Wednesday, September 7, 2011

சிவாஜியின் மிகைநடிப்பு 3



சிவாஜி குறித்து எழுதியதும் பலர் தங்களது எதிப்பையும், நட்பையும் தெரிவித்திருந்தார்கள். குறிப்பாக, எதிர்ப்பை தெரிவித்தவர்கள் சிவாஜியை வேண்டுமென்றே மட்டம் தட்டுவதுபோல் இருப்பதாக கூறியிருந்தார்கள். முன்பே சொன்னதுபோல் ஆதர்சம் சிதைவதை பொருக்கமுடியாமல் கூறியதாக எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. சிவாஜி என்ற ஆளுமையை அத்தனை எளிதாக தமிழக மக்களின் மனங்களிலிருந்தது எடுத்துவிடுவதும் சாத்தியமானது அல்ல. என் பெரியம்மா சிவாஜியின் தீவிர ரசிகை, எழுபது வயதாகியும் இறப்பதற்கு முன்புவரையும் அவர் வீட்டில் இருக்கும் சின்ன தொலைக்காட்சியின் சிவாஜியின் படங்கள் ஒளிபரப்பாகும்போது தவறாமல் பார்ப்பார். சிவாஜியின் 50கள், 60கள் 70களின் படங்கள் அவருக்கு அத்தனையும் அத்துபடி, காட்சி காட்சியாக விவரிக்க அவரால் முடியும்.

ஆனால் ஒரு முறை பேசும் போது சிவாஜி நல்ல உயரமும் தாட்டியும் கொண்டு கம்பீரமாக இருக்கிறார் என்று சிவாஜியை தொலைகாட்சியில் நடந்துவருவதை பார்த்தபடியே கூறினார். அப்போதைய நடிகைகள் குள்ளமானவர்களாக இருந்ததால் அவருக்கு அப்படி தோன்றியிருக்கலாம். நான் மறுத்து சாதாரண இப்போதைய உயரதைவிட குள்ளம்தான் என்றேன். அவர் கண்களில் தெரிந்த விரோததத்தோடு உடனே மறுத்து கூறினார். அவர் மேல் இருக்கும் அபிமானங்களை மாற்றமுடியாது என்று புரிந்துகொண்டேன்.

அவர் வளர்ச்சிக்கு காரணங்களாக சிலவற்றை கூறலாம்: பல உண்மை கதாபாத்திரங்களை அவர் செய்ததுதான் என நினைக்கிறேன். கூடவே அவர் செய்த பீம்சிங் போன்றவர்களின் யாதார்த்த படங்களில் நடித்ததும்தான். அறுபதுகளின் பிற்பகுதியில் வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், திருவிளையாடல், திருவருட்செல்வர், ராஜராஜ சோழன் போன்றபடங்கள் சிவாஜியை வாழும் ஒரு பாத்திரமாக மககள் மனதில் பதியவைத்துவிட்டது. அம்பதுகளின் இறுதியிலும், அறுபதுகளின் ஆரம்பத்திலும் பீம்சிங் மாதிரியான யாதார்த்த பாணி படங்கள் அவருக்கு நிரம்ப கைகொடுத்தன. அந்த கதாபாத்திரங்கள் நிஜமானதாகவும், மக்கள் மனதிற்கு மிக நெருக்கமானதாகவும் உணர்ந்துள்ளார்கள்.

சிவாஜியின் எதிரியான எம்ஜியாரின் பட‌ங்கள் வெற்றிகரமான படங்களாக அமைந்திருந்தாலும் அதில் யதார்தமாகவும், நிஜபாத்திரங்களும் இல்லாமல் இருந்தும் நடிப்பதற்கு வகையில்லாமல் அமைந்துவிட்டன. ஆனால் அன்பே வா முதற்கொண்டு மலைக்கள்ளன் வரை எந்த பாத்திரமும் அவரின் உடல்வாகுக்கு பொருத்தமாக அமைந்துவிட்டன் என்பதும் உண்மை.

எம்ஜியாருக்கு அழதெரியாது என்பது பொதுவாக சிவாஜி ரசிகர்கள் கூறும் வாதமாக இருக்கும். சிவாஜி அழுவது காட்சிக்கு பொருந்துகிறதோ இல்லையோ அவர் அழுவது இயற்கையாக இருப்பதாக நினைப்பார்கள். 5 பைட்டு 6 சண்டை என்பது மாதிரி, 5 அழுகாட்சி 6 மெய்சிலிர்ப்புகாட்சி என்று சிவாஜி ரசிகர்கள் கூறுவார்கள் எனக் கொள்ளலாம்.

சிவாஜி சினிமாவில் நுழைந்த சம‌யம் மிக முக்கியமானது. யாருக்கும் அமையாத அற்புதம் அது என நினைக்கிறேன். இரண்டு துருவ‌ங்களும் முக்கிய நடிகர்களுமான பாகவதரும், சின்னப்பாவும் விலகிய காலம் அது. நல்ல நிலையில் சினிமாவில் கொடிகட்டி பறந்த‌ பி.யூ.சின்னப்பா,  உச்ச நிலையில் இருக்கும்போதே திடீரென காலமானார். எதிர் துருவமோ கொலை, கைது என்று அழைக்கழிக்கபட்டு நிம்மதிய‌ழந்து தோல்விபடங்களாக கொடுத்து அவரும் திடீரென காலமானார். அம்பதுகளில் ஆரம்பத்தில் சட்டென ஒரு உயரத்திற்கு வந்த சிவாஜிக்கு நல்ல இடம் கிடைத்தது. சின்னப்பா செய்த உத்தமபுத்திரன் போன்ற படங்களை மீண்டும் செய்து தன்னை அடுத்த வாரிசாக நிறுவிக்க்கொண்டார். அவரே எதிர்பாராத ஒரு பாய்ச்சலுடன் சினிமாவில் நுழைந்ததும், வெற்றிடமாக கிடந்த மக்கள் மனங்களில் சட்டென சிம்மாசனத்துடன் அமர்ந்துகொண்டார். (அதே போல் எம்ஜியாரும் மற்றொரு இடத்தை பிடித்துக்கொண்டார்.) பின்பு மக்கள் மனங்களில் இருந்து அவரை பிரிக்கமுடியவில்லை. தொடர்ந்து எழுபதுகளின் ஆரம்பம்வரை ஒரு பெரும் பேரரசனாக‌ கொடிகட்டி பறந்தார்.

ஆனால்...

(மீண்டும் பார்ப்போம்)

_o0o_