Monday, December 23, 2019

சக்கை - நாவல் விமர்சனம்


கல்குவாரியில் வேலை செய்பவர்களின் வாழ்க்கையை நாம் அதிகம் இதுவரை அறிந்ததில்லை. அவர்களின் வாழ்க்கை சாதாரண வாழ்விலிருந்து மிகவும் பின்தங்கியது. கடுமையான உழைப்பில் கரைந்துவிடும் இம்மக்கள் தம் வாழ்க்கையில் கலை, பாரம்பரியம், கேளிக்கைகள் போன்றவைகள் என்னவென்று அறியாதவர்கள். கிராமங்களிலிருந்து விலகி தனித்த வாழ்க்கையை வாழ்பவர்கள். பல தசாப்தமாக தனித்து வாழும் இம்மக்கள் அறிந்த ஒரே சொல் கல்.

தொழில்ரீதியாக கல்லுடைப்பு என்பது எளிமையானதுதான், அதிகம் மெனக்கெடல்கள், படைப்பாற்றலை வெளிப்படுத்துவது அதில் இல்லை. ஆனால் கடின உழைப்பை கோரும் அந்த வேலையை செய்ய முன்வருபவர்கள் எத்துனை கஷ்டங்களை முன்பே அனுபவித்தவர்கள் என்பதை நாம் புரிந்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. வயல்வேலை செய்பவர்கள், நெசவு வேலை செய்பவர்கள் மேலும் இன்னபிற வேலைகளை செய்பவர்கள் பஞ்சம் போன்ற பெரிய இடர்பாடுகள் வரும்போது அதிலிருந்து விலகி புதிய வேலைகளுக்கு செல்கிறார்கள். அப்படி சுதந்திர இந்தியாவில் புதியவேலையாக உருவாகிவந்த ஒன்று குவாரியில் கல்லுடைப்பது.

எழுத்தாளர் கலைச்செல்வி எழுதியிருக்கும் சக்கை நாவல் கல்லுடைக்கும் மனிதர்களின் வாழ்க்கையைப் பற்றியது. அவர்களின் இடம்பெயர்வு, பழக்கவழக்கங்கள், உறவுமுறைகள் இந்நாவலில் பேசப்படுகின்றன. தங்கள் சொந்த கிராமங்களிலிருந்து விலகி பல கிலோமீட்டர்கள் தள்ளி பாறைகள் நிறைந்த மலைப்பகுதியின் வெட்டவெளியில் வாழ்க்கையை புதிதாக தொடங்குகிறார்கள். புழுதி, வெப்பம், காற்று, குளிர் என்று வாழும் இம்மனிதர்கள் அவர்களின் அடுத்த சந்ததியினரை இங்கேயே வாழ விடுகிறார்கள். அவர்கள் பிள்ளைகளும் இதேவேலையை ஒரு கொத்தடிமை போன்று வாழ்க்கையை தொடங்குகிறார்கள். அவர்களுக்கு கல்வியறிவு இல்லை. பள்ளிக்கு செல்லமுடியாது. எந்த சமூக அமைப்பும் அவர்களின் கல்வியை தொடர முன்வரவில்லை. அவர்களின் கொத்தடிமை முறையை மீட்டு தரவரவில்லை.

உரையாடல்கள் மூலமாக எல்லாவற்றையும் நிறுவுகிறார் எழுத்தாளர் கலைச்செல்வி. நாவலின் உள்ளடக்கத்தை சரியாக புரிந்துக் கொண்டு எவையெல்லாம் தேவை என்கிற புரிதலும் படைக்கப்பட்டிருக்கிறது சக்கை. கிரஷ்சரில் இடப்படும் மூலப்பொருளான கற்களின் கொச்சை வார்த்தை சக்கை தலைப்பாக வைத்திருப்பது சரியான தேர்வு. இராமநாதபுரம் போன்ற வறட்சியான மாவட்டங்களிலிருந்து 60களில் வெளியேறிய மக்கள் குவாரி எனப்படும் மலைகளை ஜல்லிகளாக, பெரிய அளவுகளில் வெட்டப்படும் கற்களாக மாற்றும் தொழிற்சாலைகளில் வேலைக்கு சேர்கிறார்கள்.

கற்களை வெட்டி எடுப்பது, சில அளவுகளாக கற்களை உடைப்பது, பின் லாரியில் ஏற்றுவது போன்ற வேலைகளை செய்ய ஆரம்பித்தார்கள். கட்டிட வேலைக்கு விவசாய ஆட்கள் வருவது போன்று இந்த வேலைக்கு வர ஆரம்பித்தார்கள். மற்ற வேலைகளைப் போலல்லாமல் இந்த வேலைக்கு ஒருமுறை வந்த பின் மீண்டும் வேறு வேலைக்கு செல்லமுடிவதில்லை. அவர்கள் பெறும் முன்பணம் மீண்டும் அங்கேயே இருக்க விட்டுவிடுகிறது. அங்கே பக்கத்தில் அவர்களுக்கு அளிக்கப்பட்ட இடங்களில் குடிசை அமைத்து வாழ்க்கிறார்கள். அவர்களின் குழந்தைகள் அங்கேயே பிறந்து படிப்பறிவற்று வளர்கின்றன. அறுபது ஆண்டுகள் அங்கே இருந்த ஆட்களும் உண்டு. கல்லுடைப்பில் புதிய தொழில்நுட்பம் வர ஆட்களை வேலையிலிருந்து எடுக்கிறார்கள். இந்நாவலில் அப்படியான ஒரு குழுவினர் வேலையிழந்து தங்கள் ஊருக்கு திரும்புகிறார்கள். இருக்கும் இடத்தை விட்டு மறந்துப்போன திசையை பாதையையும் தேடி அவர்கள் இடத்திற்கு வந்தபோது அவர்கள் வீடுகள் இடிக்கப்பட்டு ப்ளாட்களால் ஆகியிருக்கிறது. வெறுத்து தங்களின் குலதெய்வமாக இருக்கும் திரெளபதியம்மனின் கோவிலின் ஒரு கல்லை இடமில்லாத ஒரு காட்டில் நட்டு அங்கு தங்குகிறார்கள்.

சரியான உள்ளடக்கமும் வடிவமுமாக சக்கை நாவல் உருக்கொண்டிருக்கிறது. கதைமாந்தர்களின் குணாதிசயங்கள் சரியான விதத்தில் கலந்து வருகிறது. குறிப்பாக மரகத்ததின் இயல்புகள் கல்லுடைக்கும் மனிதர்களின் முகங்களை முன்நிறுத்துகிறது. மெதுவான நிகழ்வுபோக்குகளின் வழியாக பயணித்து செல்கிறது. ஆசிரியர் கல்லுடைக்கும் மனிதர்களின் வாழ்க்கையை ஆராய்ச்சி தகவல்களுடன் சரிபார்த்தே செய்திருக்கிறார்.
முற்போக்கு நாவலுக்குரிய அத்தனை பண்புகளையும் கொண்டு சரியான சொல்லாட்சிகளுடன் நாவலை அமைத்திருக்கிறார் இதன் ஆசிரியர் கலைச்செல்வி.

***

நாவல் ஆரம்பித்த இடத்திலிருந்து பயணிக்கவில்லை என்கிற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. பாதி பக்கங்களுக்கு மேல் தங்களை வேலையிலிருந்து தூக்கிவிட்டார்கள் என்கிற புலம்பலை எல்லா மனிதர்களும் திரும்பதிரும்ப சொல்லிக் கொண்டிருகிறார்கள். உரையாடல்களில் வரும் வார்த்தைகளும், ஒரே களத்தில் அதன் நிகழ்வை கொண்டிருப்பதால் அப்படி தோன்றியிருக்கலாம்.

வரலாற்றுணர்வு இல்லாத நாவல்கள் ஆழ்மற்றவையாக அமைந்திருக்கும். எழுபது வயது நிறைந்திருக்கும் ராசப்பன் அறுபது ஆண்டுகள் இந்த கல்லுடைப்பு தொழிலில் இருந்தாலும், அவரது காலத்தின் முன்பின் மாற்றங்களையோ மனித வாழ்வின் மாற்றங்களையோ, அவர் சந்தித்த தரிசனங்களை, அகவீழ்ச்சியை பேசப்படவில்லை. அறுபதுகளில் அவர்கள் இடம்பெயர்ந்து வந்த நிகழ்வு ஒரு வரலாற்று நிகழ்வு, ஆனால் அது மிகச்சாதாரணமாக கடந்து போய்விடுகிறது. நாவலுக்கு தேவையான நிகழ்வுபோக்கு நிகழவில்லை. அதன் மதிப்பீடுகள் எந்தவகையிலும் வாசகருக்கு உணர்த்தப்படவில்லை.

தொழிலாளர்களுக்கும் கொத்துகாரர்களுக்குமான தொழிற்சார்ந்த உறவுநிலை, அதன் மீறல்கள், அவற்றின் உளச்சிக்கல்கள் பற்றிய பேச்சு, போன்றவைகள் பேசப்படவேயில்லை. தொழிமுறை வளர்ச்சி, அதனால் ஏற்பட்ட சமூக மாற்றங்கள் அல்லது தேக்கங்கள், போன்றவைகள் இருந்தும்கூட எழுத்தில் சொல்லப்படவில்லை. மலைகளின் அழிவினால் ஒருவருக்கு ஏற்படும் உளசிக்கல்கள் பேசியிருக்க வேண்டியவை. இவையெல்லாம் ஆசிரியரின் தேர்வுதான் என்றாலும்கூட வாசகரின் எதிர்ப்பார்ப்புகளை கவனத்தில் கொள்ளப்பட வேண்டியிருக்கிறது.

திரெளபதியம்மன் கோவிலின் கல் ஒன்றை எடுத்து புதியஊருக்கு வருகிறார்கள். அதையே வழிபடுகிறார்கள். திரும்ப போகும்போது கவனமாக அதை எடுத்துச் செல்கிறார்கள். நாவலின் நல்ல படிமம் இது. ஆனால் அதை எந்த வகையிலும் படிமமாக்காமல் அப்படியே விட்டுவிடுவது வாசகனை புதிய தளத்திற்கு கொண்டு செல்லாமல் செய்துவிட்டது.

ஆனால் மனித உறவுகளின் சின்னச்சின்ன அழகியல் தருணங்களை ஆசிரியர் விட்டுவிடவில்லை. கல்லுடைப்பவர்களிடையே நட்பும் அன்பும் அவர்களது இயல்பிலேயெ அமைந்திருப்பதை சரியாக வெளிப்படுகிறது நாவலில். கூறவந்த விஷயத்தை முழுமையாக சொல்ல முயன்றிருக்கும் முயற்சி பாராட்டுக்குரியது.

[22/12/19 தஞ்சைக் கூடல் கூட்டத்தில் கலந்துரையாடியதின் கட்டுரை வடிவம்.]

1 comment:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

நூலை முழுமையாகப் படித்த உணர்வினைத் தந்த மதிப்புரை. நன்றி.
இனிய 2020 புத்தாண்டு வாழ்த்துக்கள்.