Thursday, January 28, 2010

கவிதைக் கனவு


விடலைப் பருவத்தில் கவிதை எழுதுவது ஒர் அசாதாரண‌மான விசயமில்லை. எழுதவில்லை என்றால் நிச்சயம் அசாதாரணம். அந்த பருவத்திற்கே உரிய புதிய புரிதல்களை கனவுகளுடன் தேடும் ஒரு முயற்சி. அந்த பருவத்தை தாண்டிய பின் வேறு கவலைகள் சேர்ந்து கொள்ள அதை மறந்து விடுகிறோம். அதாவது, கவிதை எழுதுவதை மறந்துவிடுகிறோம், கனவுகளை மட்டும் பின்தொடர்கிறோம். கனவுகள் நம்மை வேலை, பணம் வெற்றி என்று அலைக்கழித்துவிடுகிறது.

கனவுகளை நாம் பின் தொடர்ந்தாலும், கவிதைகள் நம்மை பின் தொடர்ந்தபடியே இருக்கிறது. காதல், வாழ்க்கை, சந்தோஷம், மரணம் என்று எல்லாவற்றிற்கும் கவிதை தேவையாய் இருக்கிறது. எதாவது ஒரு சந்தர்ப்பத்தில் எதாவது ஒரு கவிதையை படித்து மனதை சமநிலைப் படுத்திக்கொள்கிறோம். வார, மாத இதழ்களில் கவிதை பக்கத்தை பல நேரங்களில் படிக்காமல் கடந்து சென்றாலும், வேறு பல முக்கிய நேரங்களில் அவைகளை நாம் கவனிக்காமல் இல்லை. இணையதளங்களில் கவிதைகள் கொட்டிக்கிடக்கின்றன. ஒவ்வொரு தளங்களிலும் கவிதைகான வெளி பறந்து விரிந்தபடியே செல்கிறது. அவரவர் 'கைகொள்ளவு'படி அள்ளி பருகி செல்லமுடிகிறது.

சொல்லப்போனால் மனஎழுச்சி கொள்ளும் ஒவ்வொரு சமயமும் கவிதை நம‌க்கு தேவையாய் இருக்கிறது. கல்லூரி நாட்களில் நானெழுதிய ஒரு கவிதை மறக்கமுடியாதது. மனஎழுச்சியின் உச்சானிக்கொம்பில் நின்று கீழ்நோக்கி பார்த்தபடி எழுதியது. ஒரு கடினமான, இக்கட்டான சூழ்நிலையில் இருந்தபோது, அக்கவிதை பீரிட்டு வெளிவந்ததை நினைக்க இப்போதும் மனம் பெரும் மகிழ்ச்சி கொள்கிறது.

எல்லா மனநிலையும் கவிதைக்கு உகந்ததே - எழுதவும் வாசிக்கவும். மனஎழுச்சியோ, மனஉந்துதலோ இருக்கும் போது கவிதை எழுத வருகிறது அந்த மனநிலைகள் இல்லாதபோதே நல்ல கவிதைகளை வாசிக்க மனம் துடிக்கிறது.

- o0o -

2 comments:

அ.மு.செய்யது said...

கொஞ்சமாக எழுதினாலும் நிறைவான திருப்தியை தருகிறது உங்கள் பதிவு.

கவிதைகளைப் பற்றி பேசி பேசித்தீராது தான்.

எப்பொழுது சந்திக்கலாம் சொல்லுங்கள்.சனி,ஞாயிறு எனக்கு அலுவலகம் வைத்து விடுகிறார்கள்.மாலை நேரங்களில் நான் ஃபீரி தான்.

கே.ஜே.அசோக்குமார் said...

உண்மைதான், கவிதைகளைப் பற்றி எப்போது பேசினாலும் அலுப்பதேயில்லை. விரிவாக எழுதவேண்டும், முயற்சிக்கிறேன். நன்றி.