Friday, August 27, 2010

கி.ரா.வின் சிறுகதை விதிகள்

இணையத்தில் சுட்ட கி.ரா. அவர்களின் சிறுகதை பற்றிய ரகசியங்கள், சிறுகதை எழுதமுனையும் அனைவருக்கும் பயனளிக்கும், இங்கே வெளியிடுகிறேன். இதில் 2ஆம் பாயின்ட் எனக்கு பிடித்த பாயின்ட்.


1. கவிதையைப் போலவே, சிறுகதையிலும் வார்த்தைகள்தான் அதிமுக்கியம். "அனாவசியமாக ஒரு வார்த்தைகூட இருக்கக் கூடாது" என்கிறான் ஆண்டன்செக்காவ்.
ஒருவார்த்தையை எடுத்தாலும், சேர்த்தாலும் கதை பாதிக்கப்பட வேண்டும் என்கிறான்.

2. சிறுகதையின் உருவம் கொஞ்சம் விசித்திரமானது. அது முதலில் வாலைத்தான் காண்பிக்கும்; கடைசியில்த்தான் தெரியும் தலை! அதனால் ஆரம்ப வாக்கியத்தைவிட கடைசி வாக்கியம்தான் முக்கியம் - தவில் அடியின் முத்தாய்பைப் போல. சிலை செய்கிறவன் செய்து முடித்த சிலைக்குக் கடேசியில் கண்களைத் திறக்கிற மாதிரி!

3. கதைக்கு ஒரு கரு என்ன, இரண்டு கரு வைத்துக்கூட ஒரு கதையை எழுதலாம். கருவே இல்லாமல்கூட கதை எழுதி விடலாம். கூந்தல் வைத்திருக்கிற பொண்ணு எப்படி வேண்டுமானாலும் கூந்தலை முடிந்து காண்பிப்பாள். எல்லாம் சாமர்த்தியத்தினுள் அடக்கம்.

4. எழுதுகிறவனுக்கு மாத்திரமில்லை. எல்லோருக்கும்தான் கிடைக்கும் கரு. கருவுக்குப் பஞ்சமே இல்லை. சொல்லப் போனால் எழுதப்பட்ட கருக்களைவிட, எழுதப்படாமல் கிடக்கிற கருக்கள்தான் லட்சோபலட்சம். இன்றைய தேதி வரை கரு கிடைக்காமல் திண்டாடினான் ஒருவன் என்று நான் கேள்விப்பட்டதே இல்லை. ஆனால் கருவைத் தேர்ந்தெடுக்கிறவன் புதுப்புது மாதிரியானவைகளாகப் பார்த்துத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஒருவன் புதுக்கருவை வைத்து எழுதித் தோற்றுப் போனாலும்கூட அவனுக்கு அதற்காக நான் 30 மார்க்குகள் கொடுப்பேன்.

5. தூங்கிறபோது நம்முடைய மூளை உறுப்புகளில் சில தூங்காமல் கனவை எழுப்பிக் கொண்டிருப்பது போல, ஒரு எழுத்தாளன் விழித்துக் கொண்டிருக்கும்போதும் அவனுள் 'சிலது' தூங்கிக் கொண்டு ஒருவகையான கனவை எழுப்பிக் கொண்டே இருக்கும். அர்த்தஜாமத்திலும் தேனீக்கூட்டில் காது வைத்துக் கேட்டால் வரும் ஓசையைப் போல் அவனுடைய உள்ளத்தில் ஒரு ஓசை உண்டாகிக் கொண்டே இருக்கும். செம்மை செய்யப்படாத, முழுதும் பூர்த்தியடையாத ஆபரணங்கள் பொற்கொல்லனின் பட்டரையைச் சுற்றி கிடப்பதுபோல, பூர்த்தியாகாத எண்ணற்ற கதைக்கருக்கள் அவனுடைய மன அறைக்குள் அங்கங்கே சிதறிக் கிடக்கும்.

6. கருக்களில் நாலு வகை உண்டு. கேள்விப்பட்டது, பார்த்தது, அனுபவித்தது, கற்பனை. இந்த நாலில் எது, சம்பந்தப்பட்ட கதைக்கு நன்றாக அமையும் என்று சொல்ல முடியாது. பொதுவாக அனுபவித்தது சிறப்பாக அமையலாம் என்பது என்னுடைய கணக்கு.

7. எழுத்தாளர்கள் ஏகலைவன் மாதிரி. அவர்கள் எந்த வாத்தியாரையும் வைத்துக் கொண்டு தங்கள் தொழிலை கற்றுக் கொண்டதில்லை. அதேபோல எந்த ஒருவனுக்கும் அவர்கள் வாத்தியாராக இருந்து கற்றுக் கொடுக்க விரும்புவதும் இல்லை.

-o0o-

Thursday, August 26, 2010

அசோகமித்ரனின் சிறுகதை விதிகள்

அசோகமித்ரனின் சிறுகதை விதிகள் பல இடங்களில் சொல்லியிருக்கிறார். அதில் முக்கியமானவை சில 




1. நல்ல கலை வெளிப்பாடு, மனிதன் மீது அக்கறை மனிதனின் தவிர்க்கக்கூடிய மற்றும் தவிர்க்க இயலாத தவிப்புகளையும் பிரதிபலித்தே ஆகவேண்டும்'

2. ஒவ்வொரு கணமும் அனைத்து மனிதர்களுக்கும் ஏராளமான அனுபவங்க¨ளைத் தந்து விட்டுத்தான் போகிறது. ஆனால், இவற்றில் மிக மிகச் சிறிய பகுதியே மனம் கவனம் கொள்கிறது. இந்தக் கவனத்தை விசாலப் படுத்துதல் ஒரு சிறுகதாசிரியனுக்கு மிகவும் அவசியம்.

3. ஒரு சிறுகதையில் உரையாடல் பகுதி எவ்வளவு இருக்க வேண்டும்? முதலில் கதையில் எப்பகுதி உரையாடல் மூலம் வெளிப்படுத்தப்பட வேண்டும்? இது மிகத் தேர்ந்த எழுத்தாளர்களிடையே கூடக் குழப்பம் ஏற்படுத்தும் விஷயமாக இருக்கிறது.  சிறுகதையில் வசனத்தை விரயம் செய்வது கதையில் மிகுந்த சேதத்தை விளைவிக்கக் கூடியது.

4. நல்ல சிறுகதை ஆசிரியனுக்குப்பேச்சு வழக்கு உரையாடலை எந்த அளவுக்கு ஒரு படைப்பில் பயன்படுத்தினால் எதார்த்தச் சித்தரிப்பும் குறைவு படாமல் கதையும் வாசகருக்குப் பூரணமாகப் புரிவதாகவும் அமையும் என்ற பாகுபாடு தெரிய வேண்டும்.

5. கதைக்குச் சம்பந்தம் இருந்தாலும் இல்லாது போனாலும் தனக்குத் தெரிந்தது அனைத்தையும் ஒரு படைப்பில் புகுத்தி விடுவது நல்ல சிறுகதையை அமைக்காது. ஒரு நல்ல சிறுகதையில் அதிலுள்ள பேச்சு வழக்கோ தகவல்களோ தனித்து நிற்காமல் கதைப் போக்கோடு இணைந்து இருக்கும்படிச் செய்வதுதான் பக்குவமான படைப்பாற்றலுக்கு அடையாளம்.

6. சிறுகதைக்குரிய தொழில் நுட்பங்களை ஒருவர் அறிந்து கொள்வதில் தவறில்லை. அது அவருடய மனித இன அக்கறையோடு இணைகையில் சிறந்த சிறுகதைகளுகு வழி செய்கிறது. இந்த அக்கறை இல்லையெனின், தொழில் நுணுக்கத் தேர்ச்சி முறையான அமைப்பு உள்ள கதையை படைக்க உதவும். ஆனால், அந்தப் படைப்பில் ஜீவன் இருக்காது.

-o0o-
 

Wednesday, August 4, 2010

கே.எம். மாத்யூ பற்றி ஜெயமோகன்



அன்புள்ள ஜெ.மோ. அவர்களுக்கு,
கே.எம். மாத்யூ என்பவரைப்பற்றி, அவரது மரணத்திற்கு பின்னால், தொடர்ந்து பத்திரிக்கைகளில் அடிப்பட்டு வருகின்றன. கேரளாவிலும், பத்திரிக்கை துறையிலும் அவர் முக்கியமானவரா?, அவரது சுயசரிதையும் முக்கியமானதா?, அவரைப்பற்றி உங்களுக்கு தெரியும் என நினைக்கிறேன். அவரைப் பற்றிய அல்லது அவரைப்ப்ற்றிய புத்தகங்கள் போன்ற விவரங்களை எனக்கு தெரியப்படுத்தினால் பயனுள்ளதாக இருக்கும். நன்றி.
கே.ஜே.அசோக்குமார்.

அன்புள்ள அசோக் குமார்
டாக்டர் கெ.எம்.மாத்யூ மலையாள மனோரமா மற்றும் எம்ஆர்எஃப் டயர்ஸ் குழுமத்தின் உரிமையாளர் குடும்பத்தின் மூத்த உறுப்பினர். மலையாளமனோரமாதான் கேரளத்தில் முதலிடம் வகிக்கும் நாளிதழ் மற்றும் பிரசுர நிறுவனம். அதன் ஆசிரியராக அவர் இருந்தார். திரு மாத்யூ தனிப்பட்ட முறையில் சீரிய இலக்கியத்தில் ஆர்வமுடையவர். இலக்கியவாதிகளை ஆதரித்தவர். மலையாள மனோரமா குழுமத்தின் பாஷாபோஷினிதான் கேரளத்தின் முதன்மையான இலக்கிய இதழ். அவரது சுயசரிதை கடந்த அரைநூற்றாண்டு கேரள இதழியல் -பண்பாட்டு சரித்திரத்தை ச்சொல்வதும்கூட. அவருக்கு இருக்கும் முக்கியத்துவம் அப்படி வந்ததே
ஜெ 

-o0o-

Monday, August 2, 2010

ஜெயமோகனின் 3 சிறுகதை விதிகள்




ஜெயமோகன் சிறுகதை எழுதுவதைப் பற்றி நிறைய கூறியிருக்கிறார். அவர் கூறிய, சிறுகதைப் பற்றிய, இந்த மூன்று விசயங்கள் எனக்கு பிடித்தமானவைகள். மற்ற விசயங்களை அவரது இணைய தளத்தில் தேடி கண்டுகொள்ளலாம். அந்த மூன்று:

எழுத ஆரம்பிக்கும்போது எழுத்தில் கவனம் கொள்ளவேண்டிய மூன்று தொழில்நுட்ப விஷயங்களை மட்டும் சொல்லி முடிக்கிறேன்.

  1. ”சொல்லாதீர்கள், காட்டுங்கள்.” எழுத ஆரம்பிப்பவர்கள் கதைகளை சுருக்கமாகச் சொல்ல முயல்வார்கள். காரணம் அது நாம் சாதாரணமாக வாழ்க்கையில் செய்வது. நடந்ததை சுருக்கமாக சொல்வது. ஆனால் இலக்கியத்தின் நோக்கம் அனுபவத்தைத் தெரிவிப்பது அல்ல. அது கற்பனை மூலம் வாசகனை அந்த அனுபவத்தை தானும் அடைய வைக்கவே முயலவேண்டும். ஆகவே அந்த கதை கண்முன் உண்மையில் நிகழ்ந்தால் எப்படி இருக்குமோ அந்த காட்சியனுபவத்தை வாசகனுக்கு அளியுங்கள். நுண்ணிய தகவல்கள் மூலம் கதையை கண்ணிலே காட்டுங்கள். கடற்கரை வாழ்க்கையை எநக்குச் சொல்லாதீர்கள், நானே அங்குவந்து வாழும் அனுபவத்தை எனக்கு அளியுங்கள்.
  2. ”கதையின் கருத்தை கதைக்குள் சொல்லாதீர்கள்.” கதை என்பது வாசகனுக்கு அனுபவத்தை அளிப்பது. கருத்தை அவனே உருவாக்கிக் கொள்ளட்டும். வாசகனுக்கு நீங்கள் ஒரு கருத்தைச் சொன்னால் அது உங்கள் கருத்து. அவனே அதை கதையில் கண்டடைந்தால் அது வாசகனின் கருத்து. கதைக்குள் என்ன சொல்லப்படுகிறது என்பது அல்ல முக்கியம். என்ன உணர்த்தப்படுகிறது என்பதுதான் முக்கியம்.
  3. ”கதைவடிவங்களை கற்றுக்கொள்ளுங்கள்.” கதையின் வடிவம் பற்றிய ஒரு பிரக்ஞை எழுத்தாளனுக்கு தேவை. இன்றுவரை கதையிலக்கியம் அடைந்துள்ள சிறந்த வடிவத்தை முயன்று கற்று அதை நாமும் அடைவதற்கான முயற்சி தேவை.
-o0o-