Tuesday, December 31, 2013

வெண்முரசு-ஜெயமோகன்: மகாபாரதம் - தமிழில் - நாவல் வடிவில்

வியாசனின் பாதங்களில் - ஜெயமோகன் .


இந்தப்புத்தாண்டு முதல் ஒருவேளை என் வாழ்க்கையில் இதுவரை நான் ஏற்றுக்கொண்டதிலேயே மிகப்பெரிய பணியைத் தொடங்குகிறேன். மகாபாரதத்தை ஒரு பெரும் நாவல்வரிசையாக எழுதவிருக்கிறேன்.


திட்டத்தை நினைத்தால் எனக்கு பிரமிப்பாகவே இருக்கிறது. ஐநூறு பக்கங்கள் கொண்ட பத்து நாவல்கள். இன்றிலிருந்து ஒவ்வொருநாளும் ஓர் அத்தியாயம் என பத்துவருடங்கள். ஆனால் எந்த பெரும் பயணமும் ஒரு காலடியில்தான் தொடங்குகிறது. தொடங்கிவிட்டால் அந்தக் கட்டாயமும், வாசகர்களின் எதிர்வினைகளும் என்னை முன்னெடுக்குமென நினைக்கிறேன். இப்போது தொடங்காவிட்டால் ஒருவேளை இது நிகழாமலேயே போய்விடக்கூடும்.

இது ஒரு நவீன நாவல். தொன்மங்களையும் பேரிலக்கியங்களையும் மறு ஆக்கம் செய்யும் இன்றைய இலக்கியப்போக்குக்குரிய அழகியலும் வடிவமும் கொண்டது. ஓர் இலக்கிய வாசகனுக்கு இது உள்விரிவுகளை திறந்துகொண்டே செல்லக்கூடும். ஆனால் எந்த ஒரு எளிய வாசகனும் உணர்ச்சிகரமான ஈடுபாட்டுடன் வாசிக்கக்கூடியதாகவே இது இருக்கும். மகாபாரதத்தின் மகத்தான நாடகத்தருணங்களையே அதிகமும் கையாளும். அதன் கவித்துவத்தையும் தரிசனத்தையும் தீண்டிவிடவேண்டுமென்ற கனவுடன் இது எழும். வியாசனெழுதிய ஒவ்வொன்றையும் இன்று இங்கே என உள்வாங்கிக்கொள்ளவேண்டுமென இது முயலும்.

இந்நாவல் மகாபாரதத்தை மட்டுமே ஆதாரமாகக் கொண்டதல்ல. மகாபாரதக் கதைகளையும் கதைமாந்தர்களையும் வெவ்வேறு திசைகளில் வளர்த்தெடுத்த பிற புராணங்களையும் கருத்தில்கொண்டிருக்கிறது. மகாபாரதத்துக்குப்பின் குறைந்தது ஈராயிரம் வருடங்கள் கழித்து எழுதப்பட்ட பாகவதம், மேலும் ஐநூறு வருடங்கள் கழித்து உருவான தேவிபாகவதம் ஆகியநூல்களின் மகாபாரதக் கதைகளும் பல நாட்டார் பாரதக்கதைகளும் இந்நாவலில் உள்ளன என்பதை வாசகர்கள் காணலாம்.

 இது ஒவ்வொருநாளும் கொஞ்சமேனும் வாசிக்கக்கூடியவர்களுக்கான படைப்பு. ஒவ்வொருநாளும் வாசித்தவற்றைப்பற்றி தியானிக்கக்கூடியவர்களுக்கானது. அவர்களின் வாழ்க்கையை மேலும் சிலவருடங்கள் வியாசனின் மானுடநாடகம் ஒளியேற்றுவதாக! அவர்கள் தங்கள் வியாசனை எனதுவியாசனிலிருந்து கண்டுகொள்ள நேர்வதாக!

அன்புடன்
ஜெயமோகன்

No comments: