Tuesday, March 22, 2011

சுஜாதாவின் சிறுகதைகள்: ஜெயமோகன் விமர்சனம்
உயிர்மை பதிப்பகமாக வந்திருக்கும் சுஜாதாவின் தேர்தெடுத்த சிறுகதைகள் நூலினை அலசி ஆராய்ந்து தொங்கவிடப்பட்ட ஜெயமோகனின் விமர்சனம் இது.

சுஜாதாவின் நடை சிறுகதைக்கு உரியது. காரணம்:
 1. சுருக்கம்
 2. நேர்கோட்டில் வேகமாகத் தாவிச்செல்லும் இயல்பு
சிறுகதையின் செவ்வியல் [ஓ ஹென்றி பாணி] வடிவில் நம்பிக்கை கொண்டவர் சுஜாதா. இயல்புகள:
 1. சம்பவங்களை நம்பியே கதையை அமைத்தல்
 2. குறைவான கதைமாந்தர்
 3. சிறிய கால அளவு
 4. மையமுடிச்சு இறுதித் திருப்பத்தால் அவிழ்க்கப்படுதல்
அவரது கதைகளின் பலம்:
 1. வலுவான வடிவ உணர்வு
 2. நேர்த்தியான மொழியுடன் அமைக்கப்பட்டவை.
சுஜாதாவின் கதைகளின் பலவீனம்:
 1. பெரும்பாலான கதைகளில் அவரது கதைமுடிவுகள் இதழியல் எழுத்துக்கு உரிய எளிய உத்திவிளையாட்டாக உள்ளன. உதாரணமாக
  • ஒரே ஒரு மாலை
  • வழி தெரியவில்லை
  • சென்ற வாரம்
 2. பொதுவான நியாயம் சார்ந்த முடிவுகூறலாக உள்ளன. முதலிய கதைகளைச் சொல்லலாம்.  உதாரணமாக
  • அம்மா மண்டபம்
  • கள்ளுண்ணாமை
  • கால்கள்
  • கரைகண்ட ராமன்
சுஜாதாவின் தொடக்கம்
 1. ஆங்கிலத்தில் ஹெமிங்வே முதல் ரே பிராட்பரி வரை பலர்.
 2. ஜானகிராமனில் இருந்து அவர் பெற்றுக் கொண்டது நுட்பமான தகவல்களை அடுக்கி கதை சொல்லும் முறை.
 3. அசோகமித்திரனில் இருந்து கறாரான விலகலை.
அவரது கதைகளின் வகை.
 1. நம் நினைவுகளை நுட்பமான தகவல்கள் மூலம் தூண்டி நடுத்தர வற்கவாழ்வின் செறிவான சித்திரம் ஒன்றை அளிப்பவை. உதாரணம் :
  • மகன் தந்தைக்கு
  • வீடு
  • சிலவித்தியாசங்கள்
  • செல்வம்
  • எல்டொராடோ
  • ரேணுகா
 2. . நம் தர்க்கபுத்தியை புனைவாட்டம் மூலம் சற்றே அசைத்து மேலே கற்பனைசெய்ய வைப்பவை. ஒருவகையான விடையின்மையை உணரச்செய்பவை. இதை அவர் அறிவியல் சிறுகதைகளைச் சார்ந்து உருவாக்கிக் கொண்ட எழுத்துமுறை எனலாம்.  உதாரணமாக
  • பார்வை
  • ரஞ்சனி
  • நீர்
  • நிபந்தனை
  • நிதர்சனம்
  • சாரங்கன்.
 3. உற்சாகமான கதைசொல்லல் மூலம் நம்மை புன்னகைக்க வைக்கும் கதைகள். உதாரணமாக
  • சுஜாதாவின் தலைசிறந்த கதையாக நான் எண்ணும் குதிரை இவ்வகையை சார்ந்தது.
  • மாமாவிஜயம்
  • சார் இந்த அக்கிரமத்தை
 4. ஒரு வகையான பகீரிடலை உருவாக்கும் கதைகள். கரிய நகைச்சுவை கொண்டவை. தார்மீக உணர்வை தொட்டு சீண்டுபவை. உதாரணமாக
  • நகரம்
  • முரண்
  • நிலம்
  • நொ ப்ரொப்ளாம்
  • எப்படியும் வாழலாம்
  • பாரீஸ் தமிழ்ப்பெண்
சுஜாதாவின் இக்கதைகளை விட மேலாக நான் புதுமைப் பித்தன், லா.ச.ராமாமிருதம், கு அழகிரிசாமி, தி ஜானகிராமன், அசோகமித்திரன் , ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி , கி ராஜநாராயணன் ஆகியோரின் ஆகங்களை முன்வைக்க காரணங்கள்
 1. சுஜாதா சிறுகதைக்குள் கவித்துவத்தை அடைவதே இல்லை . மேலான சிறுகதை ஒருவகை கவிதை சுந்தர ராமசாமியின் பல்லக்குதூக்கிகள் போல.
 2. சுஜாதா தீவிரமான அறஎழுச்சியை அடைவதில்லை, உருவாக்குவதில்லை. மேலான கதைகள் காலத்தால் பழமைகொள்ளாத அறவேகம் கோண்டவைஅழகிரிசாமியின் ராஜா வந்திருக்கிறார் போல.
 3. சுஜாதா கதையில் ஒருபோதும் அவரை விலக்கிக் கொள்வதில்லை. மேலான கதைகள் எழுத்தாளனைவிட பெரியவை. அவனது அறிவையும் மனதையும் மீறி ஆழ்மனம் வெளிப்படுபவை. ஜெயகாந்தனின் அக்கினிப்பிரவேசம் போல.
சுஜாதாவிடம் நம் மரபின் நேர் அல்லது எதிர் விளைவுகள் இல்லை. மேலான ஆக்கங்கள் மரபின் நீட்சியாக நின்று மரபை மறு ஆக்கம் செய்கின்றான. கி ராஜநாராயணனின் பேதை போல.

_o0o_

Wednesday, March 16, 2011

தமிழின் சிறந்த 10 எழுத்தாளர்கள்

1.அசோகமித்ரன்
2.ஜெயமோகன்
3.தி.ஜானகிராமன்
4.சுந்தரராமசாமி
5.புதுமைபித்தன்
6.ஜெயகாந்தன்
7.இந்திரா பார்த்தசாரதி
8.அ.முத்துலிங்கம்
9.நாஞ்சில் நாடன்
10.கி.ராஜநாராயனன்.


ஒரு விமர்சகனின் பார்வையிலிருந்தோ அல்லது ஒரு ஆய்வாளனின் பார்வையிலிருந்தோ சொல்லப்பட்டதல்ல. இது என் பார்வை. நான் கண்டுனர்ந்த முழுக்க என்னளவில் என் மனதிற்கு நெருக்கமாக உணரும் சிறந்த ஆக்கங்களை படைத்த எழுத்தாளர்களின் பட்டியல். வேறொருவர் வெறொரு நல்ல பட்டியலை அளிக்கலாம். ஏன் இந்த பட்டியல்கூட சில நாட்களில் மாற்றம் அடையக்கூடும், வரிசை மாறக்கூடும், புதிய எழுத்தாளர்கள் சேரக்கூடும்.

லாசாரா, பாவண்ணன், பிரபஞ்சன், சூத்திரதாரி, ஆதவன், சா.கந்தசாமி, கண்மணி குணசேகரன், பெருமாள் முருகன், போன்ற எழுத்தாளர்கள் பிடித்தமானவர்கள்தான். அவர்கள் இந்த பட்டியலின் அடுத்தடுத்த இடங்களில் வரக்கூடியவர்கள். அடுத்த பட்டியலில் டாப் 10க்குள் இவர்கள் வரக்கூடும். பார்கலாம், மீண்டும் ஒரு நல்ல பட்டியல் கிடைக்கும்.

Friday, March 4, 2011

முப்பத்தி நான்காவது சென்னை புத்தகக் காட்சி: சில நினைவுகள் சுதீர் செந்தில்

முழுமையாக 13 நாட்கள் ஒரு புத்தகக் காட்சியில் செலவழித்தது இந்த முப்பத்தி நான்காவது புத்தகக் காட்சியில்தான். முதல்முறையாக உயிர் எழுத்து புத்தகக் காட்சியில் கலந்து கொண்டதுதான் காரணம். ஒவ்வொரு முறையும் இரண்டு அல்லது மூன்று நாட்கள் கலந்து கொள்வதுதான் வழக்கம். அதற்குமேல் செலவழிப்பதற்கு பணிகள் அனுமதித்தது இல்லை.
ஆனால், நிலைமை இன்று அப்படி இல்லை. கிட்டத்தட்ட உயிர் எழுத்து துவக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் நிறைவடையப் போகின்றது. இடைப்பட்ட புத்தகக் காட்சியில் உயிர் எழுத்து வாசகர்கள் உயிர் எழுத்து ஏன் ஸ்டால் போடவில்லை என்று குறைபட்டுக்கொண்டே இருந்தார்கள். கடந்த ஆண்டு தோழர் சைலஜா என்னிடம் "தோழர் அடுத்த ஆண்டு கண்டிப்பாக ஸ்டால் போடுங்க. நிறைய இளைஞர்கள் வர்றாங்க. உயிர் எழுத்து பதிப்பக புத்தகங்கள் வந்திருக்கிறதான்னு தினமும் கேட்கிறாங்க. இருக்கிற உயிர் எழுத்து புத்தகங்களை வாங்கிட்டுப் போறாங்க" என்றார். அவ்வார்த்தைகள் இந்தாண்டு புத்தகக் காட்சியில் கலந்து கொள்வதற்கான மனநிலையையும் உத்வேகத்தையும் அளித்தன.

கடுமையான பணிகளுக்கிடையே புத்தகக் காட்சியில் கலந்துகொள்வதைப் பற்றி மறந்துபோயிருந்தேன். ஒருநாள் தோழர் சைலஜா சொன்ன அதே விசயத்தை ஹமீது என்னிடம் நினைவூட்டியபோது அதற்கான கால அவகாசம் மிகக் குறைவாக இருந்தது. புகைவண்டி பச்சை வண்ணம் ஒளிர நகர்ந்துகொண்டிருந்தபோது ஓடிச் சென்று கடைசிப் பெட்டியில் ஏறிவிட்டேன். ஒருவழியாக உயிர் எழுத்தின் புத்தகக் காட்சி விஜயம் நிகழ்ந்தேறியது.

புத்தகக் காட்சியில் முதல் நாள். ஏதேதோ பழைய நினைவுகள் என்னை அலைக்கழித்தவாறு இருந்தன. எட்டு ஆண்டுகளுக்கு முன் உயிர்மை பதிப்பகம் புத்தகக் காட்சியில் கலந்துகொண்டபோது மூன்று நாட்கள் இருந்தேன். அப்பொழுது உயிர்மை இதழ் ஆரம்பிக்கப் பட்டிருக்கவில்லை. புத்தகக்காட்சியில் முழுமையாக கலந்துகொண்ட எந்தவொரு அனுபவமும் இன்றி குறைந்த அவகாசத்தில் உயிர் எழுத்து ஸ்டாலை நிர்மாணித்தோம். நேருவும் அவனுடைய நண்பர்களும் அதைப் பார்த்துக்கொண்டார்கள்.

காலையில் உயிர் எழுத்து ஸ்டாலிற்கு முதல் நபராக ஒருவர் வந்தார். வெகுநேரம் புத்தகங்களை எடுத்துப் புரட்டியவண்ணம் இருந்தார். அந்நேரம் நாஞ்சில் நாடன் ஸ்டாலுக்கு வந்தார். சாகித்திய அகாதமி விருதால் உற்சாக மனநிலையில் இருந்தார். முதலில் வந்தவர் ஒரு புத்தகத்தை எடுத்து வாங்கியபடி "நான் உயிர் எழுத்து வாசகன். ஊட்டியிலிருந்து வருகிறேன்" என்றவர், புத்தகத்தை நீட்டி என்னிடம் கையெழுத்து போட்டுத் தரும்படி கேட்டார். முதல்  புத்தகத்தை வாங்கியவர் உயிர் எழுத்தின் வாசகர். நாஞ்சில் நாடனிடம் இருந்த உற்சாகம் என்னையும் தொற்றிக்கொண்டது. நான் நாஞ்சில் நாடனை ஆட்டோகிராஃப் போடும்படி கேட்டுக்கொண்டேன். அவரும் அவ்வாறே செய்தார். நாஞ்சில் நாடனிடம் இருந்து அந்த உயிர் எழுத்து வாசகர் பத்மநாபன் ஊட்டிலிருந்து வந்திருந்து புத்தகத்தை வாங்கி, முதல் விற்பனையைத் துவக்கிவைத்தார்.

உயிர் எழுத்து ஸ்டாலுக்கு இளைஞர்களும் படைப்பாளிகளும் வந்தவண்ணம் இருந்தனர். புதிதாகக் கொண்டுவரத் திட்டமிட்ட புத்தகங்கள் ஒவ்வொரு நாளும் வந்தபடி இருந்தன. பொதுவாக, கடந்த மூன்றாண்டுகளும் புத்தகச் சந்தையை ஒட்டி உயிர் எழுத்து பதிப்பக வெளியீட்டு விழாக்கள் இருக்கும். இம்முறை புத்தகக் காட்சியில் கலந்துகொண்டதால் நூல் வெளியீட்டு விழாக்களை நடத்துவதற்கான அவகாசம் இல்லை. எனவே, புத்தக ஸ்டாலிலேயே எளிமையான முறையில் புத்தக வெளியீட்டு விழாக்களை நடத்தத் தீர்மானித்தேன்.

நாஞ்சில் நாடன் அங்கு இருந்ததால் அவருடைய பச்சை நாயகி கவிதைத் தொகுப்புடன் வெளியீட்டு நிகழ்ச்சிகளைத் துவங்கலாம் என நினைத்தேன். மனுஷ்ய புத்திரனுக்கும் எனக்கும் இருந்ததாக நம்பப்பட்ட பிணக்கு முடிவுக்கு வந்திருந்தது. நான் ஹமீதிடம் பச்சை நாயகி கவிதைத் தொகுப்பை வெளியிடுமாறு கேட்டேன். "அதற்கு என்னடா, வந்திர்ரேன்" என்றவன், "அவர் ஒன்னும் நெனச்சுக்க மாட்டார்ல" என்றான். நான் அவன் குசும்பை ரசித்தபடி "போன் பன்றேன் வந்துரு" என்றேன். அங்கு வந்திருந்த நண்பர்களிடம் தகவல் தெரிவிக்க படைப்பாளிகளும் வாசகர்களும் நண்பர்களும் உயிர் எழுத்து ஸ்டாலில் கணிசமாகக் கூடிவிட்டனர். ஹமீதை அழைத்துவர நானே செல்லவேண்டியதாயிற்று. நான்கு ஆண்டுகளுக்குப் பின்பு மீண்டும் அவனை வீல் சேரில் அமர்த்தித் தள்ளியபடி ஸ்டாலுக்கு வந்தேன்.
மனுஷ்ய புத்திரன் வெளியிட பச்சை நாயகி கவிதைத் தொகுப்பை ஷோபா சக்தி பெற்றுக்கொண்டார். ஷோபா சக்தியை கடந்த புத்தகச் சந்தையில்தான் சந்தித்திருந்தேன். எளிமையான நகைச்சுவை தளும்பும் குறும்புக்காரராக எனக்குத் தெரிந்தார். எழுத்துக்கும் தோற்றத்திற்கும் மிகுந்த இடைவெளிகொண்ட மனிதன். நான் ஷோபா சக்தியிடம் புத்தகத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்று சொன்னபோது, "நான் ஒன்னும் பேசவேண்டியது இருக்காதே" என்றார். நிகழ்ச்சி முடிந்தபிறகு நாஞ்சில் நாடனிடம் பேசிக்கொண்டிருந்தேன். அப்பொழுது அவர் "இனி பத்தாண்டுகளுக்கு என்னால் கவிதை எழுத முடியாது" என்றார். எப்படி இவ்வாறு ஒரு படைப்பாளி சொல்ல முடியும் என்று நினைத்துக்கொண்டேன். கடந்த வாரம் என்னிடம் பேசும்பொழுது மேலும் சில கவிதைகளை எழுதி இருப்பதாகச் சொன்னார்.

இலக்கியம் என்பது என்னை எப்பொழுதும் செழுமைப்படுத்தியே வந்திருக்கிறது. அது எனக்கு எவ்வாறு அன்பு செலுத்துவது என்பதை கற்றுத் தந்திருக்கிறது. அன்பின் ஒளியின் மூலமாகவே நான் சகலத்தையும் கடந்து சென்றவாறு இருக்கிறேன். என்னை நான் எவ்வாறு நேசிக்காமல் இருக்கமுடியாதோ அதேபோல்தான் நான் ஒருவரையும் வெறுக்க இயலாதவனாக இருக்கிறேன். வாழ்க்கையில் நான் தரிசிக்கும் இருண்மையை, நான் எதிர்கொள்ளும் வாதைகளை ஒருபோதும் என் நண்பர்களுக்குப் பரிசளிக்க மாட்டேன். நான் ஒன்றில் தோல்வியுற்றேன் என்றால் அது என் அன்பின் பலவீனத்தால்தான்

இலக்கியவாதிகள் என்று அறியப்படுகிற பல நண்பர்களிடம் நான் இந்த அன்பை தரிசிக்கவே இயலவில்லை. அறம் என்பது சார்பான விஷயம் என்பதை நான் அறிவேன். ஆனால், அந்தச் சார்பான அறம்கூட ஒருவரிடமும் இல்லை. நான் மனுஷ்ய புத்திரனிடம் சமரசமாகப் போய்விட்டேன் என்று சில நண்பர்கள் ஆதங்கப்பட்டுக்கொண்டனர். சிலர் எச்சரிக்கையாக இருக்கும்படி என்னை வலியுறுத்தினர். நான் மனுஷ்ய புத்திரனுடன் இணைந்து  உயிர்மையைத் துவக்கியபோது எவ்வாறு இருந்தேனோ அவ்வாறே இன்றும் இருக்கிறேன். மனுஷ்ய புத்திரன் அவ்வாறு அல்ல. இலக்கிய அரசியலில் கைதேர்ந்தவனாக இருந்தான். அவனை அடிப்பவர்களுக்கு பதிலாக அதையே திருப்பிக் கொடுத்தான். இலக்கியத்தில் ஒவ்வொரு செயல்பாடுகளுக்குப் பின் இருக்கும் அரசியல், ஒவ்வொரு படைப்பாளிகளுக்குள்ளும் இருக்கும் அரசியல், மட்டுமல்லாமல் ஒவ்வொன்றைப் பற்றியும் திடமான கணிப்புகள் அவனுக்கு இருந்தன. ஏனெனில், அவன் காலச்சுவடில் பணியாற்றிய அனுபவம் அவனுக்கு உதவியது. நான் இப்பொழுது அதை உணர்கிறேன். எளிமையாக மனம் திறந்து சொல்லப்பட்ட ஒரு சொல்கூட எவ்வாறு அரசியல் ஆக்கப்பட்டு ஏவப்படுகிறது என்பதை உணர்ந்துகொண்டிருக்கிறேன். 'இலக்கியத்திற்கு வெளியே உள்ளவர்கள்' என்று அடிக்கடி மனுஷ்ய புத்திரன் சொல்வது எனக்கு இப்பொழுதுதான் உரைக்கிறது.

அன்று இரவு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. தொலைபேசியில் அழைத்த அந்த தமிழின் மிக மிக முக்கியமான படைப்பாளி, தமிழச்சி தங்கபாண்டியனின் புகைப்படத்தை உயிர் எழுத்து இதழின் அட்டையில் பிரசுரித்ததற்காகவும் அவருடைய நேர்காணலை வெளியிட்டதற்காகவும் என்னை நிறைபோதையில் வசைமாறி பொழிந்தார். "ஏன்டா ரோட்ல போடவேண்டிய குப்பைகளை எல்லாம் வீட்டுக்குள்ள கொண்டுவந்து போடுறீங்க. அழிஞ்சுறிவீங்கடா நீங்க. அவ இலக்கியத்துல யாருடா... நாயே உன்னை சபிச்சுருவேண்டா" இவ்வாறும் இன்னும் எழுதமுடியாத வசைச் சொற்களோடும் அவர் பேசிக்கொண்டே இருந்தார். நான் பொறுமையாக "சரி நாளைக்கு பேசிக்கொள்ளலாம் மணிவண்ணன்" என்று பலமுறை சொல்லியும் சமாளிக்க முடியாமல் போனை துண்டித்தேன். தொடர்ந்து லஷ்மிமணிவண்ணன் எண்ணிலிருந்து என் செல்போனுக்கு அழைப்பு வந்துகொண்டே இருந்தது. நான் செல்போனை அணைத்துவிட்டு அன்றைய என் விஸ்கியை அருந்தத் தொடங்கினேன்.

லஷ்மிமணிவண்ணனுக்கு தமிழச்சி தங்கபாண்டியன் எத்தனையோ உதவிகளைத் தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் செய்துவருகிறார் என்பதை நான் அறிவேன். தமிழச்சி தங்கபாண்டியனுடைய இலக்கியச் செயல்பாடுகளுக்கான அங்கீகாரமாகவே அவருடைய நேர்காணல் வெளிவந்தது. தமிழச்சி தங்கபாண்டியனின் இலக்கிய செயல்பாடுகளில் லஷ்மிமணிவண்ணனுக்கு கருத்து முரண்பாடு இருந்தால் அதை உயிர் எழுத்துக்கு எதிர் வினையாக எழுதி அனுப்பியிருக்கலாம். தமிழச்சி தங்கபாண்டியனிடமேகூட விவாதித்திருக்கலாம். விமர்சனங்களை எதிர்கொள்ள தயங்குபவர் அல்ல தமிழச்சி தங்கபாண்டியன். இந்தச் சம்பவம் நடந்த மறுதினமே தமிழச்சி தங்கபாண்டியனிடம் லஷ்மிமணிவண்ணன் உதவி கேட்டு நிற்கும் காட்சியையும் நான் பார்த்தேன். போகட்டும், தமிழச்சி தங்கபாண்டியனின் இலக்கிய ஆளுமையை ஏற்றுக்கொள்ள வேண்டாம். சக தோழியாய் தனக்கு அவர் செய்த உதவிகளுக்காகவாவது உயிர் எழுத்து அட்டையில் தமிழச்சியைப் பார்த்து மகிழ்ச்சியடைந்திருக்க வேண்டாமா? நான் எனக்கு வந்த சில கடிதங்களைப் பொக்கிஷமாய் பாதுகாத்து வருகிறேன். அவைகளில் ஒன்று லஷ்மிமணிவண்ணன் எனக்கு எழுதிய ஒரு கடிதம். அது தமிழ் எழுத்தாளனின் வாழ்வைப் பற்றிய சித்திரத்தை விளக்கும்படி அமைந்துவிட்ட கடிதம். அந்தக் கடிதத்தை படித்துவிட்டு அழுதேன். ஆனால், அவர் செய்துகொண்டிருப்பதுதான் என்ன?

இங்கு இலக்கிய மதிப்பீடுகள் என்னவாக இருக்கின்றன? நாம் வாழும் வாழ்க்கையை, நாம் வாழும் சமுதாயத்தை, நாம் உணர்ந்த தருணங்களை பிரதிபலிப்பதுதானே இலக்கியம். வாழ்க்கையின் எதார்த்தத்திற்கு நேர் எதிராக எவ்வாறு ஒருவர் இலக்கியம் படைக்க முடியும். மனச்சாட்சி பிளவுண்டுவிட்டாலும்கூட இலக்கியம் படைக்க இயலுமா?

மனுஷ்ய புத்திரனைப் பற்றி அவதூறாக எழுதப்பட்ட கட்டுரைக்கு நான் எதிர் வினையாற்றினேன். இதே நிலை அந்தக் கட்டுரையாளருக்கு ஏற்பட்டிருந்தால்கூட நான் அந்தக் கட்டுரையாளரின் பக்கமே இருந்திருப்பேன். இலக்கியம் என்பது நபர் சார்ந்து அல்ல. இலக்கியம் சார்ந்தே மதிப்பிடப்பட வேண்டும் என்பதுதான் என்னுடைய நம்பிக்கை. ஆனால், இங்கு எல்லாம் உருவாக்கப்படுகிறது. மதிப்பீடுகள் போலியானவைகளாக, உண்மைக்கு நேர் எதிராக கட்டமைக்கப்படுகின்றன.

உயிர் எழுத்தில் இதுவரை எந்த இலக்கிய அவதூறுகளும் வம்புகளும் வந்ததில்லை அல்லது உருவாக்கப்பட்டது இல்லை. என் நண்பன் ஹமீது என்னை கடுமையாகச் சாடி உயிர்மையில் ஒருமுறை எழுதினான். அதற்குப் பதிலுரையாக ஆதவனின் 'புதுமைப்பித்தனின் துரோகம்' என்ற சிறுகதையை அனுமதி வாங்கி மறுபிரசுரம் செய்தேன். அதில்கூட ஹமீதை  நான் இழிவுபடுத்திவிடவில்லை.

தொடர்ந்து வெளியீட்டு விழா நிகழ்ச்சிகள் நடந்தவண்ணம் இருந்தன. திருச்சியிலிருந்து சுமதி என்ற வாசகரும் அவருடைய தம்பி செந்தில் குமரனும் ஸ்டாலுக்கு வந்திருந்தனர். இருவராலும் தூக்கிச் செல்லமுடியாத அளவுக்கு புத்தகங்கள் இரண்டு பெரிய பைகளில். என்னிடம் மிக உற்சாகமாக பேசிக்கொண்டிருந்தனர். "எவ்வளவுக்கு புத்தகங்கள் வாங்கினீர்கள்" என்று கேட்டதற்கு 15,000க்கு வாங்கியதாகச் சொன்னார்கள். அவர்களை வணங்கத் தோன்றியது எனக்கு. அப்படி நிறையப் பேர்கள் புத்தகங்களை வாங்கிச் சென்றதை நான் பார்த்தேன். அவர்கள் ஒரு கோரிக்கையை என்னிடம் வைத்துவிட்டுச் சென்றார்கள். சென்னையிலும் மதுரையிலும் நடப்பது போன்று, திருச்சியிலும் ஒரு நல்ல புத்தகக் காட்சியை நடத்த நான் முயற்சி செய்யவேண்டும் என்பதுதான் அது. "சரி. நடத்துவோம்" என்றேன். அதைப் பற்றி நண்பர் தேவேந்திரபூபதியிடம் விவாதித்துக் கொண்டிருக்கிறேன். மதுரைப் புத்தகக் காட்சி இந்த அளவு பிரபலமாவதற்கு கவிஞர் தேவேந்திரபூபதியும் ஒரு முக்கியக் காரணம். ஒரு செயலைச் செய்ய நினைத்துவிட்டால் அதை செய்து முடிப்பதற்கான கடுமையான உழைப்பை செலுத்துபவன் என்கிற முறையில் முயற்சிகளைத் தொடங்கி இருக்கிறேன். ஹமீதும் நண்பர் ந.முருகேசபாண்டியனும் சில ஆலோசனைகளைச் சொல்லியிருக்கிறார்கள். திருச்சியில் நல்ல புத்தகக் காட்சி நடக்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை.

சகோதரி தமிழ்ச்செல்வி, கரிகாலன் குழந்தைகளோடு வந்திருந்தனர். சமீபகாலத்தில் கரிகாலன் உடனான நட்பு மிகவும் நெருக்கமானதாக இருக்கின்றது. தொடர்ந்து கரிகாலன் உயிர் எழுத்து இதழை நடத்துவதற்கான தார்மீக பலத்தை கொடுத்தபடி இருக்கிறார். என்னை நேரில் சந்திக்கும்போதும் சரி; தொலைபேசியில் உரையாடும்போதும் சரி; அவர் காட்டும் அன்பும் அக்கறையும் என்னை நெகிழ வைக்கின்றது. அவருடைய தையலலைப் போற்றுதும் என்னும் நூல் அவர் ஒரு சிறந்த பெண்ணியவாதி என்பதை சுட்டிக்காட்டும். பாராட்டவும் ஒரு மனம் வேண்டுமே!  

என்னுடைய 'யாருடைய இரவெனத் தெரியவில்லை' கவிதை நூலை பெற்றுக்கொள்வதற்காக என் மகன் சுதீர் மணி வந்திருந்தான். புத்தகத்தை வெளியிடுவதற்கு நண்பர் மிஷ்கினை வரவழைப்பதுகூட அவ்வளவு சிரமமாக இருக்கவில்லை. சுதீர் மணியை வரவழைக்க பெரும்பாடு பட்டுவிட்டேன். விடுமுறை கிடைக்கவில்லை என்றான். திருநெல்வேலியில் அலுவலராக இருக்கும் அவன் எப்படியோ என்னுடைய தொந்தரவுக்குப் பணிந்து ஒரு விமானத்தைப் பிடித்து வந்து சேர்ந்தான். மிஷ்கின் என் கவிதைத் தொகுப்பை வெளியிட சுதீர் மணி புத்தகத்தைப் பெற்றுக்கொண்டான். லீனா மணிமேகலை நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். லீனாவின் முதல் கவிதைத் தொகுப்பிற்கு திருச்சியில் ஒரு விமர்சனக் கூட்டத்தை நடத்தினேன். அதற்குப் பின்பு பெரிய அளவில் அவருடன் எனக்குத் தொடர்பில்லை. ஆனால், அவர் ஒரு நல்ல தோழி என்பதையும் நட்பைப் போற்றுபவர் என்றும் அறிவேன். இப்பொழுது அவருடைய கவிதைகள் மொத்தமும் தொகுக்கப்பட்டு உயிர் எழுத்தில் வந்திருக்கின்ற சூழ்நிலையில் எங்கள் நட்பு மீண்டும் புத்துயிர் பெற்றிருக்கிறது. நண்பர்கள் லிபி ஆரண்யா, ஸ்ரீஷங்கர், யவனிகா ஸ்ரீராம், செல்மா பிரியதர்ஸன், விஸ்வநாதன் கணேசன், குமார் அம்பாயிரம், விஜயமகேந்திரன் ஆகியோர் வந்திருந்தனர். வாழ்த்துரை வழங்க வந்திருந்த மனுஷ்ய புத்திரன் என் கவிதைகளைப் பற்றி கூறும்போது, "நான் தொடர்ந்து கவிதையை பின்தொடர்வதாகவும் நான் கவிதையை அடையும்போது கவிதை ஒரு அடி முன்நகர்ந்து சென்றுவிடுவதாகவும்" சொன்னார். அவர் சென்றபின்னர் என் நண்பர்கள் என்னை பிடிபிடி என்று பிடித்துக்கொண்டார்கள். ஹமீது மீது பெருத்த கோபம்கொண்டபடி, எனக்கு ரோஷமே வராதா என்று கடிந்துகொண்டார்கள். மறுநாள் ஹமீது "தான் வேறு ஏதோ பேச வந்து எதையோ பேசிவிட்டதாகச் சொல்லி, நான் ஏதும் உன்னை புண்படுத்தி விட்டேனா" என்று கேட்டான்.

மனுஷ்ய புத்திரன் என் கவிதைகள்மீது வைத்திருந்த விமர்சனத்தை நான் சரி என்றே கருதுகிறேன். இதற்கு வருத்தப்படுவதற்கோ கோபப்படுவதற்கோ ஒன்றுமே இல்லை. இது சுதீர் செந்திலின் கவிதைகளின் மீதான விமர்சனம் அல்ல. சிறந்த கவிதைகளுக்கான விமர்சனம். இது மனுஷ்ய புத்திரனுக்கும் பொருந்தும். யவனிகா ஸ்ரீராமுக்கும் பொருந்தும். வேறு எந்த ஒரு படைப்பாளிக்கும் பொருந்தும். கவிதை நகர்ந்து செல்லாவிட்டால் எவ்வாறு ஒரு கவிஞனால் கவிதையைப் பின்தொடர்ந்து செல்லமுடியும். கவிதை முன்னகர்ந்து செல்லும்போதுதானே  மொழி இன்னும் ஒரு அடி நகர்கிறது அல்லது வளர்கிறது அல்லது மாறுகிறது. இது நண்பர்களுக்குப் புரியவில்லை; அவர்கள் கோபித்துக்கொண்டார்கள். ஹமீது அறிந்திருக்கவில்லை; என்னை சமாதானப்படுத்தினான்.

நான் தங்கி இருந்த இடத்தை இம்முறை வெகு ரகசியமாக வைத்திருந்தேன். அய்யப்பமாதவன் போன்ற நண்பர்கள் 'நண்பா எந்த குகைக்குள் பதுங்கியிருக்கிறாய்' என்று எஸ்.எம்.எஸ் கொடுத்தவண்ணம் இருந்தனர். இலக்கிய நண்பர்களோடு சேர்ந்து மது அருந்துவது பெரும் மனநெருக்கடிக்கு ஆளாக்கிவிடுகிறது. இலக்கிய நண்பர்கள் சந்தித்தால் வேறு வழி இல்லாமல் குடிக்கவேண்டியதாகிவிடுகிறது. குடித்தபிறகு அவர்கள் வால்ட் விட்மன், மாயோ காவுத்ஸ்கி, பாப்லோ நெருடா, ரோலன் பார்த், புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், டால்ஸ்டாய், தஸ்தாவெஸ்கி, நீட்சே, தெரிதா, ஃபூக்கோ ஆகியோர்கள்போல் மாறிவிடுவதுகூட பிரச்சினையில்லை. ஆனால், திடீரென சக்கரவர்த்திகளாக மாறி நம்மை குருநிலமன்னர்களாக்கி விடுகிறார்கள் அல்லது கடுமையான தண்டனையைப் பரிசளிக்கிறார்கள். சிறிது நேரத்தில் அங்கு ஒரு குருக்ஷேத்திர யுத்தமே நடந்து முடிந்துவிடும். ஒரு பதினைந்து நாள்கள் நான் முழுமையாக என்னை காப்பாற்றிக்கொள்ளவே பதுங்கி இருந்தேன்.

சுதீர் மணி வந்திருந்த இரவு என் நேரு, ரமேஷ் என்னுடன் இருந்தார்கள். இரண்டுபேரும் சினிமாக்கார பசங்கள். நாங்கள் பிளாக்லேபிலை அருந்தியபடி பேசிக்கொண்டிருந்தோம். பொதுவாக, என் நண்பர்களோடு இருக்கும்போது சுதீர் மணி இருந்தால் அவனை பேசவிட்டு நான் அமைதியாக இருப்பேன். அன்றும் அவ்வாறே இருந்தேன். சினிமாக்கார பசங்க சினிமாவைப் பற்றி பேச ஆரம்பித்தார்கள். சுதீர் மணியும் சினிமாவைப் பற்றி பேசிக்கொண்டிருந்தான். சிறிது நேரத்திலேயே நேருவும் ரமேஷூம் சுதீர் மணியின் பேச்சை ரசிக்க ஆரம்பித்துவிட்டார்கள். இரண்டு மணிநேரத்திற்குமேல் நீடித்த அந்த உரையாடல் உலக சினிமாவையே சுற்றிச் சுற்றி வந்தது. நான் நினைத்துக்கொண்டேன்: "மிஷ்கின் அருகில் இருந்தால் எவ்வளவு நன்றா இருக்கும்" என்று. சுதீர் மணி சினிமாவைப் பற்றி அவ்வளவு தெரிந்துவைத்திருக்கிறான். அவன் புத்தகச் சந்தையில் வாங்கிய ஒரே புத்தகம் Dan Brown  னின் The Lost Symbol .

காலச்சுவடு அரங்கிற்குச் சென்று நரனுடைய கவிதை புத்தக வெளியிட்டு விழாவில் கலந்துகொண்டேன். கவிஞர் இசை புத்தகத்தை வெளியிட நான் பெற்றுக்கொண்டேன். நண்பர் தேவிபாரதி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்துக் கொண்டிருந்தார். இளையதலைமுறை தமிழ்க் கவிஞர்களில் நம்பிக்கையூட்டும் கவிதைகளை எழுதுபவராக நரன் உள்ளார். நரனுடைய அதிகமான கவிதைகளை உயிர் எழுத்து பிரசுரித்துள்ளது. அதை நரன் தனது ஏற்புரையில் குறிப்பிட்டார். இசை உயிர் எழுத்தில் தொடர்ந்து எழுதிவரும் கவிஞர். அவர் புத்தகத்தை வெளியிட நான் பெற்றுக்கொண்டது பொருத்தமானதுதான். காலச்சுவடு அரங்கில் நீண்ட நாட்களுக்குப் பின் எழுத்தாளர் அம்பையை சந்தித்தேன். எப்பொழுதும்போலவே உற்சாகமாகப் பேசிக்கொண்டிருந்தார். காலச்சுவடுகண்ணன் எழுதிய ஒரு கட்டுரையைக் குறிப்பிட்டு அங்கலாயித்தார். 'என்னதான் இருந்தாலும் ஒரு நண்பரை இப்படி எழுதலாமா' என்று சொன்னவர் 'என்னதான் இருந்தாலும் என்னாலெல்லாம் அப்படி முடியாது' என்றார். அவர் இன்னும் ஒரு படைப்பாளியாக இருந்துகொண்டிருப்பதற்கு இந்தக் குழந்தை மனம்தான் காரணம் என நினைத்துக்கொண்டேன்.

எப்பொழுதும்போல் உற்சாகமாய் இருந்த பவா செல்லதுரையை பார்த்தேன். எவ்வாறு ஒரு மனிதர் எப்பொழுதும் பிறரை பாராட்டிக்கொண்டே இருக்க முடிகிறது என்று பவாவுடன் உரையாடிக் கொண்டிருக்கும்பொழுதெல்லாம் யோசிப்பேன். எப்பொழுதும் அவரிடம் யாரைப் பற்றியாவது ஒரு புகழுரை தயாராக இருக்கும். வியப்புக்குரிய மனிதர். அவரை ஒரு நேர்காணல் செய்யச்சொன்னேன் அப்பணசாமியிடம். ஒரு வருடம் ஆகப்போகிறது. பவா இன்னும் முடித்தபாடில்லை. ஏனென்றால், பவாவுக்கு தன்னைப் பற்றியெல்லாம் யோசிக்கத் தெரியாது. தோழர் சைலஜா என்னிடம் கேட்டார் "தோழர் ஸ்டாலில் சேல்ஸ் எப்படி போகுது". நான் புரிந்துகொண்டு முதல் நாள் விற்பனையான தொகையைச் சொன்னேன். "சரிதான் தோழர். எங்களுக்கும் அப்படித்தான் இருக்கு. ஆனா, ஒவ்வொருத்தரும் சொல்லுற தொகையைக் கேட்டா நம்பமுடியல" என்று ஆதங்கப்பட்டார். மனித மனம் புனைவுகளால் நிரம்பியது. புத்தகக் காட்சி என்றால் அதிகபட்ச விற்பனைதான் கௌரவம் என்று நினைக்கின்ற மனம். ஒவ்வொரு வருடமும் புத்தகச் சந்தையில் விற்பனையான தொகைபற்றிய புள்ளிவிவரங்கள் எந்தளவுக்கு சரி என்று தெரியவில்லை.

உயிர்மை பதிப்பித்த ரசிகமணியின் கடிதங்கள் நூல் வெளியீட்டில் கலந்துகொண்டேன். இந்தாண்டு உயிர்மை பதிப்பித்த பல சிறந்த புத்தகங்களில் அது முக்கியமான நூல். அந்த புத்தகத்தை எடுத்து என் கையில் கொடுத்த ஹமீது "எப்படி இருக்கு" என்றான். வெகுநாட்களுக்குப் பின்பு அவன் கண்களில் அந்த ஒளியை மீண்டும் கண்டேன். ஒரு சிறந்த வேலையை செய்து முடிக்கும்பொழுது ஏற்படும் மகிழ்ச்சியாலும் பெருமிதத்தாலும் தோன்றுவது. அந்தச் சில வினாடிகளுக்காக அவன் எவ்வளவு சிரமப்பட்டிருப்பான் என்று எனக்குத் தெரியும். நூலை வெளியிடுவதற்காக கி.ரா வந்திருந்தார். பலமுறை பார்த்திருக்கிறேன். சிலமுறை தொலைபேசியில் உரையாடியிருக்கிறேன். ஆனால், எனக்கும் அவருக்கும் நேர் பரிச்சயம் கிடையாது. கே.ஏ.ராதாகிருஷ்ணன் என்னை கி.ரா.வுக்கு அறிமுகப்படுத்திவைத்தார். என் கரங்களைப் பிடித்துகொண்டு மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டார்.

எஸ்.ராமகிருஷ்ணனை தினமும் பார்க்க முடிந்தது உயிர் எழுத்து ஸ்டாலுக்கு வந்திருந்தார். உயிர் எழுத்து ஆரம்பிக்கப்பட்டபொழுது எனக்கு நம்பிக்கையை அளித்தவர். என்னுடைய நல்ல நண்பர். அவர் மதிப்பு மிக்க எழுத்துகளை தொடர்ந்து எழுதுபவராக உள்ளார். உயிர் எழுத்து வெளியீட்டு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். சாரு பழைய மாதிரி என்னிடம் பேசத் துவங்கியிருக்கிறான்.. அவனுக்கு என்மீது அடங்கா கோபம் 'ராசலீலா'வை நான் விமர்சித்தது அவனை மிகவும் புண்படுத்தியிருக்கும்போல. ஆனால், சாருவை தொடர்ந்து எத்தனையோ பேர் விமர்சித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அவற்றையெல்லாம் அவன் பொருட்படுத்துவது இல்லை. நான் அவனுடைய நெருங்கிய நண்பனாக இருந்த காரணத்தினால் அவனுக்குத் தாங்கிக்கொள்ள முடியவில்லைபோலும். நான் சிலமுறை அவனிடம் பேச முயற்சித்தும் அந்தச் சமயத்தில் என்னிடம் பேச மறுத்துவிட்டான். அவனும் இலக்கியத்தையும் நட்பையும் போட்டுக் குழப்பிக்கொள்கிறான். அவன் ஒரு எழுத்தாளன் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை. ஆனால், அவன் எழுதும் விசயங்கள் மிகவும் ஆரோக்கியமற்றவையாக இருக்கின்றன என்பதை ஒரு நண்பனாக நான் சொல்லித்தான் ஆக வேண்டும். ஆட்டோகிராஃபிற்காக எத்தனை கையெழுத்துதான் போடுவான் பாவம்! உயிர்மை அரங்கில் அமர்ந்துகொண்டு யார் கையெழுத்து கேட்கிறார்கள் என்பதைக்கூட பார்க்காமல் எழுத்துகளுக்கு வலிக்க வலிக்க கையெழுத்து போட்டுகொண்டிருப்பதை பார்க்க என்னால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. "என்னடா சாரு, நோட்டை என்னுறமாதிரி கையெழுத்து போட்டுகிட்டே இருக்க" என்று கேட்டேன். அவன் அந்தப் பேனா வாங்கிய கதையைச் சொல்ல ஆரம்பித்தான் (பேனாவின் விலை ரூ.10,000).

உயிர் எழுத்துடன் சம்பந்தப்பட்ட நிறைய வாசகர்களையும் படைப்பாளிகளையும் தினமும் சந்திப்பது புதிய அனுபவமாக இருந்தது. விஜயமகேந்திரன் உயிர்மை ஸ்டாலுக்கும் உயிர் எழுத்து ஸ்டாலுக்குமாக அலைந்துகொண்டிருந்தான். விஜயமகேந்திரனின் முதல் சிறுகதையை நான் பிரசுரித்தேன். அவனுடைய முதல் சிறுகதைத் தொகுப்பை ஹமீது கொண்டுவந்தான். இப்பொழுது விஜயமகேந்திரன் எங்கள் இருவருக்கும் செல்லப் பிள்ளையாகிவிட்டான். நாங்களும் போட்டிபோட்டுக்கொண்டு அந்த வைரஸ்கிருமியை சாத்தானாக மாற்றிக்கொண்டிருக்கிறோம் (என் கவிதை சிலவற்றில் வரும் சாத்தான் விஜயமகேந்திரன் என்று அதற்கு அர்த்தமல்ல.). நான் தங்கியிருந்த அறைக்கு வந்த ஒரே இலக்கியவாதி விஜய் மட்டும்தான் அன்றைக்கு திருவள்ளுவர் தினம். டாஸ்மாக் இல்லை என்பது எனக்குத் தெரியாது. நான் தங்கி இருந்த ஹோட்டலில் பார் வசதி இருந்தது. மட்டுமல்லாமல் என்னுடைய நண்பர் எனக்குத் தேவையான பானங்களை ஒவ்வொருநாளும் பரிசளித்துக்கொண்டிருந்தார். அன்று அவரும் இல்லை. ஹோட்டலில் பாரும் இல்லை. விஜயை அழைத்தவேளை இத்தனை துரதிருஷ்டவசமாகவா இருக்க வேண்டும். மனத்திற்கு கஷ்டமாக இருந்தது. இருந்தாலும் அதிர்ஷ்டம் விஜயமகேந்திரன் பக்கம் இருந்தது. அவனுக்கு தெரிந்த ஒரு கடையில் ரெமி மார்ட்டின் அதிர்ஷ்டவசமாக இருந்ததை நானும் அவனும் சென்று வாங்கி வந்தோம்.

அடுத்தநாள் காலையில் ஒரு துர்செய்தி எனக்காகக் காத்திருக்கப் போகிறது என்பதை அறியாமல் பின்னிரவு வரைக்கும் பேசிக்கொண்டிருந்தோம். "சார், ரெமி மார்டினை இப்பொழுதுதான் முதன்முதலாக சாப்பிடுகிறேன்" என்றான் விஜய். யார் யாரைப் பற்றியோ எதை எதையோ சொல்லிக்கொண்டே இருந்தான். எப்பொழுதும்போல் ராமேஷூம் நேருவும் உடன் இருந்தனர். அதிகாலை ஆறு மணிக்கு என் செல்போன் அந்த துக்கச் செய்தியை சொன்னது. எனது மாமனார் ஐம்பத்திரண்டு வயதில் காலமாகிப் போயிருந்தார். எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. திடீரென்று என்னிடமிருந்து வெளிப்பட்ட கதறல் நேரு, ரமேஷ் ஆகியோரின் தூக்கத்தைக் கலைத்துவிட்டது. ஹமீதை அழைத்தேன். அதிசயமாக போனை எடுத்தான். செய்தியைச் சொல்லிவிட்டு அன்றைய தினம் நடக்கவேண்டிய உயிர் எழுத்து வெளியீட்டு நிகழ்ச்சிகள் அனைத்தையும் அவனிடம் ஒப்படைத்தேன். புத்தகக் காட்சியில் எல்லா நாட்களும் என்னுடன் இருந்து பல உதவிகளைச் செய்த, என்னை எப்பொழுதும் வாஞ்சையோடு அப்பாவென அழைக்கும் சந்திராவிடம் தகவலை தெரிவித்து ஸ்டாலைப் பார்த்துக்கொள்ளும்படி சொன்னேன். தோழர் அய்யாக்கண்ணிடமும் இந்திராணியிடமும் தகவலைத் தெரிவித்தேன். அவர்கள் செய்த உதவி அளப்பறியது. நன்றி சொல்லி மாளாது. அவர்கள் பல ஆண்டுகளாக தொடர்ந்து என்மீது பேரன்பு செலுத்துபவர்கள். உயிர் எழுத்து ஸ்டாலை அவர்களே முழுக்க முழுக்க பார்த்துக்கொண்டார்கள். கூடவே இருந்து உணர்வுப்பூர்வமாக உதவிகளைச் செய்த நண்பர்கள் தினேஷ், மணி, சரவணன் ஆகியோருடன் கடைசிநாள் இரவைக் கொண்டாட நினைத்திருந்தது நினைவிலாடியது. எஞ்சியிருந்த ரெமி மார்ட்டினை அருந்திவிட்டு திருச்சிக்குக் கிளம்பினேன். தன்னந்தனியனாக காரை ஓட்டியபடி ஐந்து மணிநேரம் நான் செய்த அந்தப் பயணம் என் வாழ்நாளிலேயே மிகத் துயரமானது.

மேல்மருவத்தூரை கடக்கும்போது தேவேந்திரபூபதி எதிரில் வந்துகொண்டிருந்தார். அன்று அவருடைய புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி இருந்தது. செய்தி கேள்விப்பட்டு, தானும் திருச்சி வருவதாகச் சொன்னார். நான் வேண்டாம் என மறுத்து புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டேன். நட்பை மிக நேசிக்கும் மனம் கொண்டவர். அவரால் பயனடையும் படைப்பாளிகள் ஏராளம். தமிழச்சி தங்கபாண்டியன் என்னை அழைத்து ஆறுதல் சொன்னார். எப்பொழுதும்போல் "சுதீர் நான் எதாவது செய்யனுமாப்பா" என்று கேட்டார். நாஞ்சில் நாடனிடம் செல்போனில் செய்தியை தெரிவித்தபோது, அவர் எனக்கு எவ்வாறு ஆறுதல் சொல்வதென்று தெரியாமல் தடுமாறியதை உணரமுடிந்தது. இத்தகைய தருணங்களில் ஆறுதல் வார்த்தைகளை எவராலும் சொல்லிவிட முடியாது நீராலானது தொகுப்பில் துஷ்டி கேட்கப்போயிருந்த  ஓர் அனுபவத்தை  ஹமீது ஒரு கவிதையாய் எழுதியிருப்பான். அது நினைவுக்கு வந்தது.

 நன்றி: உயிர் எழுத்து மார்ச் இதழ்