Tuesday, October 13, 2015

உறக்கம் எப்படி இருக்க வேண்டும்

எனக்கு ஒரு நண்பர் இருந்தார், அவருக்கு தூக்கம் வருவதில் பிரச்சனை இருப்பதாக எப்போது சொல்லிக் கொண்டிருப்பார். நான் தூங்கும்போது என் அறைக்கு வந்து சில டிப்ஸ்களை கேட்டுச் செல்வார். நான் நன்றாக தூங்குவதாகவும் எந்த பிரச்சனையும் இன்றி ஆழ்ந்த உறக்கம் கொள்வதாகவும் பொறாமைகூட‌ படுவார். அப்போது ஒரு சின்ன வேலையில் இருந்தேன். என் அறைக்கு பக்கத்தில் வேலைத் தேடிக்கொண்டிருந்த அவர் இருக்கும் அறை இருந்தது. மாலை ஆறு மணிக்கு டீ அருந்துவதை நிறுத்த சொன்னேன். இன்னிக்கு பரவாயில்லை கொஞ்சம் தூக்கம் வந்தது என்பார். அடுத்த நாள் வரும்போது கால்களை நனைத்துவிட்டு தூங்க சொன்னேன். இன்னிக்கும் கொஞ்சம் தூக்கம் வந்தது என்பார். சாப்பாட்டை முன்பே முடிக்க சொன்னேன். அதையும் செய்து கொஞ்சம் தூக்கம் வந்தது என்பார். அவர் விரும்புவது நல்ல ஆழ்ந்த தூக்கத்தை. ஒரு நாள் வந்தபோது உங்கள் தினப்படி வேலைகளை கூறுங்கள் என்றேன். காலையில் எழுந்தது டீ, பின் பத்திரிக்கை படித்தல், பின் சிற்றூண்டி, படித்த பத்திரிக்கையிலிருந்து அழைத்திருந்த வேலைக்கு செல்லுதல் பின் மதியம் உணவு பின் அறைவந்து ஒரு தூக்கம் போடுவது என்றார். அதற்குபின்? அதற்கு பின் எங்கே செல்வது அப்போதே மாலை வந்துவிடும் வெளியே செல்லமுடியாது என்றார். விளையாட்டாக சொன்னாரா சீரியசாக சொன்னாரா தெரியவில்லை ஆனால் மதியம் நான்கு மணிநேரம் தூங்கும் ஒருவர் எப்படி இரவில் தூக்கமுடியும் என யோசிக்கவில்லை.

Thursday, October 8, 2015

மாட்டுக்கறியும் மனிதக்கறியும்

மாட்டுக்கறிக்கு தமிழகத்தில் பெரிய மதிப்பெல்லாம் இல்லை. மாட்டுக்கறியைகூட மறைமுகமாகத்தான் வெளியிடங்களில் விற்கிறார்கள். அந்த விற்பனைக் கடைகூட தனியே எங்கேயோ இருக்கும். அதிகம் வெளியில் தெரிய அந்த கறியை தொங்கவிடுவதுகூட இல்லை. அதேவேளையில் மாட்டுக் கறியை வாங்குவதும், தின்பதும் பாவமாக தமிழகத்தில் பார்க்கப்பட‌வில்லை. ஆனால் வட இந்தியாவில் மாட்டுக்கறி உண்பது ஆச்சாரமான இந்துவுக்கு மட்டுமல்ல எல்லா இந்துகளுக்கும் எதிரானதாகத்தான் நினைக்கிறார்கள். என் வடஇந்திய நண்பர்களிடம் மாட்டிறைச்சியை புசிப்பதுப் பற்றிக் கேட்டபோதெல்லாம் மிக காட்டமாக எதிர்வினையாற்றினார்கள். அவர்களிடம் மாட்டுக்கறியை உண்பவன் முஸ்லீம் என்கிற எண்ணமே இருக்கிறது. தலித்துகளில் பெரும்பாலோர் மாட்டுக்கறியை உண்பதும் அது அவர்களின் பழமையான பழக்கங்களில் ஒன்றிலிருந்து வந்தது என்று அறியாதவர்களாக இருக்கிறார்கள். ஏன் விவேகானந்தர் போன்ற நவீனயுக சாமியார்கள் மாட்டிறைச்சியையும் அதை உண்பதையும் இந்துமதம் சார்ந்ததுதான் என்று ஒத்துக்கொள்வதை ஏற்றுக்கொள்ளாதவர்களாக இருக்கிறார்கள் என புரியவில்லை.

Saturday, October 3, 2015

புலி குழந்தைகள் விட்டாலாச்சார்யா


சிம்பு தேவன் படம் எப்போது புதிய சிந்தனைகளோடு ஒரே மாதிரியான கதைஅம்சங்களிலிருந்து வேறுபட்டு இருக்கும். பெரிய ஹீரோவான விஜயுடன் அவர் சேர்ந்து ஒரு படம் செய்வதும் லில்லிபுட் போன்ற வித்தியாசமான கதாபாத்திரங்களை கொண்டும் இருக்கிற புலி படத்தை பற்றி கேள்விப்பட்டது பார்க்கவேண்டும் என்று தோன்றியது.

குழந்தைகளுக்கு பிடிக்கும் என்பதால் மகனை அழைத்துக் கொண்டு புலி படத்திற்கு செல்ல நேர்ந்து விட்டது. ஆனால் குழந்தைகளுக்கு இந்த படம் பிடிக்கும் என்று சொல்லமுடியாத அளவிற்கு ஏதோ ஒரு நாடகம் போல செட்டை அமைத்து படத்தை எடுத்திருக்கிறார்கள் என்று சொல்லவேண்டும். கிராபிக்ஸ் நிறைய பயன்படுத்தப் பட்டிருந்தாலும் பாகுபலி மாதிரியான பரந்த நிலக்காட்சிகள் ஓரிரண்டை தவிர அதிகம் இல்லை. ஏன் வரலாற்றுப் படம் என்கிற ப்ரஞ்சைகூட இந்த படம் ஏற்ப்படுத்த மாட்டேன் என்கிறது.

தமிழ் சினிமாவிற்கு இவ்வளவுதான் கிரியேட்டிவிட்டியா? மிக வழக்கமான கதைகளை கொண்டுதான் படங்கள் எடுக்க முடியுமா என்கிற கேள்வியை நாமே கேட்டுக் கொள்ள வேண்டியிருக்கிறது. படத்தின் ஆரம்பத்தில் கதை எங்கே எந்த காலத்தில் நடக்கிறது என்கிற விவரங்களுடன் ஆரம்பித்தாலும் இன்று உள்ளூரில் நடப்பது மாதிரி தமிழில் பேசுகிறார்கள். போததற்கு விஜய் இன்றைய கால கட்ட கட்டி அடித்திருக்கிறார். ஸ்ருதி இன்றைய பெண்களின் முடி அலங்காரத்தில் இருக்கிறார். சரி தமிழை இப்படி உச்சரிக்கிறார்கள் என்றால், திராவிட கட்சிகள் பேசிய அடுக்கு மொழியில் பஞ்ச் டயலாக் வேறு பேசுகிறார் விஜய்.