Thursday, May 28, 2020

எம்.வி. வெங்கட்ராம் சிறப்பிதழ்: அடவி



எழுத்தாளர்கள் அவர்களின் மொத்த படைப்புகளை வைத்து கொண்டாடுவது எப்போதும் நிகழ்வதில்லை. அவரது நூற்றாண்டில்கூட நிகழ்வது அபூர்வம்தான். எழுத்தாளர் எம்.வி. வெங்கட்ராமின் நூற்றாண்டு இந்த ஆண்டுதான். மே 18ல் நிறைவடைவதால் அடவி இதழும் மற்றும் சில நண்பர்களின் முயற்சியாலும் அவரது படைப்புகளை நினைவு கூறும் விதமாக அடவி இதழில் ஒரு சிறப்பிதழை கொண்டு வந்திருக்கிறார்கள். சிறப்பிதழ் எனும்போதே அதில் அவரது நினைவுகளை பகிரும் விதமான கட்டுரைகளும் இடம்பெறுகின்றன.

பெருமளவில் எழுத்தாளர்கள் பங்குகொண்டு எழுதிய 18 கட்டுரைகள் இதில் அடக்கம். ரவி சுப்ரமணியத்தின் 'பின்னிரவில் பெய்த மழை' கட்டுரை எம்விவியுடனான நெருக்கமாக பழகிய அவரது நினைவுகளை சொல்கிறது. கல்யாணராமன் தன் இருட்டொளி கட்டுரை எம்விவியின் நாவல்களையும் சிறுகதைகளைப் பற்றியும் பேசுவதுடன் அவரது படைப்புகளில் எம்விவியின் இருந்த உறவுகளைப் பற்றியும் எழுதியிருக்கிறார். தன் வாழ்வில் நடந்த சம்பவத்தோடு எப்படி ஒத்துப் போகிறது என்று பாவண்ணன் தன் கட்டுரையில் எம்விவியின் இனி புதியதாய் சிறுகதை பற்றி எழுதியிருக்கிறார். நித்திய கன்னி நாவல் ஒரு பெண்ணிய பிரதியாக எப்படி கொள்வது என்று காரணங்கள் அடுக்கிய கட்டுரை வெளி ரெங்கராஜன் எழுதியிருக்கிறார். கருப்பு வெள்ளை புகைப்படங்கள் கட்டுரையில் ஜி.பி.இளங்கோவன் எம்விவியின் நண்பர்களும் அவர்களது நெருக்கமான தொடர்புகளை பற்றியும் எழுதியிருக்கிறார். இரண்டின் யாத்திரை கட்டுரையில் எம்விவியின் உயிரின் யாத்திரை நாவல் அவரது சொந்த வாழ்வை எப்படி ஒத்துப்போகிறது என விவரிக்கிறார் ராணிதிலக்.

அகலிகை தொன்மத்தை சொல்லும் கோடரி என்னும் எம்விவியின் சிறுகதையை பற்றி லக்ஷ்மி சரவணக்குமாரும், காதுகள் நாவல் அவரது அடையாள புனைவாகியது என்பதை சுப்ரமணி இரமேஷ் தன் கட்டுரையில் கூறுகிறார்கள். வேள்வித்தீ நாவல் பற்றி விக்ரம் சிவக்குமாரும், காதுகள் நாவல் பற்றி விருட்சனும் எம்விவியின் வாழ்க்கை பயணத்தை விரிவாக . தன்சேகரும் எழுதியிருக்கிறார்கள். நனவிலி மனதின் பயணத்தை பேசும் உயிரின் யாத்திரை என்று விவரிக்கிறார் கே.ஜே.அசோக்குமார். எம்விவி வாழ்ந்த தோப்பு தெரு எப்படி எழுத்தாளர், கலைஞர்களுக்கு பரிச்சையமான இடமாகியது என்பதை சமஸ் விவரிக்கிறார்.

இவைகளுடன் எம்வி வெங்கட்ராமின் நாலு சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. அத்தோடு எம்விவியின் நிழற்படங்களின் தொகுப்பு தனியாக இணைக்கப்பட்டிருக்கிறது.

ஒரு சிறந்த கலைஞனுக்கு சிறப்பான நூற்றாண்டாக இந்த அடவி இணையஇதழ் அமைந்திருக்கிறது. படிக்க வேண்டிய எம்விவியின் பெரிய தொகுப்பாக பலபக்கங்கள் இருந்தாலும் முக்கியமான அவரது படைப்புகளை மீண்டும் தொகுத்துக் கொள்வதற்கு இந்த பக்கங்கள் பயன்படுவது ஒரு சிறப்பு.

அடவி இதழ்:
https://www.adavimagazine.com/

எம்.வி. வெங்கட்ராம் சிறப்பிதழின் உள்ளடக்க பக்கம்:
https://www.adavimagazine.com/%e0%ae%8e%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%b5%e0%af%86%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d-2/

3 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

போற்றுதலுக்கு உரியவர்
போற்றுவோம்

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

எங்கள் ஊர்க்காரர் என்பதில் எனக்குப் பெருமை.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

அடவி இதழின் பக்க இணைப்பை விக்கிப்பீடியாவில் எம்.வி.வெங்கட்ராம் பக்கத்தில் இணைத்துள்ளேன்.