Wednesday, September 11, 2019

சாப்பாடு போட்டு நாற்பது ரூபாய் - தி.ஜானகிராமன் சிறுகதை வாசிப்பனுபவம்



தி.ஜானகிராமன் எழுத்துக்களில் இருக்கும் உரையாடல்தன்மை வாசகனை கட்டிபோட்டுவிடக்கூடியது. அவைகள் பேசிப்பேசியே காலத்தை கொண்டாட நினைக்கும் மனிதனின் வார்த்தைகள் என்பதால் இருக்கலாம். இடையூராது சளசளத்து ஓடும் நீர் போன்ற வார்த்தைகள். தோல்வியை மறைக்கும் லாவகமும், வெற்றியை ருசித்தேயிராத வரண்ட வண்டல்மண் போன்ற மனித புலம்பல்கள். அவர் எழுதிய கதைகளில் சிறந்த கதைகளாக பாயாசம், சிலிர்ப்பு, பரதேசி வந்தான், அக்பர் சாஸ்திரி, பிடிகரணை போன்றவைகளைச் சொல்லலாம். அவர் எழுதியவைகளில் அதிகம் பேசப்படாத சில கதைகளும் உண்டு. நுண்வாசிப்பில் மட்டுமே புரிந்துக் கொள்ளகூடியவையாகவும், ஆழ்மன மெளனங்களை வெளிப்படுபவையாகவும் இருக்கும் கதைகள் சில உண்டு. பசி ஆறிற்று, காண்டாமணி, சாப்பாடு போட்டு 40 ரூபாய் போன்ற கதைகள்.

சாப்பாடு போட்டு நாற்பது ரூபாய் சிறுகதை நடுவயது மனிதன் தன் பிள்ளை குறித்த கவலைகளை பகிர்ந்து கொள்ளும் சிறுகதை. எதிர்காலத்தில் பிள்ளைகள் என்னாகும் என்கிற பயமற்ற ஒரு அப்பாவைகூட நம் வாழ்வில் சந்திக்கமுடியாது. எல்லா அப்பாக்களுக்கும் அந்த சோகம் தூரத்து இடியும் மின்னலின் முழுக்கங்கள் போல மெளனமாக மனதை கீறிக்கொண்டிருப்பவை. ஊனமாக அல்லது மனவளர்ச்சி குன்றியதாக பிறந்த குழந்தையின் அப்பாக்களும் அம்மாக்களும் சமூகத்தின் கடைகோடியில் இருப்பவர்கள். பொருளாதாரத்தால், படிநிலைகளால் அல்ல மனஅழுத்தங்களால் அப்படி இருப்பவர்கள்.

அக்கண்ணா குட்டி என்று செல்லமாக அழைக்கும் தன் மகனின் மேனரிசங்களை நினைத்துக் கொண்டேதான் ஒவ்வொரு சமயமும் அவனை நினைக்கிறார். அதில் ஆனந்தமும் அயர்ச்சியும் இருக்கிறது அவருக்கு. ஒரு நாள் 40 பணம் மணியாடரில் வருகிறது. ஆச்சரியமும் அதிர்ச்சியுமாக கண்ணாடியை போட்டுக் கொண்டு பாரத்தை பார்க்கிறார். ஆமாம் அனுப்பியது மூக்கொழுகிக் சுற்றிவந்த மகன் தான். சைக்கிள் கடை, விறகுகடை, என்று கடைகளில் வேலை சேர்ந்து வேலை செய்ய முடியவில்லை என்று எங்கும் நிலைக்காத பிள்ளை. எதையும் புத்திசாலியாக அணுகத் தெரியாத பிள்ளை, சென்னைக்கு கூடமாட வேலைக்கு செல்கிறான். ஒருமாதம் கடிதமேயில்லை. இப்போது மணியார்டர். சில மாதங்கள் லேட்டானாலும் ஒவ்வொரு மாதமும் அனுப்புகிறான். அவனுக்கு வருவதே நாற்பது ரூபாய்தான். அதுவும் அந்த காலத்தில் பெரியபணமாக இருக்கிறது. எதை நம்பி இவனுக்கு கொடுக்கிறார்கள். என்ன வேலை செய்துவிடப்போகிறான். காசு நிறைய வைத்திருக்கும் பெரும் பணக்காரர்களோ. எல்லா ஐயமும் அவரை படுத்தி கொண்டிருக்கிறது. சென்னை வேலைக்கு சேர்த்துவிட்ட வக்கீலே ஒருநாள் சமையல்காரரான இவரிடம் நாலுநாட்கள் ஆக்கிப்போட சென்னைக்கு அழைக்கிறார். உடனே சரி என்கிறார். பிள்ளையை ஒருநாள் சந்தித்துக்கொள்ளலாமே.

வக்கீல் நண்பரின் வேலைகள் முடிந்த ஒருநாளில் டப்பாவில் கேசரியுடன் மகனை பார்க்க செல்கிறார். பெரிய விசாலமான வீடு. உள்ளே போனபோது அவுட் அவுசில் இருப்பதாக கூறுகிறார்கள். அங்கு சென்று பார்க்கிறார். மகன் ஒருவருக்கு தலையை சீப்பால் சொறிந்துவிட்டுக் கொண்டிருக்கிறார். அவருக்கு கண்பார்வை சரியில்லை, வயதான கிழம். கைவிரல்கள் முழுமையாக இல்லை. ஏதோ ஒரு அழுக்கு தன்உடலில் ஒட்டிக் கொண்டிருப்பதாக தோன்றுகிறது.

கொஞ்ச நேரத்தில் அவருக்கு தெரிந்து விடுகிறது அது பெருவியாதி என்று. அம்மனிதர் சதாசிவத்திடம் நன்றாக பேசுகிறார். பையனின் பொறுமையையும், பொறுப்பையும் உணர்ந்து பாராட்டி பேசுகிறார். ஆனால் அவருக்குதான் தான் தந்தையின் வலியாக தெரிகிறது. மகன் இங்கு இருப்பது சரியா என்கிற கவலை.

கைநிறைய இல்லையென்றாலும் நிறைய சம்பாதிக்கிறான் மகன். அவனுக்கு இதைவிட்டால் வேறுஇடம் சம்பாதிக்க கிடைக்கப்போவதில்லை. மூக்கொழுகிக் கொண்டு எல்லோரின் ஏச்சுகளை கேட்டுக் கொண்டு ஊரில் இருப்பதைவிட எவ்வளவோ மேல். ஆனால் இப்படியான ஒரு இடத்தில் மகனை விட்டுவிட்டு தந்தையால் ஊரில் இருந்துவிட முடியுமா? தூக்கம் வருமா?

மனைவிக்கு உடல்நலம் சரியில்லை, ஊருக்கு கொஞ்ச நாள் அழைத்துச் செல்லவேண்டும் என்கிறார். அந்த பெரிய மனிதரும் சம்மதிக்கிறார்.

மகனை அழைத்துக் கொண்டு வெளியே வந்தவர், ஏண்டா இங்கெல்லாம் இருக்கே, வேண்டாம் என்கிறார். இது ஒட்டுவாரட்டி இல்லப்பா, நீதான் பைத்தியம் மாதிரி பேசுற, இங்கபாரு இந்த பேப்பர்ல போட்டுருக்கு என்று காண்பிக்கிறான். கண்ணாடியை போட்டுக் கொண்டு பார்க்கிறார்.

அவ்வளவுதான் கதை. நல்ல சிறுகதையின் அடையாளத்துடன் பாதியிலேயே நின்றுவிடுகிறது

மகன் தந்தையைவிட விவரமாக இருக்கிறான். பேப்பரை படித்து காட்டுகிறான். மகன் குறித்த தந்தையின் அகம் அவன் அறியாதது. மகனை அழைத்துச் செல்வதாக அல்லது இங்கேயே விட்டுச் செல்வதா என பறிதவிக்கிறார். அவர் அழைத்துச் செல்கிறாரா இல்லையா என்பது வாசகரின் கைகளில் இருக்கிறது.

1 comment:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

நான் ரசித்தவர்களில் ஒருவர் தி.ஜா.இந்த மதிப்புரையை அதிகம் ரசித்தேன்.