Tuesday, January 27, 2015

பெயரா பட்டமா: ஈவேராவா பெரியாரா

சில ஆண்டுகளுக்கு முன்னால், என்னை பேர் சொல்லி அழைக்கும் அளவிற்கு தமிழகத்தில் தரம் தாழ்ந்திவிட்டது என்றார் திமுகவின் தலைவர். அப்போது அவர் ஆட்சியில் இருந்து இறங்கியிருந்தார், எதிர்க்கட்சியாககூட இல்லை. அதேபோல் ஒரு சமயம் ஆட்சியில் இருந்தபோது அதிமுக தலைவியை புரட்சி தலைவி என்று மேடையில் சொல்லாமல் பெயரைச் சொன்னதால் இயக்குனர் மனிரத்தினம் வீட்டில் குண்டுவிசப்பட்டது. இதேபோல் பல்வேறு சமயங்களில் ஆட்சியில் இருப்பவர்களை அவர்களின் பெயர்களை மட்டும் சொன்னதால் பல இன்னல்களை சொன்னவர்கள் சந்தித்திருக்கிறார்கள்.
ஆட்சியில் இருப்பவர்களை எதாவது ஒரு பட்டபெயர் சொல்லியே அழைக்க வேண்டும் என்கிற கட்டாயம் தமிழகத்தில் உண்டு. விதிவிலக்காக ஈவேரா, அவரை பெரியார் என்றோ, வைக்கம்வீரர் என்றோதான் அழைக்க வேண்டும் என்கிற கட்டாயம் இப்போதும் இருக்கிறது. கர்மவீரர் காமராஜர், அறிஞர் அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன், கலைஞர் கருணாநிதி, புரட்சித்தலைவர் எம்ஜியார், புரட்சிதலைவிஅம்மா ஜெயலலிதா, தளபதி ஸ்டாலின், கேப்டன் விஜயகாந்த், வைகோ (பெயரை முழுமையாக சொல்லக்கூடாது). அவர்களின் பெயர்களை இந்த பட்ட பெயர்களோடு சேர்த்து மட்டுமே அழைக்க வேண்டும். ஆனால் சிலரை பட்டபெயரை மட்டுமே சொல்ல வேண்டும் என்றும் விதியிருக்கிறது.
எம்ஜியார் தமிழ்ப் பல்கலைகழகம் ஆரம்பித்தபோது மேடையில் இருந்த துணைவேந்தர், மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் என்று அழைத்தார். எம்ஜியார் எதுவும் சொல்லாமல் இருந்தார், அதற்கு பின்னால் துணைவேந்தருக்கு எந்த நெருக்கடியோ, நீர்பந்தமோ ஏற்படவும்வில்லை.
ஆனால் சாதாரணம் தமிழக அரசியல் மேடையில் எப்போதும் சின்ன மாவட்ட தலைவர், செயலர்களை ஒரு பட்டத்தோடுதான் அழைக்கப்படுகிறது. புரட்சி சுகுமாரன், தளபதி வெங்கட், சின்னதளபதி சுரேஷ், என்று ஒவ்வொருவருக்கும் ஒரு பட்டம் இருக்கிறது. பட்டம் இல்லாதவர் அவ்வளவாக பிரபலமாகாதவர். பட்டத்தால் என்ன பயன்? ஒன்று அவரின் பெயர் பட்டத்தோடு சேர்ந்து வருவதால் தன் பெயருக்கு ஒரு மதிப்பு கூடுவதாக நினைக்கிறார். மற்றொன்று தனக்கான ஒரு அடையாளமாக அதை நினைப்பது.
தமிழ்நாட்டை தவிர மற்ற இடங்களில் அண்ணன் என்றோ, அவரின் சர்நேம் (இரண்டாம் பெயர்) கொண்டோ அழைத்தால் அவர் மரியாதைச் செய்யப்பட்டதாக் நினைக்கிறார். நமக்கு இரண்டாம் பெயர் இல்லாததால், அல்லது பயன்பாட்டில் இல்லாததால், இந்த மாதிரியான பட்டங்கள் தேவைப்படுகின்றன என நினைக்கிறேன். பொதுவாக அவர்கள் தங்களை அரசியலில் வரவழிவகுத்த தலைவர்களின் அல்லது தங்கள் கட்சியின் தலைவர்களின் பட்டங்களை சுருக்கி அல்லது நீட்டி தனக்கு வைத்துக்கொள்பவர்களாக் இருப்பார்கள். இதனால் அவர் இன்னாரின் அடிபொடி என்று தெரிந்துவிடும் நன்மை இருக்கிறது. இது எதிர்களுக்கு ஒரு சவாலாகவும், தன‌க்கு கீழுள்ளவர்களுக்கு ஒரு தன் தலைமையின் நெருக்கத்தை உணர்த்துவதுமாக இருக்கிறது.


இந்த அடிப்பொடிகள்தான் தங்கள் தலைவர் எப்படி அழைக்கப்படவேண்டும் என்கிற முடிவை எடுக்கிறார்கள். முதலில் கட்சிக்குள் அவரின் ஆளுமையை உணர்த்துவதாக அமைந்து, பின் எதிரிக்கு எச்சரிக்கையாக அமைத்து, கடைசியாக பொதுமக்களுக்கும் கட்டாயமாக்கிவிடுகிறார்கள்.
தன் பெயரை மட்டும் சொல்வதை கேட்ட தலைவர் கொள்ளும் சினத்தைவிட அவரை பின்பற்றுபவர்கள் அவரின் பெயரை மட்டுமோ அல்லது ஏன் பட்டத்தோடு பெயரை சொன்னாலே சினம் கொள்வதை காண்பதுதான் அதிகம் நடக்கிறது. அதாவது பட்டம் மட்டுமே அவரது அடையாளமாகவும் அப்படி அழைக்கப்படாதபோது சிறுமைப் படுத்தவதாகவும் நினைக்கிறார்கள். அதில் முக்கியமான மூன்று தலைவர்களின் பெயர்களை குறிப்பிடலாம்: பெரியார், கலைஞர், புரட்சித்தலைவி அம்மா.
காமராஜர், அண்ணா, எம்ஜியார் போன்றவர்களின் பதவி காலத்திலும், உயிருடன் இருந்த காலத்திலும் தொடர்ந்து பட்டப்பெயரில் அழைக்கப்பட்டதாக தெரிகிறது. அவர்களுக்குப் பின்னால் இப்போது அது மாறி பெயர்கள் மட்டுமே நின்றிருக்கிறது. ஆனால் இனிவரும் காலங்களில் முதலில் சொன்ன மூன்று பெயர்கள் எக்காலத்திலும் மாற்றம் அடையாமல் இருக்க போகிறது என நினைக்கிறேன். ஏன் பட்டப்பெயர்களை கட்டாயம் ஆக்குகிறார் என யோசித்தால், அது அவரின் சாதியை மறைக்கத்தான் என்பதை ஒரு சின்ன புரிதலின் மூலம் அறிந்துக் கொள்ளலாம்.

No comments: