Wednesday, March 25, 2020

பதின்வாழ்க்கை: கால‌த்துகளின் இயர் ஜீரோ



பள்ளி வாழ்க்கையை நினைவு கூர்வதில் இருக்கும் ஆனந்தம் தன் நிகழ்கால துன்பங்களை மறப்பதற்குதான் என்று சொல்லப்படுவதுண்டு. மிக இளவயது பள்ளி நினைவுகள் நினைவில் இருப்பதில்லை. ஆனால் வளரும் பதின்பருவத்தில் ஏற்படும் நினைவுகள் பெரிய காலமாற்றத்தை நோக்கியதும், வயதடைவதை உடல்ரீதியாக உணர்ந்துக் கொள்வதும் நடக்கும் காலம் என்பதால் அதன் அதிர்வலைகளை நினைவுகளாக வைத்திருப்போம்

ஆறாவதில் பெரிய பள்ளிக்கு சென்றபோது ஆசிரியர்களை அவன் என்று தங்களுக்குள் விளித்து, சகட்டுமேனிக்கு திட்டிய சக மாணவர்களை கண்டு அதிர்ச்சியடைந்தது நினைவிருக்கிறது. அதற்கு முந்தைய காலங்களில் ஆசிரியர் என்பவர் குரு சிஷ்ய மரபின் தொடர்ச்சியாக இருந்ததை சொல்லும் மனிதர்கள் இருந்தார்கள். ஒவ்வொரு பத்தாண்டுகளில் பதின்வாழ்க்கை-ஆசிரியர் தொடர்பு சமூக, பொருளியல் மாற்றங்களைப் பொறுத்து மாறிக்கொண்டேயிருக்கிறது. கிடைக்கப்போகும் வேலையை பொறுத்து படிக்கும் வகைகளுக்கு மதிப்பு கூடுவது குறைவதும் இருந்தது. பள்ளியின் தரம், ஆசிரியர்களின் தரம், எல்லாம் கவனத்தில் கொள்ளப்பட்டன. இன்றைய படிப்பு நேற்றைய மாணவர்களான பெற்றோர்களுக்கு புரியாததாகியது.

இவ்வளவு நெருக்கடிக்களுக்கு இடையேயும் பள்ளி வாழ்க்கையை மீண்டும் வாழ ஆசை இருக்கவே செய்கிறது. அதன் இன்பங்கள், துயரங்கள் மீண்டும் வேறு கோணத்தில் காண துடிப்பு இருக்கிறது. அறுபதிகளின் பதின் பள்ளி வாழ்க்கை 90களின் பதின் பள்ளி வாழ்க்கையைவிட முற்றிலும் வேறானது. இதிலும் கிராமம், நகரம், பள்ளியின் மீடியம், பேட்டன் பொறுத்து மாறியே இருக்கும்.

கலாத்துகள் (ஆர்.அஜய்) எழுதியிருக்கும் இயர் ஜீரோ நாவல் தொன்னூருகளின் பள்ளி வாழ்வை சொல்கிறது. அதிலும் 10, 11, 12 வகுப்புகளில் படிக்கும்போது இருக்கும் அழுத்தமும், அதன் சுவாரஸ்யங்களையும் இந்நாவலில் வெளிப்படுத்தியிருப்பது நெருங்கிய அனுபவங்களை கிளர்ந்தெழ செய்கிறது.

ஆறாம்வகுப்பிலிருந்து கல்லூரி செல்லும் காலம் வரை என்று சற்று விரிவு படுத்திக் கொள்ளலாம். இவன் அறிமுகமாகும் கதாநாயகன் பொறுமையான அம்மா, பொறுப்பற்ற அப்பா, அலட்டிக்கொள்ளாத பாட்டியையும் தாண்டி சந்திக்கும் ஆசிரியர்கள், நண்பர்கள், நண்பிகள், கடைமனிதர்கள், பக்கத்து வீட்டு மனிதர்கள் தாம் அவன் உலகம். ஆனால் 15 வயதில் பெண் பிள்ளைகள் குடும்பத்தில் நேரடியாக சேர்த்துக் கொள்ளபடுவதும், அந்த வயதில் தங்களை விலகி கொள்ளும் ஆண்பிள்ளைகளை கொண்டது நம் சமூகம். அந்த ஆண்பிள்ளையின் சிறிய கோபமும் மூர்க்கமாக பார்க்கப்படும் சமயத்தில் படிப்பில் படு சுட்டியாக இருக்க வேண்டும், எதிர்காலத்தில் குடும்பத்தை காக்க வேண்டும் என்கிற நிபந்தனைகளை போட்டு அதீத எதிர்ப்பார்ப்புகளை கொண்டிருக்கிறார்கள்.

கலாத்துகள் தன் பதின் பருவத்து வெறுப்பையும் கோபத்தையும் நினைவில் கொண்டுவந்து அழகாக இயர் ஜீரோவாக்கியிருக்கிறார். சைக்கிள் எடுத்துக் கொண்டு சுற்றியது, டியூசன் செல்வதன் காரணங்கள், சினிமா சென்ற அனுபவங்கள் என்று அந்த நேரத்து வாழ்க்கையை கல்வையாக பதிவு செய்திருக்கிறார். அப்பாகளின் மீது அப்போது இயல்பாகவே ஒரு வெறுப்பு இருக்கும், கதையில் வெலையின்மையால் வீட்டில் எல்லோரிடமும் கத்திக் கொண்டிருக்கும் அப்பாவை 'இவன்' வெறுத்துதான் ஆகவேண்டும். சகதோழிகளை கூச்சத்துடன் அனுகுவது, உறவினர்களிடம் பேசாமல் விலகியிருப்பது என்று எல்லாமே பதின்வயது கோளாறுகளை பேசியிருக்கிறார். சுவாரஸ்ய நினைவுகளை மீட்டெடுத்திருக்கிறார் என்று சொல்லவேண்டும்.

ஆசிரியர், ஆசிரியைகளுக்கு பட்டப் பெயர் வைப்பது அலாதியான விஷயம். சிலருக்கு பட்டப்பெயர் ஒரு ஆண்டுதான் இருக்கும், சிலருக்கு அவர்களின் வாழ்க்கை முழுவதும் இருக்கும். அப்பா அம்மாவிற்கு பின் பிள்ளைகள் ஆசிரியர்களைதான் கூர்ந்து கவனிக்கிறார்கள் என்பதை ஆசிரியர்கள் உணர்வதில்லை. அவர்களின் சில்லறைதனங்கள் எளிதாக மாணவர்கள் கிரகித்து உடனே அதை வெளிப்படுத்தவும் செய்கிறார்கள். இதில் வெள்ளாவி என்று ஒரு ஆசிரியருக்கு பெயர், அந்த பெயரின் காரணத்தை கேட்க நிச்சயம் சிரிப்புதான் வருகிறது.

தப்பு செய்யாமலே காப்பியடிக்க உதவியதால் மாட்டிக் கொள்கிறான் +2வில். அவமானத்தால் குறுகிப்போகும் இவன், தன் அம்மா அப்பாவின் வெறுப்பிற்கு ஆளாக நேரிடுகிறது. ஆசிரியர், மாணவர்கள் மாறிவிட்டதாகவே தோன்றுகிறது. கடைசியில் சீட் கிடைத்து கல்லூரிக்கு செல்கிறான். தூங்கி எழுந்ததுபோல சாதாரணமாக கடந்துபோன வாழ்க்கை.

***

பதின்வயதில் ஏற்படும் அனுபவங்களை நினைவில் கொண்டுவந்து இருபது ஆண்டுகளுக்கு பின் எழுதியிருக்கிறார் ஆசிரியர். அவர் கடத்த உத்தேசித்த ஒன்றை துல்லியமாக செய்திருக்கிறார், வெற்றியும் பெற்றிருக்கிறார். அறிவியல் புனைவு என்று தோன்றுபடி தலைப்பு கொண்ட நாவலை படிக்கும்போது ஆதவனின் படைப்புலகம் நினைவிற்கு வருவதை தவிர்க்க முடியவில்லை. குறுகிய எல்லைக்குள் நின்று ஆதவன் வெளிப்படுத்திய அதே உணர்ச்சிதான் இதிலும். கலாத்துகளுக்கு ஆதவன் ஆதர்சியமாக இருக்கலாம். ஆனால் அதே நவீனத்துவ பாணியில் அமைந்துவிட்டது ஒரு சின்ன குறை. அடுத்து ஒருவேளை கல்லூரி, வேலைதேடும் வாழ்க்கையை எழுதக் கூடும். கதாப்பாத்திரங்களின் குணச்சித்திரம் ஒரளவிற்கு வெளிப்பட்டிருந்தாலும், வாசகன் நினைவில் வைத்துக் கொள்ளுமளவில் இல்லைதான். ஆனால் வெளிப்படையான, நேர்மையான வெளிப்படுத்தலின் வழியே வாசகனை மிக நெருக்கமாக வந்தடைந்திருக்கிறது இயர் ஜீரோ.

2 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

பள்ளிக் கால நினைவுகள் மனதில் வலம் வருகின்றன
நன்றி

நான் said...

Nice