Tuesday, February 23, 2016

கழிவறை மனோபாவம்



மாலையில் என்றும் இல்லாமல் டிபன் வகைகள் சாப்பிட்டுவிட்டு ஒரு காபி குடித்தபின் கொஞ்ச தூரம் நடந்து சென்று ஒரு ரிக்ஷாவில் ஏறி தெரிந்தவர்களின் வீட்டிற்கு என் அம்மா அப்பாவோடு சென்று இறங்கியதும் என் வயறு கலங்கிவிட்டது. என்றுமில்லா மாலைநேர அதீத உணவு என் வயிற்றை பதம் பார்த்துவிட்டது. எனக்கு ரெண்டுக்கு வருது என்றதும், அப்பா அம்மா, தங்கையோடு வந்த எனக்கு அந்த நண்பர்களின் வீட்டு மனிதர்கள் முன்னால் இரண்டு பக்கத்திலிருந்து திட்டு தான் முதலில் கிடைத்தது. இவன் எப்பையுமே இப்படிதான் என்பது மாதிரியான திட்டுகள். நண்பர்களின் குடும்பத்தினர்களையும் சேர்த்து எல்லோருக்கும் பெரும் சங்கடங்களை நான் விளைவித்துவிட்டதாக நினைத்தார்கள். இயற்கையின் அழைப்பு என்று ஆங்கிலத்தில் சொல்லும் இதற்கு நாம் பெரிய சங்கடம் என்றுதான் பெயர் வைத்திருக்கிறோம். அதன் பின்னால் நான் எங்கு சென்றாலும் மிக கவனமாக இருக்க ஆரம்பித்தேன் என நினைக்கிறேன்.

Friday, February 12, 2016

ஏழாம் உலகத்தின் கதை




படித்து முடித்ததும் உடனே ஒரு விமர்சனம் எழுதவேண்டும் என்று தோன்றியது. எழுத ஆரம்பித்தபோதுதான் தெரிந்தது நாவலின் தாக்கம் இருக்கும் வரை அது முடியாது என்று.
நாம் நிஜவாழ்வில் காணும் மக்கள் ஏதோ ஒருவகையில் தங்களை ஒரு பண்பாட்டு சூழலுக்குள் கலாச்சாரம் என்று சொல்லகூடிய இதுவரை கண்டவைகளை கொண்டு உருவாக்கி வைத்திருப்பவைகளைத் தாண்டி அவர்கள் செல்வதில்லை என்பதை நமக்கே தெரிந்திருக்கிறது. ஆனால் இவைகளின் சுவடுகள் இல்லாத மக்களிடம் எந்த நம்பிக்கையில் பழகவோ உறவுவைத்துக் கொள்ளவோ முடியும். அந்த மனிதர்களை கண்டதும் நாம் பயந்து ஓடுவதும் இதற்காகத் தான். அவர்களை ஆன்மா இல்லா மனிதர்கள் என்று சர்வசாதாரணமாக விளித்து ஒதுக்கிவைக்க நினைக்கும் மனிதர்கள் அந்த சக்தியில் இருந்து வந்தவர்கள்தான். தங்களை தூய்மையானவனாக காட்டி அவர்களை சுரட்டி பிழைக்கும் இம்மனிதர்கள் தங்களுக்குள் சொல்லிக்கொள்ளும் ஒரு வாசகம் அது எல்லாம் அவனுக்க செயலாக்கும்.