Friday, October 5, 2012

நவீன தமிழ் வலைப்பூக்கள்

வா.மணிகண்டன் அவருக்கு பிடித்த வலைபக்கங்களை தன் வலைப்பூவில் வெளியிட்டுள்ளார். இதில் பல என்க்கும் பிடித்தமானவைகளே. மற்றவர்களுக்கு பயன்படும் வகையில் இங்கே மீண்டும்...



மயிலிறகுகள் - வா.மணிகண்டன்

அழியாத கோலங்கள்:

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து செயல்படும் இந்த வலைப்பதிவில் இதுவரை 'தீராக் காதல்' என்னும் நாவலின் அத்தியாயங்கள் மட்டுமே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. இதுவரை வெளிவராதது இந்த நாவல்.

ஒரு த்ரில்லர் கதையை நேர்த்தியாகவும் விறுவிறுப்பாகவும் கொண்டு செல்லும் மீசை முனுசாமியின் எழுத்துக்களை தொடர்ந்து வாசித்துவிடுகிறேன். உண்மையில் மீசை முனுசாமி என்பது புனைப்பெயர். அவர் ஒரு பத்திரிக்கையாளர் என கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் பிற தகவல்களைத் தெரிந்து கொள்ள முடிந்ததில்லை.

விறுவிறுப்பாக ஒரு எழுத்தை கொண்டு செல்வது சாதாரணம். இதை எழுத்தில் தனக்கு இருக்கும் பயிற்சியின் மூலம் எழுத்தாளன் செய்துவிடலாம். ஆனால் கதைகளுக்குள் இருக்கும் தகவல்கள், அனுபவங்கள் போன்றவை அந்த எழுத்தை உயிர்ப்புடையதாக மாற்றுகின்றன. அதை மீசை முனுசாமி சாதாரணமாக செய்கிறார். 


நாவல், சிறுகதை, மொழிபெயர்ப்பு, கட்டுரைகள் என ரவுண்டு கட்டி அடிக்கும் அபிலாஷின் வலைத்தம். சமகால இளம் எழுத்தாளர்களில் இவரிடம் இருக்கும் தீவிரத்தன்மை பிரமிப்பூட்டக் கூடியது. அந்த அளவுக்கு தொடர்ச்சியாக இடைவெளியில்லாமல் எழுதி வருகிறார். 

கிரிக்கெட் குறித்தான விரிவான கட்டுரைகள் தமிழில் அபூர்வம். அந்தக் குறையை அபிலாஷ் நிவர்த்தி செய்கிறார். கிரிக்கெட்டின் நுட்பங்கள், அதில் இருக்கும் அரசியல் என சகலத்தையும் அலசும் கட்டுரைகளை இந்த தளத்தில் வாசிக்கலாம். ஹைக்கூ மொழிபெயர்ப்பும் நிறைய செய்திருக்கிறார் அபிலாஷ்.

இலக்கிய விமர்சனமும் இவரது எழுத்துக்களில் கிடைக்கிறது. 

அபிலாஷின் ஜப்பானிய ஹைக்கூ மொழிபெயர்ப்பு, கிரிக்கெட் குறித்தான கட்டுரைகள், கால்கள் (நாவல்) ஆகியன நூல்களாக வெளிவந்திருக்கின்றன.


சந்தோஷ் முதன்மையாக ஓவியர். உயிர்மை, காலச்சுவடு போன்ற பதிப்பகங்களில் வெளியான பல புத்தகங்களின் அட்டைப்படங்கள் இவரது கைவண்ணத்தில் வெளியானவை. இப்பொழுது பதிப்பகத்துறையை கொஞ்சம் ஓரங்கட்டிவிட்டு விளம்பர உலகில் படம் காட்டிக் கொண்டிருக்கிறார். இவர் ஓவியம் மட்டும்தான் வரைவார் என நினைத்துக் கொண்டிருந்தால் இவரது வலைப்பதிவு பெரும் அதிர்ச்சி. இன்ப அதிர்ச்சிதான்.

அசால்ட்டான மொழியில் தன் அனுபவங்களை எழுதிவிடுவதில் சந்தோஷ் கில்லாடி. நுட்பமாக கவனித்தால் இந்த எழுத்துக்களுக்குள் சிறுகதைக்குரிய தன்மை ஒளிந்திருக்கும். நகைச்சுவையும் பிரமாதப்படுத்தும். அவ்வப்போது சிக்ஸர் அடித்துவிட்டு காணாமல் போய்விடுகிறார். நின்று அடித்தால் செஞ்சுரியே அடிப்பார். அப்படியொரு தில்லாலங்கடி இந்த சந்தோஷ்.

தந்துகி:

மிகச்சிறந்த சிறுகதை எழுத்தாளர், களப்போராளி ஆதவன் தீட்சண்யாவின் வலைத்த ம் இது. தற்பொழுது ஓசூரில் வசிக்கிறார். இவரது கூர்மையான சமூக விமர்சனங்களுக்கும், அங்கத எழுத்திற்கும் நான் ரசிகன். இவர் ஓசூரைப் பற்றி என் விகடனில் எழுதிவரும் கட்டுரைகள் மிக அதிக அளவிலான வாசக ஈர்ப்பை பெற்றிருக்கின்றன.

இவரது எழுத்துக்கள் இந்தத் தளத்தில் வகைப்படுத்தப்படாமல் இருக்கின்றன என்பது குறை.

கவின்மலர்:

கவிஞர் கவின்மலரின் வலைத்தளம். இவரது கவிதைகளையும், சிறுகதைகளையும், சமூக உணர்வு சார்ந்த கட்டுரைகளையும் இந்தத் தளத்தில் வாசிக்க முடிகிறது. ஆனந்த விகடனில் பணியாற்றும் கவின்மலரின் எழுத்துக்கள் பெரும் தாக்கத்தை உண்டு பண்ணக் கூடிய வீச்சினைக் கொண்டவை.

சமீப காலமாக விகடனுக்காக எழுதிய கட்டுரைகளை தனது தளத்தில் பிரசுரிக்கிறார். வலைப்பதிவுக்கென பிரத்யேகமாக எழுதுகிறாரா எனத் தெரியவில்லை.

கண்ணாடிக் கிணறு:

கவிஞர் கடற்கரய்யின் வலைப்பூ. இவர் குமுதம் குழுமத்தில் பணியில் இருக்கிறார்.  இவரது கவிதைகள், இவர் செய்த நேர்காணல்கள், கட்டுரைகள், விமர்சனங்கள், அனுபவங்கள் என பரவலான வாசிப்பு அனுபவத்தை தரும் தளம் இது.

கே.பாலமுருகன்:

மலேசிய எழுத்தாளர் கே.பாலமுருகன், சிறுகதை எழுத்தில் தனக்கென தனிமுத்திரை பதித்து வருபவர். அவரின் வலைத்தளம் இது. மலேசிய வாழ்க்கையை அசலாக பதிவு செய்யும் பாலமுருகனின் எழுத்துக்கள் வரலாறு, சமூகம், புத்தக விமர்சனங்கள், குறுநாவல், கவிதைகள் என பயணம் செய்கின்றன. மலேசிய தமிழ் இலக்கியத்தில் மிக ஆக்கப்பூர்வமான உரையாடலை முன்னெடுக்கும் சில இளைஞர்களில் பாலமுருகனுக்கு முக்கிய இடம் என்பதாலேயே அவர் மீது மரியாதை கூடுகிறது.

மாற்றுப்பிரதி:

ஈழத்துக்கவிஞர் றியாஸ் குரானாவின் வலைப்பதிவு. வலைப்பதிவின் பெயருக்கேற்றபடி கவிதையில் மாற்றுப்பிரதியை உருவாக்குவதில் முக்கியமான கவிஞர். இதுவரை கவிதை என முன்வைக்கப்பட்டதை கலைத்துப்போட்டு விளையாடுகிறார். நவீன கவிதையில் பரிச்சயம் இல்லாதவர்களுக்கு இந்தக் கவிதைகள் புரியாதது போன்ற பிம்பத்தை உருவாக்கக் கூடும். ஆனால் இந்த புரியாததன்மையே இவரது கவிதைகளின் காந்த சக்தி. திரும்பத் திரும்ப வாசிக்கச் செய்யும் வித்தையை நிகழ்த்துகிறது.

தீபச்செல்வன்:

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நேரடி சாட்சியம் தீபச்செல்வன். இரத்தமும் சதையுமாக மண்ணுக்குள் புதைந்து போன மக்களின் வலிகளையும், வேதனைகளையும் தன் கவிதைகளின் வழியாக கண் முன் நிறுத்தும் இந்த ஈழத்துக்கவிஞனின் வலைத்தளம் இது. தொடர்ச்சியான எழுத்துக்களின் மூலமாக ஈழத்து இலக்கியத்தின் தடத்தில் தனக்கான அடையாளத்தை அழுந்தப் பதிக்கிறார்.


கவிதைகளுக்குள் கதைகளைச் சொல்வதன் மூலமாகவும், விசித்திரமான கவிதைச் சித்திரங்களினாலும் கவனம் பெறக்கூடிய கவிதைகளை எழுதிக் கொண்டிருக்கும் கதிர்பாரதியின் தளம். இவரது கவிதைகளின் புதிய பாதை ஆச்சரியமூட்டுவதாகவும், உற்சாகம் அளிப்பதாகவும் இருக்கின்றன. "கி.மு. இரண்டாயிரத்தில் கேரட்கள் ஊதா நிறத்தில் இருந்தனவாம்" பிறகு ஏன் நிறம் மாறின என்பதை கதிர்பாரதியின் கவிதையின் மூலமாக அறிந்துகொள்ளலாம். 


ஒரு காலத்தில் காதல்கவிதைகளின் மூலமாக பல இதயங்களை கொள்ளையடித்தவர் நிலாரசிகன். ஏதோ தெய்வகுத்தம் போல இப்பொழுது நவீன கவிதைகளின் பக்கம் ஒதுங்கிவிட்டார். இவரது கவிதைகளில் இருக்கும் மென்மையும், ரொமாண்டிசமும் கட்டிப்போடுபவை. 361டிகிரி சிற்றிதழை நடத்திவருகிறார். புகைப்படைக்கலைஞனாகவும் படம் காட்டுகிறார்.


நேசமித்ரன் தனது மொழியில் செய்யும் வித்தைக்காக அவரது கவிதைகளின் நேசன் நான். இவரது கவிதைகள் புரியாதது போல முதல் பார்வைக்குத் தோன்றக் கூடும்.  அது உண்மையில்லை. கவிதையில் ஒரு புள்ளியிருக்கும். அந்தப்புள்ளியைத் தட்டினால் கவிதையின் கதவு திறந்துவிடும். கதவுக்கு பின்னால் வேறொரு உலகம் இருக்கும். தட்டிப்பாருங்கள்.


வேல்கண்ணன் எனக்குப்பிடித்த இன்னொரு கவிஞன். சென்னையில் வசிக்கிறார்.மிகச்சிறந்த கவிதை அனுபவத்திற்குள் அழைத்துச் செல்லும் அத்தனை சாத்தியங்களையும் வைத்துக்கொண்டு மிகக் குறைவாக எழுதிக் கொண்டிருக்கும் இந்தக் கவிஞனின் தளம் இது.


கவிதையை வாசித்துவிட்டு "உர்ர்" என்று இருக்க வேண்டும் என்ற ஃபார்முலாவை தூக்கிப்போட்டு உடைத்தவர் இசை. மிக எளிமையான கவிதையை அத்தனை அங்கதத்துடன் கொடுக்க இசையால் மட்டுமே முடியும் என நம்புகிறேன். வாய்விட்டு சிரிக்கவைத்தாலும் கவித்துவத்தில் எந்தவித காம்ப்ரமைஸ்ஸும் செய்துகொள்ளாத கோயமுத்தூர் கவிஞனின் வலைத்தளம் இது.


சமகாலக் கவிஞர்களில் கவிதை பற்றிய தொடர்ச்சியான உரையாடலை முன்னெடுக்கும் இளங்கோ கிருஷ்ணனின் வலைத்தளம். இவர் கோயமுத்தூரில் வசிக்கிறார். தனக்கென மொழியையும், கவிதை வெளிப்பாட்டுமுறையையும் விரைவாக கண்டடைந்த கவிஞர். இவரது சிந்தனையும், வாசிப்பனுபவமும் எப்பொழுதும் என்னை ஆச்சரியமூட்டுகிறது.



கவிஞன், சிறுகதைக்காரன் தூரன் குணாவின் வலைத்தளம். கவிதை, கதை தவிர்த்து அனுபவங்கள், வாசிப்பு என எழுதிக் கொண்டிருக்கிறார். ஆனால் கொஞ்சமே கொஞ்சமாக எழுதிக் கொண்டிருக்கிறார். தூரன் குணாவை நினைக்கும் போதெல்லாம் ஓட்டிற்குள் அடங்கியிருக்கும் ஆமையின் சித்திரம் மனதில் தோன்றும். அது பொருத்தமான சித்திரம் என்று நினைத்துக் கொள்வேன்.


ஈழத்து காட்டாறு. சமூகம், இலக்கியம், அரசியல், கவிதை, கதை என அடித்து நொறுக்குகிறார். இந்தியாவிற்கும், கனடாவிற்கும், ஈழத்திற்குமாக றெக்கை கட்டிப் பறாக்கும் தமிழ்நதி, சமீபமாக வலைப்பதிவில் மிகக் குறைவாகவே எழுதுகிறார்.


கவிஞர் ச.முத்துவேலின் இணையதளம். பெரும்பாலும் கவிதைகளால் நிறைந்திருக்கிறது. இவரும் மிகக் குறைவாகவே எழுதுகிறார். அந்தப்பக்கம் போனால் நிறைய எழுதச் சொல்லிவிட்டு வாருங்கள்.


தீவிரமான வாசிப்பும், கூர்மையான பார்வையுமுடைய பாலசுப்ரமணியனின் வலைப்பூ.  இவர் அதிகம் எழுதுவதில்லை என்று குறைபடுபவர்களில் நானும் ஒருவன்.


சமீபத்தில் அதிக கவனத்தைக் கோரும் கவிதைகளை எழுதி வரும் ஆறுமுகம் முருகேசனின் கவிதைகளால் நிரம்பிய தளம் இது. ஈராக்கில் வசிக்கிறார். அன்பினாலும், பிரியங்களினாலும், துக்கங்களினாலும் சொல்ல முடியாத உணர்ச்சிகளாலும் நிரம்பிய கவிதைகள் இவை. கவிதைக்கான புதிய தளங்களை மிக இயல்பாக கண்டடைவது ஆறுமுகத்தின் பலமாக இருக்கிறது.

இன்னமும் இணையதளங்களிலேயே எழுதிக் கொண்டிருக்கிறார். சிற்றிதழ்களின் பக்கம் தனது பார்வையை திருப்ப வேண்டும் என விரும்புகிறேன்.


குட்டி குட்டியான கவிதைகளால் கட்டிப்போடும் நந்தாவின் வலைப்பூ. ஹைக்கூக்கள் நந்தாவுக்கு இயல்பாக கைவரப்பெற்றிருக்கிறது.


கவிஞர், பதிப்பாளர், சிறுபத்திரிக்கையாளர், வழக்கறிஞர் என்னும் பன்முக ஆளுமையான பொன்.வாசுதேவனின் வலைத்தளம். அதிகமாக எழுதுங்கள் வாசு. இதற்கு அவர் சொல்லும் பதில் என்னவாக இருக்கும் என என்னால் யூகிக்க முடிகிறது.


மும்பையில் வாழும் அனுஜன்யாவும் நினைத்தால் எழுதுபவர் இல்லாவிட்டால் துறவறம் பூண்டுவிடுவார். இவரது உரைநடை வித்தைகள் சுவாரசியமானது. ஒரு எட்டு இந்த தளத்திற்கு போய்வாருங்கள்.


எனக்கு பிடித்த கவிஞரும், முன்னோடியுமான சுகுமாரன் அவர்களின் வலைத்தளம் இது. திருவனந்தபுரத்தில் வாழும் கவிஞர் இந்தத்தளத்தில் பெரும்பாலும் தனது கவிதைகளை பதிக்கிறார். தற்பொழுது அவர் எழுதிவரும் வெலிங்டன் நாவலின் சில அத்தியாயங்களையும் இங்கு வாசிக்க முடியும். ஆனால் தொய்வில்லாமல் எழுதிவரும் சுகுமாரன் அவர்களின் எழுத்துவேகத்துக்கு வலைத்தளத்தில் வாசிக்க கிடைப்பது புல்லுக்கு பொசியும் நீர் அளவுக்குத்தான்.


மூத்த கவிஞரான கலாப்ரியாவின் தளம். கட்டுரைகள், அனுபவங்கள், கவிதைகள் என வாசிக்கக் கிடைக்கின்றன. அனுபவப்பதிவுகளில் இருக்கும் சுவாரசியத்திற்காகவே இந்தத் தளத்தை தொடர்ந்து வாசிக்கலாம்.


எழுத்தாளர் சுப்ரபாரதிமணியனின் வலைத்தளம். தற்பொழுது திருப்பூரில் வசிக்கிறார். கனவு என்னும் சிறுபத்திரிக்கையை நடத்திவரும் இவரின் சிறுகதைகள், சினிமா அனுபவங்கள், வாழ்வியல் அனுபவங்கள் என பல எல்லைகளைத் தொடும் எழுத்துக்களின் சங்கமம் இந்த வலைப்பதிவு.


சிறுகதை எழுத்தாளர் கே.ஜே.அசோக்குமாரின் வலைப்பதிவு. சில சிறந்த சிறுகதைகளை எழுதியிருக்கிறார். அவ்வப்போது இவர் பதிவிடும் சிறுகதைகளுக்காக இந்தத் தளத்தின் மீது ஒரு கண் வைத்திருக்கலாம்.


விளம்பரத்துறையில் பணியாற்றும் ராஜா சந்திரசேகரின் கவிதைகளால் நிரம்பியிருக்கும் வலைப்பூ. பெரும்பாலும் சிறு கவிதைகள்தான். ஆனால் தனக்குள் முடிச்சினை வைத்திருக்கும் கவிதைகள். மேஜிக்கல் தன்மையுடைய கவிதைகளை  இப்பொழுது அதிகம் எழுதிக் கொண்டிருக்கிறார்.


நவீன கவிஞர்கள் வரிசையில் முக்கியமான கவிஞரான ராணிதிலக்கின் வலைத்தளம் இது. விக்கிரமாதித்யன் ராணி திலக் பற்றி எழுதிய கட்டுரை, ராணிதிலக்கின் நேர்காணல் போன்றவை முக்கியமான பதிவுகள். கவிதைகள் பற்றிய தனது விமர்சனங்களை சப்தரேகை என்ற தொகுப்பாக சமீபத்தில் வெளியிட்டிருக்கிறார்.


கவிஞர் மண்குதிரையின் வலைப்பூ. தற்சமயம் சென்னையில் வசிக்கிறார். அனுபவம், கவிதை, விமர்சனங்கள் என நிரம்பியிருக்கும் தளம். இவரது கவிதைத் தொகுப்பான புதிய அறையின் சரித்திரம் தொகுப்புக்கு இந்த ஆண்டிற்கான நெய்தல் விருது கிடைத்திருக்கிறது. வாழ்த்துக்கள் மண்குதிரை.

[வலைச்சரம் என்ற வலைப்பதிவில் எழுதிய பிடித்தமான வலைப்பதிவுகளைப் பற்றிய குறிப்புகளின் தொகுப்பு இது. இன்னமும் எனக்குப் பிடித்த நிறைய வலைப்பதிவுகள் இருக்கின்றன. அவை உடனடியாக நினைவில் வரவில்லை என்பதே உண்மை. இதை அவ்வப்போது தொடர்ச்சியாக செய்யலாம் என்று தோன்றுகிறது. நிசப்தத்தில் செய்யலாம்]

2 comments:

ஹேமா (HVL) said...

நன்று. ஒவ்வொன்றாக படித்துப் பார்க்கிறேன்.

Anonymous said...

Blogger: பட்சியின் வானம் - Post a Comment
longchamp

wjqx