குழந்தை முதலில் பள்ளிக்கு சென்றதும் பெரிய வியப்பு கொள்வது எண்களையும் எழுத்துக்களையும் கண்டுதான். குறிப்பாக எண்களின் தொடர்ச்சியை காண்பதும் கூட்டுத்தொகையை கண்டடைவதும் அதற்கு மிகுந்த பரவசத்தை அளிக்கிறது. எல்லா பொருட்களையும் எண்ணிப் பார்க்கிறது. வீட்டில் இருக்கும் தூண்களின், கதவிலுள்ள கம்பிகளின், டப்பாவிலுள்ள பென்சில்களின் எண்ணிக்கையை கூட்டிக் கூட்டி மகிழ்கிறது.
வளர்ந்தபின் செலவுகளில் எண்ணிக்கையில் அந்த மகிழ்ச்சி இருப்பதில்லை. ஒவ்வொன்றையும் எண்ணி செலவு செய்யும் கட்டாயத்தில் வாழ்க்கை இருக்கும் போது எண்களின் மயக்கம் மீண்டும் வருகிறது. அசோகமித்திரனின் இக்கதையில் நாயகன் வறுமையில் உழன்று கொண்டிருக்கின்றான். பேப்பர்
வாங்க காசில்லாதவன். பொது நூலகத்தில் சென்று படிக்க நினைக்கும்போது இருக்கும் அரைமணி
நேரத்தில் படித்துவிட்டு வரவேண்டும். ஆனால் அவர் பார்க்க நினைக்கும் பக்கம் வேறு ஒருவரின்
கையில் இருக்கிறது. முதல்பக்கம் வேண்டாம், விளையாட்டு வேண்டாம், சினிமா வேண்டாம், ஊரின்
நடப்பு நிகழ்ச்சி வேண்டும். அதை வைத்திருக்கும் மனிதர் குனிந்து பார்த்துக் கொண்டே
இருக்கிறார். அவர் எப்போது தருவார் என்று காத்திருக்கிறார், பேங்க் பேலன்ஸ் எண்களை
எல்லாம் பார்க்கிறார், அதில் இருபது இலக்கம் வரை செல்கிறது. இரண்டு இலக்கம் தாண்டாத
தன் வாழ்க்கையை எண்ணிக்கொள்கிறார்.
தியானம் போல தன் வாழ்க்கை பாதையை எண்ணிப் பார்த்து முடித்தும் பேப்பர் அவர் கைக்கு வரவில்லை. வசீகரிக்கும் இந்த எண்களை நினைத்து இன்னும் எத்தனைக் காலம்தான் யோசிப்பது. வரவுக்கு மிஞ்சி போகும் செலவு எண்களை எப்படி நிறுத்துவது. யாரை நம்பி இருப்பது. அரசு கொடுக்கும் சின்ன சலுகைக்கு எப்படி அலைய வேண்டியிருக்கிறது. ஒரு பக்க பேப்பரை பார்க்க அரை மணிநேரம் விணாகிறது. அதுவும் எண் தான். ஓடிப்போய் குளித்து பழையதை தின்று அலுவலகம் செல்லவேண்டும்.
உலகத்தில் எத்தனையோ பிரச்சனைகள் இருக்கின்றன. அமெரிக்கா ரஷ்யா தங்கள் தகுதிகளை உயர்த்திக் கொள்ள எத்தனை எண்களை செலவு செய்கிறார்கள். சாதாரண மனிதனும் அதைக் கண்டு வாழ்க்கிறான். அவனுக்கு தெரியாது அவைகள் என்னஎன்ன என்று.
இன்னும் ஓடவேண்டிய தூரம் அதிகம் இருக்கிறது. நேரமாகிவிட்டது என்று சற்று கோபத்தில் பேப்பரை லேசாக இழுத்துவிடுகிறார். அது கையோடு வந்துவிடுகிறது. மனிதர் தூங்கிவிட்டிருக்கிறார். ஆனால் எண்களை துரத்தும் காலம் இன்னும் இருக்கிறது எனக்கு. நான் அவரைப்போல தூங்க முடியாது.
(azhiyasudargal.wordpress.com)
1 comment:
அருமை
அசோகமித்திரனின் சில நூல்களை வாசித்திருக்கிறேன்
Post a Comment