Tuesday, July 28, 2015

அப்துல் கலாம்: அஞ்சலி

சில நாட்களுக்கு முன்பே அப்துல் கலாம் அவர்களின் தலையலங்காரம் பற்றி ஒரு குறிப்பு எழுதியிருந்தேன் முகநூலில். அவருடைய தலையலங்காரம் அவரின் சிறுவயதிலிருந்து தொடர்ந்து வருவதை பல புகைப்படங்களில் காணமுடிகிறது. ஒரு படம்கூட அந்த ஸ்டைல் இல்லாமல் இல்லை. காதுகள் சற்று படர்ந்திருக்கலாம் அதை மறைக்க அப்படி செய்திருக்கலாம் என நினைக்கிறேன். ஆனால் அவர் தன் வாழ்வில் எதையும் மறைக்காமல் ஒளிவுமறைவு இன்றி இருப்பதாக தெரிகிறது. அவரது ஆசிரியர்கள், நண்பர்கள், அவரது தனிப்பட்ட கொள்கை, அவரது பேச்சுகள் என்று எல்லாமே வெளியே தெரியும்படி இருக்கிறது. ஒரு முஸ்லீமாக இருந்து இந்து ஆசிரியரின் சீடராக தான் பெற்ற கல்வி அறிவைப் பற்றியும் அதன் பின்னால் தன் வாழ்வில் நடந்த பல்வேறு விஷயங்களை சொல்லியிருகிறார். ஜனாதிபதியாக பொறுப்பேற்ற போது கீதையின் வரிகளை மீடியாவில் சொன்னபோது சற்று ஆச்சரியமாகத்தான் இருந்தது.


Wednesday, July 15, 2015

வாசக எழுத்தாளர் இடைவெளி

வாசகர் எழுத்தாளர்களின் இடைவெளி தொடர்ந்து குறைந்து கொண்டே வருவது போலிருக்கிறது. முன்பு எழுத்தாளர்க‌ள் கடித தொடர்பில் தான் பத்திரிக்கை ஆசிரியர்களுடன் பேச வேண்டியிருந்தது. ஒவ்வொரு படைப்பையும் எழுதிவிட்டு மாதக்கணக்கில் காத்திருக்கவும் வேண்டியிருந்தது. தொடர்ந்து எழுதுபவர்கள் மட்டும் அந்த பத்திரிக்கை அலுவலகத்திற்கு வந்து போவர்களாக இருந்தார்கள். அந்தமாதிரியான சூழலில் எழுத்தாளருக்கும் வாசகர்களுக்கும் பெரிய பரிச்சயம் இருக்க வாய்ப்பு இருந்ததில்லை. எழுத்தாளரை காண அல்லது தொடர்பு கொள்ள முயற்சிப்பதே ஒரு வாசகருக்கும் பெரிய வேலையாக இருந்தது. அதுவும் மிக பிரபல்யமாக இருக்கும் எழுத்தாளருக்கு மட்டுமே கிடைக்க கூடியது. இதனால் சாதாரண எழுத்தாளர்கள் தங்களை மறைத்துக் கொள்ளவும், வெவ்வேறு பெயர்களில் எழுதவும் விரும்பினார்கள்.

Tuesday, July 14, 2015

அஞ்சலி: எம்எஸ்வி

எந்த விருதுகளும் இல்லாமல் மக்கள் மனதை கொள்ளைக் கொண்ட எம்எஸ்வி, ஏஆர்ரகுமான், இளையராஜாவைவிட மிக இளம்வயதில் (25) இசையமைக்க வந்துவிட்டார். ஐம்பதுகளில் ஆரம்பத்திலிருந்து 80கள் இறுதிவரை தொடர்ந்து நல்ல பாடல்களை கிட்டதட்ட 30 ஆண்டுகள் தொடர்ந்து வழங்கியுள்ளார். 90களிலும் 2000க்கு பின்னும் சில படங்களில் பாடியும், மெட்டமைத்தும் உள்ளார். அதாவது கிட்டதட்ட 65 ஆண்டுகள் தொடர்ந்து சினிமாவில் இசைத்துறையில் இருந்துள்ளார். எந்த சலிப்பும் இல்லாமல் அவர் உழைத்ததாக சொல்வார்கள். அதேபோல் எந்த சலிப்பும் இல்லாமல் அவர் பாடல்களைக் இன்றும் கேட்க முடிகிறது. 77ல் வெளியான நினைத்தாலே இனிக்கும் படத்தின் சம்மோசிவ சம்போ பாடல் அவர் இசையமைத்தவைகளிலும் பாடியவைகளிலும் சிறந்ததாக நினைக்கிறேன்.

Monday, July 13, 2015

வாசிப்பு எப்படி இருக்க வேண்டும்.

என் நண்பர் ஒருவர் புத்தகம் பற்றி பேச்சு வந்தவுடன் எங்கங்க படிக்க நேரமிருக்குது, அந்தவேல இந்தவேலன்னு எல்லாம் சரியாக இருக்குது என்பார். படிக்கிறதுக்கு நாமதான் நேரத்த உருவாக்னும் என்றால், நீங்க சொல்றது சரிதான் ஆனா நேரமே அமைய மாட்டேங்குதே என்று மீண்டும் அதேயே கூறுவார். பலபேருக்கு படிக்க ஆசை இருக்கிறது மனைவியின் தொல்லை, மக்களின் தொல்லை என்று பல அவர்களுக்கு இடையூராக அமைக்கின்றன. வாசிப்பை சில நாட்கள் மட்டும் தீவிரமாக செய்துவிட்டு மற்ற நாட்க‌ளில் சும்மா இருப்பார்கள். பொதுவாக நிலைத்தன்மை (consistency) இருப்பதில்லை. ஒரு புத்தகத்தை ஆரம்பித்துவிட்டு பாதியில் விட்டுவிட்டு பல நாட்கள் கழித்து மீண்டும் வேறு ஒரு புத்தகத்தை படிக்க ஆரம்பிப்பது, மீண்டும் சில நாட்களில் வேறு ஒன்றை புதியதாக ஆரம்பிப்பது நடந்து கொண்டே இருக்கும்.
வாசிப்பு ஒரு தொடர் செயல் அதை ஒரு ரிலே ரேசாகத்தான் நினைக்கவேண்டும். ஒன்றை படித்தப்பின் அதன் தொடர்ப்புடைய மற்றொன்றை படிக்க வேண்டியிருக்கும். பின் அதன் தொடர்ச்சி. இப்படி தொடர் சங்கிலியாக செல்லவேண்டியிருக்கும். அப்படி வாசிக்கும்போது தான் வாசிப்பு ஒரு முழுமையை பெறும். மனதிற்குள் தொடர் விவாதத்தில் இருப்பவர்களால் தொடர்ந்து வாசிப்பை விடாமல் நிகழ்த்தமுடியும் என நினைக்கிறேன். அப்படி இல்லாதவர்களும் வெகுஜன வாசிப்பை தொடரமுடியும். அத்தோடு ஒரு வாசிப்பு அடுத்த கட்ட வாசிப்பை தொடங்கிவைக்க வேண்டும். அதாவது அதைவிட தீவிரமான, அதிக நேரத்தை கோருகின்ற ஒரு புத்தகத்தை வாசிக்க வைக்க வேண்டும். அதுவே சிறந்த வாசிப்பு.

Monday, July 6, 2015

பாபநாசம்

முன்பே சொல்லிவிடவேண்டும் என நினைக்கிறேன். திரிஸ்யம் படத்தில் நடித்த மோகன்லாலைவிட பாபநாசத்தில் கமல் நன்றாகவே நடித்திருக்கிறார். முக்கியமாக, ரீமேக் என்பதால் இந்த ஓப்பீடு எப்படியும் நடந்தே தீரும், ப‌லர் நன்றாக நடிக்கவில்லை என்றுதான் சொல்லுவார்கள். ஆனால் தமிழ் சினிமாவின் கதாநாயகன் ஒரு மெளனியை போன்று இருக்க முடியாது. நம் சமூகம் கலகலப்பான சூழலிலும் கூடிவாழும் இயல்புடைய கூட்டமாகதான் இருக்கிறது. ஆனால் மலையாள உலகம் அமைதியும் மென்மையும் நிறைந்தது அங்கு அந்த சூழலுக்கு அவர் (மோகன்லால்) நடித்த நடிப்புதான் எடுபடும். அதைதான் நம்சூழலுக்கு தகுந்தமாதிரி லேசாக சுயம்புலிங்கத்தை மாற்றியிருக்கிறார்கள். நம்முடைய மக்களிடம் சினிமா பற்றி கேட்டுப்பாருங்கள், வீட்டுல இருக்கிற பிரச்சனை போதாதா, சினிமாவாவது கொஞ்சம் ஜாலியா இருக்கட்டும் என்பார்கள். இந்த மக்களை சற்று சீரியசான படத்தை கொடுத்திருப்பதும் அதில் கமல் தைரியமாக நடிக்க வந்திருப்பதும் பாராட்டுக்குரியது. படம் முழுவதும் அவரிடம் ததும்பும் லேசாக குதுகூலமும், அசட்டுதனமும் அவர் இதுவரை செய்திராத புதிய விஷயங்கள்.