குதிரை மரம் - கே.ஜே. அசோக்குமார்:
ஆசிரியர் குறிப்பு:
ஒரு குறுநாவலும், ஒன்பது சிறுகதைகளும் அடங்கிய இந்தத் தொகுப்பில் அசோக்குமார் ஒவ்வொரு கதைக்கும் இடையே கதைக்கருக்களில் ஏராளமான வித்தியாசத்தைக் காட்டியிருக்கிறார். முதல் கதையை எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். எதுவானாலும் நம்பிக்கை என்பது தான் மனத்தை நிர்வகிக்கும் உந்து சக்தி. மாதவனுக்கு நேர்மறையாகவும், கதைசொல்லிக்கு எதிர்மறையாகவும் நம்பிக்கை வேலை செய்கிறது.
குதிரை மரம் குறுநாவல். இயந்திரமயமாக்கலில் கைவினைத் தொழில்கள் நசிவது காலத்தின் கட்டாயம். கலையை ஒரு சிருஷ்டியாக, தெய்வமாக நினைப்பவர்களால் அதைவிட்டு வெளியேறுவது என்பது மரணத்திற்கு சமமானது. ஒரு உன்னதமான கலைஞன் வேறு ஒரு சூழலில் செல்லாக்காசாகிறான். லோகாதயச் சிக்கல்கள் அவனை தொடர்ந்து விரட்டும் போது, ஒன்று அவன் இறக்க நேரிடுகிறது இல்லை கலை மரணிக்க நேரிடுகிறது. எந்த அலங்காரமுமில்லாது தறிநெய்பவரின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் இந்த குறுநாவல் அசோக்குமாரின் சிறந்த படைப்புகளில் ஒன்றாக எப்போதும் இருக்கும்.
ஓசைகள், எஞ்சும் இருள் போன்ற கதைகளில் கதைக்கரு யாருக்கும் தெரியாமல் ஒளிந்திருக்கிறது. கதைகள் விரைவாக புறநிகழ்வுகளைச் சொல்லி முடிந்து போகின்றன. நுட்பமாக சொல்லப்பட்ட கதைகள். அம்மா எப்போதும் நாம் வடித்த பிம்பத்திற்குள்ளேயே இருக்க வேண்டும் என்பது போன்ற எதிர்பார்ப்புக் கதைகள் ஏராளமாகவே வந்துவிட்டதால் கருடனின் கைகள் அவ்வளவாகக் கவரவில்லை. மண்புழுவின் ஐந்து ஜோடி இதயங்கள் மட்டுமே தொகுப்பில் சராசரிக்கும் கீழுள்ள கதை.
அசோக்குமாருக்கு எழுத்தாளருக்கு வேண்டிய நுணுக்கமான விவரங்களைக் கதைகளில் காட்சிப்படுத்த முடிகிறது. உதாரணமாக, அலர் கதையில் எப்போதும் வெட்கப்படும் வேலைக்காரப்பெண் ஊர்புறணியை சுவாரசியமாகச் சொல்வது.
அதே போல் மிகையுணர்ச்சி இவரது எந்தக் கதைகளிலும் இல்லை. வேதனையோ அல்லது பரிதாபத்தையோ அடக்கமான வார்த்தைகளில் சொல்லிக் கடக்கிறார்.
ஒரே பாணியில் தலைப்பை மட்டும் மாற்றிக் கதைகள் எழுதாமல் வித்தியாசமான களங்களை உபயோகிக்கிறார். நம்பிக்கையூட்டும் படைப்பாளியிடமிருந்து வந்திருக்கும் நல்ல தொகுப்பு இது.
பிரதிக்கு:
யாவரும் பப்ளிஷர்ஸ் 90424 61472
முதல்பதிப்பு டிசம்பர் 2021
விலை ரூ. 200.
1 comment:
மதிப்புரை, நூலை வாசிக்கும் ஆவலைத் தூண்டியது. வாழ்த்துகள்.
Post a Comment