Friday, August 28, 2015

புகை, குடி, குட்கா

எம்ஜியார் ஒரு முறை ரஜினியின் படங்களைப் பார்த்து கோபம் கொண்டு என்னையா இவன் இப்படியெல்லாம் நடிக்கிறான் என்று சிகரெட் குடி என்று நடிக்கும் அவரின் நடிப்பைப் பற்றி பேசி ஆதங்கப்பட்டதாக சொல்வதுண்டு. என் வீட்டு பக்கத்தில் இரு வீடு தள்ளி இருந்த மாமா அவரின் இருசக்கர வாகனத்தின் பாக்ஸ் பகுதிகளில் ரஜினியின் படம் இருக்கும். சிகரெட் குடித்த புகையின் நடுவில் அவர் முகம் தெரிவது போலிருக்கும். அந்த ஸ்டைல் அவரை மிகவும் கவர்ந்து இருந்தது. புகையின் நடுவே ஒரு மனிதன் நிற்பதுபோலிருப்பது என்னதான் ஸ்டைலாக தெரிந்தாலும் நிஜத்தில் அப்படி ஒருவர் நிற்கும் இடத்தில் சிகரெட் குடிக்காதவர் நிற்கமுடியாது. நாற்றம் குடலைப் பிறட்டும். ஆனால் சிகரெட் குடிப்பவர் முதலில் அந்த நாற்றத்தைதான் வெல்ல வேண்டும். இந்த நாத்தத எப்படிங்க குடிப்பாங்க என்று சிகரெட் வந்தபோது பேசப்பட்டது. ஆனால் தொடர்ந்து பல்வேறு விளம்பரங்களின் மூலம் அது நாற்றம் அல்லது வாசனை என நிறுவப்பட்டது. பின்பு அது ஆண்களின் ஆண்மை என்று நிறுவப்பட்டது. சிகரெட் குடிக்காத ஒரு மனிதன் தன் இளமையை, தன் இளமை தரும் உற்சாக எண்ணங்களை இழக்கிறான் என்று கற்பிக்கப்பட்டது.


சிகரெட் ஒரு பெரிய பிம்பமாக என்பதுகளில் மாறியபோது தமிழகத்தில் அதற்கு முதல் அச்சாரமாக இருந்தது ரஜினிதான். அவரின் மேனரிசங்களால் சிகரெட் புகழ் அடைந்தது என்றால் மிகை இல்லை. தமிழகம் மாதிரியான எதையும் ஆலோசிக்காமல் பின்பற்றும் ஒரு அசட்டு சமூகத்திற்கு அந்த பிம்பம் ஒரு பெரிய இழப்பாகதான் நினைக்க வேண்டும். இதனோடு எம்ஜியார் ஆரம்ப வரிகளில் சொன்னதை நினைத்துப் பார்க்கலாம். அதுவரை அவர் குடி, சிகரெட் போன்றவைகள் கெட்டவைகள் என்று அவர் உருவாக்கிவைத்திருந்த பிம்பத்துடன் ஒப்பீட்டுக் கொள்ளலாம்.
கெட்டவைகளை கற்றுக்கொள்ள சிகரெட் ஒருவருக்கு ஆரம்பம்தான். கெட்டவைகள் என்று நான் குறிப்பிடுவது, குடி, குட்கா, புகையிலை, போன்ற போதைவஸ்துகளை பழக்கப்படுத்திக் கொள்ள ஒரு ஆரம்பம் வேண்டியிருக்கிறது. ஒருவர் ஒரே நாளில் மொடா குடிகாரராக ஆகிவிடமுடியாது. குட்கா அல்லது புகையிலை மெல்லும் அல்லது போதை ஊசி ஏற்றிக்கொள்ளும் பழக்கம் ஒரே நாளில் அல்லது ஒரே பயன்பாட்டில் வந்துவிட முடியாது.
அவைகளை ஏற்றுக்கொள்ள நம் உடலுக்கு ஒரு ஏற்பு சக்தி தேவையாக இருக்கிறது. எதிர்ப்பு சக்தி பலம் பெறுவதற்கு நம் உடலை முதலில் பழக்கப்படுத்த இந்த சிகரெட் பழக்கம் முக்கிய பாலமாக இருக்கிறது. குடியை ஆரம்பிபவர்கள் சிகரெட் இல்லாமல் தொடங்குவதில்லை. வெறும் குடி என்பது போர் அடிக்க கூடியது. குடியில் இருக்கும்போது நடுவே சிகரெட்டை ஊதுவது அந்த போதையை அனுபவிப்பது என கருதிக் கொள்ளப்படுகிறது.
சிகரெட்டுக்குபின் அது குடியாக மாறுவதும் குடிக்குபின் அது குட்கா போன்ற புகையிலை சாந்த போதைவஸ்தாவதும் தொடர் கதைபோல அழகாக நடந்துவிடுகிறது. ஒருவருக்கு தன் பழக்கங்கள் மேல் நம்பிக்கை இல்லையெனில் அவர் சிகரெட்டை ஆரம்பிக்கும்போதோ கவனமாக இருக்கவேண்டும். ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டுவிட்டால் பின் வேறு எந்த பழக்கங்களுக்கும் மாறுவது சாத்தியமற்றதாக இருக்கும்.
தமிழகத்தில் குட்கா போன்ற பொருட்களுக்கு முக்கிய இடம் இல்லை. ஆனால் சிகரெட்டுக்கும் குடிக்கு இருக்கிறது. இந்த இரண்டையும் தினமும் பழக்கமாக கொண்டிருப்பவருக்கு இன்று எந்த குற்றவுணர்ச்சியும் சமூகத்திற்கு எந்த அதிர்ச்சியையும் அது அளிக்கப்பதில்லை. இரண்டு தலைமுறைக்கு முன்பு மிகப் பெரிய குற்றமாக கருதப்பட்டவைகள் இன்று சர்வ சாதாரணமாக டிவியிலும், சினிமாவிலும் பொது இடங்களிலும் காட்டப்படுவதும் செய்யப்படுவதுமாக இருக்கிறது.

ரஜினி மட்டுமல்ல அடுத்த தலைமுறையை சேர்ந்த அஜித் இப்படி படங்களில் நடித்ததும் இந்த இரண்டும் மக்களின் மனதில் அன்றாட பழக்கம்தான் போல என்கிற எண்ணத்தை ஏற்படுத்திவிட்டது. இதனாலேயே தமிழக மக்கள் சுயமாக முடிவு எடுக்கும் திறன் அற்றவர்களோ என்று நினைக்க தோன்றுகிறது.

1 comment:

Anonymous said...

I love your blog.. very nice colors & theme. Did yyou make this website yourself or did you hire someone to do
it for you? Plz respond as I'm looking to
create my own blog and would like to find out where u got this from.

thank you

Look at my blog - Stormfall Rise Of Balur Cheats