Thursday, August 4, 2011

சிவாஜியின் மிகைநடிப்பு


சிவாஜி எம்ஜியார் காலம மட்டுமல்ல, சின்னப்பா பாகவதர் காலத்திலும், அதற்கு முன்னால் கிட்டப்பா காலத்திலும் இப்படி ஒரு வெகுஜன‌ கூட்டம் இருந்திருக்கிறது. அவர்களது ஆதர்சத்தை விட்டுக்கொடுக்கமுடியாமல் இப்படி புலம்பியும் இருப்பார்கள். இதற்கு உணர்ச்சி வசப்படாமல், உண்மையை ஏற்றுக்கொள்ளும் மனபக்குவத்துடன் அணுகுவதுதான் சிறந்தவழி. சிவாஜியை மிகை நடிப்பு எனறு காரணமில்லாமலா கூறுவார்கள், அவர் தமிழகத்தில் பிறந்துவிட்டதால் அப்படி சொல்வார்களா? மிகைநடிப்பு நடிகர்கள் எல்லா மொழிகளிலும் இருக்கிறார்கள். நமக்கு தெரிவதில்லை, காரணம் மிகைநடிப்பு அந்தந்த இடத்திற்கு பொருந்தகூடியது. மிகைநடிப்பில்லா சிறந்த நடிப்பே மொழிகளையும், இனங்களையும் தாண்டி நம்மை வந்தடைகிறது என்று நினைக்கிறேன். ஜெயன் மலையாளத்தில் மிகைநடிப்பு நடிகர், நம‌க்கு இங்கு தெரியாது.

நாடகத்தில் நடந்துகொண்டே நடிக்கவேண்டும், வசன உச்சரிப்பு சரியாக வருவதற்கும், உணர்ச்சிகளை காட்டுவதற்கும்; வசனமும் பாட்டும்தான் அப்போது நடிப்பு. சினிமா அப்படியல்ல, லாங்சாட், குளோசப் தவிர எனைய பக்கங்களிலிருந்தும் காமிராக்களை பொருத்தி உணர்ச்சிகளை பார்வையாளர்களுக்கு அளிக்க முடியும். அது இயக்குனரின் தேர்வும், திறமையையும் பொருத்தது. அதை புரிந்துகொண்டு நடிக்க நடிகருக்கு தெரிவது சினிமாவில் அவசியம்.

சிவாஜியை பொருத்தவரை கட்டபொம்மன் போன்ற படங்களில் மிகைநடிப்பு கவரப்பட்டதால் அதை தொடர்ந்து செய்தார். அதுவே அவரது பாணியாகவும் ஆகிவிட்டது, அவரால் அதிலிருந்து வெளியே வரமுடியவில்லை. பைலட் பிரேம்நாத், ஜஸ்டிஸ் கோபிநாத் இன்னபிற படங்கள் ஒரே மாதிரியானவைதான். ஒரே பாணி படங்களை செய்ய போதுவாக எந்த நடிகரும் செய்யவிரும்புவதில்லை. ஒரே பாணியில் மாட்டிக்கொண்டு வேறுமாதிரி நடிக்க முடியாத அவரால் சில இயக்குனர்களால் மிகுந்த முயற்சி செய்து முதல் மரியாதை போன்றபடங்களை எடுக்கமுடிந்தது.

வசனங்களும் காட்சிகளும் ஒரு பாத்திரத்திற்கு அதன் சூழ்நிலைகளுக்குமானது. ஒரு குறிப்பிட்ட நடிகருகானது அல்ல என நினைக்கிறேன். உதாரணமாக பரிச்சைக்கு நேரமாச்சு என்ற படத்தில் சிவாஜிக்கு பதில் வேறுஒருவர் நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும். அந்த மிகைநடிப்பும், அதிக வசனங்களும், காட்சிகளும் இல்லாமல் இருந்திருக்கும் அல்லவா? ஒரு நிஜதன்மை கிடைத்திருக்கும் அல்லவா? சிவாஜிக்கு நன்கு அழதெரிந்திருக்கிறது என்பதற்காக எல்லா படத்திலும் அவரின் எல்லா பாத்திரங்களும் ஒரே பாணியில் அழுதுகொண்டிருக்கவேண்டுமா?

ரசிகர்களின் உந்துதலால் தான் தொடர்ந்து ஒரே மாதிரி படங்களில் நடித்து ஒரு நடிகர் மாட்டிக்கொள்ள வேண்டியிருக்கிறது. ரஜினி, அஜித், விஜய் போன்றவர்கள் இந்த வகையினர் தாம். எம்ஜியார், கமல், சூர்யா, விக்ரம், போன்றவர்கள் ஒரேவகையில் மாட்டிக்கொள்ளாமல் ஒவ்வொரு படத்திற்கும் தெரிந்தோ தெரியாமலோ தங்களை மாற்றிக்கொண்டவர்கள். தேசிய விருது என்ற அங்கிகாரம் மிகைநடிப்பு இல்லாததால் தான் இரண்டாம் வகையினருக்கு கிடைத்தது என கொள்ளலாம்.

_o0o_

No comments: