Tuesday, August 30, 2011

சிவாஜியின் மிகைநடிப்பு 2

சிவாஜியின் மிகைநடிப்பைப் பற்றி மீண்டும் எழுதுவதற்கு காரணமிருக்கிறது. ஒரு எழுத்தாளரிடம் பேசிக்கொண்டிருந்த போது அவர் சொன்ன விசயம் வேடிக்கையாகவும் சிந்திக்கும்படியாகவும் இருந்தது.

முதல்மரியாதை படத்திற்காக சிவாஜியை ஒப்பந்தம் செய்துவிட்டு, நீங்கள் ஒரு இந்தபடத்தில் ஒரு கிராமத்தில் பெரியவர் பண்ணையாராக‌ நடிக்கிறீர்கள். உங்கள் மனைவி சரியில்லை, உங்களிடம் ஒரு சோகமிருக்கிறது என்று சொல்லிவிட்டுவந்து விட்டார்கள் உதவி இயக்குனர்கள். மறுநாள் எப்போதும்போல முதலில் வந்துவிடும் சிவாஜி இதற்கு முந்தைய படங்களைப் போல‌ பண்ணையாருக்கு தேவையான மேக்கப்பான, வெள்ளை விக், மீசை, அங்கவஸ்திரத்தோடு அமர்ந்திருந்தாராம். வந்ததும் பார்த்த இயக்குனர் வெறுத்துபோய் வேறு இடத்திற்கு போய் அமர்ந்துகொண்டாராம். அவர வீட்டுக்குபோ சொல்லுங்கபா, இன்னிக்கொன்னும் என்னால படம் எடுக்கமுடியாது என்று கூறிவிட்டார். உதவி இயக்குனர்கள் கூறியதை கேட்டு எனக்கு இன்னைக்கு காட்சி இல்லையா என அப்பாவியாக கேட்டாராம் சிவாஜி.

அறுபதுகளிலேயே அவரின் மிகைநடிப்பை விரும்பி வரவேற்க ஆரம்பித்துவிட்டார்கள் மக்கள். இப்போதுகூட அதை விரும்பும் ஒரு கூட்டம் இருப்பதை மறுக்கமுடியாது. இவைகள் ஒரு நடிகரை பின்னுக்கு தள்ளும் காரணிகள் என்று அவர் அறிந்திருக்கவேயில்லை. அறுபதுகளில் வந்த படங்களை நினைக்குபோது அப்போது மிகைநடிப்புகளுக்கு ஒரு தேவை இருந்ததை ஏற்றுக்கொள்ளவேண்டும். பாலாஜியுடன் அவர் செய்யும் சேட்டைகள், தேவிகாவுடன் அவர் செய்யும் சேட்டைகள் என்று பல படங்கள் நம் நினைவிற்கு வந்து மகிழ்ச்சியூட்டுகின்றனதாம்.

உதாரணமாக இதையே சொல்லலாம், 'சின்னஞ்சிறிய வண்ணபறவை என்னத்தை சொல்லுதம்மா' என்ற பாடலில், அவர் செய்யும் சேட்டைகள் ஒரு காட்சிக்கு இவ்வளவு தேவையா என இன்று கேட்க தூண்டும். 5 ரூவாய்க்கு நடிக்க சொன்னா 50 ரூவாய்க்கு நடிக்கிறாரு என்ற 'சொலவடை' நிச்சயமாக அவருக்கு பொருந்தியே தீரும்.

பின்னாளில் அவர் உடலும் மனமும் நடிப்பிலிருந்தும், சினிமாவிலிருந்தும் விலகிவிட்டதை அறிந்துகொள்ளமுடியும். முதல் மரியாதை, தேவர்மகன் தவிர‌ எழுபதுக்குபின் வந்த படங்கள் (ஆரம்ப எழுபதுகளில் வந்த படங்களை தவிர) எதுவும் அவரின் மற்ற பட‌ங்களை மிஞ்சி நின்றதில்லை. அலுப்பும் சோர்வுமாக ஒரேமாதிரியான உடலசைவுகளுடனும், நடிப்பிலுமாக படங்கள் வெளிவந்துள்ளன. அவரால் மீண்டும் பதிய உத்வேகத்துடன் நடிக்கமுடியவில்லை.


அமீர்கான் நடிப்பில் வெளியான தாரே சமீன் பர் படத்தை முதலில் இயக்கிய இயக்குனரை, அவரின் இயக்கம் பிடிக்காமல், நீக்கிவிட்டு தானே மற்றகாட்சிகளை எடுத்து வெளியிட்டார் அமிர். அதேபோல் தேவர்மகனில் பரதன் இயக்கம் பிடிக்காமல் தானே மற்ற காட்சிகளை இயக்கினார் கமல். ஏனெனில அவர்களுக்கு தெரிந்திருந்தது அந்த படத்தில் அவர்களின் பங்கு பற்றி. சிவாஜியை பற்றி குறைகூறும்போது சொல்லப்படும் வார்த்தைகளில் பிரதானமானது அவருக்கு இயக்குனர்கள் ச‌ரியாக அமையவில்லை என்பதுதான். அதுவல்ல காரணமென்பதை நாம் முதலில் புரிந்துகொள்ளவேண்டும்.

சிவாஜியின் நடிப்பை பார்த்த மர்லன் பிரான்டோ இப்படி சொன்னாராம். 'சிவாஜியை போல் என்னால் ந‌டிக்க முடியாது'. அது அவரின் பெருந்தன்மையை குறிக்கிறது, ஆனால் சிவாஜியால் மர்லன் பிரான்டோவின் நடிப்பை நினைத்துகூட பார்க்க முடியாது.

_o0o_

4 comments:

Rathnavel said...

நல்ல பதிவு.

vaazhnilam said...

அதேபோல் தேவர்மகனில் பவித்திரன் இயக்கம் பிடிக்காமல் தானே மற்ற காட்சிகளை இயக்கினார் கமல்.

பவித்திரன் அல்ல. பரதன்.

கே.ஜே.அசோக்குமார் said...

நன்றி, திரு. ரத்தினவேல் அவர்களே!!

கே.ஜே.அசோக்குமார் said...

நீங்கள் (திரு.சுகுமாரன்) வந்து படித்ததே பெருமையாக நினைக்கிறேன்.

ஆமாம. அது பரதன் தான். இன்னும் நிறைய எழுதவேண்டும் என நினைத்திருந்தேன். அவ்வளவு விசயங்கள் அவரைப் பற்றி இருக்கின்றன. அடுத்த பதிவில் எழுதலாம் என உள்ளேன்.