Thursday, January 1, 2015

தமிழும் இந்தியும்


இந்தி உட்பட மற்ற இந்திய மொழிகளை வெறுப்பவர்கள் அல்லது காழ்ப்புணர்வோடு பேசுபவர்கள் பொதுவாக‌ தமிழகத்தை விட்டு வெளியே சென்றவர்கள் இல்லை என்பதை கவனிக்கலாம். வேலைக்காகவோ அல்லது சுற்றுல்லாவிற்காக‌வோகூட‌ இந்தியாவின் பிற பாகங்களுக்கு செல்லாதவர்கள்தான் இந்த நிலைப்பாட்டை உடையவராக இருப்பார்கள். வேறு சிலர் அரசியல் மேடைப் பேச்சிலிருந்து இக்கருத்தை பெற்றிருப்பார்கள். சில காரணங்களுக்காக வெளியே சென்றவர்கள இந்திய மொழிகளை குறிப்பாக இந்தியை வெறுப்பதில்லை. இந்தி எதிர்ப்பு நிலையை கொண்டவர்கள் கூட‌ அப்படி தமிழகத்தை விட்டு வெளியே வந்ததும் அந்த நிலை மாறுவதையும் கவனிக்க முடியும். நானும் அப்படி மாறியவனே.
ஏன் இந்திமொழியை வெறுக்க வேண்டும்? அது திணிக்கப்படுகிறது அல்லது தமிழை குறைத்து மதிப்பிடப்படுகிறது என்பதாலா? ஆம் என்றால் ஒருவகையில் அது நியாயம் என்றுதான் படுகிறது. அதனால் தமிழ் மொழியில் உள்ள பல வார்த்தைகள், வாக்கியங்கள் மறைந்து இந்தியாக மாறிவிடும் அபாயம் இருக்கிறது. தூய மொழியாகிய தமிழ்மொழியில், இடையில் சில மொழிகளை சேர்த்து கண்டுபிடிக்கப்பட்ட மொழியாகிய இந்தி கலப்பதால் தூய்மை கெடும் என்பதும் ஏற்றுக்கொள்ள கூடியதாகவே எனக்குப்படுகிறது. ஆனால் இது நாள் வரை தமிழ் மொழியில் இருக்கும் வார்த்தைகள் அதன் அர்த்தங்களும் தமிழ்மொழியிலிருந்து நேரடியாக‌ வந்தவைகள் தானா என்றால் இல்லை என்றுதான் மொழியறிஞ‌ர்களின் பதிலாக இருக்கிறது. தினப்படி நாம் பேசும் சாதாரணப் பேச்சுக்களில் சமஸ்கிருதம், பாலி, பிராகிருதம், தெலுகு, மாராட்டி அத்தோடு நமக்கு நேரடியாக சம்பந்தமே படாத உருது மொழியின் வார்த்தைகள்கூட இருக்கின்றன.

வார்த்தைகள் என்று இல்லை, நம் பழக்கவழக்கங்கள், நம் ஆசாரங்கள், நம் மரபுகள் என்றும் அனைத்தும் கலந்தே உள்ளன. இந்தியாவின் பிற மொழி மக்களுடன் கொண்டும் கொடுத்தும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பல நூற்றாண்டுகளாக இது நடந்துகொண்டேயிருக்கிறது. குறிப்பாக இந்தி மாதிரியான மொழிகள் பேசுவதால் நம் மொழியில் புதிய வார்த்தைகள் புகுந்து தூய்மை கெட்டுவிடும் என்பது முதிராத பதிலாகவே பார்க்கப்படும்.
கன்னடம், மராட்டி, ஒடியா, பெங்காலி, பஞ்சாபி போன்ற பெரிய மொழிகளை தாய்மொழியாக கொண்டவர்கள் சராசரியாக 3 முதல் 5 மொழிகளை பேசக்கூடியவர்களாக இருப்பார்கள். அதை அந்தந்த மாநிலங்களுக்கு செல்லும்போது நேரடியாக பார்த்தே புரிந்துக் கொள்ளமுடியும். போஜ்பூரி, மைதிலி, ராஜஸ்தானி, ஹ‌ர்யானி போன்றமொழிகளைப் பேசுபவர்கள் இதைவிட அதிக மொழிகளை தெரிந்து வைத்திருப்பார்கள்.
ஒரு ராஜஸ்தானிக்கு, ராஜஸ்தானியும் இந்தியும் தவிர வேறு இருமொழிகள் கட்டாயம் தெரிந்திருக்கும். ராஜஸ்தானி மொழியில் உள்ளே உபமொழிகளாக‌ எட்டு மொழிகள் அடங்கியுள்ளன‌ அவைகளில் சிலவேனும் அவர் அறிந்திருப்பார். அவர் ஒவ்வொரு ஊராக சென்று வியாபாரம் செய்யும் வேலைகாரணமாக அந்தந்த ஊர்களின் மொழிகள் தெரிந்து இருக்கும். அதைதவிர மற்றமொழிகளில் சில வார்த்தைகளை தெரிந்து வைத்திருப்பார்.
பொதுவாக நானறிந்தவரை இந்தியா முழுவதும் ஒரு பண்பு இருப்பதை புரிந்து கொண்டிருக்கிறேன். அது, தமிழக மக்களைத்தவிர, எல்லாமக்களும் வேறு மொழிகளை கற்பதில் மிகுந்த ஆர்வமுடைவர்களாக இருக்கிறார்கள். இந்த மொழியை கற்ற முயற்சி செய்திருக்கிறேன். அந்த மொழி நண்பர் எனக்கு கிடைத்திருக்கிறார் அவருடன் பேசி இந்த மொழியை விரைவில் கற்றுவிடுவேன் என்பார்க‌ள். இவர்களில் பொதுவாக இந்தி பேசும் மக்கள் நேரடியாக இதை சொல்வதில்லை என்றாலும் அவர்களுக்கு பல மொழிகளின் அறிமுகம் கொண்டவர்கள்தான். வீட்டிற்கு சென்று பாடங்களை எடுக்கும் ஒரு ஆசிரியை பிறமொழி வீடுகளுக்கு செல்லும்போது அந்த மனிதர்களின் மொழியை கற்று கொள்பவராக இருக்கிறார், இதை அப்படிபட்ட ஒருவர் என்னிடம் கூறியிருக்கிறார்.
அதிகமாக மொழியை கற்பதால் தங்கள் தொழில்/வியாபரத்திற்கு உதவுவதாக நினைக்கிறார்கள். புதிய மனிதர்களையும் அவர்களின் பழக்கங்களை தெரிந்து கொள்வதால் தங்களை அறிவுநிலைகளில் உயர்ந்தவர்கள் என‌ நினைக்கிறார்கள்.
கர்நாடகா, கேரளாவில் பொதுவாக இதைக்காணலாம். அவர்களிடம் எந்த மொழியில் பேசினாலும் அந்த மொழியில் பதிலளிப்பார்கள். அதில் அவர்களுக்கு பெருமை இருப்பதையும் கவனிக்கலாம். கர்நாடகாவின் கேரளாவின் உள்கிராமங்களுக்கு சென்றால் அங்கு தென்னிந்திய மொழிகள் அனைத்தையும் தெரிந்து வைத்திருப்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம். நாம் பேசும்போது எந்த காழ்ப்புணர்ச்சி இல்லாமல் நாம் பேசும் மொழியிலியே பதிலழிப்பார்கள்.
ஒரு மொழியை கற்கும்போது ஒரு பண்பாட்டை கற்றுக்கொள்கிறோம். புதிய மனிதராக மாறுகிறோம். ஒரு பெரிய நூலைக் கற்கும்போது ஏற்படும் மனநிறைவைப்போல ஒரு மொழியை கற்றுக்கொள்வதில் இருக்கிறது.
நான் புனே, தில்லி, பங்களூரில் இருந்திருக்கிறேன். இந்தி, போஜ்பூரி, பெங்காலி, மராட்டி, கன்னட, தெலுகு, மலையாள மொழி நண்பர்களுடன் பழகியிருக்கிறேன். மற்ற மொழிகளில் அவர்கள் பேசினாலும் தம் மக்களை காணும்போது அல்லது புதியவர்களை தொடர்பு கொள்ளும்போது தங்கள் மொழியில் தான் மிகப்ரியமாக பேசிக்கொள்ளுவார்கள். ஆனால் தமிழர்கள் நேர் மாதிரி. தமிழர்களிடையே வேறுபாடு அதிகம் இருக்கும். என்ன ஜாதி என்ன மதம் போன்றவைகள் முதலில் அவர்களிடையே தோன்றும். பின் பேசுவது அவர்களின் பதவி, பொருளியல் நிலைப்பொருத்து உயர் ஆங்கிலம் அல்லது உடைந்த ஆங்கிலமாக இருக்கும். இதை எந்த அவசர முடிவிலும் சொல்லவில்லை. பலமுறை, பலமனிதர்களிடம் வேவ்வேறு இடங்களில் இதை கண்டிருக்கிறேன்.
பிறமொழி நண்பர்கள் தமிழில் பேசும்போது தமிழை கொலைசெய்வதாக குறைபடுவோம். அவரிடமே கூறுவோம். ஆனால் மற்ற மொழி நண்பர்கள் அப்படி சொன்னதே இல்லை. தவறாக பேசும்போது அதை எல்லோர் முன் கூறி சங்கட‌படுத்துவதுகூட தவறாக நினைப்பார்கள். தனியே இருக்கும்போது இந்த தவறுகளை செய்திருக்கிறீர்கள் என்று எடுத்து கூறியிருக்கிறார்கள். நாம் எந்த லஞ்சையும் இல்லாமல் எல்லோர் முன் குறைகூறித்தான் வருகிறோம்.
ஆங்கிலத்தை நாம் மிக உயர்வான ஒரு பண்டமாக நினைப்பதுபோல் எந்த மொழிக்காரரும் நினைப்பதில்லை. சொல்லபோனால் அவர்களுக்கு ஆங்கிலம் ஒரு பொருட்டே அல்ல. இந்தியாவில் (தமிழகம் தவிர) எந்த மூலையிலும் இந்தியும் அது தெரியாவிட்டால் அவர்களின் தாய்மொழியிலும் பேசி சமாளித்துக் கொள்ளலாம். இந்தியில்லாத‌ வேறுமொழிகளை பேசும்போது கூர்ந்து கவனித்து அதற்கு முடிந்தவரை பதிலளிப்பார்கள். ஆனால் ஆங்கிலத்தில் பேசினால் ஒரு சின்ன பதிலைக்கூட பெற்றுவிடமுடியாது.
மாறாக நமக்கு ஆங்கிலம் ஒரு பெரிய வரப்பிரசாதம். கடவுள் நமக்கு கொடுத்துவிட்டு சென்றுவிட்ட அமுதம். இதை தெரியாதவர்கள் சபிக்கப்பட்டவர்கள் என்ற ரிதியில் சாதாரண உரையாடலிலும், எந்த தமிழ் பேச்சு அரங்கத்திலும், மக்களுடனாக பேட்டிகள் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளிலும், சாதாரணம் அமெச்சூர் விளம்பரத்திலும் காணலாம்.
பொதுவாக மேடைப்பேச்சுகளில் இப்படி சொல்வதை காணலாம். ஆங்கிலம் எனக்கு இருக்கிறது. அதைக்கொண்டு இந்தியாவிலும் அயலிலும் தொடர்ப்பு படுத்திக்கொள்ளமுடியும் என்பார்கள். மேல்மட்டத்தில் மட்டும்தான் ஆங்கிலம் பயன்படும். அத்தோடு அது கேள்விபதில் போன்ற பேச்சுக்களுக்கு மட்டுமே ப‌யன்படும். அவ்வளவுதான் எதிர்நபர்களும் அறிந்திருப்பார்கள். கருத்து பரிமாற்றத்திற்கு இடமே இருக்காது. அதற்கு அந்தந்த மொழிகளோ இந்தியோ அறிந்தால் மட்டுமே உண்டு.
ஆங்கிலத்தின் மீது நமக்கு இருக்கும் மோகத்தால் நாம் இழப்பது நமது தொடர்புகளை, பண்பாட்டை, வியாபாரத்தை எல்லாமும்தான். இந்த புரிதலை நாம் அடையாதவரை இந்தி நமக்கு கசக்கதான் செய்யும்.

No comments: