Tuesday, August 25, 2015

எம்எஸ்வியும் இசையும்

எம்எஸ்வி பாடல்கள் எப்போதும் சட்டென ஆரம்பித்துவிடும். பொதுவாகவே அவரின் பாடல்கள் பேச்சுபோல‌வோ அல்லது கவிதை வாசிப்பதுபோலவேதான் இருக்கின்றன‌. பாடல் ஆரம்பித்ததும் அது என்ன வகைப்பாடல் என்று தெரிந்துவிடுகிறது ஆகவே அவற்றிற்கு தேவையான முன்னிட்டு இசை தேவையில்லாமல் இருக்கிறது. பொதுவாக‌ அவரின் பாடல்கள் அது பாடல்கள் என்கிற பிரக்ஞையை அளிப்பதில்லை. கூர்ந்து கவனிக்கும்போது மட்டுமே இது புலப்படும். இளையராஜா, ரகுமான் பாடல்களின் முதலில் கொஞ்சம் இசை துணுக்குகள் வந்தே பாடல் ஆரம்பிக்கும். இவைகள் பாடல்கள் எனகிற பிரக்ஞையோடு அவற்றை கவனிக்க வேண்டியிருக்கிறது.



பொதுவாக எம்எஸ்வியின் பாடல்கள் மற்றவர்களிடம் சொல்வது போல் இருக்கிறது. காதலன் காதலியிடம் அல்லது காதலி காதலனிடம் அல்லது நாயகன் மக்களிடம், நாயகி தோழியிடம், தோழிகள் நாயகியிடம் இப்படி நிறைய சொல்லலாம். ஆனால் இளையராஜா, ரகுமான், அனிருத் போன்ற இசையாளர்களின் அது இல்லை என தோன்றுகிறது. உதாரணமாக ராஜா பாடும் நான் தேடும் செவ்வந்திபூவிது என்கிற பாடல் காதலிக்கு சொல்வது போல் இருந்தாலும் நாயகன் அவள் முகத்தை பார்க்காமல் திரும்பி நின்று பாடுவதுபோல்தான் எனக்கு படுகிறது.
எம்எஸ்வியை பாடல் வேண்டும் என அதன் சூழ்நிலையை சொன்னதும் பியானோ முன் அமர்ந்து அந்த பாடலை பலமுறை வாசித்து தன் மனதில் இருக்கும் அந்த பாடலை அந்த உணர்ச்சியை வெளிகொணர செய்கிறார். தீர்த்த் கரையினிலே (பாரதியார்) என்கிற‌ பாடலில் வேதனை செய்குதடி என்கிற இடத்தில் சற்று அதிகமாக அழுத்தத்தோடு (கமகம்) வெளிபடுத்த வைக்க ராகத்தை சற்று மாற்றி அந்த வேதனையை என்ன சொல்லவருகிறேன் என்கிற உணர்ச்சியோடு செய்கிறார். அந்த வரியை கவனித்து அது எப்போது எழுதப்பட்ட பாட்டுக்கு மெட்டு எழுதுவதால் அந்த பாடலின் இயல்பை ஏற்றுக்கொண்டு அதற்கு தகுந்தாற்போல் தன் மெட்டை அமைக்கிறார். பல மற்ற இசையமைப்பாளர்களிடம், அந்த காலத்திலிருந்து இந்த காலம் வரை, இல்லாத ஒரு விஷயம். அவர்கள் மெட்டமைத்தவுடன் பின் அதை மாற்ற அவர்கள் சம்மதிப்பதில்லை.
அத்தோடு பாடகர்கள் தங்களின் பங்களிப்பை அந்த பாடலில் செய்ய எம் எஸ்வி முழுமையாக அனுமதிக்கிறார் என்பதை பாடலை கேட்கும்போதே தெரியும். டிஎம்எஸும், எஸ்பிபியும் தங்கள் பாடல்களில் தங்களுக்கு தேவையான இடத்தை அவர்கள் எடுத்துக் கொண்டிருப்பதை காணலாம். பொன்மகள் வந்தாள், உனக்கென்ன மேலே நின்றாய் ஆகிய இருபாடல்களை கவனித்தாலே இது புரியும். யேசுதாஸ் எம்எஸ்வியின் பாடல்களில் அப்படி உரிமையுடன் செய்யவிரும்பவில்லை என நினைக்கிறேன். இதே பாடகர்கள் மற்ற இசையமைபாளர்களின் பாடல்களில் அவ்வாறு செய்ததுபோல் தெரியாது. அந்த மெட்டின் எல்லைக்குள் மட்டுமே பாடவேண்டியிருக்கும். அடிராக்கமாகைய தட்டு என்ற பாடலில், அது பிரிவாய்ஸில் இருந்தாலும்கூட, எஸ்பிபி அதன் எல்லையை தாண்டி போகவில்லை என்பதை கவனிக்கலாம்.
எம் எஸ்வி சென்னைவந்தபோது சாதாரண நாடக, சினிமா நடிகராகத்தான் நினைத்து வந்திருப்பதாக தெரிகிறது. பின் எடுபுடி வேலையாக டீ போன்றவைகளை வாங்கிவரும் பையனாக சினிமா கம்பெனியில் இருந்திருக்கிறார். உதவி இசையமைப்பாளராக மாறி பின் இசையமைபாளராக உருமாறியிருக்கிறார். 25 வயதில் இசையமைபாளராக ஆகிவிட்டார். இளையராஜா, ரகுமான் ஆனபோது இருந்த அவர்களின் வயதைவிட மிககுறைவு.
எம்எஸ்வி ஒரு ஆபீஸ்பாயாக இருந்து வெளிவந்தவர் ஆகவே எல்லோரையும் அனுசரித்துப் போகும் குணமுடையவராக இருக்கிறார். சீதர், எம்ஜியார், பாலசந்தர் போன்றவர்கள் தொடர்ந்து அவருக்கு அழுத்தங்களைக் கொடுத்து வெவ்வெறு பாடல்களை, மிக நல்ல பாடல்களாக அமைய வேண்டி, பெற்றுக் கொண்டார்கள். அவர்களுக்கு எந்த வெறுப்பும் இல்லாமல் ஆழ்ந்த ஈடுபாடுடன் செய்ததாகவே, பலரின் பேட்டிகளின் மூலம், தெரிகிறது.
கண்ணதாசன் மற்றவர்கள் எம்எஸ்வியின் பாடல்களுக்கு எழுதகூடாது என்று கேட்டுக்கொண்டதாக அவரே சொல்லியிருக்கிறார். ஆனால் எல்லோரிடமும் அனுசரித்தே அவர் பாடல்களை செய்திருக்கிறார். பொதுவாக ஆழ்ந்த இலக்கிய/இசை ஞானம் உடையவர்கள் மற்ற விஷயங்களில் கவனம் கொள்ளாதவர்களாகவே இருப்பார்கள். எம்எஸ்வியும் அப்படிதான். இசை சார்ந்த விஷயங்களை தவிர மற்ற உலக நடப்புகள் எதையும் அறியாதவராகவே இருந்திருக்கிறார். கண்ணதாசனின் பேச்சுகளிலும் எழுத்துகளின் மூலம் இதை அறியலாம்.
எம் எஸ்வி தமிழ் படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்தது தமிழ் ரசிகர்களுக்கு கொடுப்பினை என்றுதான் நினைக்க வேண்டும். சோகம், காதல், தன்னம்பிக்கை, என்று எந்த வகைக்கும் அவரிடமிருந்து பாடல்கள் வந்துள்ளன. கேவி மகாதேவன் பாடல்கள் சாஸ்திரிய சங்கீதத்தை அடிப்படையாக கொண்டிருந்தாலும் ஒரு எல்லைக்கு மேல் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் பாடல்களுக்கு மெட்டு அமைக்கவில்லை. சாஸ்திரிய சங்கீதம் என்று இல்லை, இந்துஸ்தானி, மெல்லிசை போன்ற பலவகை கூட்டு பிரவாகமாக ஒரு சதாரண ரசிகன் முதல் ஆழ்ந்த இசைபுலமை உடைய ரசிகர்கள் வரை ரசிக்கும்படியான இசையை அவரால் கொடுக்க முடிந்திருக்கிறது.
எளிய மனிதராக இருந்ததாலேயே அவரால் வெளியில் தன் ஆளுமையை காட்டி கொள்ள அவர் விரும்பியதில்லை. சின்ன இசையமைபாளர் கூட ஒரு பொதுமேடையில் தன்னை ஒரு முக்கியமான இசை ஞானமுடையவராக காட்டிக் கொள்வதை பார்க்கும்போது எம் எஸ்வி அவர் ஆளுமையை காட்டிக் கொள்ள தவறி விட்டார் என்றுதான் தோன்றுகிறது. ஆனால் அதுவும் ஒருவகையில் நல்லதுதான். சாதாரண தயாரிப்பாளர், இயக்குனர்கள் அவரை அனுகி நல்ல பாடல்களை வெவ்வேறு விதமான புதிய பாடல்களை பெற்றிருக்க முடிகிறது. அவர் தன் ஆளுமையை காட்டிக் கொள்ள ஆரம்பித்திருந்தால் இது சாத்தியப்பட்டிருக்காது.
தந்தன தத்தன தையன தத்தன என தொடங்கும் வறுமையின் நிறம் சிவப்பு படப்பாடல் இன்று சாத்தியமாகி இருக்காது. அதற்கு இயக்குனர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர்கள் போன்றவர்கள் ஒரு கூட்டு செயலாக ஒரு இடத்தில் அமர்ந்து செய்ய வேண்டியிருக்கும். இன்று அப்படி ஒரு பாடல் எடுக்கப்படுவதில்லை என தெரிகிறது. அவர் இருக்கும் வரை அகங்காரமற்ற சூழலை தக்கவைக்க உதவினார் என்பதே அவருக்கு தமிழ் சினிமா பெரிய நன்றியை சொல்லவேண்டியிருக்கும்.

2 comments:

C 3 said...

உண்மை.மிக பெருந் தன்மையாகவும் வாழ்ந்தார்....

C 3 said...

உண்மை.மிக பெருந் தன்மையாகவும் வாழ்ந்தார்....