Wednesday, October 6, 2021

சுஜாதாவின் சொல்லுக்காக புனைபெயர் வைத்துக் கொண்டேன்: எழுத்தாளர் ஹரணியின் பேட்டி

. அன்பழகன் என்ற இயற்பெயர் கொண்ட எழுத்தாளர் ஹரணி மிக இளம்வயதிலிருந்தே எழுத தொடங்கிவிட்டார். தஞ்சாவூர் ஹரணி என்று சில நேரங்களில் எழுதும் இவர், ஹரிணி என்கிற தன் நண்பரின் குழந்தையின் வைணவ பெயரை சைவ பெயராக மாற்றி ஹரணி என வைத்துக் கொண்டார். அன்பழகன் என்பது கூட அவர் அப்பா, அப்போதைய தலைவர் .அன்பழகன் போல சிறந்த அறிஞராக வேண்டி வைத்தது என்று கூறுவார். அவர் அப்பா அமைத்து கொடுத்த சிறு நூலகத்தின் உந்துதலால் அப்பாவின் விருப்பம்போலவே படித்து கல்லூரி ஆசிரியராகவும், எழுத்தாளராகவும் ஆனவர்.

கல்லூரி ஆசிரியர் பணிக்கு தினமும் தஞ்சையிலிருந்து சிதம்பரம் வரை காலையும் மாலையும் பேருந்தில் பல ஆண்டுகளாக பயணம் செய்திருக்கிறார். பிறகு ரயில் சேவை பரவலானதும் ரயிலில் அப்பயணத்தை தொடர்கிறார். அப்பேருந்து பயண அனுபவத்தை 'பேருந்து' எனும் நாவலாக எழுத அது அவரை பிரபலப்படுத்தியது. நீண்ட பேருந்து வாழ்க்கையின் அனுபவத்தை சொல்லும் நாவல், ஒரு பெரிய சமூக வளர்ச்சி வீழ்ச்சி மாற்றத்தை அந்நாவல் முன் நிறுத்துகிறது.

கவிதை, சிறுகதை, நாவல் என்று பல வகைமையில் எழுதியிருக்கும் அவர், ‘அப்பிராணி’ ‘சாலையைக் கடக்கும் நத்தைகள்’ போன்ற நாவல்களை எழுதியிருக்கிறார். உயிர்க்குடில் (1995), ஒவ்வொரு மழை நாளிலும் (2000), மறுபடியும் நதி வரும் (2002), வலை (2004), காலம் நின்றவர்கள் (2007), புரண்டுபடுக்கும் வாழ்க்கை (2011), செல்லாத நோட்டு (2012), அப்பா (2020) போன்ற சிறுகதை தொகுப்புகளை எழுதியிருக்கிறார். காந்தியும் குமரேசனும் (2015), மிட்டாய் வண்டி சிறுவர் தொகுப்பு (2019) போன்ற சிறார் கதைகளையும் எழுதியிருக்கிறார்.

தஞ்சை ப்ரகாஷுடன் நெருங்கிய நட்பு கொண்டவர், அவருடன் இருந்த மற்ற இலக்கிய நண்பர்களுடனும் நெருக்கமான நட்பை பேணிவருபவர். தஞ்சாவூர் கரந்தையில் வசிக்கும் அவருடனான ஒரு சிறு உரையாடல்.


கேள்வி :. வாசிப்பு பழக்கம் எப்படி அறிமுகமானது. அறிமுகப்படுத்தியது யார்?

பதில்: என் அப்பாதான்பள்ளிப் பாடப்புத்தகங்களை மட்டும் படியென்று சொல்லாமல் வாசிக்க வேறு புத்தகங்களையும் அறிமுகப்படுத்தியது அப்பாதான். அவரிடத்து அப்போது பெரியார், அண்ணா , கலைஞர், டாக்டர் முவ போன்றோர் புத்தகங்களை சுவரில் இரண்டு அடுக்குகள் பதித்த சின்ன அலமாரியில் வைத்திருந்தார். திராவிடப்பற்றாளரான என் தந்தை அவற்றையே வாசிக்கவும் தந்தார். ஒவ்வொரு இரவிலும் அவரருகில் படுத்துக்கிடக்கையில், பகலில் வீட்டு நடுக்கூடத்தில் அமர்ந்திருக்கையில் கதைபோல அவர் ஆப்ரஹாம் லிங்கன், மார்ட்டின் லூதர் கிங், கென்னடி என்று உலகியல் தொடர்பான பல சுவையானவற்றையும் தொகுத்துக் கதைபோலச் சொன்னவரும் அப்பாதான். எனக்கு முன்பிற்ந்த என் மூன்று சகோதரிகள் பருவமெய்தியபின் வீட்டிற்கு வெளியே செல்லக்கூடாது என்கிற மரபின் கட்டுப்பாட்டில் இருந்தபோது அவர்களின் பொழுதுபோக்கிற்காக அப்போது வெளிவந்த ராணி, ராணிமுத்து ஆகியவற்றைத் தொடர்ச்சியாக வாங்கிவந்து படிக்கவும் வைத்தார். அண்ணாவின் ரங்கோன்ராதா, ராஜாஜியின் திக்கற்ற பார்வதி, சி..பாலனின் தூக்குமரநிழலில் என நாவல் வாசிப்பும் அன்றே தொடங்கிவிட்டது. இன்றைய ஹரணியின் எல்லாவற்றுக்கும் அப்பாவே பிதாமகன்.

எங்கள் தெருவில் குடும்பநெருக்கமாகப் பழகியிருந்த இரு சமணக் குடும்பங்கள். அண்ணன் வீட்டில் முத்து காமிக்ஸ், அம்புலிமாமா, இந்து ஆங்கில நாளிதழ், ரீடர்ஸ் டைஜஸ்ட் என வாசிக்கக் கிடைத்தது. வாசிக்க வைத்தார்கள். தம்பியின் வீட்டில் ஒவ்வொரு புதனும கல்கியில் பொன்னியின் செல்வன் வாசிக்க வைத்தார்கள் இப்படியே தொடர்ந்து வளர்ந்தது வாசிப்பு.

கே: எப்போது எழுத தொடங்கினீர்கள்? முதல் படைப்பு எந்த இதழில் வெளிவந்தது?

ப: நன்றாக நினைவிலிருக்கிறதுஎட்டாவது வகுப்பு படிக்கையில் அப்பாவும் அந்த இரண்டு சமணவீட்டு அண்ணன்களும் ஏற்படுத்தித் தந்த வாசிப்பு அனுபவத்தில் அப்போதே எழுதத்தொடங்கிவிட்டேன் என்று சொல்லலாம். (அதாவது அம்புலி மாமாவின் பாதிப்பில் அதேபோன்ற கதைகள்). அந்த வயதில் நானும் என்னுடைய வகுப்புத்தோழன் கே.கே.சுவாமிநாதனும் இணைந்து நடத்திய கையெழுத்துப் பத்திரிக்கையான தொகுப்பில் எழுதினேன். என்னுடைய முதல் கவிதை 1982 சரபோசி கல்லூரியில் படிக்கையில் ஆண்டுமலரில் (மூன்று கவிதைகள்) வெளிவந்தன. என்னுடைய முதல் சிறுகதை இதயம் பேசுகிறது ஆசிரியர் திரு மணியன் அவர்கள் நடத்திய சிறுகதைக் களஞ்சியம் இதழில் வெளிவந்ததுசிறுகதைக் களஞ்சியத்தில் ஒரேயொரு அறிமுக எழுத்தாளர் அப்புறம் 9 கதைகள் பிரபல எழுத்தாளர்கள் கதை எனப் பத்துக் கதைகள் வெளிவந்தன. ஆனால் எனக்கு முன்னால் எழுதிய அறிமுக எழுத்தாளர்களுக்கு இல்லாத சிறப்பு என்னுடைய கதை வந்த சிறுகதைக் களஞ்சியத்தின் அட்டைப்படம் என்னுடைய கதைக்கானதுகதையின் தலைப்பு .. பறக்க மறந்த சிறகுகள்.. ஆண்டு 1985.

கே: கிட்டத்தட்ட எல்லா இலக்கியவகைகளிலும் (genres) எழுதியிருக்கிறீர்கள் இல்லையா?

: முன்பே குறிப்பிட்டதுபோல அப்பாவின் வாசிப்புக் கற்றலில் வாசிக்க ஆரம்பித்து நவீன இலக்கியம் அறிமுகமானது. கவிஞர் நா.விச்வநாதன் அவர்களின் அறிமுகத்தில்  தஞ்சை ப்ரகாஷ் அறிவுறுத்தியபின் புதுமைப்பித்தன் தொடங்கி எல்லாத் தரப்புப் படைப்பாளிகளின் நூல்களையும் வாசித்த, வாசித்துவரும் அனுபவத்தில் கவிதை, சிறுகதை, குறுநாவல், நாவல், நாடகம், கட்டுரை எனவும் என் எழுத்துவகை விரிந்திருக்கிறது. இவற்றிலும் கணிசமாக நூல்களை எழுதி வெளியிட்டுள்ளேன். மேலும் சிறுவர் இலக்கியத்தில், அறிவியல் செய்திகள், கட்டுரைகள், கதைப்பாடல்கள், சிறுவர் கதைகள், விலங்குகளை வைத்துக் கதைகள், சிறுவர் பாடல்கள், நாடகங்கள் எனவும் எழுதியுள்ளேன்

பொதுவில் மரபு சார்ந்தும் நவீன இலக்கியம் சார்ந்தும் சங்க இலக்கியம் சார்ந்து இலக்கிய நாடகங்களும் நவீன இலக்கியம் சார்ந்து நவீன நாடகங்களும் எழுதியுள்ளேன். சோற்றுப் பருக்கைகள் எனும் நாடகம் தாமரையில் 90 களில் வெளிவந்து என் முன்னோடி திருமிகு பொன்னீலன் அவர்களின் வாழ்த்துபெற்றது குறிப்பிடத்தக்கது. என் சிறுகதைகள் குறித்த அமரர் வல்லிக்கண்ணன் அவர்களின் கடிதங்கள் சிறப்பானவை. இப்போது சிறுவர் நாவல்களிலும் கவனம் செலுத்தி எழுத முயற்சித்து வருகிறேன்எனக்குத் தெரிந்ததை எனக்கு வந்ததை எழுதுவதில் நிறைவு இருக்கிறது. எல்லா இலக்கிய வகைகளிலும் எழுதுவது என்பது பேராசையின் பெருங்கனவாகும். அது முடியாது. ஆகவே தெரிந்ததில் தெளிவாக எழுதுவது எளிமையாக எழுதுவது இயல்பாக வருகிறது அவ்வளவுதான்.

இளம் அறிவியல் (வேதியியல்) பட்டதாரி என்பதால் அதில் கிடைத்த ஆங்கில அனுபவத்தைக் கொண்டு நான் எழுதிய சில ஆங்கிலக் கவிதைகளும் கல்கத்தாவிலிருந்து (1992 களில்) வெளிவந்த பொயட்ரி டுடேவில் வெளிவந்துள்ளனஇதேபோன்று ரீடர்ஸ் டைஜஸ்ட் வெளியிட்ட பெஸ்ட் சார்ட் ஸ்டோரிஸ் எனும் புத்தகத்திலிருந்து சில கதைகளைத் தமிழில் மொழிபெயர்த்தது தினகரன் வசந்தம் இதழில் வெளிவந்தது. தற்போது கவிஞர் மீராவின் குக்கூ தொகுப்பின் 100 குறுங்கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளேன். ஆனால் மொழிபெயர்ப்பில் அதிகம் ஈடுபட அச்சம் உள்ளது.

கே: புனைப்பெயர் வைக்கஎன்ன காரணம்? அப்படி என்ன அவசியமாக உணர்ந்தீர்கள்?

: என் மதிப்புமிகு எழுத்தாளர் திரு சுஜாதா அவர்கள் எழுத வருபவர்கள் புனைப்பெயர் வைத்துக்கொள்ளல் நலமென்று கருத்துபட ஒரு நேர்காணலில் குறிப்பிட்டிருந்தார். அவரின் சொற்கள் எங்களுக்கு உடன்பாடு என்பதால் நானும் எனக்கு இதழ்களில் எழுதிக்கொண்டிருந்த நண்பன் சந்தானகிருஷ்ணனும் சேர்ந்து பெயர் வைத்துக்கொண்டோம். அவன் மதுமிதா எனும் பெயரையும் நான் ஹரணி எனும் பெயரையும் வைத்துக்கொண்டோம்

கே: வாசிப்பது எழுதுவது தவிர்த்து உங்களுக்கு வேறு என்ன துறைகளில் ஆர்வம் இருக்கிறது? உதாரணமாக இசை, ஓவியம், பயணம், சினிமா...

: எல்லா இசையும் பிடிக்கும்.அவற்றின் நுட்பங்கள் முற்றிலும் தெரியாது. ஆனால் அவற்றின் ஓசையில் சமயங்களில் பொருள்புரியாவிட்டாலும் ரசிப்பது உண்டு. அன்றுதொட்டுகண்ணதாசன், பட்டுக்கோட்டை, வாலிவைரமுத்து, நா.முத்துகுமார் வரையிலான சினிமாப் பாடல்களை விரும்பிக்கேட்பதுண்டு. சிலரின் ஒருசிலபாடல்கள் அதாவது நா.காமராசன், புலமைப்பித்தன், முத்துலிங்கம், பிறைசூடன் இப்படியானவர்களின் பாடல்கள்நிறைய ஆண்டுகள் திருவையாறு தியாகராசர் உற்சவத்திற்குச் சென்று கேட்டதுண்டு. கல்லூரியில் படிக்கிற காலங்களில் என்என்எஸ் தொண்டராக இருந்து தியாகராசர் உற்சவத்தில் மக்களை ஒழுங்குப்படுத்தும்பணியில் அப்போதும் கேட்டதுண்டு. என் தொழில் இப்போது பயணத்தில்தான். ஆகவே பயணம் பிடிக்கும். அதன் அடிப்படையில் உருவானதுதான் பேருந்து நாவல். தற்போது பாரதிதாசன் பல்லைக்கழகத்தில் பாடமாக வைக்கப்பட்டுள்ளது.

நீச்சல் பிடிக்கும். வீட்டிற்குப் பக்கத்தில் ஓடும் வடவாற்றில் நீந்திதான் குளிப்பது பழக்கம். நீச்சல் கற்றுக்கொண்டது ஒரு சுவையான சம்பவம். அப்பாவுடன் குளிக்கப்போய் அப்பா நீந்தியபின் நீந்தியுள்ளேன். அம்மாவின் பிறந்த ஊர் திருவையாறு அருகேயுள்ள கிராமம். இளைய அக்காவைத் திருமணம் செய்து தந்தது திருவையாறு என்பதால் காவிரியில் இக்கரையிலிருந்து அக்கரைக்கு நீந்திய அனுபவங்கள் உண்டு.

நான் அறிவியல் பட்டதாரி என்பதால் ஓவியத்தில் ஈடுபாடு உண்டு., ஓவியங்கள் வரைவேன்.  

தற்போது பணிபுரிவது பேராசிரியர் பணிநிலை என்பதால் நான் மிகமிக விரும்பிச் செய்வது கற்றுத்தரல். பாடங்கள் நடத்தும்போது பெருமையாக உணர்கிறேன். நல்லாசிரியர்கள்  என்று தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாணவர்கள் அடையாளப்படுத்துகிறார்கள். அது இன்னும் பலமாக உள்ளது பாடம் நடத்துவதற்கு நிறைவாகவும்.

அகராதி உருவாக்கம், அறிவியல் தமிழ்க் கட்டுரைகள், மொழிபெயர்ப்புஇலக்கிய நாடகங்கள், அறக்கட்டளைச் சொற்பொழிவுகள் எனவும் கல்விநிலைப் பணியிலும என் பணி தொடர்ந்துகொண்டிருக்கிறது.

கே: தஞ்சையில் இலக்கிய நண்பர்களுக்கு எப்படி அறிமுகமானீர்கள்? வித்தியாசமான அனுபவங்கள் உண்டா?

: என் முதல் கதை பறக்க மறந்த சிறகுகள். இதயம் பேசுகிறது நிறுவனம் நடத்திய சிறுகதைக் களஞ்சியம் எனும் தொகுப்பு இதழில் வெளிவந்தது. அவ்விதழில் என் புகைப்படம் முகவரியுடன் வெளியாகியிருந்தது. எனவே நிறைய கடிதங்கள் அக்கதைக்கு வந்தன. அப்படி வந்த கடிதங்களில் ஒரு முக்கியமான அஞ்சல் அட்டை நான் மதிக்கும் கவிஞர் நா.விச்வநாதன் அவர்களின் கடிதம். பாராட்டி எழுதிவிட்டு தஞ்சைக்கு ப்ரகாஷ் கடைக்கு வாருங்கள் என்றார். அப்போது கவிஞரையும் தெரியாது விச்வநாதனையும் தெரியாது. பின் அவரின் அழைப்பின்பேரில் சென்றபோது தஞ்சை ப்ரகாஷை அவர் எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். அப்படித்தான் எனக்கு அறிமுகமானது. தஞ்சை ப்ரகாஷ் நான் அதுவரை வாசித்த சிறுகதைகளையும் நாவல்களையும் தாண்டிய ஒரு புது உலகத்தைப் புதுமைப்பித்தன் தொடங்கிப் பட்டியலிட்டுத் தந்து அறிமுகம் செய்தார். அப்படித்தான் என் வாசிப்புத்தளம் பெரியதொரு திருப்பத்திற்குத் தாவியது. அன்றிலிருந்து நான் தொடர்ந்து தஞ்சை ப்ரகாஷ் கடைக்குப் போக ஆரம்பித்து அங்கு பல அற்புதமான நேயமான படைப்பாளிகள் அறிமுகமானார்கள். இன்றுவரை அவர்களுடன் எனக்கான உறவும் நட்பும் நீடித்திருக்கிறது வாசம் குறையாமல். ஆகவே வித்யாசமான அனுபவங்கள் ஏதும் வாய்க்கப்பெறவில்லை.



கே: யார்யார்
அந்த படைப்பாளிகள்?

: வரிசைக்கிரமம் மாறியிருக்கலாம். இருப்பினும் சொல்கிறேன். முதலில் என்னை அறிமுகம் செய்த கவிஞர் அரசூர் நா.விச்வநாதன், கவிராயர் என்றைழக்கப்படுகிற அழகான கவிதைகளுக்கும் நேர்த்தியான எழுத்திற்கும் சொந்தக்காரரான கோபாலகிருஷ்ணன், படைப்பாளி என்பதை மீறி சகதோழனாக என்னை எப்போதும் பாராட்டிக் களிக்கிற மனிதநேயமிக்க அமரர் புத்தகன், சிறந்த மொழிபெயர்ப்பாளர் காதம்பரி வெங்கட்ராமன் வாங்க ஹரணி எப்படியிருக்கீங்க என்று நலம் விசாரிப்பவர். இன்றும் என்னுடைய கைகுலுக்கி, மனம்குலுக்கி உறவாடி மகிழ்கிற திடல் எனும் இதழின் ஆசிரியர் கவிஞர் கவிஜீவன், வயது வித்தியாசம் பாராமல் எல்லோரையும் கண்மணி என்று அழைக்கும் வெற்றிலை சிவக்கும் உதடுகளுடைய என்னின் கண்மணி சிஎம் முத்து பளிச்சென்ற எளிமையான ஆழமான அட என்று வியக்கும் கவிதைகளை எழுதும் சுந்தர்ஜி கவிஞர் சுகன் கவிஞர் நட்சத்திரன் கவிஞர் மதுமிதா கவிஞர செல்லதுரை  எப்போதும் குரு ப்ரகாஷை உறவாடிக்கொண்டிருக்கிற என் எழுத்துகளை மிகவும் மதித்த கவிஞர அமரர் விஜயராகவன் (சிவ ஒளி, பேசும்புதிய சக்தி ஆசிரியர்) கவிஞர் சி.கே.ரெங்கசாமி  எனப் பலரைச் சொல்லலாம். மேலும் குரு ப்ரகாஷ் அவர்களின் அறிமுகத்தால்தான் தமிழகத்தின் தலைசிறந்த அத்தனை படைப்பாளிகளையும் அருகே பார்த்து உறவாடும் அரிய தருணங்கள் வாய்த்தன. தி.ஜானகிராமன். பாலகுமாரன், கரிச்சாங்குஞ்சு, எம்வி வெங்கட்ராம், .நா.சு. சுந்தரராமசாமி, பிரபஞ்சன், ஜெயகாந்தன், சுவாமிநாத ஆத்ரேயன், கி.ராஜநாராயணன், நிறைய உள்ளன நினைவில் வரவில்லை பலரும்.

கே: சிறுகதைகள் எழுதிக் கொண்டிருந்த நீங்கள், நாவலை எப்போது எழுத தொடங்கினீர்கள்?

: சிறுகதைகள் எழுதிக்கொண்டிருந்த மையப்பகுதியில் பலரின் தொடர்கதைகளை. நாவல்களைப் பார்த்து குறிப்பாக தி.ஜானகிராமன், பாலகுமாரன், பிரபஞ்சன்இவர்களின் தொடர்கதைகள், நாவல்கள் எனக்குள் அந்த முயற்சியைச் செய்யத் தூண்டின என்று கூறலாம். ஆகவே தொடர்கள் எழுத முயற்சி செய்து முதலில் தினபூமி செய்தித்தாளில் 7 வாரங்கள் நிழல்கள் எனும் தொடரை எழுதினேன். அப்புறம் தமிழ் அரசியில் திரு சுந்தரபுத்தன் அவர்களால்  நான்கு வாரத் தொடர்கள் இரண்டு எழுதினேன். ஒன்று காக்கை விருட்சம் இன்னொன்று சாபப் பட்சிகள். இரண்டுமே நல்ல வாசகர்களின் ஆதரவைப் பெற்றது. இச்சூழலில் மாலைமதிக்கு நாவல் ஒன்றை எழுதலாம் என்று முடிவெடுத்து எழுதிய முதல் நாவலே மாலைமதியில் வெளிவந்தது. ரௌத்ரம் பழகு என்பது அதன்பெயர்தனியாக நாவல் எழுதி வெளியிடவேண்டும் என்கிற முயற்சியில் எழுதப்பட்ட நாவல்தான் அப்பா எனும் நாவலும் சாயம் போன யானைகள் எனும் நாவலும். இரண்டும் எழுதி முடிக்கப்பட்டாலும் அவற்றில் பல்வேறு திருத்தங்களுக்காகவும் களப்பணிக்காகவும் அப்பாவின் கிராமத்திற்குப் போகவேண்டிய பயணம் இன்னும் தடைபட்டுக்கொண்டேயிருக்கிறது. கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதற்குப் பின்னர் எழுதியது பேருந்து நாவல். அதனைத் தொடர்ந்து 5 நாவல்கள் மேலும் எழுதப்பட்டு திருத்தத்தில் உள்ளன.

 


கே: பேருந்து நாவலின் தாக்கம் எங்கிருந்து கிடைத்தது உங்களுக்கு?

: பேருந்தில்தான் பத்தாண்டுகள் பயணம். தஞ்சைக்கும் சிதம்பரத்திற்கும் அதிகாலை 5 மணிக்கு தஞ்சையில் வெள்ளைக்குதிரை எனப் பெயரிடப்பட்டிருக்கும் திருச்சியிலிருந்து பாண்டிச்சேரி வரை செல்லும் பேருந்தில் ஏறுவேன்அதைவிட்டால் 6 மணிக்கு திருச்சி - கடலூர் பேருந்தில் பயணிப்பேன். இந்த இரு பேருந்துகளிலும் மாறிமாறிவரும் நடத்துநர்களும் ஓட்டுநர்களும்தான் பேருந்து நாவலுக்கான அடிப்படைத் தாக்கம். அருமையான மனிதர்கள் அவர்கள். இயல்பாகவே  பயணங்களில் வேடிக்கைப் பார்க்கிற பழக்கம் சிறுவயது முதலே உண்டு என்பதால் பேருந்து பயணத்திலும் ஒவ்வொரு இடம் மனத்தில் பதிந்துவிட்டது. அய்யம்பேட்டை பாபநாசம், பெருமாள்கோயில், தாராசுரம் இப்படியாக ஒவ்வொரு நிறுத்தத்திலும்  ஏறியிறங்கும் மனிர்களின் வாழ்வைப் பேருந்தினுள் காண நேர்ந்ததே பேருந்து நாவலுக்கான உருவாக்கம்.நிறைய கண்டவற்றைக் குறுக்கிக் கொஞ்சம்தான் நாவலில் ஏற்றினேன். அதிக சோகம் சோர்வடைய வைக்கும் என்பதால்

கே: இப்போது ரயில் பயண செய்து வேலைக்கு செல்கிறீர்கள். அடுத்த நாவல் 'ரயில்' தானே?

ப: எழுதத்தொடங்கி ஒரு மாதம் ஆகிவிட்டது. தற்போது பண்டாரவாடை கிராசிங்கில் நிற்கிறது.

கே: உங்கள் பேராசிரியர் தொழில் எழுத்து தொழிலுக்கு எந்த வகையில் பயன்படுகிறது?

ப: சொல்லப்போனால் நான் பேராசிரியர் பணிநிலைக்கு வருவதற்கு முன்னரே எழுதத் தொடங்கிவிட்டேன். பேராசிரியர் அன்பழகனாக இறப்பதைவிட ஹரணியாக இறப்பதிலேயே நான் மகிழ்ச்சிகொள்கிறேன். என் பேராசிரிய அனுபவத்தில் பல கசப்பான அனுபவங்களைச் சந்தித்துவிட்டேன். சந்தித்தும் வருகிறேன். உண்மையாக ஒரு பேராசிரியராகத் தமிழ்த் தொண்டாற்றவேண்டும் என்கிற என் கனவுக்காக ஆசைப்பட்டு வந்து சிதைந்துப்போய்விட்டேன். கேலியாக விமர்சிக்கப்பட்டேன். என்றாலும் ஹரணிக்கு நிகராக அன்பழகனும் தமிழாய்வில் அதே ஆர்வமுடன் தொடர்ந்து இயங்குவார்கள் என்பதுதான் நிதர்சனம். சத்தியம். என் அனுபவத்தில் தகுதியும் திறமையும் உள்ள பேராசிரியர்கள் ஒருபோதும் மேன்மைப்படுத்தப்படுவதில்லை என்பதும் பணமும் சிபாரிசும் தமிழைச் சரியாக உச்சரிக்கவும் திறனாகக் கற்கத் தெரியாதவர்களும்தான் உயர்நிலைக்குக் கொண்டுவரப்படுகிறார்கள். அதுதான் இப்போது அதிகமாகப் பெருகிவருகிறது என்பதுதான் நான் கண்ட உண்மை. நான் வாசித்த, வாசித்துக்கொண்டிருக்கிற தமிழ்ப் பனுவல்களைத் தேவைக்கேற்ப என் படைப்புகளில் பயன்படுத்திவருகிறேன். அதில் எனக்கொரு நிறைவும் இருக்கிறது. இன்னொருபுறம் என்னைவிடத் தமிழில் திறமைமிக்க இளைஞர்கள் இன்னும் சுயநிதிக்கல்லூரிகளில் பல்லாண்டுகளாக சொற்ப ஊதியத்தில் வாழ்வற்றுக் கரைந்துகொண்டிருப்பதையும் கண்டு மனம் கசிந்துகொண்டும் இருக்கிறேன்

 

கே: பணியில் இருப்பதால் தமிழ் இலக்கிய சூழலில் தீவிரமாக இயங்கமுடியவில்லை என்று வருத்தமாக நினைக்கிறீர்களா? அல்லது நிறையாக உணர்கிறீர்களா?

: தீவிரமாக இயங்குதல் என்றால் எனக்குப் புரியவில்லை. நான் விரும்பியேற்ற பணி  ஆசிரியர் பணி. இதில் எனக்குத் தமிழ் இலக்கியங்களில் ஆழமான பரிச்சயமும் படைப்பிலக்கியங்களில் தரமான வாசிப்பும் என இயங்கிக்கொண்டேயிருக்கிறேன். என் மாணவர்களுக்கு எனக்குப் பிடித்த சிறுகதை, கவிதை, நாடகம் இவற்றை பிரபலம் அபிரபலம் என்று பிரிக்காமல் எல்லாவற்றையும் அவர்களுக்குச் சொல்லுகிறேன். படைப்பிலக்கியத்திறன் எனும் தாள்  இளங்கலை தமிழ் மற்றும் முதுகலை வகுப்பில்  உள்ளன. அவற்றில் மாணவர்களுக்குக் கவிதை எழுதுதல் அதாவது மரபுக்கவிதை, புதுக்கவிதை மற்றும் சிறுகதை எழுதுதல் பயிற்சியுண்டுஇதில் நேற்றுவரை ஒரு சிறுகதையெழுதிய படைப்பாளனின் கதையையும் அறிமுகப்படுத்துகிறேன். முடிந்தவரை அவற்றை வகுப்பு மாணவர்களுக்கு நகலெடுத்தும் படிக்கக் கொடுக்கிறேன். எனக்குத் தெரிந்ததை என் அனுபவத்தை எழுதிக்கொண்டேயிருக்கிறேன் இடைவெளியில்லாமல். அவற்றின் எதையும் தீர்மானிப்பது காலத்தின் கையிலுள்ளதுஆசிரியர் பணி அதுவும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணிபுரிவது கொடுப்பினை. அங்கே படிக்கமுடியாமல் போனதை பலரும் என்னிடத்தில் சொல்லி வாழவில் அவை இழந்துவிட்ட வரம் என்கிறார்கள். அதற்காகவே அண்ணாமலையில் பணியில் சேர்ந்தபிறகு எம்ஏ மொழியியல் பயின்றேன். இப்போது பணிபுரிகிறேன். அண்ணாமலை அரசரின் கருணைக்கொடை கல்வி தானம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

 


கே: கேள்வியை சற்று மாற்றிக் கொள்கிறேன். முழுநேர எழுத்துப்பணி என்கிற இலக்கு எல்லா எழுத்தாளரும் விரும்புவது. படைப்பு திறனை இந்த லெளகீக வேலை குறைப்பதாக சிலவேளைகளில் நினைப்பதுண்டா?

ப: முழுநேர எழுத்துப்பணி என்பதெல்லாம் என் கொள்கையல்லஅன்றிலிருந்து இன்றுவரை முழுநேர எழுத்துப்பணியை மேற்கொண்டவர்களில் மிகக்குறைந்த விழுக்காடே நிலைபெற்றிருக்கிறார்கள். திரு சுஜாதா அவர்கள் சொன்னதுபோல உருப்படியாய் ஒரு வேலை அப்புறம் எழுத்துப்பணி என்பதுதான் என் விருப்பமாகக் கொண்டிருக்கிறேன். இதில் எனக்கு உடன்பாடு. எனக்கு முதலில் என் குடும்பம்தான் முக்கியம். மனைவி, பிள்ளைகள் இவர்களின் நிலைப்பாடு. ஒருவேளை குடும்பம் எழுத்து இவற்றுக்கான முன்னுரிமை வலியுறுத்தப்படுமானால் நான் எழுத்தை விட்டுவிடுவேன். என் குடும்பத்து உறுப்பினர்களுக்கு  முதலில் நான் சரியானவனாக இருக்க விரும்புகிறேன். என் குடும்பம்தான் எனக்கு மிக முக்கியமானது.

கே: பின் நவீனத்துவ இலக்கியவகைகளை எப்படி பார்க்கிறீர்கள்?

ப: தொடக்கத்தில் இதுகுறித்த நூல்களையும் கட்டுரைகளையும் நிறைய வாசித்தேன்,. ஏனோ இது குறித்த சிந்தனை மனத்தில் ஒட்டவில்லை. இப்போது முற்றிலுமாக இதுகுறித்த எவற்றையும்  நினைவில் வைத்துக்கொள்ளவில்லை. நம்பிக்கையும் இல்லை.

கே: தஞ்சாவூரில் வசிக்கும் நீங்கள், அதன் வரலாற்று பின்புலத்தில் நாவல் எழுதும் எண்ணம் உண்டா?

ப: நிச்சயமாக. அதை என் வாழ்வின் பொறுப்பாகவே உணர்ந்து வைத்திருக்கிறேன். ஐந்தாண்டுகளுக்கும் மேலாகத் தகவல்கள் திரட்டியநிலையில் மன நிறைவின்மை காரணமாக அவற்றின் உண்மைத்தன்மையை தேடித் திரட்டுகிறேன். விரைவில் வரும்.

கே: எழுத்தாளர், பேராசிரியர் - இதில் எதை முன்னிலைப் படுத்துவீர்கள்?

ப: எழுத்தாளரைத்தான்.பேராசிரியர் ஒப்பனை.

கே: உங்கள் இலக்கிய முயற்சிகள் வெற்றி பெறட்டும் என் வாழ்த்துகள் நன்றி

ப: நன்றி.

No comments: