Saturday, May 2, 2020

மர்மம் நிறைந்த “உண்மை கலந்த நாட்குறிப்புகள்” - அ. முத்துலிங்கம்.



கல்கண்டு, கலைக்கதிர் மாதிரியான வியப்பு செய்திகளை பிரதானமாக கொண்ட நூலைப் போன்றது அ.முத்துலிங்கம் அவர்களது நூல்கள். அவர் எழுதிய உண்மை கலந்த நாட்குறிப்புகள் நாவலில் தெரியும் சுவாரஸ்யம் கல்கண்டில் இருக்கும் வெறும் செய்தியைவிட பன்மடங்கு ஆழமும் விரிவும் கொண்டது.

செய்திகள் என்கிற தளத்திலிருந்து புனைவு என்ற தளத்திற்கு உயர்த்தும் ஒன்று இந்நாவலில் இருக்கிறது. அது ஆசிரியரால் முன்வைக்கப்படும் நுண்ணுணர்வு தளம். முதல் பத்தியில் அவர் சொல்வது மற்ற பத்திகளுக்கு பொறுத்தமற்று இருப்பது போல அமைவதும் கடைசி பத்தியில் அது இணைவது நம் யோசனைகளை முற்றிலும் மாற்றியமைப்பதாக இருக்கிறது.

செய்திகள், நடைமுறை வாழ்க்கை அனுபவங்களுடன் இரண்டும் இணைவதை இயல்பாகவே பிரிந்து வைக்கிறார். அவர் எழுத்துகள் அப்படிதான் அமைகின்றன. நுண்ணிய வாசிப்பு அனுபவத்தை உடையவர்களால் அந்த தொடர்பை புரிந்துக் கொள்ள முடியும். அது நிறைய வாசிப்பதனால் அல்ல நிறைய புரிதல் உடையவர்களால் முடியும்.
தமிழ் மொழியில் சுவாரஸ்யமான நடையிலும் உள்ளடக்கத்திலும் எழுதப்படுவது சில நேரங்களில் ஆச்சரியமாக இதுபோல் அமைவதுண்டு.

சாதாரண அனுபவங்களோ  உருக்கமான அனுபவங்களை நாம் மறப்பதில்லை. மற்றவர்களுக்கு நிகழும்போது அதை கேட்பதில் அதிக நேரத்தை செலவிடுவோம். ஜெயமோகன் எழுதிய புறப்பாடு புத்தகம்போல இதுவும் அனுபவங்களின் தொகுப்புதான். ஆனால் நீண்ட ஒரு 30 ஆண்டு அனுபவங்களின் தொகுப்பு என்று சொல்லும்போது அதில் இருக்கும் முக்கிய சுவாரஸ்யம் பல தேசங்கள், மனிதர்கள், உறவுமுறைகள், என்று கடந்து வருவதுதான்.

புன்னகைக்கு கதைசொல்லியாக அ. முத்துலிங்கத்தின் புனைவு நம் நினைவுகளை அதே அலைவரிசையில் மீட்க உதவி செய்கிறது. நம்மை எந்த தொந்தரவும் செய்யாத எழுத்து வகை அவருடையது. ஆனால் அது நம் மனதில் அனுபவமாக ஆகும்போது ஏற்படுத்தும் அலைகழிப்பை நாம் ஒவ்வொரு அத்தியாயத்திலும் உணரலாம்.

அவரது சிறுகதைகளில் இருக்கும் ஒரு கொக்கி எல்லா அத்தியாயத்திலும் சிறுகதைக்கு உரிய பண்புகளுடன் அமைவதும் அதுவே நாவலாக எல்லா பக்கங்களிலும் தொடர்வது இனிமைதான். ஓரு அத்தியாயத்திற்கு மற்றொரு அத்தியாயத்திற்கும் இடையே இருக்கும் இடைவெளி நீண்ட காலத்தை கொண்டிருக்கிறது. கதைசொல்லியையும் அவரது மனைவியையும் (சில அத்தியாயங்களில் இவர் வருவதுமில்லை) மட்டுமே தொடருவார்கள். மற்றவர்கள் முற்றிலும் புதியவர்கள். இப்படி ஒரு குணாதிசயங்களை கொண்ட நாவலை நாம் வாசித்திருக்க மாட்டோம். உதாரணமாக ஒன்று.

சுவரோடு பேசும் மனிதர் பகுதி அராமிக் தாய்மொழியாக கொண்ட ஒரு மனிதரைப் பற்றியது. அந்த மொழி யேசுநாதர் பேசிய மொழி, கூடவே பேசப்பட்ட ஹீப்ரு மொழி இப்போது மறு சீரமைக்கப்பட்டு பேசப்படுகிறது. அராமிக் மொழி நாடு இல்லாததால் பேசப்படவில்லை என்கிறார் அந்த மனிதர். கனடாவில் அவர் மட்டுமே வாழ்வதாக சொல்கிறார். அராமிக் பேசு மற்றவர்கள் எங்கிருக்கிறார்கள் என தெரியவில்லை. பேசத் தெரிந்த என் மனைவியும் இறந்துவிட்டாள். ஆனால் அவர் தினமும் வேலை முடிந்து வீட்டிற்கு சென்றதும் சுவரோடு பேச ஆரம்பித்துவிடுவார். அதனால் என்ன பயன் என்று கேட்கிறார் கதசொல்லி. ஆ அதுஎப்படி, என் மொழியை அழிய விட்டுவிடமாட்டேன் என்கிறார் அவர்.

அ. முத்துலிங்கம் கதைசொல்லியாக எப்போது முன்நின்று சொல்பவர், அதனாலேயே ஒரு விலகல் இருக்கிறது. அவர் தளத்தில் இறங்குவதில்லை. மிக நெருக்கமாக தன் அனுபவத்துடன் நேராதது போன்றிருக்கும். அது பலவீனம் தான். ஆனால் பலமாகவும் அதுவே அமைகிறது. ஆனால் புனைவை ஒரு சாகச விரும்பியாக பார்ப்பவர்கள் கண்டிப்பாக தவறவிடக்கூடாதது.

மனஎழுச்சியை இந்த நாவல் அளிக்காது. ஆனால் மனிதர்களைப் பற்றி நெருக்கமான அவதானிப்புகள் அவர்களின் செய்கைகளைப் பற்றி ஒரு ஆராய்ச்சி அல்லது தத்துவ மனநிலையை மெல்லிய பகடிடன் சொல்லிவிட்டு விளகிக்கொள்கிறார். உதாரணமாக
“அந்த மனிதர் இடுப்பை ஒரு அச்சாக வைத்து நாலு பக்கமும் குனிந்து வணக்கம் வைத்தார்.”
என்பது போன்ற வார்த்தைகள் நமக்கு நகைப்பையும் கூடவே கூரிய நுண்ணுணர்வையும் அளிக்கிறது. அதே வேளையில் மனிதர்களின் செய்கைகளை வகைப்படுத்துவதில்லை. பெண்களை வகைப்படுத்துவதில் உடற்கூறியலாக எதையும் சொல்வதில்லை
இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நைரோபி, சூடான், கனடா என்று நாடுகள் பல கடந்து சென்றாலும் கதைச்சொல்லியின் அகத்துடன் மட்டுமே பயணிக்கிறோம். அகத்திற்கு இரண்டு பக்கங்கள். மற்றொரு பக்கத்தில் நாம்.


No comments: