Thursday, August 17, 2017

பெயரில் என்ன இருக்கிறது?



எங்களுக்கு ஒரு நண்பர் இருந்தார். மிகவும் நல்லவர். எந்த நண்பருக்கும் உதவி என்றால் ஓடிவருவார். அவர் பெயரை பிரியமாக கூப்பிடதான் எங்களுக்கு சங்கடமாக இருக்கும். பொதுஇடத்தில் அவர் பெயரை சொல்லவே முடியாது. ஒருமுறை நகர பேருந்தில் பண்டத்தை ஈக்கள் மொய்பது போலிருந்த மக்களை விலக்கி வண்டியைவிட்டு கீழே இறங்கி அவரை தேடினால் ஆளைக் காணாம். அவர் பெயரை சொல்லி அழைத்து இறங்க சொல்லலாம் என்றால் நா எழவில்லை. எங்கே வண்டியில் வெளியில் தொத்தியிருக்கும் மக்கள் எல்லோரும் என்னைப் பார்த்து சிரித்துவிடுவார்களோ என்று பயம். வண்டியும் கிளம்பி போய்விட்டது. அவரது பெயர் ஆடியபாதம்.

அப்புறமாகத்தான் ஆடி என்று சுருக்கி அழைக்க ஆரம்பித்திருந்தோம். ஒரு முறை கூட்டத்தில் இந்த பெயரை சொல்லிப்பாருங்கள் தெரியும். ஆடியபாதம் என்று சொல்லி மற்றவர்களின் சிரிப்பை ஏன் பொருட்டுபடுத்த வேண்டும் என்று பிறகுதான் முடிவும் எடுத்தோம். ஆனால் பெயரில் எதுவும் இல்லை என்றாலும் ஒரு வயதுவரை சங்கடம் அளிக்கவே செய்கின்றன‌ இந்த மாதிரியான பெயர்கள்.

முந்தைய காலங்களில் ஒருவருக்கு பிறக்கும் குழந்தைகளை தலைவர்கள், சினிமா பிரபலங்கள் பெயர் வைக்க சொல்லும் நிகழ்ச்சி ஒன்று இருந்தது. ஏதாவது ஒரு பொதுகூட்டத்திற்கு வரும் அவரிடம் பெயர் வைக்க சொல்லி கேட்டுக் கொள்வார்கள். முன்புபோல இல்லையென்றாலும் இன்றும் சில அப்படி செய்கிறார்கள். அவர்கள் வாய்க்கு வந்தபடி வைக்கும் பெயர்கள்தான் பெருமை கொண்டு விடாமல் அழைக்க‌வும் செய்கிறார்கள்.

கவன‌மாக பிள்ளையை பெற்ற தாய்க்கும் அவளுக்கு எல்லாவகையிலும் உதவி செய்து ஆவலுடன் காத்திருந்த தந்தைக்கும் என்ன பெயர் வைப்பது என்று தெரியாமலா இருக்கும். இன்று யாரும் பிரபல்யங்களிடம் கொடுத்து பெயர்வைக்க சொல்வதில்லை. நீளமான வாயில் நுழையாத பழைய பெயர்களும் இல்லை. மந்திரம் ஓதும் அய்யர்களை அழைத்து எந்த எழுத்தில் ஆரம்பிக்க வேண்டும் என பார்த்து இணையத்தில் தேடி வித்தியாசமாக பெயர் வைக்க முயற்சிக்கிறார்கள். நல்ல தமிழ் பெயர்களோ அல்லது சமஸ்கிருத பெயர்களோகூட இல்லை. சமஸ்கிருதபெயர்கள் என்கிற மறைவில் ஒரு எழுத்து குறைந்த அல்லது ஒரு எழுத்தி நீட்டி கண்டமேனிக்கு பெயர்களை தேர்வு செய்கிறார்கள் என்று தோன்றுகிறது. பொதுவாக நடைமுறையில் இருக்கும் பெயர்கள் இருக்க கூடாது என்கிற முடிவுடனேயே தேடுகிறார்கள்.

லக்ஷிதா என்கிற பெயரை ரிக்ஷிதா என்று யாரும் இதுவரை வழங்கா பெயராக தேர்வு செய்கிறார்கள். அதனால் என்ன பயன் விழையப் போகிறது என தெரியவில்லை.
மாறாக தங்கள் இஷ்டத்திற்கு பெயர்களை அழைக்கும்படிதான் ஆகிறது. குழந்தை தன் பெயரை அடுத்தவருக்கு ஒவ்வொரு முறையும் விளக்கி சொல்ல வேண்டியிருக்கிறது. ஒரு பெண் தன் பக்கத்து வீட்டில் இருக்கும் ஸ்ருதி என்கிற குழந்தையின் பெயரை அழைக்க தெரியாமல் சுருட்டி என்றே அழைத்து வருகிறார். ஒரு வகையில் சாதாரணமாக தோன்றினாலும் பாதகமான அம்சங்களே அதிகம் என்பதை அந்த குழந்தைகள் தினமும் சொல்லி அழுவதை சில சமயம் பார்த்திருக்கிறேன். என் பெயரே அப்படியான ஒரு உதாரணமாக சொல்லலாம். கடவுள் நம்பிக்கையற்ற என் அப்பா கடவுள் பெயர்களை வைக்காமலிருக்க நல்ல தமிழ் பெயர்களை விடுத்து வடநாட்டு பெயரை தேர்ந்தெடுத்தார்.
பொதுவாக சாதியை மறைக்கும் பெயர்கள் தான் அதிகம். இன்ன பெயர்கள் இன்ன சாதியில் அதிகம் என்றால் அந்த பெயர்களை அவர்கள் வைப்பதில்லை. தன் சாதியை மறைக்க நல்ல தமிழ் பெயர்களை தேர்ந்தெடுக்கலாம் ஆனால் வாயில் நுழையா சமஸ்கிருத பெயர்களே தேர்வு செய்கிறார்கள். நவீனமடைந்துவிட்டதாக ஒரு எண்ணம் அவர்களுக்கு தோன்றிவிடுகிறது. அந்த சொல்லும்போது தெரியும் முகமலர்ச்சியெ போதும் நாம் அதை புரிந்துக் கொள்வதற்கு.

தமிழ் பெயர்களைவிட சமஸ்கிருத பெயர்கள் எப்படி நவீனமாகின்றன? ஆங்கில பெயர்களை வைப்பதில்லையே ஏன் என யாரும் கேட்பதும் இல்லை. தமிழ் பெயர்களை அழுக்குகளாகவும் சமஸ்கிருத பெயர்கள் புனிதங்களாகவும் எப்படி மாறின.

படிப்பு, வேலை, பணம், அதிகாரம் நம் வாழ்க்கையை மாற்றியது போல நம் பெயர்களையும் மாற்றிவிட்டது.

1 comment:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

தமிழகத்தைவிட்டு பணிநிமித்தம் சென்ற நம்மவர்கள் எதிர்கொள்ளும் பாதிப்புகளில் இதுவும் ஒன்று. நம்மவர்கள் அவ்வாறு செல்லும்போது நம் பழக்கத்தைத் தொடர்வதை விட்டுவிடுவதோடு, வட இந்திய/மேல் நாட்டு பழக்க வழக்கங்களில் ஒன்றிவிடுவது (?) வேதனையாக உள்ளது. மொழிப்பற்று, மூத்தோரின்மீதான அன்பு, இறைவன்மீதான ஈடுபாடு என்ற நிலையில் பெயர் வைத்தது மாறி வாயில் நுழையாத அளவில் பெயரை வைக்க ஆரம்பித்துவிட்டார்கள்.