Sunday, July 28, 2019

கலங்கிய நதி விமர்சனம் - அண்டனூர் சுரா


கற்பனை -1
 
தேச பிரதமர் - தீவிரவாதி, நக்சலைடு அல்லது அவரது கட்சிக்காரர்களால் கடத்தப்படுகிறார் என வைத்துக்கொள்வோம். என்ன நடக்கும்...?. பிரதமர் நாற்காலியில் மற்றொரு பிரதமர் உட்காரும் வரை தேடுதல் பணி கிஞ்சிற்றும் தொடங்கியிருக்காது. புதியப் பிரதமர் நாற்காலியில் அமர்ந்ததன் பிறகு காணாமல் போனவர் திரும்பி வந்தால், அவரது பதவி என்னாகுமென்று கணிப்பின் அடிப்படையிலேயே அவர் தேடுதல் பணியை முடுக்குவார். அதற்குள்ளாக, ஒரு சராசரி குடிமகன் இந்த உலகை ஒரு சுற்றுச் சுற்றி வந்திருப்பான்.


கற்பனை – 2

மத்திய அரசு நிறுவனத்தின் கீழ் உயர்ப்பதவியில் வீற்றிருக்கும் நான் திடீரெனக் கடத்தப்படுகிறேன். என்ன நடக்கும்...? தேடுதல் பணியைத் தொடங்குவதற்கு முன்பாக என்  காலி பணியிடத்திற்காக ஒருவரைத் தேர்வு செய்யும் படலம் நடந்தேறும். என்னை ஆள் வைத்து கடத்தியவர் என் இருக்கையில் வந்தமர்ந்திருப்பார். அவர் பதவி ஓய்வுப் பெற்றதற்குப் பிறகே நான் உயிராகவோ, பிணமாகவோ மீட்கப் பட்டிருப்பேன்.

சமீபத்தில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டின்  ஆதாரங்களை வெளியிட்ட முகிலன் காணாமல் போனார். அவரைத் தேடிக் கண்டுபிடிக்க மாநில அரசு முன்னெடுத்த அதிவரைவு தேடுதல் நடவடிக்கைகள் நாம் கண்டதே. அவர் கடத்தப்பட்டாரா, தலைமறைவு ஆனாரா...? என்கிற கேள்வி மட்டுமல்ல, அதற்குப் பிறகான அத்தனையும் மர்மமாகவே இருந்து வருகிறது. இந்தியாவில் கடத்தல் என்பது ஒரு கலை; தேடுதல் சிறந்த பொழுதுபோக்கு.

பி. கிருஷ்ணனின்கலங்கிய நதிநாவல் கடத்தல்-தேடுதல் எனும் கலையும் பொழுதுபோக்குமாகக் கொண்டு புனையப்பட்ட ஒரு நாவல். ஒரு மின் பொறியாளர் ஒரு கும்பலால் கடத்தப்படுகிறார். கடத்தப்பட்டவரை மீட்டு வர ரமேஷ்சந்திரன் என்கிறவர்  கிளம்புகிறார். ரமேஷ்சந்திரன் துப்பறியும் சாம்பு, ஷெர்லாக்ஹோம்ஸ், ஜேம்ஸ்பாண்ட் அளவிற்குக் களத்தில் குதிப்பாரென்று பார்த்தால்  அவர் டெல்லி, அஸ்ஸாம், மேற்கு வங்காளம் என்று வாசகர்களைச் சுற்றுலாவாக அழைத்துச் சென்று திக்குமுக்காடச் செய்யும் அளவிற்கு சுற்றிக் காட்டுகிறார். ஒரு  மர்ம நாவலில் மர்ம முடிச்சை அவிழ்க்காமல் தேனிலவு பயணம் போல வடகிழக்கு மாநிலங்களைச் சுற்றிச்சுற்றி அல்லவா காட்டுகிறார், இது என்ன நாவல், என்னப் புனைவு, தர்க்கத்திற்குள் அடங்காத, எதார்த்தத்தை மீறிய ஒன்றாக அல்லவா இருக்கிறது, எனக் கேள்வியை எழுப்பினால் இந்தியாவின் உண்மை நிலையிலிருந்து நாம் அந்நியப்பட்டுப் போகிறோம், என்றே பொருள்.

இத்தேசத்தில் காணாமல் போன ஒரு பொருளின் , அல்லது காணாமலடிக்கப்பட்ட ஒருவரின் தேடுதல் என்பது தனக்குத் தேவையான ஒன்றைத் தேடுதலுடன் கூடிய தேடுதல் என்று இமயமலையில் ஏறி நின்று உரக்கச் சொல்வதுதான் கலங்கிய நதி நாவல்.. சந்தன மரக்கடத்தல் வீரப்பனைத் தேடுகையில் அவனைத் தேடுதலோடு தனக்கான மரங்களைத் தேடிக்கொண்டது போன்று.

ஒரு நிலத்தின் வரலாற்றை எழுதுவது, அவ்வரலாற்றைப் புனைவாக எழுதுவது, ஆவணப்படுத்துவது, பகிர்வது யாவும் ஒரு வரலாற்றின் இரண்டாநிலைச் சான்றுகள் எனச் சொல்லக்கூடிய இலக்கியத்திற்குப் பெரிதும் தேவையாக இருக்கிறது.

பி.. கிருஷ்ணனின்கலங்கிய நதிஎன்கிற நாவல் ஒரு நிலத்தின், அந்நிலத்தின் ஆதி பழங்குடி மக்களின் வரலாற்றைப் புனைவாக எழுதிச் செல்ல முனைந்திருக்கிறது. 1. இந்நாவலின் வாசிப்பு நீள்கையில், குறிப்பிடத் தகுந்த பக்கங்கள் வரைக்குமாகச் சென்றுச் சேர்கையில், முழுவதுமாக வாசித்து முடிக்கையில் இந்நாவல் மீது தோன்றும் அபிமானம். 2. இந்நாவலை வாசித்து முடித்ததன் பிறகு ஓரிரு நாட்கள் அந்நாவலின் உள்ளடக்கம், புனையப்பட்ட மொழி, கதைக்களத்தின் கருபொருள், எழுத்தாளர் அக்கருக்காக சேர்த்துப் புனைந்த இடுபொருள், இத்தனையையும் உள்ளூர அசைபோடுகையில் தோன்றும் அபிமானம் 3. 334 பக்கங்களை ஒரு வரியேனும் விடாமல் வாசித்து முடித்ததால் அந்த வாசிப்பின் மீதான அயர்ச்சியால் ஏற்படும் சிறு ஏமாற்றம் 4. நாவலுக்குள் கற்பனை செய்யமுடியாதளவிற்கு இந்திய ஆட்சியாளர்கள்  பணத்திற்காக, பதவிக்காக, பதவி உயர்வுக்காக, இன்னும் பிற பிரத்யேகக் காரணத்திற்காக நடத்தும் கடத்தல் நாடகம் மீதான் அதிர்ச்சி, என நாவலின் உண்மை - புனைவு - கற்பனை மூன்றுக்குமான ஊசலாட்ட திரள்வெளி , ஒரு சாரசரி வாசகனிடம் எழும் தார்மீகக் கேள்விகளால் தோன்றும் நியாயம், என  உள்ளடங்கிய பார்வையாக இந்நாவலை பார்க்கையில் பதட்டத்திற்கும் போலிஅமைதிக்குமான வெப்பவெளியில் வாழும் வடகிழக்கு மக்களின் வாழ்வியல் கூறுகள் ஆங்காங்கே தென்படுவதைப் பார்க்க முடிகிறது.

மையநரம்பு பாத்திரம் ரமேஷ்சந்திரன், நாவலின் தொடக்கத்தில்அன்புள்ள ஆசிரியருக்குஎன ஒரு கடிதம் எழுதுகிறார். அக்கடிதத்தில் இரு வரலாற்றுப் பதிவுகளைப் பதிவு செய்கிறார். ஒன்று விக்டர் ஹ்யூகோ சொன்னது. ‘ பிரான்ஸ் நாட்டுச்சாலைகள் நேராக அமைக்கப்படுவதன் காரணம், போராடும் மக்கள் மீது வெகுதொலைவில் இருந்தும் பீரங்கிகளால் குறி வைக்க முடியும் என்பதற்காக’. இது போரும் போர் நிமித்தமுமானது. மற்றொன்று, பிர்லா மாளிகையில், இறப்பதற்கு சற்று முன் காந்தி சொன்னது, ‘ எந்த மக்களை நாம் வழி நடத்திச் செல்கிறோமோ அவர்களின் அருகாமையை நாம் அஞ்சக் கூடாது’. மக்களின் மீதான போரின் நிமித்தம், அதே மக்களின் மீதான் சமாதான நிமித்தம் இரண்டையும் ஒரே கயிற்றால் பின்னும் புனைவுவெளியாகவும் கலங்கிய நதி நாவலைப் பார்க்கத் தோன்றுகிறது.

தாகூர் இறந்து அவரது உடலை எரியூட்டும் போது பலர் பாய்ந்து அவரது எலும்புத் துண்டுகளை அள்ளிச் சென்றது, இமயமலையின் கடுவால் ஏரியில் மனித எலும்புத்துண்டுகள் இன்னும் இருப்பது,, இந்திராகாந்தியைச் சுட்டுக் கொன்றவர் பாகிஸ்தானியாகத்தான் இருக்க வேண்டுமென யூகிப்பது, ஜும்மா மசூதியையொட்டி 1387 ஆம் ஆண்டு வாக்கில், ஜுனன் ஷா மக்பூல், கான்--ஜஹான் என அப்பன் மகன் இருவரின் கல்லறையையும் அமைக்கப்பட்டு, 1857 ஆம் ஆண்டு இரு கல்லறையும் அகற்றியது; அஸ்ஸாம் இயக்கம் தோன்றுவதற்குக் காரணமான நெல்லிப் படுகொலை ( 1983 ) ;மனித குலத்தில் மிக உயரிய படைப்பு தமிழ்ப்பிராமணன் என சுயத்தம்பட்டம் அடித்துக்கொள்வது; பிரம்மப்புத்திரா நதியிலுள்ள உலகிலேயே மிகப்பெரிய தீவு மஜோலி பற்றியது, ஆந்திரத்திலுள்ள மிகப் பழமையான சிம்மாசலம் என்கிற விஷ்ணு கோவிலுக்கும் அருகில் கசாப்புக் கடைக்காக கணக்கில்லாமல் கன்றுகள் வெட்டப்படுவது; மனித முயற்சியால் நல்ல மாற்றங்களை உண்டுபண்ணும் தத்துவம் Evolutionary Meliorism பற்றியது,...என வட கிழக்கு பகுதிகளின் வரலாற்று சம்பவங்களைப் பெட்டகமாகத் தருகிறது இந்நாவல்.

ஈடுகட்ட முடியாத இழப்பின் பிடியில் சிக்கித் தவிக்கும் அரசு அதிகாரியான ரமேஷ்சந்திரன்  அஸ்ஸாமில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட இன்ஜினியர் ஒருவரை மீட்கும் பணியில் ஈடுபடும் போது சந்திக்கும் பலவிதமான பிரச்சனைக்கூறுகள்தான் கலங்கிய நதி நாவல். இது நாவலின் அட்டைப்படக் குறிப்பு. இந்த இடத்தில் வாசகனாக ஒரு கேள்வி எழுகிறதுஅஸ்ஸாமில் துப்பாக்கி ஏந்தியர்கள் தீவிரவாதிகளா,...?’

இந்தியாவின் தொடக்கக்கால, இடைக்கால வரலாற்றில் தீவிரவாதம் என்றொரு  சொற்பதம் இருந்திருக்கவில்லை. இது தற்கால வரலாற்றில் அதிலும் கடந்த பத்து தசாப்த ஆண்டுகளாகத்தான் அச்சொல் இந்தியாவின் தலைப்பிடச் சொல்லாக இருக்கிறது. இந்தியாவின் எல்லைகளாக தேசியவாதிகள் வகுத்திருப்பதன் படிதெற்கு - திராவிடம்; மேற்கு - தீவிரவாதம்; வடக்கு - சீனம்; கிழக்குநச்சலைடுகள். இங்கு தீவிரவாதம் என்பது வேறு, நச்சலைடுகள் என்பது வேறு. தீவிரவாதத்திற்கு எதிராக நீட்டும் ஆயுதத்தை தேசியப்படைகள் நக்சலைடுகள் நோக்கி திருப்பிவிட முடியாது. ஆனால் நாவலாசிரியர் அஸ்ஸாம் தீவிரவாதிகள் என்கிறாரே, என்கிற கேள்வியின் துறத்தல் நாவலின் தொடக்கத்திலேயே துருத்தி நிற்கிறது.

முந்நூறு பக்கங்கள் கொண்ட நாவலில் மத்திய அரசாங்கத்தின் கீழ் பணியாற்றும் சீனியர் மேனேஜர் கோஷ்போன மாதம் இருபத்து எட்டாம் தேதிராணிகட்டா துணை நிலையத்திலிருந்து சில ஆயுதம் தாங்கியவர்களால் கடத்தப்பட்டார்என்பதாக நாவலுக்கான மையக்கல் ஒரு செய்தியாகவே இடம் பெறுகிறது. அவ்விடத்தில் ஒரு பதட்டமில்லை. பரிதவிப்பு இல்லை. மேலும் விரியும் செய்தியில் கடத்தியவர்கள் போராளிகளா, பணத்திற்காகக் கூட்டுச் சேர்ந்திருக்கும் உள்ளூர்ப் பொறுக்கிகளா எனத் தெரியவில்லை என்பதாக போலீஸ்துறை சொல்கிறது. பதட்டமற்ற கடத்தல் என்பதுதான் அஸ்ஸாமின் இயல்பு என்பதாக வாசகன் புரிந்துக்கொள்ள வேண்டிய இடம் அது.

நாவலின் மூன்றில் ஒரு பங்கு பக்கங்கள் வட இந்தியா, வடகிழக்கு இந்திய எல்லைகளைச் சுற்றிப் பார்ப்பதாகவே இருக்கிறது. சிட்டி, தி. ஜானகிராமன் சேர்ந்து எழுதியநடந்தாய் வாழி, காவேரி’ - பயணக் கட்டுரையைப் போல ஒவ்வொரு பகுதியாக வரலாற்றைப் பதிவை நாவல் பதிவு செய்துகொண்டுச் செல்கிறது. வாசித்தலில் ஒரு முள்ளோ, ஒரு முரணோ தென்படாத இலகுவான பக்கங்கள் அவை. 

இதிலிருந்து இந்நாவல் எழுதப்பட்ட அவசியத் தருணத்தைப் பரிந்துகொள்ள முடிகிறது. நாவலாசிரியர் டெல்லி மற்றும் டெல்லிக்கு வடக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளை பார்வையிட்டதை, பணி அனுபவத்துடன் கூடிய அனுபவமாக நாவலாக்கம் செய்ய விரும்புகிறார். அதற்காகக் குறிப்பெடுத்து எழுதவும் செய்கிறார். எழுதியதை சக நண்பர்களிடம் கொடுத்து வாசிக்கச் சொல்லிக் கருத்துக் கேட்கிறார். இக்கதையில் ஒரு கடத்தல் சம்பவம் இடம் பெற்றால் நன்றாக இருக்குமென அவர்கள் சொல்லியிருக்க வேண்டும். அதற்காகவே அவர் இடைசெருகலாக பொறியாளர் பாத்திரத்தைப் படைத்து உள்ளே நுழைக்கிறார். அப்படியாகவே மையத்திற்கும் பிந்தைய பக்கங்களும், திடீரென கடத்தல் நுழைவும், பின் அதை நோக்கிய விவரிப்புகளும் செல்கின்றன.

சீனியர் மேனேஜர் கடத்தப்பட்டதன் பிறகு நாவல் வேறொரு வடிவம் எடுக்கிறது. வாசிப்பு வேகத்தில் தொய்வும், இடையிடையே திடீரென நுழையும் புதுப்புது கதாப்பாத்திரங்களால் குழப்பமும் இடறுகிறது. இதனால் நதி கலங்குவதைப் போல, வாசிப்பும் கலங்கச் செய்கிறது.

நாவலின் கடைசியில் ரமேஷ்சந்திரனின் துணைவியார் சுகன்யா, காந்தி சொன்னதை மற்றவர்களுக்குப் படித்துக் காட்டுகிறார். ‘ ஒரு நதியில், வெள்ளம் வரும்போது அது மண்ணடர்ந்து எப்போதையும் விடக் கலங்கலாக இருக்கும். ஆனால் வெள்ளம் வடிந்த பின்னர் அது தெளிவாகிவிடும். முன்னைவிடத் தெளிவாக’. இதுதான் நாவலின் மைய நரம்பு. இந்தியா  என்பது ஒரு குழப்பான கலங்கிய நதி என்றோ அஸ்ஸாம் அப்படியான கலங்கலாவே இருக்கிறது என்றோ; என்பதாக மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. நாவல் மையக்கதைக் குழப்பத்திலிருந்து மீண்டுத் தெளிந்தத் தெளிவாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

நாவலின் கதைமாந்தர்களாவன-

1. மின்பொறியாளர் கோஷ், அவருடைய மனைவி நந்திதா கோஷ், நந்திதா கோஷின் மாமனார் பார்த்தா சட்டர்ஜி.

2. நாவலை எழுதிச் செல்லும்ரமேஷ்சந்திரன்’ , அவருடைய மனைவி சுகன்யா, இவர்களின் இறந்து போன மகள் பிரியா, சுகன்யாவின் தோழி அனுபமா,

3. நாவலை வாசித்து இடையிடையே தன் கருத்துகளைச் சொல்லும் சுபிர் மற்றும் ஹெர்பர்ட்.

4. கடத்தல் கும்பலின் தலைவன் கலிதா, அவன் வழிமொழியும் பூரா, நிர்மல் பூயான், பருவா

5. ராமன், அவனுடன் கள்ளத்தொடர்பு கொள்ளும் மருமகள், விலைமாது நளினி

6. பெண் என்றாலே வாநீர் ஒழுகும் மிஸ்ரா,

7. கஷ்னபீஸ்

8. பெயர் குறிப்பிடப்படாத அஸ்ஸாம் முதலமைச்சர்

9. ட்ரான்ஸ்மிஷன் கார்ப்பரேஷன் - டவர் ஃபேப்ரிகேட்டர்ஸ் லிமிட்டெட். இந்நிறுவனங்களின் பெயர் குறிப்பிடப்படாத அதிகாரிகள்.
  
இவர்களைக் கொண்டு வாசகர்களைச் சற்றும் பொருட்படுத்தாமல், அதே நேரம் இந்திய நிர்வாகத்தின் கீழ் திரைமறைவில் நடந்தேறும் சம்பவங்களை உள்ளடங்கிய அதிவிரைவு பின்னல்தான் கலங்கிய நதி நாவல்.
  
இந்நாவலின் கதையை விடவும் கதைச் சொல்லப்பட்ட பாங்கால் நாவல் தவிர்க்க முடியாத ஓரிடத்தைப் பிடிக்கிறது. மனித உடற்கூறு  டி.என்.ஏவை விளக்கும் வாட்சன் - கிரிக் இரட்டை இழைச் சுருள் கோட்பாட்டின் அடிப்படையில் நாவல் புனையப்படுகிறது.
  
பி.. கிருஷ்ணன் என்கிற நாவலாசிரியர், ரமேஷ்சந்திரன் என்கிற அதிகாரியாக மாறுகிறார். அவரிடம் நிர்வாகத் துறையில் நிகழ்ந்த பெரிய ஊழல் குறித்த ஆதாரம் இருக்கிறது. இதை நாவலாக புனைய முனைகிறார். புனைந்த நாவலை அவரது மனைவி சுகன்யா வாயிலாக ஹெர்பர்ட், சுபிர்  என்கிற இரு நண்பர்களுக்கும் அனுப்பி வைத்து கருத்துக் கேட்கிறார். அவர்கள் கடிதமாக நாவல் குறித்து சுகன்யாவிற்குப் பதில் தருகிறார்கள். கையில் சிக்கிய ஆதாரம், புனைவு, கடிதம் மூன்றும் டி.என். இழைச் சுருளைப் போல சுற்றுவதே நாவல். ஆங்கில நாவலில் இப்படியான புனைவு மொழி நிறைய இருக்கிறது. தமிழுக்கு இது புதிது.

கதாப்பாத்திரங்கள் இராக்கெட் இயக்கக் கோட்பாட்டின் படியாக அமைக்கப்பட்டுள்ளது. இராக்கெட் ஒரு இலக்கு நோக்கி ஏவப்படுகையில் மேலே செல்லச் செல்ல திட, திரவ, வாயு எரிபொருளுடன் கூடிய கலன்கள் தன்னைத் தானே எரித்துக்கொண்டு இராக்கெட்டிலிருந்து விடுவித்துக் கொள்வதைப் போல கடத்தப்பட்ட கோஷ் மற்றும் தம்பதிகளைத் தவிர நாவலின் மற்றப் பாத்திரங்கள் தானாகவே துண்டித்துகொண்டு, ஒவ்வொருவராக இறந்தும், காணாமலும் போய்விட; கடைசியில் ரமேஷ்சந்திரன் குடும்பம் ஒரு குண்டுவெடிப்பால் பலியாகிக் கொள்கிறது. அவர்களது ஒரு குழந்தை பிழைத்துக் கொள்கிறது.

ட்ரான்ஸ்மிஷன் கார்ப்பரேஷன் - டவர் ஃபேப்ரிகேட்டர்ஸ் லிமிட்டெட் என்கிற இரண்டு நிறுவனங்களின் ஒப்பந்தங்களும்; அதை மீறும் தெறிப்புகளும்; இந்தியாவின் ஒட்டுமொத்த நிறுவனங்களின் நிர்வாகச் சீர்க்கேட்டை தலைக்கு மேலேத் தூக்கிக் காட்டுகிறது. இன்னும் நிறுத்தி, பிரித்து எழுதியிருக்க வேண்டிய அத்யாயம் இது.

இரண்டு நிறுவங்களுக்குமிடையில் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. மின் கோபுரம் அமைப்பதற்கான சரக்குகளை டவர் ஃபேப்ரிகேட்டர்ஸ் லிமிட்டெட் நிறுவனம், ட்ரான்மிஷன் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு விற்கிறது. விற்பனை - வாங்குவதில் ஒரு பெரிய ஊழல் நடந்தேறுகிறது. அஃதில்லாமல், ட்ரான்ஸ்மிஷன் வாங்கிச் செல்லும் சரக்கிற்கு அந்நிறுவனம் சங்கவரி கட்டியே கொள்முதல் செய்துகொள்கிறது. ஆனால், 1988 ஆம் ஆண்டு நீதிமன்றம் பிறப்பித்த ஒரு உத்தரவின் படி, மின் கோபுரம் அமைப்பதற்கான கொள்முதல் பொருளுக்கு சுங்க வரி வசூலிக்கக் கூடாது. மீறி வசூலித்திருந்தால் உரிய நிறுவனத்திடம் வசூலித்தத் தொகையைத் திரும்பக் கொடுத்துவிட வேண்டும், என உத்தரவுப் பிறப்பிக்கிறது. அதுநாள் வரை வசூல் செய்திருந்த சுங்க வரி 12 கோடி. இப்பொழுது டவர் நிறுவனம் ட்ரான்ஸ்மிஷன் நிறுவனத்திற்கு வசூல் செய்த கோடி ரூபாயைத் திரும்பக் கொடுக்க முன் வருவதாகவும், அதில் இருபத்து ஐந்து விழுக்காடு தொகையைப் பிடித்து வைத்துக் கொண்டு கொடுப்பதாகவும், திரும்பப் பெற்றுக் கொள்ள சம்மதமா, என டவர் நிறுவனம் ட்ரான்ஸ்மிஷன் நிறுவனத்திற்கு கடிதம் எழுதுகிறது. எழுதியக் கடிதத்தை உரிய நிறுவனத்திற்கு அனுப்பாமல் கோப்பில் வைத்துக் கொள்கிறது.

ட்ரான்ஸ்மிஷன் நிறுவனத்திற்கு சுங்கவரி  வசூல் தொடர்பான விபரமும் 1988 நீதி மன்ற உத்தரவும் பிறகே தெரிய வருகிறது. அந்நிறுவனம் செலுத்திய சுங்க வரி 12 கோடி உடன், பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இப்பணத்தைக் கொண்டு வருவாயைப் பெருக்கிக் கொண்டதற்கு வட்டியாக முப்பது கோடியையும் கோருகிறது.

ட்வர் நிறுவனம், நீதிமன்றத்திற்குச் சென்றால் வழக்கு நீண்ட காலத்திற்கு இழுத்துக்கொண்டு செல்லும், இதனால் மேலும் பயணடையலாம் எனக் கணக்குப் போடுகிறது. ஆனால் ட்ரான்ஸ்மிஷன் நிறுவனம், உச்சநீதி மன்றத்தில் 20,000 வழக்குகள், தலைமை நீதிபதியின் பெஞ்சில் 3,20,000 வழக்குகள், மொத்தமாக 2,50,00,000 வழக்குகள் நிலுவையில் இருப்பதால் எப்படியேனும் நீதி மன்றத்திற்குச் செல்லாமல் தவணை முறையிலேனும் பணத்தை திரும்பப்பெற்றிட வேண்டுமென முனைப்புக் காட்டுகிறது.

இது தான் நாவலின் மைக்கரு. ஆனால், நாவலின் இறுதியில் பணத்தைத் திரும்பப் பெற்றதா, கொடுக்க வேண்டிய நிறுவனம் நீதிமன்றம் சென்றதா, என்பதை நோக்கி நாவல் சென்றடையவில்லை. இடையில் இடைசெருகலாக நுழையும் இந்த ஊழல் விவகாரம் கடைசி அத்தியாயங்களுக்கு சற்று முன்பே ஏன் நுழைந்தோமெனச் சொல்லாமல் கொள்ளாமல் நழுவிக் கொள்கிறது. இப்பகுதியை புரிந்துக் கொள்வதற்கு வாசகன் படாதப்பாடு பட வேண்டியதாவும் இருக்கிறது.

இப்பகுதியை நாவலாசிரியர் இன்னும் கொஞ்சம் பக்கங்கள் எடுத்துக்கொண்டு, தேர்ந்து எழுதியிருக்க வேண்டிய ஒன்று.

ட்ரான்ஸ்மிஷன் நிறுவனத்துடன் தொடர்புடைய ஒரு மின்துறையிலிருந்தே கோஷ் என்கிற மின்பொறியாளர் கடத்தப்படுகிறார். கடத்தலின் திட்டமிடுதல், காரணம்- காரியம் நாவலில் சொல்லப்பட்டிருக்கவில்லை. துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டார் என்பதாக மட்டும் நாவலில் புனையப்பட்டுள்ளது. அஸ்ஸாமில் இயல்பாக நடந்தேறும் ஒன்று என்பதாக அவ்வாறு எழுதப்பட்டிருக்கலாம். தன்னைக் கடத்தியவர்கள் தன்னைச் சுற்றியுள்ளவர்களே, என கோஷ் ஓரிடத்தில் சொல்வதிலிருந்து கடத்தியது யாரென்று புரிந்துகொள்ள முடிகிறது.

கோஷ் கடத்திச் செல்லப்பட்டிருக்கும் இடம், விலுகுரி, மதர்துலி போஸ்ட், நவகாவ் மாவட்டம். இங்கு அஸ்ஸாம் போராளிகளை விடவும் போடோ இனத்தவர்களின் கையே ஓங்கியதாக இருக்கிறது. இங்கு எப்படி அஸ்ஸாம் போராளிகள் கடத்தியிருக்க முடியும் என மின் துறையினர் பேசிக் கொள்வது கடத்தியவர்கள் சக துறையினரே என்பதை உறுதிப்படுத்துகிறது. அப்படியாகப் பேசிக்கொள்கிறவர்கள் அவர்களை போராளி என்றே சொல்கிறாரே தவிர, தீவிரவாதிகள் என்று அல்ல.

கோஷ் கடத்தப்பட்ட காரணம், டவர் - ட்ரான்ஸ்மிஷன் இரு நிறுவனங்களுக்கு இடையேயான ஒப்பந்தம், பதவி உயர்வு, உட்பகை,..போன்ற எந்தவொரு பிரத்யேகக் காரணமும் நாவலில் சொல்லப்பட்டிருக்கவில்லை. ஆனால் இக்கடத்தலினூடே இரு நிறுவன ஒப்பந்தம் குறுக்கிடுவதால் இப்பிரச்சனையைத் திசைத் திருப்பும் பொருட்டு கடத்தப் பட்டிருக்கலாம், என்பதாக புரிந்துகொள்ள இடமிருக்கிறது. அதேநேரம், கோஷ் கடத்தப்பட்டதற்குப் பிறகான நடப்புகள் போதுமானளவிற்கு புனைவாகியிருக்கிறது. கண்களைக் கட்டி அழைத்துச் சென்றது, ஒரே ஒரு ஜன்னல் மிக உயரத்திலிருந்த அறையில் அடைத்து வைத்தது, நேரம் தவறாது உணவு கொடுத்தது, சாப்பிட்டு சாப்பிட்டு உறங்கியதால் உடம்பு பெருத்தது, வாசிப்பதற்கு ஐந்தாறு நாவல்கள் கொடுத்தது ( நாவல்களின் பெயர்கள் பட்டியலாகத் தருகிறார் - BY LOVE POSSESSED, FBI STORY, MY BROTHER`S KEEPER, THE AGONY AND THE ECSTASY ). பிறகு கண்களைக் கட்டி வேறொரு இடத்திற்கு அழைத்துச் சென்றது. அங்கு சுதந்திரமாக உலாவியது. இவர் அங்குள்ள மக்களுக்கு ஆங்கிலம் கற்றுக்கொடுக்க, அவர்கள் இவருக்கு அஸ்ஸாமி கற்றுக் கொடுத்ததுமான பரிமாற்றம்,...போன்ற நிகழ்வுகளை வாசிக்கையில் கடத்தல் என்பது பதட்டம் என்கிற நிலையிலிருந்து மகிழ்ச்சிகரமான என்கிற நிலையை நோக்கி எய்துகிறது.

இடை செருகலான கதைமாந்தர்களில் ராமன், கஷ்ணபீஸ், நந்திதா கோஷ், கலிதா, பார்த்தா சட்டர்ஜி குறிப்பிடத்தக்க பாத்திரங்களாக அமைகிறார்கள்ராமன் - நாவலில் கிளுகிளுப்பு மூட்டுவதற்காக உருவாக்கப்பட்டிருக்கிறது. அவனுக்கு அழகான மனைவி இருந்தும், மருமகளுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்து ஒரு நாள் அவளுடன் கூடல் கொள்கையில் மாரடைப்பு வந்து இறந்து போகிறான். இவன்தான் நளினி என்கிற நிர்வாணப் பெண்ணை ரமேஷ்சந்திரனுக்கு அறிமுகப்படுத்துகிறான். ஒரு மணிக்கு இத்தனை அமெரிக்க டாலர் என்கிறான். அவள் மீதான ஆசை வார்த்தையை வார்க்கிறான். அவனது பேச்சில் மயங்கி, அவளை நெருங்குகிறான் ரமேஷ்சந்திரன். பிறகு அவர், துறையினரால் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாக ராமன் , நளினி இருவருமே காரணமாக இருக்கிறார்கள். கடத்தப்பட்ட கோஷியை மீட்பதில் அதீத கவனம் செலுத்துவதால் ரமேஷ்சந்திரன் இடை நீக்கத்திற்கு உள்ளானாலும் பலி வாங்கப்பட நளினியுடனான அந்தரங்கமே காரணமாக அமைகிறது.
நந்திதாகோஷ் வெடிப்பான பெண்ணாக படைக்கப்பட்டிருக்கிறாள். கணவனை மீட்பதில் எல்லா வகை முயற்சிகளையும் முன்னெடுக்கிறாள். தேவதையென அவள் அவளது மாமனார் பார்த்தா சட்டர்ஜியால் சொல்லப்பட்டாலும், நந்திதா கோஷ் - ரமேஷ்சந்திரன் இருவரும் தனியே சந்தித்துக் கொள்கையில் கணவன் கடத்தப்பட்டச் சம்பவம் குறித்து ரமேஷ்சந்திரன் வாயிலாக கேட்டறிகையில் ரமேஷ்சந்திரன் அவளது அழகில், அங்க உறுப்புகளின் அளவில் மயங்கி அவள் மீது எல்லை மீறுகையில், தன் கணவனை எப்படியேனும் மீட்டெடுக்க வேணும் என்பதற்காக கணவனுக்கான இடத்தை ரமேஷ்சந்திரனுக்குக் கொடுக்கச் செய்கிறாள். இந்தியாவில் துக்கத்தின் மீதான துயரத்தின் போது, நிர்க்கதியைக் காரணமாக வைத்து இதுதான் தகுந்த நேரமென ஆசையை நிறைவேற்றிக்கொள்ளும் இந்தியர்களின் உக்கிர முகத்தைக் காட்டும் உண்மைப் பக்கம் இது 

பார்த்தா சட்டர்ஜி அவளது மருமகள் நந்திதா கோஷை தேவதை என வர்ணிக்குமிடம் நாவலின் உச்சம் என்றுதான் சொல்ல வேண்டும். அதே நேரம் அவளது கணவன் கோஷை மருமகன் என்கிறார். இந்த உறவு முறை குழப்பதைத் தந்தாலும் கோஷ், சட்டர்ஜி, நந்திதா மூவரும் பஞ்சாபிகள் என்பதையும் அங்கு அவ்வாறான உறவு முறை இருக்கிறதோ என்பதாக தயங்கி ஏற்றுக்கொள்ளவும் வேண்டியதாக இருக்கிறது.

இந்நாவில் கஷ்ணபீஸ் பாத்திரம் முதிர்ச்சியான ஒன்று. அவரது நுழைவு இந்திய அரசியலை எள்ளி நகையாடுகிறது. நாவல் முழுமையும் அங்கதச் சுவையைத் தருவிக்கிறது. ‘அமெரிக்கா எச்சரிக்கை! இராக் விமானங்கள் இராக் வானெல்லைக்குள் பறந்தன!’ என்கிற இடமும்தாராளவாதம் குறித்த ஒரு விளம்பரம் - மாமியார், மறுமகளின் அக்குளின் நாற்றத்தை நுகர்ந்துப் பார்க்கிறார்,... என்கிற இடமும் உலகமய, தாராளமயப் பிரச்சனைகளை அங்கதப்படுத்துகின்றன.

கோஷை விடுவிக்க நான்கு கோடி, ஒரு கோடி,...என பல கடிதங்கள் அலுவலகத்திற்கு வருவதாக இருக்கிறது. நான்கு கோடியா, அப்படியென்றால் என்னைக் கடத்துங்கள் ஆளுக்கு பாதிப்பாதிஐம்பது இலடச்சத்திற்குக் கூட பெருமானம் ஆகமாட்டார், என்பதாகப் பேசிக் கொள்ளும் இடங்கள், துக்கக் காலத்தில் பிடில் வாசிக்கும் துறைவாரிய மனநிலையை எதிரொலிக்கிறது.

கடத்தல் குறித்து பல கடிதங்கள் துறை அலுவலகத்திற்கு வந்தாலும் ஒரு கடிதம் நம்பிக்கைக்குரிய கடிதமாக வந்து சேர்கிறது. அக்கடிதம் கோஷின் மனைவிக்கு வரும் கடிதம். இக்கடிதத்தை எழுதியவர் இயக்கத் தலைவன்பிரதீப் தாஸ்’. அவன் 9,95,000 ரூபாய் நிர்ணயித்து உங்களுக்கே தெரியாத, உங்கள் சகோதரன்  அல்லது கடவுள் என்பதாக கடிதத்தை முடிக்கிறான்.

இத்தொகையை நீங்கள்தான் திரட்ட வேண்டுமென மின்துறையினர் திருமதி கோஷிடம் சொல்ல, ‘என் கணவன் கடத்தப்பட்டது என் வீட்டிலிருந்து அல்ல, உங்கள் அலுவலகத்திலிருந்து...’ என்கிற இடம் வாசகனின் நியாயமானக் கோபத்தையும் சேர்த்து உச்சாணியில் ஏற்றுகிறது.

கஷ்ணபீஸ் அமைச்சருடன் பிணைத் தொகைக் குறித்துப் பேசுகிறார். அமைச்சர், மறுப்புத் தெரிவிக்க, அமைச்சரின் துறை அலுவலகம், ஒரு நடிகையின் வீட்டில் கட்டியிருப்பது, அவரது வீட்டு விஷேசத்திற்கு கதகளி ஆடியவர்களுக்குப் பல இலட்சம் கூலியாகக் கொடுத்தது, எனப் பலதையும் சுட்டிக்காட்டிப் பேசுமிடம் இந்திய அரசியல்வாதிகளின் அந்தரங்க நிர்வாகத்தை வெட்டவெளிச்சத்திற்கு கொண்டு வந்து நிறுத்துகிறது.

பிணைத் தொகையை துறையே கட்டலாமென முன் வர, பார்த்தா சட்டர்ஜி - பூரா இருவரும் பிணைத்தொகையைக் கொடுத்து கோஷை விடுவிக்க கல்கத்தாவிலிருந்து பாக்டோக்ரா நகரத்திற்குச் செல்கிறார்கள். சட்டர்ஜி பின்வாங்கிவிடுகிறார். ஒரு வேளை தன்னை பிணைக்கைதியாகப் பிடித்துவிட்டால், என்கிற பயத்தில்!. பிறகு ரமேஷ் சந்திரன் அதற்கான வேலையில் இறங்குகிறார்.

இதற்கிடையில் ஓர் அழுகி நாறிப்போன பிணம் மலையின் அடிவாரத்தில் கிடக்க, கோஷ் கொலைச் செய்யப்பட்டு விட்டார் என்பதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட, அச்செய்தியை வாசிக்கும் கோஷ் புகைப்படம் மறுநாள் பத்திரிகையில் வெளியாகிறது.

கோஷ் கடத்தப்பட்டதற்குப் பிரத்யேகக் காரணம் பணமோ, அவருக்குப் பின்னாலிருப்பவரின் பதவி உயர்வோ இல்லாதிருந்ததால் ஒரு வழியாக விடுவிக்கப்படுகிறார். அதற்குப்பிறகு நடந்தேறும் கோஷ் - ரமேஷ்சந்திரனின் சந்திப்பும், இருவருக்குமான உரையாடலும் வலிமிக்க புனைவாக்கம் பெறுகிறது. தன்னை விடுவிக்க ரமேஷ்சந்திரன் அதீத ஆர்வம் காட்டவில்லை; நான்கு கோடி என்பது முதலமைச்சருக்கான பிணைத்தொகை அதை கோஷிற்காகக் கொடுக்க முடியாது என ரமேஷ்சந்திரன் சொன்னதாக அவரிடமே சொல்லுமிடமும் , அதற்காக சுகன்யா கோபப்படுமிடமும் செவி வழிச் செய்தியினூடான நடப்புக்கால முரண் நகையாக அமைகிறது.

நாவலை முடிக்க, ஒன்றிரண்டு பாத்திரங்களைக் கொன்றாக வேணும் என்பது ஆங்கில நாவலுக்குரிய சடங்கு. இந்நாவலில் கோஷ் - நந்திதா தம்பதிகளைத் தவிர மற்றவர்கள் சொல்லாமல் கொள்ளாமல் இறந்துப் போவது நாவலைச் சுருக்கென முடித்துக்கொள்வதற்கான அவசரக் கதியைக் காட்டுவதாக இருக்கிறது. அதிலும் ராமன் அவரது மருமகளுடனான கூடலின் போது மாரடைப்பால் இறந்துபோவது வேறு வழியேயில்லாமல் சிரிக்கவே வைக்கிறது.

நாவலில் ஆங்கொன்றும், இங்கொன்றுமாக இடம் பெற்றிருக்கும் நச்சலைடு குறித்தக் கடிதம்; சுகன்யா, கணவரின் நண்பர்களுக்கு எழுதும் கடிதம்; சுகன்யாவின் தந்தை சுகன்யாவிற்கு எழுதும் கடிதம்; இந்நாவல் குறித்து வாசகன் நாவலாசிரியருக்கு எழுதும் கடிதங்களை மட்டும் வாசித்தாலே நாவலின் மொத்த மைய ஓட்டமும் நன்கு புலப்பட்டு விடுகிறது. ஆனாலும் இந்நாவலுக்கான வாசிப்புத் தேவை என்பது ஊழல் குறித்த தடயமோ, மின் பொறியாளரின் கடத்தலோ, மீட்டலோ அல்ல. கடத்தப்பட்டவரை மீட்டு வரலாமென வாசர்களை அழைத்துச் செல்லும் நாவலாசிரியர் அஸ்ஸாம் மாநிலத்தின் வனம், பழங்குடி இன மக்களின் வாழ்வியல் கூறுகள், அஸ்ஸாம் மாநிலத்தை இந்திய மைய படுத்தும் நோக்கத்தில் இந்தியாவின் மையப் பகுதி மக்களை அம்மாநிலத்தில் குடியமர்த்துவது, ஒரு காலத்தில் பிரமப்புத்திரா நதியையொட்டியப் பகுதிகளை ஆண்ட போடோ மக்களின் இன்றைய நலிவு, போடோ மக்கள் - கொக்ராஜார் போராளிகள் - அஸ்ஸாம் போராளிகள் இவர்களுக்கு இடையேயான உட்போர், அஸ்ஸாம் போராளிகள் மதுவற்ற, போதையற்ற, இந்திய அரசின் நலத்திட்டங்களுக்கு மயங்காத கொள்கைப் பிடிப்புடன் இருத்தல்,.. பற்றிய வரலாற்றுப் பதிவுகளை வாசிக்கையில் கலங்கிய நதி, வாசகனின் கண்களை கலங்கடிக்கவே செய்கிறது.

காந்தி சொன்னதுதான் - ‘ஒரு நதியில் வெள்ளம் வரும் போது அது மண்ணடர்ந்து எப்போதையும் விட கலங்கலாக இருக்கும். ஆனால் வெள்ளம் வடிந்த பின்னர் அது தெளிவாகிவிடும். முன்னைவிடத் தெளிவாக...’

வெள்ளம் முதலில் வடிய வேண்டும். பிறகு அல்லவா தெளிய வேண்டும்.

[27.07.2019 அன்று தஞ்சைக் கூடல் இலக்கிய வட்டம் அமர்வில் வாசித்தது.]

3 comments:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

நிகழ்வுப்பகிர்வு அருமை. வாழ்த்துகள்.

கலைச்செல்வி said...

வாசித்தபோது கேட்டதை விட, எழுத்தாக படிப்பது மிக நன்றாக இருந்தது.

Unknown said...

இது போன்ற விமர்சனம் தேவை.வாழ்த்துகள்