Thursday, October 8, 2015

மாட்டுக்கறியும் மனிதக்கறியும்

மாட்டுக்கறிக்கு தமிழகத்தில் பெரிய மதிப்பெல்லாம் இல்லை. மாட்டுக்கறியைகூட மறைமுகமாகத்தான் வெளியிடங்களில் விற்கிறார்கள். அந்த விற்பனைக் கடைகூட தனியே எங்கேயோ இருக்கும். அதிகம் வெளியில் தெரிய அந்த கறியை தொங்கவிடுவதுகூட இல்லை. அதேவேளையில் மாட்டுக் கறியை வாங்குவதும், தின்பதும் பாவமாக தமிழகத்தில் பார்க்கப்பட‌வில்லை. ஆனால் வட இந்தியாவில் மாட்டுக்கறி உண்பது ஆச்சாரமான இந்துவுக்கு மட்டுமல்ல எல்லா இந்துகளுக்கும் எதிரானதாகத்தான் நினைக்கிறார்கள். என் வடஇந்திய நண்பர்களிடம் மாட்டிறைச்சியை புசிப்பதுப் பற்றிக் கேட்டபோதெல்லாம் மிக காட்டமாக எதிர்வினையாற்றினார்கள். அவர்களிடம் மாட்டுக்கறியை உண்பவன் முஸ்லீம் என்கிற எண்ணமே இருக்கிறது. தலித்துகளில் பெரும்பாலோர் மாட்டுக்கறியை உண்பதும் அது அவர்களின் பழமையான பழக்கங்களில் ஒன்றிலிருந்து வந்தது என்று அறியாதவர்களாக இருக்கிறார்கள். ஏன் விவேகானந்தர் போன்ற நவீனயுக சாமியார்கள் மாட்டிறைச்சியையும் அதை உண்பதையும் இந்துமதம் சார்ந்ததுதான் என்று ஒத்துக்கொள்வதை ஏற்றுக்கொள்ளாதவர்களாக இருக்கிறார்கள் என புரியவில்லை.

மிகப் பழமையான ஆச்சரங்களை கொண்டிருந்த அந்த காலத்தில் இவ்வளவு எதிர்வினை இருந்திருக்குமா என்பது சந்தேகமாக இருக்கிறது. இந்த நவீனப் புதுயுகத்தில் இந்தளவிற்கு வெறுப்பும் காழ்புணர்ச்சியும் கொண்டு மக்கள் ஒருவரை ஒருவர் தாக்கி காயப்படுத்தியும் கொலை செய்துவிடுவதும் நடப்பது மதத்தின் மீதான அக்கறையினால் அல்ல, அறிவியலினால் ஏற்பட்ட தந்திரங்கள்தான். இன்றைய இணையஉலகில் நடக்கும் ஒவ்வொரு சின்ன விஷயங்களும் மற்றவர்களுக்கு அவற்றின் நோக்கங்களையும் காரணங்களையும் ஒரு விஷமமாக திரித்தே பரப்பப்படுகிறது. இன்றைக்கு நடக்கும் ஒவ்வொரு சண்டைக்கும் அந்த அழுத்தம் இல்லாமல் இல்லை.
எளியவிஷயங்களைக் கூட சாதாரணமாக‌ கடந்து போகவிடாமல் ஒவ்வொருவரையும் தங்களின் தர‌ப்பை வெளியிட்டே ஆகவேண்டும் என்கிற சங்கடத்தை ஏற்படுத்தி அதில் வெற்றியும் காண்கிறார்கள் என்றால் மிகையில்லை. தமிழகத்தில் இன்று மாட்டிறைச்சியை உண்பது ஒரு பிரச்சனையே இல்லை. வடநாட்டில் நடந்த ஒரு கொலைக்கு (சரியான காரணம் தெரியவில்லை என்றாலும்) தங்கள் தரப்பில் ஆள்சேர்ப்பதும் அதை எதிர்ப்பவர்களை வசைப்பாடுவதும் என இரு அணிகளாக செயல்பட இந்த இணையம் பய‌ன்படுத்தப்படுகிறது.
தங்கள் பகுதியில் இருக்கும் தண்ணீர் பிரச்சனைகளையோ, குப்பைகள் வீசப்படும் பிரச்சனைகளைபற்றியோ ஒரு சின்ன அக்கறைகூட இல்லாத இந்த மனிதர்கள் மற்றவர்களின்/தங்களின் உணவு பழக்கங்களையும் அதனால் வெளிப்படும் அரசியலையும் வைத்து தினப்படி நாட்களை கடத்துவது என்று எந்த அருவறுப்பற்றும் வாழ்கிறார்கள்.
மாட்டிறைச்சியை உண்பதும், உண்ணகூடாது என்பது ஒரு சின்ன அரசியலுக்குள் தங்களை வைத்துக் கொள்வதால் ஆவது என்ன? மீண்டும் மீண்டும் அந்த செயலை ஞாயப்படுத்தியும் மற்றவர்களை தரக்குறைவாக பேசுவதால் ஆவதும் என்ன? வெறும் வெறுப்பை மட்டுமே விதைத்து வைத்து அது வளர காத்திருக்கிறார்கள். தேவையான போது தண்ணீரையும், உரங்களையும் அதிலிட இந்த இணையத்தை பயன்படுத்துகிறார்கள்.
முன்பு எப்போதும் இல்லாத அளவு இந்த வெறுப்பு வளர இணையம் பெரும் சக்திபோல பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணித்துளியும் மாட்டிறைச்சிக் குறித்து நடக்கும் விஷயங்கள் தொகுத்து இரண்டாக பிரித்து இது இந்த அணியை சேர்ந்தது, இது இந்த அணியை சேர்ந்தது என்று பிரித்து கொள்வதில் இருக்கும் ஆர்வம் இந்த இணையத்தில் கிடைக்கும் குப்பைகளால் சாத்தியம் என்றால் ஏன் அது தங்களை சுத்தப்படுத்திக் கொள்ள பயன்படமாட்டேன் என்கிறது. வெறும் விளம்பரங்களாக பயன்படுவதால் நாம் அடைவது ஒன்று இல்லை. நான் இன்று மாட்டுகறி தின்றேன் என்பதும், நான் இன்று மனிதக்கறி தின்றேன் என்று சொல்வதும், நீ மனிதமலத்தை தின்றாய் என்று சொல்வதும் பெரிய வித்தியாசம் இல்லை. ஒவ்வொருவரும் தங்களின் பழக்கவழக்கங்களை செய்வதற்கு மற்றவர்களின் ஆதரவையும் மறுப்பையும் தேடிப் பெருவதில் இருக்கும் அரசியலை நாம் ஒவ்வொருவரும் வெறுக்க வேண்டும் என்பது நமக்கான மையப்புள்ளி இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

No comments: