Wednesday, October 12, 2011

அப்ரஞ்ஜி: சிறுகதை



இன்றைய தினம் ஏதோ ஒரு வகையில் முக்கியவிதமாக அமையப்போகிறது என்ற எண்ணம் காலையில் எழுந்ததுமே ஏற்பட்டுவிட்டது. ராஜேஸ்வரியின் மகளின் சாந்தாவின் 25ஆம் வருட திதி இன்று. மஞ்சள் காமாலையில் இறந்த அவ‌ளுக்கு கூழுற்றும் தினம், இந்த வருடம் சிறப்பாக செய்துவிடவேண்டுமென ராஜேஸ்வரி நேற்றே கூறிவிட்டார்.

விடியாகாலை வேளையில் அடுப்பு வெப்பத்தின் காரணமாக உடலில் பரவியிருந்த வியர்வை குளிராய் இதமாய் இருந்தது. துடைக்க மனம் வராமல் வேலை செய்துகொண்டிருந்தாள் அப்ரஞ்ஜி. கொழுக்கட்டையின் மணம் அந்த தோட்டத்து ரேழி முழுவதும் பரவியிருந்தது. பெரிய சுவாலைகள் பாத்திரத்தின் பாதியளவிற்கு மேல் பரவி அமானுஷ்ய சத்தத்துடன் எரிந்துகொண்டிருந்தது அடுப்பு. சாயம்போடும் கரிபிடித்த பெரிய பாத்திரங்களும் கரண்டிகளும் தாறுமாறாய் ஒரு பக்கமும், மறுபக்கம் விறகுகளின் அடுக்கு ரயிலொடு சார்புவரைக்கும் உயர்ந்திருந்தன. வெப்பம் தாளாமல் நீர்கொழுக்கட்டைகள் பாத்திரத்திலிருந்து வெளியேவர எத்தளிப்பது போல‌ தத்தளித்துக் கொண்டிருந்தன. சூரியன் இன்னும் வெளியே வரவில்லை. வரும் நேரம்தான், காகங்கள், குயில்களின் கத்தும் ஒலிகள் கேட்க தொடங்கிவிட்டன. விடிவதற்குள் முடிந்துவிட வேண்டும் என்ற முனைப்பில் கண்களும் கைகளும் வேகமாக செயல்பட்டன.

அப்ரஞ்ஜி…..’ இருட்டிலிருந்து ஒருகுரல் நீண்டகுரல் வெளிப்பட்டது.

…’ பதிலளித்தாள்.

ஆயிடுச்சா…’ இது நாகமனியின் மருமகள் ராஜியின் குரல்.

ஆயிட்டே இருக்குடியம்மா…, இதோ முடிஞ்சிடும்

ராஜியின் மருமகள் தனத்தின் மாப்பிள்ளைக்கு போனவிருந்தின் போது அவர்கள் ஊரில் கிடைக்காத இந்த நீர்கொழுக்கட்டையை விரும்பிச் சாப்பிட்டதால் இம்முறையும், தனம் கேட்டுக்கொண்டதன்பேரில், ஊரிலிருந்து வரும் அவருக்காக விசேஷமாக தயாராகிவருகிறது.

அளவாக இருந்த கொழுக்கட்டைகளாக பார்த்து எடுத்து இரண்டு குண்டான்களில் வைத்துக்கொண்டு, மிச்சத்தை கட்டைகள் இழுத்துவிடப்பட்ட அடுப்பிலேயே விட்டுவிட்டு எதிர்கொண்டுவந்த தனத்திடம் கொடுத்தாள் அப்ரஞ்ஜி. நினைத்ததைவிட வேகமாக முடித்துவிட்ட சந்தோஷத்தில் விரிந்த உதடுகளில் காவிபடர்ந்த பற்களிடையே சிரிப்பாக பெற்றுக்கொண்டாள் தனம். அப்ரஞ்ஜி என்றாலே வேகம்தான். எத்தனை பேருக்கு எத்தனை வகை என்றாலும் சொன்ன நேரத்தில் செய்துமுடித்துவிடக் கூடியவள்.

தனத்தின் மகள் பிருந்தாவிற்கு சந்தோஷில்பெரிய செலவழித்து பிறந்த ஆண்குழந்தையை கவனிக்க சென்றது அப்ரஞ்ஜிதான். ராசியான கையென்று வீட்டிற்கு வந்ததும் குழந்தைக்கு முதல் சக்கரைத் தண்ணி கொடுத்தது அப்ரஞ்ஜிதான். முன்பெல்லாம் பிரசவத்திற்கு அவளைதான் அழைத்தார்கள். மொட்ட வீட்டு நாகமணி, கீழத்தெரு காவேரியம்மாளுக்கு பத்து பத்து பிள்ளைகள் சளைக்காமல் பிரசவம் பார்த்தாள், பிற்பாடு ஆஸ்பத்திரி, கிளினிக் என வந்துவிட அவளுக்கு உடல் ஒத்துழைப்பு குறைந்துவிட பார்பதை நிறுத்திக்கொண்டாள். ஆனால் இன்றைக்கும் குழந்தைக்கு முதல் சக்கரைத்தண்ணி அவள் கையால்தான், பிறகு குழந்தையை குளிப்பாட்டுவதிலிருந்து பீதுணி அள்ளுவதுவரை அவள்தான் செய்வாள்.

பஞ்சுபஞ்சாக பறக்கும் வெள்ளைமுடி, லேசான கூன்விழுந்த முதுகு, இறுக்கிகட்டப்பட்ட சேலையில் அப்ரஞ்சியை பார்க்க தொண்ணூறு வயது என்று சொன்னால் யாராலும் நம்பமுடியாது. இதுவரை அப்ரஞ்ஜி நோய், நொடியென்று படுத்தது கிடையாது. தண்ணீர் இறைப்பது, இந்த தெருவில் நாலு வீடுகளுக்கு வாசல் தெளித்து கோலம் போடுவதும், துணிதுவைப்பதும் இப்போதும் செய்கிறாள். கோரா சாயம் வெளுக்க கும்பகோணத்தில் இப்போது கூப்பிட்டாலும் போய் செய்வாள். லெட்சுமி வீட்டில் முன்பு தொடர்ச்சியாக செய்துகொண்டிருந்தாள். நாகமணி இருக்கும் வரை அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பாள். நல்லா பொறுப்பா வேலைய பாக்க்குற அப்ரஞ்ஜி நீ, அங்க கூப்பிறாங்க இங்க் கூப்பிறாங்கனு எங்கேயும் போயிற கூடாது ஆமா, நம்ம கூடவே இருக்கனும்என்பாள். ஆபத்துல உதவுற நா உன்னைய விட்டு எங்க போயிறப்போறேன் நாவமணிஎன்று அப்ரஞ்ஜியும் சளைக்காமல் கூறுவாள். அவளின் பத்து பிள்ளைகளையும் பிரசவம் பார்த்து வளர்த்தவள் அன்றுமுதல் என்ன விசேஷங்கள் என்றாலும் அவள்தான் முன் நிற்பாள்.

கொழுக்கட்டைகளை வாங்கிகொண்ட தனம், ‘அப்ரஞ்ஜி, நேத்து சொன்னமாரி இன்னிக்கு நாள் நல்லாயிருக்கு மொன பொங்கல் வச்சிடு, இந்தா காசுஎன்று பணத்தை கொடுத்துவிட்டுச் சென்றாள்.

சரிடியம்மா, கூலுத்தி முடிஞ்சொன்ன, பதினொருபன்னன்டு மணிக்கா வெச்சுறேன்’.

எப்போதும் மொனபொங்கல் செய்வது அப்ரஞ்ஜிதான். லச்சுமியம்மா வீட்டு கொல்லையில் மூன்று செங்கல்லும், ஒரு சிறு சட்டியும், ஒரு செம்படமும் இருக்கின்றன அந்த தெரு மொனைக்கு தோதாக. கொஞ்சம் அரிசியும், வெல்லமும் வாங்கி அந்த சின்ன சட்டியில் போட்டு மூன்றுகல்லில் அடுப்பு மூட்டி கொதித்ததும் வடித்து மொகனையிலேயே உள்ள திரிசூலமோ, பிள்ளையாரோ, அல்லது வேறு ஏதேனும் சாமிக்கோ படைத்துவிட்டு, சுற்றியிருக்கும் பிள்ளைகளுக்கு கொடுத்ததுபோக மிச்சத்தை அங்கிருக்கும் சிறுகல்லில் வைத்துவிட்டு வருவாள். தெரு தாண்டி புருஷன் வீட்டிற்கு பிறந்த குழந்தையோடு செல்பவளுக்கு, குழந்தைக்கும், அவளுக்கும் எந்த காத்து கருப்பு அண்டாமலிருக்க மொனபொங்கல் செய்வது ஐதீகம்.

மொனபொங்கல் என்றில்லை வளைகாப்பு, காதுகுத்து, கல்யாணம், கருமாதி இப்படி விசேஷ நாட்களில் முறையாக செய்ய‌ அப்ரஞ்ஜி இல்லாமல் முடியாது. சில நேரங்களில் எல்லா வீட்டு விசேஷங்கள் ஒரேநாளில் அமைந்துவிட்டால் எல்லா வீட்டிற்கும் போகமுடியாமல் அவள் பாடு திண்டாட்டமாக இருக்கும். இதுபோக‌ பாவில் சிக்கல் எடுக்க, சாயம்போட, பிறந்த குழந்தைக்கு குளிப்பாட்ட, தீட்டுக்கழிக்க, காட்டேரி பூசை செய்ய, அரிவுரி அம்மன் பூசை செய்ய எல்லாவற்றிற்கும் அப்ரஞ்ஜிதான்.

தீபாவளி சீசனில் பட்டுஜவளி கும்பகோணத்தில் அமோகமாக இருக்கும். வேலையும் அதற்குதகுந்தாற் போல அவளுக்கு இருக்கும். வீதியில் பாவுபோடும் சம‌யங்களில் வாசு ஆள்சொல்லி அனுப்பிவிடுவார். அப்ரஞ்ஜியின் விரல்களின் அசைவுகளுக்கு மட்டுமே பாவின் சிக்கல்கள் விரைந்து நேராகும்.

பெண் பிரசவத்தின்போது. அப்ரஞ்ஜிபச்ச உடம்பு, பொண்ண பாத்துக்கஎன்பார்கள் இரண்டுநாள் வீட்டோடு இருந்து முதுகு, கால், தொடையில் எண்ணைவிட்டு நீவி பச்ச உடம்பு பெண்ணை சுகப்படுத்துவது அவளுக்கு கைவந்த கலை. குழந்தை பிறந்ததும் கவனித்தது போக பதினோராம் நாளோ அல்லது பதிமூன்றாம் நாளிலோ அரிவுரிஅம்மன் பூசை இருக்கும். வீட்டின் கிழக்கு பார்த்த சுவரில் கண்மையால் நான்கு குமிழுடைய கோலம்போட்டு இரண்டு பக்கம் பொம்மைகள் வரைந்து வைத்து - குழந்தை அதைபார்த்து சிரிக்கும் என்பாள். அதற்கு ஐந்து வகை காய்கறியுடன் பூசை செய்வாள் அப்ரஞ்ஜி.
 
குழந்தை ரொம்ப அழுதால் அப்ரஞ்ஜியை கூப்பிட்டுவிடுவார்கள். எண்ணெய் தேய்த்து நீவி , சாம்பிராணி போட்டு பாட்டு படிப்பாள்

தாள மாமையா - தசரத
ராம சந்திரையா

கஞ்சி வரதையா ‍- எனை

கொஞ்சி வருதையா

மடியில் வைத்து குழந்தைக்கு லட்டுபிடிப்பது போல காட்டி அப்ரஞ்சி பாடும் போது குழந்தை சொக்கி சிரிப்பதை கண்டு ஊரே மகிழ்ந்துபோகும்.

செத்தவர்களின் திதிநாள், பொங்கபடைப்பை அய்யர் வந்து கூறுவதற்கு முன்பே ஞாபகப்படுத்துவது அப்ரஞ்ஜியாகத்தான் இருக்கும். சரியான நாளில் அவளின் கனவில் வந்து இறந்தவர்கள் சோறு கேட்டுவிடுவார்கள். சோறு கேட்டபின் பூஜை வைக்காமல் விட்டுவிட முடியாதே? திதி வைக்கும்நாளில் செத்தவர்கள் அன்றிரவு அவர்கள் வீட்டிற்கு வருவது அவளுக்கு மட்டுமே தெரியும். தனக்கு பிடித்ததை வைத்து படைத்தற்கு நன்றி சொல்லிவிட்டோ அல்லது பிடிக்கவில்லை என்று அவளிடம் திட்டிவிட்டோ செல்வார்கள். இருபது வருடம் முன்பு ராஜேஸ்வரியின் எட்டுவயது மகள் மஞ்சகாமாலை நோய்வந்து செத்தபின் ஒவ்வொரு சித்திரையிலும் அந்த நட்சத்திரத்தில் நாள் மாறாமல் அவள் வந்து அப்ரஞ்சியிடம் கூல் ஊற்றச் சொல்வாள். இன்று அந்த கூல் ஊற்றும் நாள்.
தனம் கொடுத்த பழையதை எடுத்து செல்பின் மீது வைத்துவிட்டு அரசலாறிற்கு குளிக்க கிளம்பும்போது இறந்த ராஜேஸ்வரியின் மகளை நினைத்துக்கொண்டாள். நேற்று மாதிரி இருக்கிறது அதற்குள் இருபதுஐந்து வருடஙகள் ஆகிவிட்டன. சட்டென போய்விட்டாள். அவளிடம் பேச்சு கொடுத்து மாளாது. அத்தனை சுட்டி. கிள்ளிபோடும் வெத்தலை தொடுமைகள் அவளுக்கு பிடிக்கும். பாட்டி பாட்டி என்று அவள் பின்னாலெயே சுற்றுவாள். அவள்தான் கேட்டாள் அப்ரஞ்ஜின்னா என்ன பாட்டி என்று.

ம்.. தங்கம்டி தங்ககட்டி பாத்திருக்கியா அதான் அர்த்தம்

அப்ப தங்க க‌ட்டியா நீஎன்று கூறிவிட்டு சீவலை வாயில் போட்டபடி ஓடினாள்.

நாகமணி வீட்டில் சாயம் போட்டுக்கொண்டிருந்த சின்னையாவைத்தான் அப்ரஞ்ஜிக்கு கட்டிவைத்தார்கள். உண்மை பெயரான செல்லம்மா, பருவத்தில் ‍ கல்யாணம் கட்டிவந்த சமயத்தில், அவள் அழகில் மயங்கி அப்ரஞ்ஜி என்று மாமியாகாரி செல்லமாக அழைக்க அதுவே நிலைத்துப் போனது. கூற‌ப்பட்டு சேலையில் அவ்வளவு பாந்தமாக இருந்தாளாம். சின்னையாவை பார்த்து, இந்த பழத்துக்கா இவளை கட்டிக்கொடுத்தார்கள் என்று கேட்காதவர்கள் இல்லையாம். மாமியாகாரி போடி, உங்க வேலைய பாத்துக்கிட்டுஎன்பாள்.

என்ன சாபமோ, கொடுப்பினையோ தெரியவில்லை, கொஞ்ச நாளில் சின்னையா சித்தபிரமை பிடித்துபோனது. வறுமையில் உழன்ற அவளுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் அப்படியே விட்டுவிட்டாள். தெருக்களிலேயே அழைந்துகொண்டிருந்தவன் அப்புறம் என்ன ஆனான் என்று யாருக்கும் தெரியவில்லை.

அவன் மூலமாக பிற‌ந்த அவளின் மகள் அம்புஜம் வளர்ந்தபின் இருக்கும் காசை வைத்து தாராசுரத்தில் கட்டிக்கொடுத்தாள். கொஞ்சநாளில் அவளும் காணாமல் போனாள். ஆற்றில் விழுந்து செத்துவிட்டதாகவும், அவ்வூரின் வியாபாரி ஒருவரை இழுத்துக் கொண்டு ஓடிவிட்டதாகவும், அவளின் ஒரு கொழுந்தனை வைத்துக் கொண்டு அம்மாபேட்டையில் குடித்தனம் நடத்துவதாகவும் பேச்சு அடிப்பட்டது. அப்ரஞ்ஜி என்னஏது என்று புரியாமல் காலத்தை ஓட்டினாள்.

சின்னனையா காணாமல் போனபோதும், அம்புஜம் விட்டுபோன போதும் ஆறுதலாய் இருந்தவர்கள் நாகமணியும் காவேரியும் தான். ஒன்னுக்கும் கவலபடாத ஒன்னைய அப்படியே விட்டுடமாட்டோம்என்று ஆறுதல் சொன்னார்கள். மூன்று தலைமுறைகள் தாண்டியும் இப்போதும் அதே பாச‌த்துடன்தான் பார்க்கிறார்கள். அவர்கள் போய் பல ஆண்டுகள் ஆனபிறகும், அவர்கள் சந்ததியர்கள் லெட்சுமி, மல்லிகா, மீனாட்சி என்று அத்தனை பேரும் அவளுக்கு துணையாக இருக்கிறார்கள். அவர்கள் போனபின்பும் அவர்களின் மகன்கள் மகள்கள் அவர்களின் மகன்கள், மகள்கள் என்று பார்த்துவிட்டாள், எல்லாருக்கும் அவள் பிரியம்தான்.

இத்தனை காலத்திலும் தலைசுற்றலை தவிர‌ நோய்நொடி என்று வந்து படுத்ததுகிடையாது. மற்றவர்களுக்கு பாரமாக இருந்துவிடுவோமோ என்ற பயம் அவளுக்கு இருந்தாலும் அப்படி நம்பள ஆண்டவன் வைக்கமாட்டான் என்று திடமாக நம்பியிருந்தாள்’. அவளுக்கு இன்றையதினம் இற்றோடு. இந்த நெசவாளர் குடியிருப்பில் வேலை செய்து கிடைக்கும் சொற்ப பணத்தில் அவர்கள் வீடுகளிலேயே ஆங்காங்கே தங்கிகொண்டு வாழ்க்கை நடத்திவந்தாள்.

பாதியிருட்டிலேயே அரசலாற்றில் குளித்துவிட்டு ஈரம் சொட்ட இன்று செய்யவேண்டிய கூழுற்றுதல், மொனபொங்கல் வேலைகளை பற்றி நினைத்தபடி நிதானமாக நடந்துவந்தாள், துவைத்த துணிகள் ஈரத்தோடு தோள்களில். சொட்டிய துளிகள் அவள் நடந்துவந்த பாதையை காட்டின. ரோட்டில் அந்த நேரத்தில் யாரும் இருக்கபோவதில்லை. மும்மூர்த்தி விநாயகர் கோவில் அருகில் வந்தபோது தலைசுற்றலாக‌ வந்தது. விநாயகரை நின்று வழிபட்டு செல்வது வழக்கம். முன்னாடி வச்சலா மட்டுமே பால் வாங்க குவளையோடு சென்றுகொண்டிருந்தாள். அவளை கூப்பிட நினைத்தாள் ஆனால் கொஞ்ச நேரத்தில் சட்டென மயங்கி விழுந்தாள்.

பொழுதுபுலர்ந்தபோது அப்ரஞ்ஜி மயங்கி விழுந்து கிடப்பது தெரிய, ரோட்டில் சென்றவர்கள் பயந்து வீடுகளிலும் கடைகளிலும் ஏறிக்கொண்டார்கள். டீக்குடிக்க வந்த ரெங்கா பார்த்துவிட்டு நாகமணியின் கொள்ளுபேரன் தினேஷிடம் பட்டுநூல்காரம்மா மய‌ங்கி விழுந்துகிடக்குஎன்ற செய்தி சொன்னான். வெய்யில் ஏறி அப்ரஞ்ஜி மேல் மென்மையாக அடித்துக்கொண்டிருந்தது. தெரு முழுவதும் இதே பேச்சாக இருந்தது. அப்ரஞ்ஜி இப்படி ஆயிட்டாளே என்றார்கள், அவளுக்கு நல்ல மனசு அதான் இப்படி சட்னு போய்டா என்றார்கள்.

சைக்கிள் மிதித்து வந்த தினேஷ், உதட்டோரம் ரத்தகரையைப் பார்த்துவிட்டு முனிசிபாலிட்டிக்கு உடனே தகவல் சொன்னான். கொஞ்ச நேரத்தில் முனிசிபாலிட்டிகாரர்கள் வந்து வண்டியில் தூக்கி போட்டு சென்றபின்னே கடைகளிலும், வீடுகளிலும் நின்றவர்கள் இறங்கி நடந்து செல்ல ஆரம்பித்தார்கள்.

_o0o_

4 comments:

அப்பாதுரை said...

மனதைப் பிசைந்த கதை. முதுமையின் grace. அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள். பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

கே.ஜே.அசோக்குமார் said...

நன்றி திரு.அப்பாதுரை, உங்கள் இரண்டாம் பரிசுக்கு என் வாழ்த்துக்கள்.

சித்திரவீதிக்காரன் said...

அற்புதமான சிறுகதை. இறுதியில் அபரஞ்சியை முனிசிபாலிட்டி வண்டியில் ஏற்றிச்செல்வது மனதுக்கு வருத்தத்தைத் தந்தது.

கே.ஜே.அசோக்குமார் said...

நன்றி.