Thursday, January 28, 2010

கவிதைக் கனவு


விடலைப் பருவத்தில் கவிதை எழுதுவது ஒர் அசாதாரண‌மான விசயமில்லை. எழுதவில்லை என்றால் நிச்சயம் அசாதாரணம். அந்த பருவத்திற்கே உரிய புதிய புரிதல்களை கனவுகளுடன் தேடும் ஒரு முயற்சி. அந்த பருவத்தை தாண்டிய பின் வேறு கவலைகள் சேர்ந்து கொள்ள அதை மறந்து விடுகிறோம். அதாவது, கவிதை எழுதுவதை மறந்துவிடுகிறோம், கனவுகளை மட்டும் பின்தொடர்கிறோம். கனவுகள் நம்மை வேலை, பணம் வெற்றி என்று அலைக்கழித்துவிடுகிறது.

கனவுகளை நாம் பின் தொடர்ந்தாலும், கவிதைகள் நம்மை பின் தொடர்ந்தபடியே இருக்கிறது. காதல், வாழ்க்கை, சந்தோஷம், மரணம் என்று எல்லாவற்றிற்கும் கவிதை தேவையாய் இருக்கிறது. எதாவது ஒரு சந்தர்ப்பத்தில் எதாவது ஒரு கவிதையை படித்து மனதை சமநிலைப் படுத்திக்கொள்கிறோம். வார, மாத இதழ்களில் கவிதை பக்கத்தை பல நேரங்களில் படிக்காமல் கடந்து சென்றாலும், வேறு பல முக்கிய நேரங்களில் அவைகளை நாம் கவனிக்காமல் இல்லை. இணையதளங்களில் கவிதைகள் கொட்டிக்கிடக்கின்றன. ஒவ்வொரு தளங்களிலும் கவிதைகான வெளி பறந்து விரிந்தபடியே செல்கிறது. அவரவர் 'கைகொள்ளவு'படி அள்ளி பருகி செல்லமுடிகிறது.

சொல்லப்போனால் மனஎழுச்சி கொள்ளும் ஒவ்வொரு சமயமும் கவிதை நம‌க்கு தேவையாய் இருக்கிறது. கல்லூரி நாட்களில் நானெழுதிய ஒரு கவிதை மறக்கமுடியாதது. மனஎழுச்சியின் உச்சானிக்கொம்பில் நின்று கீழ்நோக்கி பார்த்தபடி எழுதியது. ஒரு கடினமான, இக்கட்டான சூழ்நிலையில் இருந்தபோது, அக்கவிதை பீரிட்டு வெளிவந்ததை நினைக்க இப்போதும் மனம் பெரும் மகிழ்ச்சி கொள்கிறது.

எல்லா மனநிலையும் கவிதைக்கு உகந்ததே - எழுதவும் வாசிக்கவும். மனஎழுச்சியோ, மனஉந்துதலோ இருக்கும் போது கவிதை எழுத வருகிறது அந்த மனநிலைகள் இல்லாதபோதே நல்ல கவிதைகளை வாசிக்க மனம் துடிக்கிறது.

- o0o -

Monday, January 18, 2010

மாடும் மனிதனும்: வாடிவாசல் - சி சு செல்லப்பா

எழுத்து ப‌த்திரிக்கை ஆர‌ம்பித்த‌போது அப்போது ச‌ந்தா செலுத்திய‌வ‌ர்க‌ளுக்கு அன்ப‌ளிப்பாக அனுப்பிவைக்கப்ப‌‌ட்ட‌ நாவ‌ல் இது. இத‌ன் விலை 1969ல் ஒரு ருபாய் தான். ஒரு நீண்ட‌ சிறுக‌தையைவிட‌ ச‌ற்று பெரிய‌து. ஒரேமூச்சில் ப‌டித்துமுடித்துவிட‌லாம். வேக‌மும் விறுவிறுப்பும் கொண்ட‌ இந்நாவ‌ல், எர்னெ‌ஷ்ட் ஹெ‌மிங்வே எழுதிய‌ க‌ட‌லும் கிழ‌வ‌னும் என்ற நாவ‌லை ஒத்த‌து. அந்நாவ‌லின் தாக்க‌த்தினால்தான் எழுத‌ப்பட்டும் உள்ள‌து. வாடிவாச‌லில் மாடுபிடிக்க‌வ‌ரும் ஒருவ‌ன் த‌ன் அப்பாவை கொன்ற அதே மாட்டை கொன்று ப‌ழிதீர்ப்ப‌துதான் க‌தை.

மாடு அணைக்க‌வ‌ரும் பிச்சி அவன் மச்சான் மருதன் அவர்களோடு கலந்துகொள்ளும் கிழவன் மற்றும் ஜமின்தார் இவர்களே முக்கிய கதாபாத்திரங்கள். மாடு அணையவருவதை சொல்லும் வருணனைகளும், காட்சி சித்தரிப்புகள் மிகவும் நுட்பமும் தத்ருபமானவை. ஜல்லிகட்டை தொடர்ந்து கவனித்து வரும் ஒருவரால் மட்டுமே இம்மாதிரி எழுதமுடியும். ஜல்லிகட்டின் மீதான நம் சந்தேகங்களை தீர்த்துவைத்துவிடுகிறது இந்நாவல். சி சு செ, அந்த கிழவனாக நின்று தன் அனுபவத்தை கதைமுழுவதும் கொட்டித்தீர்க்கிறார். பிச்சியின் மாட்டின் ஒவ்வொரு அசைவுகளையும் மிக அழகாக கூறுவதில் அவரின் எழுத்தனுபவம் தெரிகிறது.

ஐந்தறிவு மாடும் ஆறறிவு மனிதனும் போடும் போட்டி. இது மனிதனுக்கு மட்டும் விளையாட்டு, மாட்டிற்கல்ல என்கிறார் சி சு செல்லப்பா.

- o0o -

Thursday, January 14, 2010

புத்தகக் கண்காட்சி


புத்தக கண்காட்சிக்கு புனேயில் உள்ளதால் நான் செல்லவில்லை. ஆனால் அதைப் பற்றிய செய்திகள் மீள மீள கிடைத்தபடியே உள்ளன. எழுத்தாளர்களும், வலைபதிவர்களும் தொடர்ந்து வலையில் எழுதியபடி உள்ளார்கள். விதவித சந்தோசங்கள், மகிழ்ச்சிகள், பூரிப்புகள் என்று அவர்களின் அனுபவங்கள், கடந்து செல்லும் நீண்ட புகைவண்டி காண்பதுபோன்ற ஆயாசமும், குதுகூலமும் ஒருங்கே ஏற்படுகின்றன.

இது ஒரு காலாசார நிகழ்வென்றும், ஒரு சமூக மாற்றமென்றும், தமிழர்களின் ஒரு முக்கிய திருவிழாவாகவும் ஆகிவிட்டதென்றும் எல்லா எழுத்தாளர்களும் சத்தியம் செய்துக் கூறிக்கொண்டிருக்கிறார்கள். டிவியின் வருகை, தமிழர்களின் வாங்கும் திறன் அதிகரித்தது, போன்ற இன்னும் பல காரணங்கள் கூறப்படுகின்றன. இதே மாதிரியான கருத்துகள் போன ஆண்டும் தெரிவிக்கப்பட்டது.

எதுவானாலும் ஒரு நல்ல நிகழ்வை ஒவ்வொரு ஆண்டும் இனிதே வரவேற்ப்போம், அது நம் கடமையும் கூட.

- o0o -

Tuesday, January 12, 2010

அவதாரம் கொண்ட அவதார்


அவதார் என்கிற ஆங்கிலப் படம் வெளியாகி சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கும் இந்த வேளையில் அதைப் பற்றிய விமர்சனம் மட்டும் நன்றாக இல்லாமல் இருக்குமா என்ன? 3டி‍-பதிப்பில் பார்க்கும் ஒருவர் அதன் தொழில்நுட்பத்தை நிச்சயம் பாராட்டாமல் இருக்கமாட்டார். அனிமேசனில் இருக்கும் துல்லியம் நம்மை அசரவைக்கிறது. அது வேறெங்கும் கவனப்படுத்தாமல் தொடர்ந்து பார்க்கசெய்கிறது. ஒவ்வொரு ப்ரேமிலும் தெரிவது புதுமை, புதுமை, புதுமை.

கதை என்னவோ த மிஷன் என்கிற படத்தின் சாயலை கொண்டதுதான். ஆனால் இதில் இருக்கும் 'பார்வை' முதல் படத்தில் இல்லாதது, அதோடு பாராட்டபடவேண்டிய ஒன்று.

வேற்றுகிரகத்தில் அம்மக்களால் தெய்வமாக வழிபடும் பெரிய மரத்தின் கிழுள்ள ஒரு புதியவகை தனிமத்தை கொள்ளையடிக்க நம்மனிதர்கள் அந்த மனிதர்கள் போல் உருகொண்டு செல்ல, கடைசியில் போரில் உருமனிதர்கள் மனம் திருந்தி அம் மனிதர்களுக்கு சாதகமாக நின்று நம் மனிதர்களை கொல்வது தான் - மிகசிறிய வடிவமான இப்படத்தின் கதை.

கதையிலும் சரி, காட்சியிலும் ஒரு நம்பகத்தன்மை உள்ளது. அதுவே இப்படத்தின் மிகப்பெரிய பலம். அனிமேசன்கள் காட்டும் உணர்ச்சிகள் அபாரமானவை, ஒரு அனிமேசனுக்கு பல்வேறு மனிதர்களை வைத்து உணர்ச்சிகள் காட்டி சிறந்தவற்றை தேர்வுசெய்துகொள்ள முடியும். இதில் எப்படியோ தெரியவில்லை, வரும்காலத்தில் அப்படித்தான் இருக்கனும். தொழில்நுட்பம் வளரும் வேகம் சாமானிய மனிதனின் அறிவுக்கு உட்பட்டதாக இல்லை என்பது மட்டும் புரிகிறது.

அமெரிக்க ஐரோப்பிய மக்களை தவிர மற்றவர்கள் மெய்யறிவு அற்றவர்கள் என்கிற அவர்களின் நிலையிலிருந்து சற்று கிழிறங்கி வந்திருப்பதாக தோன்றுகிறது. ‘த‌ மிஷ’னில் கூறப்பட்ட அமெரிக்க பார்வையிலிருந்து விலகி 'மற்ற' மனிதர்களின் பார்வையில் கதை விரிவது பெரிய அதிசயம். ஆனாலும் முழுமையாக விலகிவிட்டதாக கூறமுடியாது, இந்த அளவு விலகியது ஒரு நல்ல தொடக்கம்.

- o 0 o -

Friday, January 8, 2010

வாசவேச்வரம் - கிருத்திகா: விம‌ர்ச‌ன‌ம்


கிருத்திகா எழுதிய இந்நாவல் 1966ல் முதல் பதிப்பாக அவருடைய 50வது வயதில் வெளிவந்துள்ளது. நாப்பத்திமூன்றாண்டுகளுக்கு பின் இப்போது படிக்கும்போதும் புதிய நாவலொண்றை படிக்கும் மனநிலையே ஏற்படுகிறது. அழகான சொற்கள், வரிகள், காட்சி சித்தரிப்புகள் என அனைத்திலும் புதுமையை கொண்டுள்ளது இந்நாவல். இப்போது புகழிலிலிருக்கும் பல எழுத்தாளர்களின் எழுத்து சாயல்கள் அவர் எழுத்துகளில் உள்ளன. அவரே இவர்களின் ஆதர்ஷயமாக‌ இருப்பார்.

ஆண்கள் பெண்கள்மேல் கொள்ளும் மயக்கத்தை சித்தரிப்பதிலும், பெண்கள் ஆண்கள்மேல் கொள்ளும் மயக்கத்தை சித்தரிப்பதிலும், ஒரு பெண் எழுத்தாளர் இந்த அளவிற்க்கு எழுதமுடியுமா? அதுவும் 66ல். மிகப் பெரிய ஆச்சரியம்தான். எழுதி எழுதி தீராத வார்த்தைகள் அவை. நாவலுக்கே உரிய பண்புகளுடன் பரவிச் செல்கிறது. ஒரு காட்சியிலிருந்து மற்றோரு காட்சிக்கு எத்தனை அழகாக தாவிச் செல்கிறார் ஆசிரியர்.

கதாகாலச்சேபத்தில் ஆரம்பித்து கதாகாலச்சேபத்தில் முடிகிறது நாவல். முதலில் கதாகாலச்சேபம் முடிந்தபின் மக்கள் கொள்ளும் காமத்தை மிக அற்புதமாக சொல்கிறார். அதைவிட பெண்கள் ஆண்கள் அவர்களை 'கவனிக்காமல்' செல்லும்போது கொள்ளும் நுண்ணிய மனநிலையை மிக சாதரணமாக சொல்லிவிடுகிறார். இம்மாதிரி நாவல் முழுக்க வியப்புகளை அள்ளி தெளித்தபடியே செல்கிறது. ஒரு இடத்தில் கூட தொய்வெண்பதெயில்லை.

நிச்ச‌ய‌மாக‌ எல்லோரும் ப‌டிக்க‌வேண்டிய‌ புத்த‌க‌ம்.

- o0o -