Monday, July 15, 2019

இந்தியாவின் உப்பு வேலி

உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்கிற பழமொழி பந்தியில் இலையில் முதலில் உப்பு வைப்பவரை நினைக்க வேண்டும் என்று இந்த பழமொழி சொல்வதாக நினைத்திருந்த காலம் ஒன்றிருந்தது. கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் உப்பு என்கிற பொருளைவைத்து பழமொழிகளும் சொலவடைகளும் நாளும் மனிதர்களின் நாவில் தவழ்ந்தபடிதான் இருக்கிறது. வாழ்க்கை உப்பு சப்பில்லாமல் இருக்கிறது என்று சொல்வதும் உப்பு தின்றவன் தண்ணீர் குடிப்பான் என்று சொல்வதும் ஒரு நாளில் நிகழ்ந்துவிட்ட விஷயமில்லை.

சக்கரை பணக்காரர்களின் உணவாக இருக்கும்போது உப்பு ஏழைகளின் உணவாக கருதப்படுகிறது. ஏனெனில் எளிதாக கிடைக்க கூடிய மிக குறைந்த விலையில் வாங்கக் கூடிய பொருளாக இன்று இருக்கிறது. ஆனால் ஒரு சமயத்தில், இந்தியாவில் உப்பு மிக விலையேறிய பொருளாக இருந்திருக்கிறது. யாரும் வாங்க முடியாத அளவிற்கு இருந்து, அதனால் மக்களின் உடல்நலம் கெட்டு, பல நோய்கள் கண்டு மக்கள் பஞ்சத்தில் இறந்திருக்கிறார்கள்.

அதற்கு உப்பின் மீதான வரிவிதிப்புதான் காரணம். அது மட்டுமல்ல, அதை வசூலித்த விதமும், விற்றாலோ, கடத்தலில் ஈடுபட்டாலோ, அதற்கு சிறை தண்டனைகள் அளிக்கப்பட்டன. அதற்காக சில இடங்களில் வேலிகள் அமைக்கப்பட்டன. சில இடங்களில் காய்ந்த முட்களும் சில இடங்களில் உயிர் மரங்கள் அமைக்கப்பட்டு பல ஆயிரம் மனிதர்கள் காவலுக்கு நிறுத்தப்பட்டிருந்தது. இந்தியாவின் வடக்கு தெற்காகவும் கிழக்கு மேற்காகவும் வடிவில் வடஇந்திய வங்காளப் பகுதிகளை பிரித்து பிறபகுதியிலிருந்து அந்தப் பகுதிக்கு உப்பு செல்வதை தடுத்திருந்து ஆங்கிலேய அரசு.

இந்த வேலியமைப்பு ஒரே சமயத்தில் நிகழ்ந்துவிட்டதல்ல, கொஞ்ச கொஞ்சமாக வெவ்வேறு காலகட்டங்களில் அமைக்கப்பட்டு முழுமையாக நின்று ஒரு 10 ஆண்டுகள் செயல்பட்டிருகிறது. இதனால ஆங்கிலேயர்களுக்கு கிடைத்த வரிப்பணத்தின் அளவும் நம்பமுடியாத அளவிற்கு அதிகமாக இருந்திருக்கிறது. பிரிட்டிஷ் பாராளுமன்றத்திலேயே இதை நீக்க வேண்டும் என குரல் எழுப்புமளவிற்கு மிக கொடூரமாக இருந்திருக்கிறது.

இந்நிகழ்வு 1800களின் கடைசியிலும் 1900ன் முதல் பத்தாண்டுகளிலும் நிகழ்ந்திருக்கிறது. ஆனால் வரலாற்றில் இதைக் குறித்த செய்திகள் இல்லை. இந்தியாவைப் பற்றி அறிந்தவர்களுக்கும் அடுத்த தலைமுறைகளுக்கும் இந்த வேலி பற்றி எதுவும் தெரியவில்லை என்பது தான் ஆச்சரியம். ஸ்லீவர் போன்ற ஆங்கில ஆட்சியாளர்களின் குறிப்புகளில் மட்டுமெ காணப்படும் இதை ராய் மேக்ஸிம் என்கிற பிரிட்டிஷ் ஆசிரியர் கண்டறிந்து அதன் தடயங்களை காண இந்தியா வந்து அழைந்து திரிந்ததை ஒரு நூலாக எழுதியிருக்கிறார் அதுவே உப்பு வேலி என்று தமிழ் மொழிபெயர்ப்பாக கிடைக்கிறது. ராய் மாக்ஸிம் எழுதிய The Great Hedge of India வை தமிழில் சிறில் அலெக்ஸ் மொழிபெயர்த்திருக்கிறார்.

ஆசிரியர் ராய் மெக்ஸிமின் பயணம் நீண்ட நெடியது. தன்னலமில்லாத சொந்த பணத்தை செலவழித்து யாருக்கும் தெரியாத ஒரு அழிக்கப்பட்ட நீண்ட வேலியின் சிறு பகுதியையாவது கண்டறியவேண்டும் என்கிற வேட்கையுடன் இந்தியாவில் அழைந்து திரிவது சாதாரணமானதல்ல. பல்வேறு தொழில்நுட்பங்களை பல்வேறு கால இடைவெளியில் பயன்படுத்திப் பார்க்கிறார். பல மேப்புகளை ஆராய்கிறார். அதில் காணப்படும் அட்சரேகை தீர்க்கரேகைகளை கணக்கிட்டு இடங்களை ஆய்வு செய்கிறார். எல்லா நேரத்திலும் தோல்வியே மிஞ்சுகிறது. ஒவ்வொரு சமயமும் அது செயற்கையான மேடான பகுதியாக இருப்பதால் சாலைகளாக மாற்றப்பட்டுள்ளன. அல்லது வயல்களாக மாறியிருக்கின்றன. கடைசியில் அவர் வெற்றியும் அடைக்கிறார். வயதான முன்னால் கொள்ளைக்காரர் இந்நாள் ஞானியாகவும் இருக்கும் ஒருவர் அந்த இடத்தை அழைத்துச் சென்று காட்டுகிறார். புதர்வேலியின் ஒரு பகுதியை கண்டடைகிறார். அதனுடன் போட்டோக்களை எடுத்துக் கொள்கிறார். உதவி செய்தவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு தன் நாட்டிற்கு திரும்புகிறார். இந்த வரலாற்றை ஒரு ஆங்கிலேயர் வந்து சொல்ல வேண்டியிருப்பது இந்தியர்கள் வெட்கப்படவேண்டிய விஷயம்தான்.

புதர்வேலியை கண்டடைந்த அவரது வரலாறு மட்டுமல்ல இந்தியாவின் ஏன் உலகத்தின் நீண்ட புதர்வேலியின் வரலாறு மட்டுமல்ல, அந்த காலக்கட்டது இந்தியாவின் ஒட்டுமொத்த மக்களின் பார்வையும், பிரிட்டிஷ் மக்களின் ஒட்டு மொத்த பார்வையும் காணக்கிடைக்கிறது. உடலியலிலும் உளவியலிலும் உப்பு எப்படி மனிதர்களிடம் பாதிப்பை உண்டாக்கியது என்பதை உணரமுடிகிறது. உப்பு மிகச்சிறிய விஷயமாக கருதும் அதே நேரத்தில் மிக உயர்ந்த ஒன்றாகவும் கருதப்பட்டிருக்கிறது. உப்பு பெறாத விஷயம் என்று சொல்லும்போதே அதை பந்தியில் முதலில் வைத்து மரியாதை செய்தார்கள். உப்பு வரி வந்ததற்கு பின்னால் உருவான பழமொழிகள் தான் இன்றும் அதிக பழக்கத்தில் உள்ளன.

ஆங்கிலேயர்கள் இந்த உப்பை வைத்து எவ்வளவு தூரம் மக்களிடமிருந்து வரியை கறக்கலாம் என்பதில் மிக புத்திசாலித்தனமாக நடந்துக் கொண்டார்கள். உப்பு வரியால் ஏழைகளை மிகவும் பாதிப்படைந்தார்கள், ஆனால் அவர்கள் குரல் எழுவில்லை, அவர்கள் அனைவரும் ஜமிந்தாரின் கீழ் இருந்தார்கள். ஜமீந்தார்கள் அதை கண்டுகொள்ளாமல் இருக்க அவர்களுக்கு வேறு உதவிகளை செய்தது ஆங்கிலேய அரசு.

அப்போதைய வரிவிதிப்பு முறை, உணவு பறிமாற்றங்கள், அப்போதைய வீதி கொள்ளைகள், ஜமீந்தார் வேலையாட்களின் படிநிலைகள், உப்பினால் எப்படி ஆட்சியை இழந்தார்கள் இந்திய அரசர்கள் என்று பல்வேறு கோணங்களை இந்த நூலிலிருந்து அறியமுடிகிறது.

ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு வந்தது வியாபாரம் செய்யதான், அதைத்தான் கடைசி வரையிலும் செய்தார்கள். அவர்கள் செய்த ஆட்சிமுறையில் முக்கியமானது வியாபாரமும் அதன் வரி விதிப்புகளும்தான். அதற்காக இந்த ஆட்சிமுறையும் ராணுவமும் என்றால் மிகையில்லை என்றே நினைக்கிறேன். மிகக்குறைந்த ஆங்கில அதிகாரிகளைத் தவிர அனைவரும் இந்தியாவை எப்படி சுரண்டுவது என்பதை அறிந்திருந்தார்கள், அதை மீண்டும் நிறுபிக்கும் ஒரு புத்தகம் உப்பு வேலி.

No comments: