Tuesday, March 29, 2016

விளையாட்டுப் பெண்கள்






பெண்கள் பைக் போன்ற பெரிய வாகனங்களை ஓட்டிச்செல்வதை அவ்வளவாக மற்ற பெண்கள் விரும்புவதில்லை. அதேபோல கடினமான எடைகளை தூக்கிச் செய்யும் உடற்பயிற்சிகளை பெண்கள் செய்யகூடாது என்கிற எண்ணம்  பெண்களுக்கு இருக்கிறது. அதனால்தான் என்னவோ பெண்களுக்கு விளையாட்டுகள் போன்ற விஷயங்கள் சரியாக வருவதில்லை என்று நினைக்கிறேன்.
நான் ஒன்பதாவது படிக்கும்போது வாலிபால் விளையாட மிகவும் ஆர்வமாக இருந்தேன். பள்ளி விளையாட்டுக்களிலும் விளையாடி இருக்கிறேன். குச்சியாக இருப்பதால் சப்ஸ்டிடியூடாக வைத்திருந்தார்கள். எங்கள் பள்ளிக்கு விளையாட வந்த பெண்கள் பள்ளி அணி, சர்வீஸ் பந்தை தடுக்கக்கூட முடியாமல் திணறினார்கள். யாருமே இல்லாத இடத்தில்கூட லீ..வீட் என்று அலறி பந்தை கீழே விட்டு கூடியிருந்தவர்களை சிரிக்க வைத்தார்கள். அவர்களுக்கு அப்படிதான் பெண் பயிற்சியாளர்களால் பணிக்கப்பட்டிருந்தது. எந்த சூழலிலும் தங்களுக்கு இட்ட பணிகளை மறக்காமல் செய்கிறார்கள் என்று தோன்றியது.

Wednesday, March 23, 2016

மூட்டைப்பூச்சியை கொல்வது எப்படி?



எப்படி எப்படி என்று தலைப்புகளோடு வரும் சுயஉதவி புத்தகங்களில் சொல்லப்படும் வழிமுறைகள் எந்தளவிற்கு அதன் பொருள் சார்ந்து சாத்தியம் என்று யாராலும் சொல்ல முடிவதில்லை. ஆனால் எப்படி மூட்டைப் பூச்சியை கொல்வது என்று சொல்லப்படும் வழிமுறைகள் சாத்தியமற்றவைகள் என்று என்னால் நிச்சயம் சொல்லமுடியும்.
மூட்டைப்பூச்சியை நசுக்குவது போல உன்னை நசுக்கிவிடுவேன் என்று யாராவது நம்மை மிரட்டினால் அதில் உண்மை இல்லை என்று நாம் நம்பலாம். சொல்லப்போனால் அவர் நம்மை எதுவும் செய்யப்போவதில்லை என்றுதான் அர்த்தம். ஏனெனில் கடித்த ஒரு மூட்டைப் பூச்சியையே நம்மால் சரியாக கண்டுபிடித்து அதை நசுக்க முடியாது. ஒருவேளை வேறு ஒரு பூச்சியை நாம் கண்டுபிடித்தாலும் அதை எளிதில் கொன்றுவிட முடியாது. அதை நசுக்கி ரத்தம் வெளியேறினால் பல பூச்சிகள் உருவாகும் என்று நம்பப்படுகிறது. ஒன்று அதை நெருப்புடன் சுட்டுக் கொல்வது அல்லது தண்ணீரில் போட்டு கொல்வது, அந்த ராத்திரியில் ஒருவர் இதையெல்லாம் தேடிக் கொண்டிருக்கவும் முடியாது.
எங்கள் வீட்டில் மூட்டைப்பூச்சி அதிகமானபோது பெஸ்ட் கண்ரோல் ஆளை அழைத்திருந்தோம். ஒரு சின்ன இடம் விடாமல், எல்லா பொருட்களையும் தூக்கி வெளியே போட்டு, அடித்துவிட்டு எங்களை 5 மணி நேரம் கழித்து வீட்டிற்கு வர சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.

Tuesday, March 22, 2016

பறக்கும் உணவுகள்




ஒரு சாப்பாட்டுக் கடைக்கு சென்று ஆர்டர் சொல்லிவிட்டு காத்திருத்தல் என்கிற வெறுமையை நாம் அடைவதை தமிழகத்தில் பார்க்க முடியாது. சாப்பாடு என்றதும் (அல்லது டோக்கன் வாங்கியதும்) உடனே இலையும் தண்ணீரும் வந்துவிடும். கழுவு முடித்து நிமிர்ந்தால் ஊறுகாயும் அப்பளமும் இருக்கும். பின் காய்கறிகள் சாத தட்டும் வந்துவிடும். நமக்கு அதிக வேலை இருக்காது. சோற்றை அள்ளி இலையில் வைத்துவிட்டால் போதும் மற்ற வேலைகளை அவர்களே செய்துவிடுவார்கள். அவர்களைப் பொருத்தவரை ஒருவரை அனுப்பிவிட்டு அடுத்த வாடிக்கையாளருக்கு இடத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான்.
மகாராஷ்டிராவில் உள்ள புனேயில் தாலி எனப்படும் சாப்பாட்டை சொல்லிவிட்டு அமர்ந்திருந்தால் தம்மடிப்பவர்களாக இருந்தால் போய் தம்மடித்துவிட்டு வரலாம். சாப்பிட்டுவிட்டு தம்மடிக்க நினைப்பவர்கள் போய் வாங்கிவரலாம். யாருக்காவது சாவகாசமாக போன் செய்துவிட்டு வரவேண்டும் என்றாலும் செய்துவிட்டு வரலாம்.