Monday, August 7, 2017

தீராத திருநாள் (குமார நந்தன்) கதைப் பற்றி - எஸ். பிரசன்னகிருஷ்ணன்


ஜம்பு, ஒரு திருவிழா நடக்கும் ஊரின் உணவகத்துக்கு தோசை மற்றும் புரோட்டா மாஸ்டரின் தட்டுப்பாட்டால் அங்கு செல்கிறான். மற்ற மாஸ்டர்கள் வேறு சில கல்யாண நிகழ்வுகளுக்கு உள்ளூரிலேயே வேலைக்கு சென்றுவிட்டனர். ஜம்பு கடந்த நான்கு நாட்களில் பிழிந்தெடுத்த துணியை போன்ற உழைப்பினால் இன்று முழுநேர ஒய்வு எடுக்கலாம் என்று காத்திருந்தான். ஆனால் காலையில் வந்து கேட்ட இள வயது முதலாளியின் பேச்சை தட்டமுடியாமல் சென்று விட்டான். கூடுதல் கூலி என்ற ஒப்பந்தம் இவனை உந்தியது. அலை போல் மக்கள் கூட்டம் உணவகத்துக்குள் வருவதும் போவதுமாக இருந்தனர். திருவிழா என்பதால் இடைவெளியின்றி ஜம்புவின் பணி தொடர்ந்து தேவைப்பட்டது. மதியம் பொதுவாக எடுக்கும் ஒய்வு கூட அறவே கூடாதென்று அந்த இள வயது முதலாளி கூறிவிட்டான். இவனுக்கும் மெஷின் போன்ற உடலியக்கம் பழகிவிட்டது. அந்தியில் ஊரில் விழாவுக்கான கலை உருவாகி இவன் கண்ணில் தென்பட்டது. இரவு ஒருவழியாக மக்கள் வரத்து நின்று போயி, வேலைகளை முடித்து, கூலி வாங்கி கடை ஆட்களுடன் குடித்தும் உணவருந்திவிட்டும், அருகே ஒரு மைதானத்தில் நடந்து கொண்டிருக்கும் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு தனியாக செல்கிறான். போன இடத்தில் எதிர் பாரா வண்ணம் சில முகம் தெரியா நபர்களுடன் மேலும் குடியில் மூழ்குகிறான். நிகழ்ச்சியின் இடையில்  குழம்பிய நிலையில் இவனிருக்கும் போது, மக்கள் கூட்டம் கூட்டமாக தெறித்து ஓடுகின்றனர். காக்கி சட்டை காரர்களின் வாகனங்கள் அங்குமிங்கும் ஒலி எழுப்பிய படி அலைந்து கொண்டிருந்தன. இவன் பயத்தினால் உந்தப்பட்டு நடைவேகத்தை கூட்டி கடையின் அருகில் வந்து படுத்து கொள்கிறான். பின்புறத்தில் லத்தியினால் பலமாக விழுந்தது ஒரு அடி. மைதானத்தில் கொலை நடந்ததற்கு அவன் தான் காரணம் என்று பழி சுமத்தப்படுகிறான். தலை கால் புரியாமல் காக்கி சட்டையின் மிரட்டலுக்கு இணங்கி அவர் பின்னால் சென்றான். வேறு ஏதோ ஒரு நபருடன் நீண்ட நேரம் வாக்கிடாக்கியில் பேசிக்கொண்டிருக்கிறார். காக்கி சட்டையின் அலட்சியத்தை பயன்படுத்தி, வரவழைக்கப்பட்ட தைரியத்துடன் அந்த வழியாக சென்ற ஒரு பேருந்தில் ஏறிவிடுகிறான்.

இந்த எளிய கதை சுருக்கத்தை படித்த உடன் இந்த கதையை ஒரு குறிப்பிட்ட இலக்கிய வகையில் ஒரு தேர்ந்த இலக்கிய வாசகன் அடைத்து விட முடியும். விளிம்பு நிலை வாழ்வியலை வாழ்ந்து கொண்டிருக்கும் ஒருவனின் ஒரு நாள். ஆனால் அந்த ஒரு நாள் சற்று குழப்பமானது, அசாதாரணமானது. அந்த அசாதாரணத்தை ஒதுக்கி வைத்து எஞ்சிய கதையை விஸ்தீரணப்படுத்தி அவனுடையமொத்த வாழ்க்கையையும் கற்பனை செயது கொள்ளலாம், ஓரளவுக்கு. ஒரு நாளைக்கு 'மிக'க்கடுமையாக அடுப்பு கல்லில், வியர்த்து வழிய உழைத்தால் 500 சொச்சம் கிடைக்கும். கதையில் ஜம்புவின் வேலை நேரம், அதற்கான அவன் மனநிலை, நிதிநிலை இதை சொல்வதிலிருந்து அவனுடைய கடந்த காலமும், வருங்காலமும்.. ஏன்? அவனுடைய தோராயமான முக ஜாடையும் கற்பனை செயது விட முடிகிறது. ஒரு வெளிக்கோட்டு சித்திரத்தை வரைந்து அதன் வழியாக முழு ஓவியத்தையும் நம்மை உணரச்செய்தமைக்காகவே இந்த கதையை புறந்தள்ளிவிட்டு என்னால் செல்ல முடியவில்லை. அதனாலேயே இந்த கதையில் கூடி வந்த சில கூறுகளையும் குறைகளையும் அலச வேண்டி இருக்கிறது. ஒரு சிறுகதைக்கு மேற்சொன்ன வெளிக்கோட்டு சித்திரம் வரைந்து முழு ஓவியத்தை உணரச்செய்யும் பண்பு போதுமா? இதை தாண்டி உணர்வு, மொழி மற்றும் அறிவார்ந்த குணாம்சங்கள் இருப்பதை நாம் எந்தவொரு கதையிலும் எதிர் பார்ப்போம். கதைக்கு அதற்கான வாய்ப்பு இருந்தும் அதை சொல்ல தவறி இருந்தால் நமக்கு ஒரு நமைச்சலை கண்டிப்பாக உருவாக்கும். எழுதியதை மட்டும் வைத்து கொண்டு அலசலாம். அப்படியான விமர்சன பார்வையில் எந்த ஒரு கதையையும் நாம் விதந்தோந்திவிடலாம். ஒரு கதை அது சொல்ல முயன்றிருக்கும் தொனியில் நம் வாசிப்பை வைத்து அது செல்ல வேண்டிய உயரம் என்ன, எது விடு பட்டிருக்கிறது, எந்த பகுதியில் குறை மேலதிகமாக காணப்படுகிறது என்பதிலேயே என்னுடைய விமர்சன பார்வை தொடங்க போகிறது. இந்த கதையின் மிக பெரிய பலமாக நான் கருதியவை மூன்று விஷயங்கள்.

1. வெளிப்புற காட்சிகளை எதார்த்தமாக எந்த வித மேல்பூச்சுமில்லாமல் சித்தரித்தல்
ஒரு திருவிழா கலை மிகுந்த ஊர். எந்த வித தோரணையும் இல்லாமல் கூட்டம் எப்போதும் வழிந்து கொண்டிருக்கும், பணம் ஈட்டுதலை மட்டுமே குறியாக கொண்ட ஒரு உணவகம். பரந்த மைதானத்தில் நடக்கும் நிகழ்ச்சி, வேறுருவமாக மாறும் தன்மை கொண்ட அந்த ஊரின் அந்தி. அனைவருக்கும் பிடித்த முக ஜாடையிலுள்ள நடிகையின் ஆட்டம். மின்சார வெளிச்சத்தை தடை செயது நிலா வெளிச்சத்தை மட்டும் வியாபிக்க வைத்திருக்கும் மைதானத்திற்கு அருகிலுள்ள குன்று. விழாவின் கொண் டாட்டங்களில் தென்படும் வினோதமான காட்சிகள் (எலுமிச்சம்பழம் உடலுடன் சேர்ந்து ஆடுதல்). ட்யூப் லைட் மற்றும் தண்ணீரால் அங்கங்கு சிறு குட்டையாய் தேங்கி நிற்கும் திருவிழா மிச்சங்கள் என புறவய உலகை ரசனையோடும், யதார்த்தமாகவும் புனைவுலகுக்குள் விவரித்தல் என எழுத்தாளரின் தேர்ந்த கதை சொல்லலை காண்பிக்கிறது. இந்த சித்தரிக்கும் திறன் ஒரு சிறுகதையில் நாம் எதிர்பார்க்கும் அடிப்படை பண்பு தான். ஆனால் ஒவ்வொருவருக்கும் அவரவர் பார்வையில் உருவாகும் உவமைகளும், கண்களில் அகப்படும் அவதானிப்புகளும் கதைகளை வித்தியாச படுத்தி காண்பிக்கும். இங்கே குமார ந‌ந்தன் அவ்வளவு தெளிவாக காட்சிகளை விவரிக்க வில்லை என்றாலும் குறைந்த புகை மூட்டத்தின் நடுவே தெரியவரும் மங்கலான காட்சிகளால் கதை நகர்த்தப்படுகிறது. இந்த கதைக்கு இவ்வளவு போதும் என்று கூட சொல்லி விட முடியும். ஏனென்றால் கதையின் கடைசியில் வரும் திருப்பத்திற்கு மிக நீண்ட விவரிப்புகள் தேவை படவில்லை. ஒரு துளி கண்ணில் காண்பித்து நம்மை விரிவாக கற்பனை செய்து கொள்ள செய்கிறார் குமாரானந்தன். ஒரு மிக பெரிய, எழுதி தள்ளிய எழுத்தாளரிடமிருந்து இந்த சித்தரிக்கும் பண்பை நாம் எந்த ஒரு கதையிலும் எதிர் பார்ப்போம். அதை பற்றி பேசி விட்டு கடந்து சென்று விடுவோம். அதை பற்றிய அலசல் தேவை இருக்காது. எழுதி எழுதி அவர்களுக்கு கை கூடிய ஒரு விஷயமாக இருக்கலாம். ஆனால் எந்தவொரு வளர்ந்து வரும் எழுத்தாளனுக்கும் இந்த குணாம்சத்தை பரிசீலிப்பது அவருடைய முன்னேற்றத்துக்கு நல்லது என்று நான் என்னுடைய முந்தைய இலக்கிய சந்திப்புகளில் கற்றுக்கொண்டேன். அதன் பொருட்டே இந்த வெளிப்புற சித்தரிப்பு பற்றிய குறிப்பை இந்த கதையின் தனித்த ஓர் அனுகூலமாக விவரிக்க வேண்டியிருக்கிறது.

2. மானுட உணர்வின் மேலுள்ள கூர்ந்த அவதானிப்பு மற்றும் மனித சுபாவங்கள் மூலம் அவர்களை வரையறுத்தல்
இந்த குணாம்சம் கதையின் மிக முக்கிய தூணாக எனக்கு படுகிறது.  வெறும் வெளி கோட்டு சித்திரம் மட்டும் சொல்ல பட்டிருந்தால் இந்த கதையை நாம் எளிதில் கடந்து சென்றிருக்கலாம். எழுத பயிற்சி எடுத்து கொள்ளும் ஒரு எழுத்தாளரின் ஆரம்ப கால சிறுகதை என்று விமர்சனத்தை முடித்துவிடலாம். ஆனால் இந்த இரண்டாவது கூறு கதையை ஓரளவுக்கு பொருட்படுத்த வைக்கிறது. இரண்டாவது பத்தியிலிருந்தே தொடங்கிவிடுகிறது. 1. ஸ்டாப்ண்டில் வெறுமனே படுத்திருந்ததனால் தான் இப்படி வசமாக வேலை செய்ய மாட்டிக்கொண்டோம் என்று நொந்து கொள்ளுதல். 2. தாமு தப்பிப்பது போல் தானும் தப்பித்து ஓட நினைத்தல். 3. திருவிழா கோலத்தை பார்த்ததும் களைப்பு அகன்று புதியதாக, உற்சாகமாக கல்லின் முன் இப்போது தான் வந்தோம் என்று உணர்தல். 4. பம்பை ஒலி காலில் ஏற்படுத்தும் ஜிவ்வென்ற உணர்ச்சி. 5. சமையல்கார மாஸ்டரின் முக ஜாடையை வேறொரு பெண் ஜாடையுடன் தொடர்பு படுத்தல். 6. முதலாளியின் எந்தவொரு சலனமும் அற்ற முகபாவனை (திருவிழா நடப்பதே தெரியாதது போல், காசில் மட்டும் குறியாக). 7. மிக சில கணங்களே மட்டும் வந்து போகும் மனைவி மற்றும் குழந்தையின் மேட்டிமைத்தனம், அவர்கள் வந்த போது, வெளிப்பட்ட முதலாளியின் முதல் குரும்புன்னகை. 8. சமையல் கார மாஸ்டர் மற்றும் சப்பிள்ளையரின் வினோத எதிரெதிர் குணாம்சங்கள். 9. நடன நிகழ்ச்சியின் போது உருவாகும் ஒரு கூடுதல் உற்சாகம், தன்னை இழக்கும் நிலை, ஒரு கூட்டு மனோபாவம் (மற்ற இளைஞர்களுடன் வெகு எளிதில் பழகுதல்) 10. கடைசியில் பய உணர்ச்சி கொடுக்கும் அபத்த நினைவுகள் (அம்மாவை பற்றி) என்று நீண்டு கொண்டே போகிறது. முக்கியமாக முதலாளியின் கதாபாத்திரம் சில உரையாடல்கள் மற்றும் உடலசைவுகள் மூலம் எளிதாக வரையறுக்க படுகிறது. ஒரு கதாபாத்திர வடிவமைப்பை அதன் நுணுக்கமான செயல்கள் அல்லது மன ஓட்டத்தின் மூலம் சொல்லலாம். இங்கு இரண்டும் சரிசமமாக கையாளப்பட்டிருக்கிறது என்றே நினைக்கிறேன். உதாரணம், ஜம்புவின் வெளிப்புற செயல்கள் தான் கதையை நடத்தி செல்ல உதவுகிறது. அதன் மூலம் கதையின் உச்சத்திற்கு பயணிக்க வைக்க படுகிறது. ஆனால் இடையிடையே அவனது மன ஓட்டங்கள் மூலம் மற்ற கதாபாத்திரங்களின் துளிகளையும் கதை வெளிப்படுத்துகிறது.

3. கதையின் பயணம் மற்றும் உச்சக்கட்டம்
இந்த கதை பயணமாகும் விதம் எந்த வித இடையூறும் இல்லாமல், காரண காரிய ஊடாட்டங்களை தெளிவுற உணர்த்தி, கதையின் கருவை சென்றடைகிறது. ஒரு எதிர் பாரா சிடுக்கை, விபத்தை பற்றி பேசுவதாக நாம் நினைத்து கொண்டிருப்போம். ஜம்புவின் கண்களில் அந்த திருப்பம் ஒரு மிக பெரிய அபத்தம்.

இப்படி பலவற்றை எடுத்து காட்டினாலும், இந்த சிறுகதை ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் குறைவே. ஒரு கதையை படித்தவுடன் நம்முடைய வாசிப்பனுபவத்தின் பலனாக பல கதைகள் நினைவில் வந்து போகும். ஒரு கதை நமக்குள் உருவாக்கும் புனைவுலகம் நிச்சயமாக வேறு சில எழுத்தாளர்களின் நீட்சியாக இருக்க வாய்ப்புண்டு. முழுக்க முழுக்க புது விதமான கதைகளை படிக்கும் போது தான் அதன் தன்மை, பலம் , பலவீனம் பற்றிய குழப்பங்கள் வருவது சாத்தியம். இந்த கதைக்கு அது போன்ற சாத்தியக்கூறுகள் இல்லை. கே. என். செந்தில் மற்றும் எஸ்.செந்தில் குமார்  இவர்கள் இருவரது புனைவுலகுக்கு நெருங்கிய கதையாக இது உள்ளது. நிறைய எழுத்தாளர்கள் விளிம்பு நிலை மக்களை பற்றி எழுதி தீர்த்திருக்கிறார்கள் (ஜி. நாகராஜன், ஜெயகாந்தன், பெருமாள் முருகன், எஸ்.ரா....)

உக்கிரம் அல்லது உணர்வலைகள் தளர்ச்சியினால் தொய்வு
ஒப்பீடு செய்து பார்க்க முதலில் இங்கிருந்து தொடங்கலாம் என்று நினைக்கிறேன். இந்த கதை அடங்கா உணர்வுகளை கொண்டதாக இருந்திருந்தால் இன்னும் இந்த கதை பயணித்திருக்கும் என்று தோன்றுகிறது. கதையில் உருவாகி வரும் புனைவுலகம் தேவைக்கு ஏற்ப இருந்தாலும் சற்று அழுத்தமாக இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. ஜம்புவின் எளிமையான வாழ்க்கை, அவ்வப்போது வந்து போகும் மன ஓட்டங்கள் என்று காலம் காலமாக ஒரு எதிர் பாரா சம்பவத்தில் முடியும் கதைகளுக்கான அதே தடத்தில் பயணித்திருப்பது அலுப்பூட்டுகிறது. ஜம்புவின் கதாபாத்திர வடிவமைப்பில் இன்னும் கொஞ்சம் தீவிரம் இருந்திருந்தால் நன்று. ஏன் அப்படி செய்ய வேண்டும்? ஒரு நாள், அதுவும் அந்த நாளின் கடைசியில் மட்டும் ஒரு அசாதாரண நிகழ்வு, அந்த அசாதாரண நிகழ்வோடு முடிச்சுடைய தீவிரம் கொண்ட ஒரு கடந்தகாலம் ஜம்புவின் வாழ்வில் இருந்திருந்தால் கதை இன்னும் வலுவாக பதிவாகியிருக்கும். சித்தரிப்பும், நுண்ணிய மன அவதானிப்புகள் சில இடங்களில் வருவதால் மட்டுமே கதையை முழுதாக படிக்கவே முடிந்தது. ஆனால் அது மட்டும் ஒரு சிறந்த கதைக்கு போதாது அல்லவா?

அழகியல் தன்மை குறைவு

இந்த கதை நேர்மாறாக பயணிக்க கூடிய இன்னொரு தடம் என்றால் (என்னை பொறுத்தவரையில்) பல மென்னுணர்வுகளை தூண்டும்
விவரணைகளை சரமாரியாக அடுக்கி வைக்கும் நெகிழ்ச்சியான கதையின் வகையறா. திருவிழா கொண்ட ஊர். எப்போதும் கொட்டி கிடக்கும் மக்கள் கூட்டம் நிறைந்த உணவகம். எவ்வளவோ தனிப்பட்ட அவதானிப்புகள் இந்த இரண்டு தளங்களில் சாத்தியம். உதாரணமாக திருவிழாவின் மிச்சங்கள் பற்றி ஒரு இடத்தில் கூறுகிறார். அது போன்ற பல அவதானிப்புகள் இன்னும் நிறைய வந்திருக்கலாம். இதை அலசுகையில், கதை பயணிக்கும் விதம் முழுக்க முழுக்க ஜம்புவின் பார்வை வழியாக என்பதால் வந்துள்ள கட்டுப்பாடோ என்று தோன்றுகிறது. பல படிமங்களை உருவாக்க தகுந்த  வரைஎல்லையும் இருந்திருக்கிறது. அப்படி உருவாக்கியிருந்தால், நீண்ட நாள் நம் ஒர்மையில் இருந்திருக்க வாய்ப்பு இருந்திருக்கிறது. ஆனால் ஒற்றைப்படையாக கதை சென்று முடிந்து விட்டது. இலக்கியத்துக்குள் நீண்ட நாட்களாக புழங்கி கொண்டிருக்கும் பலருக்கும் இதே உணர்வு தான் கிட்டும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை.

பல இடங்களில் கதையில் வரும் சொற் பிரயோகங்கள் முகம் சுழிக்கவே வைக்கிறது. சில வரிகளை படிக்கும் போது இன்னும் தேர்ந்த வார்த்தைகளை பயன்படுத்தி இருக்கலாம் என்று தோன்றியது. ஜம்புவின் பார்வை வழியாக கதை சொல்லல் நிகழ்ந்தாலும் எழுத்தாளரின் குரல் பெரும்பாலும் ஒலிக்கிறது. அதனால் நிச்சயமாக அது போன்ற சொற்கள் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். அதாவது உரையாடல்களில் கொச்சை மொழிக்கும், மூன்றாம் தர சொற்பிரயோகங்களுக்கும் இடமுண்டு. ஆனால் இந்த கதையில் 'கதை' விவரிக்கப்படுகிறது. அப்போது நெருடலாக வரும் சொற்கள் கதையில் ஒட்டாமல் அதன் தரத்தை கீழே இறக்குகிறது. உதாரணம் 'லூசுத்தனமா...' போன்ற சொற்கள்.
ஆக மொத்தம், முன்னரே பல்வேறு எழுத்தாளர்களால் கூறப்பட்ட கதை கரு மற்றும் புனைவுலகத்தை திரும்பவும் தனக்கு திருப்தி ஏற்படுமாறு கதை சொல்ல முயன்றிருக்கிறார் குமாரானந்தன். சிறுகதை மரபு சங்கிலி கண்ணியில் ஒரு குறிப்பிட்ட கதை பாணியில் அடைக்கப்படும் மற்றுமொரு கதை (yet another story) இந்த தீராத திருநாள் என்று கூறிவிடலாம்.

(கதை ஜூலை17 காலச்சுவடில் வெளியானது)
( ஜூலை தஞ்சைக் கூடல் (29/7/17) கூட்டத்தில் பேசப்பட்ட உரையின் எழுத்து வடிவம்.)

1 comment:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

அலசிய விதம் அருமையாக உள்ளது. பாராட்டுகள்.