Wednesday, September 3, 2025

வாசிக்க தெரிந்த சிறார்களின் சொந்த நாவல்

 


பொதுவாக குழந்தைகளின் கதைகளில் ஒன்று இருக்கும், இல்லாததை இருப்பதாக சொல்வது. காக்கா பேசும், பாடும், நரி தந்திரம் செய்யும், சிங்கம் ராஜாவாக தன்னை முடி சூட்டிக் கொள்ளும். ஆனால் கதைகள் அவர்களின் எல்லைக்குள் வரவேண்டும் எப்போதும் வேடிக்கையாக எதாவது நடக்கவேண்டும், வானத்தில் பறந்து செல்லவேண்டும், ஆபத்தில் மாட்டிய ஒரு விலங்கை மற்றொரு விலங்கு காப்பாற்றி நட்பாக வேண்டும்.

கதைசொல்லியாக இவற்றை திறம்பட நாம் செய்துவிடமுடியும். கதை கூறுவதன் வாயிலாக அவர்களுக்கு கேட்கும் ஆர்வத்தை ஊட்டிவிடமுடியும். ஒரு கட்டம் வரை எழுத்திலும் அதை செய்யமுடியும். ஆனால் வாசிக்கும் ஆர்வமும் திறனும் கொண்ட சிறுவர்களுக்கு இவை போதாது.

வெறும் கதைகள் அவர்களின் கற்பனையை தூண்ட முடியாமல் போகும் அபாயம் உண்டு. கற்பனை என்பது வெறும் கதைகளல்ல என்பதை குழந்தைகளுக்கு கொஞ்சம் தெரிந்திருக்கும். சிந்திக்க துணைசெய்யும்படியும், கற்பனையை தூண்டும்படியும் இருக்கும் கதைகளை வாசிக்கும் பழக்கம் கொண்ட அவர்கள் விரும்புகிறார்கள். உடையாள் அப்படியான சிறுவர் நாவல். மிக எளிய சொற்களால் நெய்யப்பட்ட துணி இந்த உடையாள். அறிவியல், தத்துவம், மானுடவியல், சூழியல் என்று எல்லா துறைகளிலும் இந்நாவல் சென்று வருகிறது.

சிறுவர் சிறுமியர் வாழும் எல்லைக்கோட்டை விரிவுபடுத்த இம்மாதிரி வாசிப்புகள் தேவைபடுகின்றன. கதைகள் சொல்லி ஆர்வத்தை தூண்டும் செயலை போல‌ சிந்திக்க வைக்க சில புதிய உத்திகள் தேவை.

சிறார்களின் ஆர்வம் வானியலுக்கு முக்கிய இடம் உண்டு. வானத்தை அளர்ந்து பார்ப்பதும் அங்கே பயணத்தை மேற்கொள்வதுமாக இருக்கும் கதைகள் மிகுந்த ஆர்வம் அவர்களுக்கு இருப்பதை பார்த்திருக்கிறேன். அந்த வானம் வரைக்கும் இருக்குமா என்று சிறார்கள் சொல்வது வானவெளி மீதான‌ ஆர்வத்தை தான் குறிக்கிறது. வானத்து கதைகள் எல்லாம் காணாமல் போகும் கதைகள் தாம். பெற்றோரையும் சுற்றத்தையும் விட்டுச் விலகிச் செல்லும் சிறார்களின் ஆச்சரியம் நிறைந்த உலகை அவர்கள் காண துடித்துக் கொண்டிருக்கிறார்கள். ராபின்சன் குருசோ கதை சிறார்களுக்கு பிடிப்பது அதில் ராபின்சன் குருசோ காட்டில் காணாமல் போன கதை வருவதால்தான்.

உடையாளிலும் ஒரு சிறுமி வானவெளியில் 'காணாமல்' போனவள். வானத்தை அளந்து பார்ப்பவள். தான் மட்டுமே இருக்கும் ஒரு கிரகத்தில் எப்படி வாழ்கிறாள் எப்படி தன்னை அறிந்துக் கொள்கிறாள் என்பதை பற்றிய கதை என்று சுருக்கிக் கொள்ளலாம்.

உண்மையில் குழந்தைகள் அப்படித்தான் சிந்திக்கின்றன. பள்ளிக்கு செல்லும்வரை குழந்தைகளின் கற்றல்கள் இப்படிதான் இருக்கின்றன.

அவள் அறியும் ஒவ்வொன்றும் அவளே முனைந்து அறியும் அறிவு. தூய அறிவை அவள் அறியும் ஒவ்வொரு தருணமும் அவள் வாழ்வில் நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன. உண்மையில் அவையே அறிவு என்பதை சுட்டும் விதமாக. மனித உடலின் கூறுகள் அது எப்படி செயல்படுகிறது. எப்படி மனதும் அதன் பின் சித்தமும் பிரித்தரிகிறது என்பதையும் அறியும் தருணங்கள் தன் தாயின் தந்தையின் இருப்பு இல்லாமலே பள்ளியில் சென்று படிக்காமலே அறிந்துக் கொள்கிறாள். ஒரு கிரகத்தில் குழந்தையிலிருந்தே இருக்கும் அவளுக்கு கணினியின் உதவியாலே இத்துணையும் நிகழ்கிறது.

உடையாள் வளர்கிறாள். அவள் அறிவதை அவளே அறிகிறாள். அவளையும் இந்த மானுடத்தையும் அறிகிறாள். மானுடத்தின் உள்ளிருக்கும் உயிரியலை அறிகிறாள். இயற்பியலின் செயல்களை அறிகிறாள். உண்மையில் எளிய கற்றல்கள்தாம், ஆனால் அவளுள் நிகழ்வது போல வாசிப்பவரின் உள்ளத்திலும் நிகழ்கிறது. எல்லாமானபின் எது மிஞ்சுகிறது என்பதையும் அறிகிறாள்.

இந்த உலகத்து தனிமையை சொல்கிறது நாவல். சிறுவர்கள் ஏக்கம் எனும் தனிமை. உற்சாகத்தினூடே அடையும் தனிமையில் அறியும் உண்மையே இந்நாவலின் பேசுபொருள் எனலாம். ஆமாம் வாசிக்க தெரிந்த சிறார்களின் சொந்த நாவல் உடையாள்.

No comments: