Wednesday, February 3, 2010

எம்ஜியார் வாயிலே எலிபீ
எழுத்தாளர் ஜெயமோகன் மாதிரியான பிரபலமான நபர்கள் அரசியல் தலைவர்களை விமர்சிக்கும் போது ஏற்படும் பிரச்சனைகள் என் போன்ற சிறிய எழுத்தாளர்களுக்கு ஏற்படுவதில்லை என்கிற இளங்கன்று தைரியத்தில் இதை எழுதுகிறேன். அத்தோடு இது நேரடியாக பிரபலங்களை விமர்சிக்கும் கட்டுரையல்ல, மறைமுகமாக விமர்சிக்கும் கட்டுரையும‌ல்ல.

எம்ஜியார் என்கிற ஆளுமைப் பற்றி எனக்கு நல்ல அபிப்பிராயங்களே உள்ளன. சினிமா மீதான அவரின் பார்வை, மக்களை எதிர்கொண்ட விதம், அரசியலில் அவரின் சாதுர்யம், போன்றவை உவப்பானதாக தோன்றுகிறது. அவர் சிறுவிசயத்தைகூட மிகுந்த கவனத்துடனும், உள்ளன்போடும் அணுகியது இப்போதும் அவர்மேல் நல்லபிப்ராயம் ஏற்படுத்தகூடியது. அவரின் பரம ரசிகராக இல்லையென்றாலும் அவரின் கலைநயம் ரசனைக்குரியது.

என் பள்ளிப் பருவத்தில் ஒரு விடுமுறைநாளில் என் சொந்த ஊரான கும்பகோணம் சென்றிருந்தபோது நடந்த நிகழ்ச்சி இது. ஒருநாள் பெரியப்பா, சித்தப்பா பையன்கள், அத்தை பையன்கள் என்றுகூடியிருந்த நேரம். ஓடிப்பிடிச்சு, சைக்கிளிங், பந்துவிளையாட்டு என்று எல்லாம் முடித்துவிட்டு, உள்ளே வந்து உள்விளையாட்டு ‘திறமை’களை காட்ட ஆரம்பித்திருந்தோம். சாக்பீஸால் தரையெல்லாம் படம் வரைந்து தள்ளினோம். நடுநடுவே விடுகதை, சினிமா பாட்டு, கதை என்று தாவித்தாவிச் சென்றோம். எத்தனை திறமைகள் காட்டமுடியுமோ அத்தனையும் முயற்சி செய்தோம்.

அத்தைப் பையன் ஒருவன், இடமிருந்து வலமாகவும் மேலிருந்து கீழாகவும் ஒரே வார்த்தைகள் வரக்கூடிய (ஆங்கிலத்தில் ஒரு பெயர் அதற்குண்டு, மறந்துவிட்டது) வாக்கியம் ஒன்று சொன்னான், அது "சிவாஜி வாயிலே ஜிலேபி". ஒன்றின் கீழ் ஒன்றாக எழுதும்போது இரண்டும் ஒன்றாக வந்தது. அவன் இப்படிஒன்றை கூறிய சந்தோஷத்தில் இருக்கும் போது, அருகிலிருந்த வேறொரு பையன் 'எம்ஜியார் வாயிலே எலிபீ' சட்டென்று கூறினான். அத்தைப் பையன் முகத்தில் வேறுவகையான அலைகள், வெறுப்பும் கோபமும் கிளம்பி வந்தது. அடிக்க வருவான் போலிருப்பதை புரிந்து கொண்டவனாக எழுந்து ஓடிவிட்டான். ஆனால் எனக்கு அது மிகவும் பிடித்தமானதாக இருந்தது. அவன் வெறுப்பை தூண்டும் விதமாக 'சிவாஜி வாயிலே ஜிலேபி, எம்ஜியார் வாயிலே எலிபீ' என்று தொடர்ந்து கூறிக்கொண்டிருந்தேன்.

தொடர்ந்து அவன் வெறுப்படைவது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. 'அப்படி சொல்லாதே, அப்படி சொல்லாதே' என்றான். என்னை தரையில் உட்காரவைத்து இரண்டையும் எழுதிக் காட்டி 'பார், இது வருகிறது, இது வரவிலலை, ஆகவே சொல்லாதே' என்று கூறினான். நான் 'வரலேன்னா என்னா, எதுகை மோனை நால்லாத்தானே இருக்கு' என்று மீண்டும் வெறுப்பேத்த முயற்சித்தேன். 'அது சரியாக வராதப்போ, சொல்லக்கூடாது' என்பது அவன் வாதம். கூறிய அத்தனை நேரமும் அவன் அமைதியாக‌ விளக்கி கூறியதுதான் ஆச்சரியம்.

சில பல ஆண்டுகள் கழித்து அவனை சந்திக்கும் போதும் இதனைப் பற்றி கேட்க தோன்றவில்லை.

அவன் கொண்டிருக்கும் பிம்பத்தை அல்லது அவனுடைய உலகத்தை மீண்டும் ஒருமுறை நினைவூட்டி எந்தவகையிலும் அதை கலைக்க நான் விரும்பியதில்லை. அவன் அவனாகவே இருக்கட்டும். ஆனாலும் அவனைப் பற்றி, ஏதேனும் ஒரு விசயத்தில், நினைக்கும் போது எம்ஜியாரும் கூடவே என் நினைவில் வந்து கொண்டிருக்கிறார்.

_ o0o _

No comments: