகள் என்னிடம் வந்துவிட்டதாக நான் நினைத்துக் கொள்கிறேன். இத்தொகுப்பு அவர் கைகளில் வரும் நாளில் நிச்சயம் அவர் கண்களைப் பனிக்கச் செய்யும்.

Friday, June 10, 2016

அணிந்துரை: கே.ஜே. அசோக்குமாரின் கதையுலகம் -- பாவண்ணன்



தொண்ணூறுகளின் நடுப்பகுதியில் கணிப்பொறியில் நேரிடையாக தமிழில் எழுதும் முறை பரவலாக அறிமுகமானபோது, அப்போது எழுதிக்கொண்டிருந்த ஒருசிலர் உடனடியாக அந்தப் புதுமுறையைப் பயின்று தேர்ச்சி பெற்றுவிட்டார்கள். தினந்தோறும் கணிப்பொறியைக் கையாளக்கூடியவனாக இருந்தும்கூட, என்னால் அப்படி உடனடியாக  மாறமுடியவில்லை. ஒரு படைப்பை முழுமையாக கையெழுத்துப் பிரதியாக எழுதி வைத்துக்கொண்டு, அதற்குப் பிறகு ஓய்வாக அதைப் பார்த்து கணிப்பொறியில் எழுதும் வழிமுறைதான் எனக்கு வசதியாக இருந்தது. கணிப்பொறி என்பதை கிட்டத்தட்ட ஒரு தட்டச்சுப்பொறியாகவே நான் பயன்படுத்தி வந்தேன்.