Monday, August 2, 2010

ஜெயமோகனின் 3 சிறுகதை விதிகள்
ஜெயமோகன் சிறுகதை எழுதுவதைப் பற்றி நிறைய கூறியிருக்கிறார். அவர் கூறிய, சிறுகதைப் பற்றிய, இந்த மூன்று விசயங்கள் எனக்கு பிடித்தமானவைகள். மற்ற விசயங்களை அவரது இணைய தளத்தில் தேடி கண்டுகொள்ளலாம். அந்த மூன்று:

எழுத ஆரம்பிக்கும்போது எழுத்தில் கவனம் கொள்ளவேண்டிய மூன்று தொழில்நுட்ப விஷயங்களை மட்டும் சொல்லி முடிக்கிறேன்.

  1. ”சொல்லாதீர்கள், காட்டுங்கள்.” எழுத ஆரம்பிப்பவர்கள் கதைகளை சுருக்கமாகச் சொல்ல முயல்வார்கள். காரணம் அது நாம் சாதாரணமாக வாழ்க்கையில் செய்வது. நடந்ததை சுருக்கமாக சொல்வது. ஆனால் இலக்கியத்தின் நோக்கம் அனுபவத்தைத் தெரிவிப்பது அல்ல. அது கற்பனை மூலம் வாசகனை அந்த அனுபவத்தை தானும் அடைய வைக்கவே முயலவேண்டும். ஆகவே அந்த கதை கண்முன் உண்மையில் நிகழ்ந்தால் எப்படி இருக்குமோ அந்த காட்சியனுபவத்தை வாசகனுக்கு அளியுங்கள். நுண்ணிய தகவல்கள் மூலம் கதையை கண்ணிலே காட்டுங்கள். கடற்கரை வாழ்க்கையை எநக்குச் சொல்லாதீர்கள், நானே அங்குவந்து வாழும் அனுபவத்தை எனக்கு அளியுங்கள்.
  2. ”கதையின் கருத்தை கதைக்குள் சொல்லாதீர்கள்.” கதை என்பது வாசகனுக்கு அனுபவத்தை அளிப்பது. கருத்தை அவனே உருவாக்கிக் கொள்ளட்டும். வாசகனுக்கு நீங்கள் ஒரு கருத்தைச் சொன்னால் அது உங்கள் கருத்து. அவனே அதை கதையில் கண்டடைந்தால் அது வாசகனின் கருத்து. கதைக்குள் என்ன சொல்லப்படுகிறது என்பது அல்ல முக்கியம். என்ன உணர்த்தப்படுகிறது என்பதுதான் முக்கியம்.
  3. ”கதைவடிவங்களை கற்றுக்கொள்ளுங்கள்.” கதையின் வடிவம் பற்றிய ஒரு பிரக்ஞை எழுத்தாளனுக்கு தேவை. இன்றுவரை கதையிலக்கியம் அடைந்துள்ள சிறந்த வடிவத்தை முயன்று கற்று அதை நாமும் அடைவதற்கான முயற்சி தேவை.
-o0o-

4 comments:

கமலேஷ் said...

இதுவரை உங்க பதிவை படித்ததில் நீங்கள் ஜெயமோகனின் தீவிர வாசகர் என்று தெரிகிறது கே.ஜே.
நான் உங்கள் அளவுக்கு பரந்த வாசிப்பாளன் கிடையாது.
சமீபத்தில்தான் ஜெயமோகனின் "காடு" படிக்க வாய்த்தது.
புத்தகத்தை தொடர்ந்து வாசிக்க முடியவில்லை.
தன் முகத்தை முதன் முறையாய் கண்ணாடியில் பார்த்து மிரண்டு அழும் ஒரு குழந்தை போல
நாவலில் பல வரிகளில் என்னை பார்த்து புத்தகத்தை கீழே போட்டுவிட்டு தலை தெறிக்க ஓடி இருக்கிறேன்.
நெஞ்சுக்குளிவரை ஆழ புகைத்து ஆசுவாசப்படுத்தி கொண்ட பின் மீண்டும் வந்து புத்தகத்தை தொடர்வேன். அந்த புதினத்தை முழுமையாக முடித்த பிறகு வெகு நாட்களுக்கு என் இரவெங்கும் காடு முளைக்க கண்டேன். படுத்திருக்கும் போது யாரோ தலைமாட்டத்தில் மூச்சு விடுவதாய் தெரியும். நிமிர்ந்து பார்ப்பேன். ஒரு மிளா என் கனவுகளில் மேய்ந்து மொண்டிருக்கும். நாவலில் இருந்து வெளியேறிய நீலி என் அருகில் உறங்கி கொண்டிருப்பாள். ஒரு நிமிடம் ரெசாலமாகவும், ஒரு நிமிடம் கிர்தரனாகவும், குட்டபனாகவும் மாறி மாறி பிறழ்ந்து கொண்டே இருந்த போதுதான் நான் முதல் முறையாய் இலக்கிய ஆளுமை என்றால் என்ன அர்த்தம் என்று உணர துவங்கினேன் .

கே.ஜே. அசோக்குமார் said...

தீவிர ரசிகனா என்பது தெரியவில்லை. ஆனால் வாசிப்பில் அடுத்த படியில் செல்லும்போதும் ஒவ்வொரு எழுத்தாளரை விரும்பி படித்திருக்கிறேன்.
'காடு' ஒரு சிறந்த நாவல். அதேபோல் அவரின் 'ஏழாம் உலகமும்' என்னை அழைகளித்தபடியே இருந்த நாவல்கள். நாள் முழுவதும் அந்த க‌தாபாத்திரங்கள் என்னுடன் உரையாடியபடி இருந்ததை உணர்ந்திருக்கிறேன்.

சித்திரவீதிக்காரன் said...

காடு இன்னமும் வாசிக்கவில்லை. கமலேஸின் மறுமொழி காட்டை நோக்கி இழுக்கிறது. ஜெயமோகனின் கொற்றவை எனக்கு மிகவும் பிடித்த நாவல். அவரது விஷ்ணுபுரம் வாசித்திருக்கிறேன். நல்ல நாவல்.

சிறுகதை எழுதுவது குறித்த ஜெயமோகனின் கருத்துகள் அருமை. பகிர்விற்கு நன்றி.

கே.ஜே.அசோக்குமார் said...

கொற்றவை படித்த நீங்கள் காடு நாவலை எப்படி விட்டீர்கள். அவசியம் படியுங்கள்.