நாவுக்கடியில் ஒளித்து வைக்கப்படும் இனிப்புபோலத் தான் இக்கதைகள் என் மனதில் இருந்தன. கதைகளை கண்டடைவதும் வெளிப்படுத்துவதும் சிறந்த மனப்பயிற்சியாக இருந்தது அப்போது. இந்தக் கதைகள் இனிய மனநிறைவோடு எழுதியவை என்றே நினைக்கிறேன். தொகுப்பிற்காக மீண்டும் வாசித்தபோது ஆழ்மனதை சென்றடைந்த அதே பரவசத்தை இப்போதும் உணர்ந்தேன். கதைகளை வேறுஒரு தளத்தில் நின்று பார்க்கும்போது நான் அடையும் பெருமிதம் மற்ற உலகியல் பெருமிதங்களுக்கு பலபடிகள் மேலானதாக இருந்தது. தொடர்ந்து எழுதிக்கொண்டும் வாசித்துக் கொண்டும் இருக்க இதைத்தான் காரணமாக சொல்லமுடியும்.
இந்த தொகுப்பு என் இரண்டாவது சிறுகதை தொகுப்பு. கதைகள் வெளிவந்த சமயங்களில் தொடர்ந்து சிலர் உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தார்கள். முகநூலில் வழியே பலர் சிலாகித்து எழுதுவது அதிகம் நிகழ்ந்தது. இப்போதெல்லாம் சமூகவலைதளங்களில் தொடர்பில்லையென்றால் கவனிக்கப்படுவது இல்லாமல் போய்விடுகிறது போலும். வெளிவந்த சமயங்களில் ஒவ்வொரு கதையையும் வாசித்து கருத்துகளை பகிர்ந்து கொண்டிருக்கிறார் எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணா. மிகுந்த உற்சாகமும் தன்னம்பிக்கையுமாக இருந்தன அவரது வார்த்தைகள். அவருக்கு எப்போதும் நன்றி சொல்லிக் கொண்டேயிருக்க வேண்டும். மற்றொருவர் நட்பாஸ் (நடராஜன் பாஸ்கரன்). ஒவ்வொரு கதையும் மிகுந்த உற்சாகத்துடன் என்னிடம் அதுகுறித்து விவாதித்திருக்கிறார். அவருக்கும் என் நன்றிகள். பி.ஜம்புலிங்கம், சரவணன் மாணிக்கவேல், இதயா ஏசுராஜ், இராமச்சந்திரன் உஷா, எஸ்.குமார் போன்ற நண்பர்களின் வார்த்தைகள் இனிய நுரைததும்பும் உற்சாக பானத்தை ஒத்தது. அவர்களுக்கு என் நன்றிகள்.
என் எழுத்துக்களுக்கு எழுத்தாளர் ஜெயமோகனின் பங்கு எப்போதும் இருக்கும். அவருக்கு வணக்கத்துடன் இந்தக் கதைகளை வெளியிடுகிறேன். நாகரத்தினம் கிருஷ்ணா, பாவண்ணன், வ.ஸ்ரீநிவாஸ், தேவிபாரதி, போன்ற இலக்கிய ஆளுமைகள் எனக்கு ஊக்கத்தையும், இலக்கியத்தின் மீது பற்றுதலையும் தொடர்ந்து அளிப்பவர்கள். நான் விரும்பும் இலக்கிய சூழலில் என்னுடன் நெருக்கமாக இருக்கும் இலக்கிய ஆளுமை நாகரத்தினம் கிருஷ்ணா. அவருக்கு இந்நூலை சமர்ப்பிக்கிறேன்.
என் எழுத்து வாழ்க்கை மீது அபரிவிதமான நம்பிக்கையை கொண்டிருக்கும் என் குடும்பத்தாருக்கு என்றும் என் அன்பு.
அன்புடன்
கே.ஜே.அசோக்குமார்
Kuppa.ashok@gmail.com
2 comments:
சாதனை. மனம் நிறைந்த வாழ்த்துகள்.
மகிழ்ச்சி. மனம் நிறைந்த வாழ்த்துகள்.
Post a Comment