பொன்முடி படத்தை தொலைக்காட்சியில் பாதியிலிருந்துதான் பார்த்தேன். குடும்ப உறுப்பினர்களின் சமாதானம் பெற்று பார்க்க ஆரம்பிக்க, பிறகு குடும்ப உறுப்பினர்களே அந்த படத்தை விரும்பி பார்க்க ஆரம்பித்தார்கள். இன்றைய தேதியில் ஒரு சினிமாவை பார்க்கவும் அதை முழுமனதோடு நோக்கவும் நேரமின்றி திரிகிறோம் என்பது உண்மை. திரையரங்குகளில் பார்க்கும் படங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. நான் இந்தவருடம் திரையரங்கிற்கு சென்று பார்த்த படங்கள் நான்கு. அதில் என் மகனுக்காக பார்த்த கார்ட்டூன் படங்கள் இரண்டு.
இந்த படத்தை விரும்பி பார்த்ததற்கு காரணம் தக்கர்கள் (thug) எனும் கொள்ளையர்கள் எப்படி செயல்பட்டார்கள் என்பதை காண்பித்ததுதான். எனக்கு தெரிந்து பிறகு வந்த படங்கள் அவர்களின் செயல்பாடுகளை ஒரளவிற்குகூட காட்டவில்லை என தெரிகிறது. தமிழ்நாட்டில் வட மாவட்டங்களில் கொஞ்சம் இருந்த கொள்ளையர்கள், இந்தியாவின் வடமாநிலங்களிலேயே மிக அதிகம். பொன்முடி என்பது கதாநாயகனின் பெயர். கதாநாயகனாக நடித்தவர் அப்போது பிரபல்யமாக இருந்த பி.வி. நரசிம்ம பாரதி கதாநாயகியாக நடித்தவர் அப்போது
பிரபலமாக இருந்த மாதுரி தேவி. 1950 வந்த இந்த திரைப்படம் எல்லீஸ் டங்கனால் இயக்கப்பட்டது.
இதில் எம்ஜியார் அண்ணன் எம்ஜி சக்கரபாணி, ஏ.கருணாநிதி, காளி ரத்தினம், டி.பி முத்துலெக்ஷ்மி
போன்றவர்கள் நடித்திருக்கிறார்கள்.
படம் வெளியாகி 70 வருடங்கள் ஆனபின்னும், இன்றும் பார்க்கும்போது சுவராஸ்யமாகவே பார்க்கமுடிகிறது. முக்கிய காரணமாக நான் நினைப்பது தெளிவாக வரையறுக்கப்பட்ட காட்சிகள் தான். விடுபட்ட முதல்பகுதியை லாப்டாப்பில் பார்த்தபோதும் இது உறுதியானது. ஒருவகையில் நரசிம்ம பாரதி பெண் போல் இருக்கிறார், மாதுரி தேவி ஒரு சாயலில் ஆண்போல் தெரிகிறார். ஆனாலும் இருவருக்கும் இடையே இருக்கும் கெமிஸ்ரி மிக அழகு. மாதுரிதேவி பெரிய கவர்ச்சி நடிகையாக இருந்திருப்பார் என தோன்றுகிறது. அவர்கள் இருவரும் காதல் ரசம் சொட்ட கொஞ்சுவது இன்றைய சினிமாக்களில் இல்லை. கதாநாயகனின் ஆக்சன் காட்சிகளும், கதாநாயகியின் கவர்ச்சி அசைவுகளிலும் என்று சினிமா மாறிவிட்டிருக்கிறது.
கதை மிக நேரான ஓட்டம் கொண்டிருக்கிறது. அண்ணன் தங்கை இருவரும் தங்க ள் குழந்தைகள் இருவரையும் ஒருவருக்கு ஒருவர் என்று சொல்லிவளர்க்கிறார்கள். பின்னாளில் இரு குடும்பங்களும் சண்டைவந்து பேசாதிருக்க, வளர்ந்து வந்த குழந்தைகள் பருவவயதில் அதனாலேயே காதல் கொள்கிறார்கள். இருவரும் தனிமையில் இருப்பதை பார்த்த பெண்ணின் தந்தை பொன்முடியை அடித்து அங்கிருந்த அவரது ஆட்களாலும் தாக்கப்படுகிறார்.
அதன் பின் குடும்பத்துடன் பிணக்கம் ஏற்பட்டு, வடநாட்டிற்கு சென்றுவிட, கவலையில் காதலி இருக்கிறாள். ஒருநாள் அவளும் வேறுஒரு வியாபார குழுவுடன் ஆண்வேடமிட்டு வீட்டிற்கும் சொல்லாமல் சென்றுவிடுகிறாள். அங்கே தக்கர்கள் கதாநாயகன் குழுவை தாக்க கதாநாயகி குழுவும் சேர்ந்து அவர்களை மீட்கிறார்கள். பின் இருகுடும்பமும் இணைந்து திருமணத்திற்கு சம்பதிக்கிறார்கள்.
இரு குடும்பங்களின் சண்டைக்குபின் அவர்களின் வேலைக்காரர்கள் சந்தித்து சண்டையிட்டுக் கொள்வது மையக்கதையுடன் மிக அழகாக அது இணைந்துக் கொள்கிறது. மாமனும் மச்சானும் பெரிய திருவிழா எடுக்கும்போது இருவருக்கும் ஏற்படும் விழா குறித்த விலக்கங்கள் மற்றொரு சுவாரஸ்யம்.
மிக நன்றாக நடித்தவர் என்றால் காளி என். ரத்தினத்தை சொல்லலாம். இதில் அவர் திக்குவாய் நபராக ஊர்களில் திரிபவர். ஒவ்வொரு வார்த்தையையும் மிக அழகாக உச்சரிக்கிறார். அசல் திக்குவாய் மனிதர் போன்றே இருக்கிறார். இந்த படம் வெளியான கொஞ்ச நாளில் அவர் இறந்துவிட்டுகிறார். அவருக்கு அப்போது வயது 53. அதேபோல் கதாநாயகனும் கதாநாயகியும் முறையே 78, 90களில் அவர்களது 60 சொச்ச வயதில்தான் இறந்திருக்கிறார்கள். பெரியளவில் யாருக்கும் வெளியே தெரிந்திருக்கவில்லை. 50களுக்கு முன்னால் வந்த திரைப்பட நடிக நடிகைகள் பிரபல்யம் சட்டென மங்கிபோனதற்கு காரணம் என்ன வென்று ஆராயவேண்டிய ஒன்று. 1952ல் சிவாஜி வந்தபின்னே நடிக நடிகைகள் எல்லோரும் தெரியும்படி ஆனார்கள். அதாவது ஒரு ஆவணமாக பத்திரிக்கைகளில் வந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம். மிகப்பெரியளவில் தமிழ் சினிமாவை எல்லாதட்டு மக்களிடமும் சென்றதும், தமிழகம் தாண்டி அவர் புகழ் வளர்ந்தது காரணங்களாக இருக்கலாம்.
பொன்முடி பெரிய வெற்றி அடையவில்லை. ஆங்கில படம்போல கவர்ச்சியாக எடுத்துவிட்டதாக அப்போது பேசப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் இயக்குனர் டங்கன் மிக தமிழ் சினிமாவின் மிக நல்ல தொடக்கதை கொடுத்தார் என்று சொல்லலாம்.
1 comment:
எப்போதும் பேசப்படும் திரைப்படங்களில் இதுவும் ஒன்று என்று நான் நினைக்கிறேன்.
Post a Comment