Monday, May 9, 2011

கணையாழியும் கஸ்தூரிரங்கனும்

கணையாழியும் கஸ்தூரிரங்கனும்
பாவண்ணன்
எண்பதுகளில் இலக்கிய உலகில் அடியெடுத்து வைப்பதற்கு ஒரு வாசலாக இருந்த முக்கியமான இதழ் கணையாழி. அதன் நிர்வாக ஆசிரியராக இருந்து நடத்தியவர் கி.கஸ்தூரிரங்கன். தொடக்கத்தில் சிறிது காலம் தி.ஜானகிராமன் இதன் ஆசிரியராக இருந்து நடத்தினார். பிறகு, நீண்ட காலத்துக்கு அசோகமித்திரன் ஆசிரியராக இருந்தார். அப்போதுதான் இரா.முருகன், கோணங்கி, சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன், நான் என பலரும் அந்த இதழில் தொடர்ந்து எழுதினோம். எங்களுக்கு முன்னால் சா.கந்தசாமி, ஆதவன், விட்டல்ராவ், பிரபஞ்சன், மாலன் என இன்னொரு தலைமுறை எழுத்தாளர்கள் எழுதினார்கள். அசோகமித்திரனைத் தொடர்ந்து இந்திரா பார்த்தசாரதி ஆசிரியர் பொறுப்பேற்றிருந்தார்.
அறுபதுகளில் நியுயார்க் டைம்ஸ் என்னும் ஆங்கில இதழுக்கு வேலை செய்வதற்காக கி.கஸ்தூரிரங்கன் தில்லிக்குச் சென்றார். இதுபோலவே, வேலை நிமித்தமாக தில்லிக்குச் சென்ற எஸ்.ஜெகன்னாதன், ஆதவன், ரங்கராஜன் என்கிற சுஜாதா, இந்திரா பார்த்தசாரதி, க.நா.சுப்பரமணியன், தி.ஜானகிராமன் ஆகியோர் தற்செயலாக ஒன்றுகூடி ஓர் தமிழிதழைத் தொடங்கினார்கள். அதுதான் கணையாழி. கஸ்தூரி ரங்கன் காந்தியச்சார்பு உடையவர். அவருடைய பல அரசியல் கட்டுரைகள் காந்தியச்சிந்தனையை முன்வைப்பவை. பிற்காலத்தில், கணையாழிக்கு வெளியே ஆர்வமுள்ள இளைஞர்களைத் திரட்டி ஸ்வச்சித் என்னும் அமைப்பை உருவாக்கி தொண்டு செய்துவந்தார். ஏறத்தாழ இருபதாண்டுகளுக்குப் பிறகு இதழோடு தொடர்புடையவர்கள் அனைவருமே தமிழ்நாட்டுக்குத் திரும்பினார்கள்.
கணையாழியில் சுஜாதா எழுதி வெளிவந்த கடைசிப்பக்கங்கள் பகுதி வாசகர்களின் கவனத்தை மிகவும் ஈர்த்த பகுதி. காகித மலர்கள், என் பெயர் ராமசேஷன் ஆகிய ஆதவனின் நாவல்களும் தி.ஜானகிராமனின் நளபாகம் நாவலும் இந்திரா பார்த்தசாரதியின் வேர்ப்பற்று நாவலும் கணையாழியில் தொடராக வெளிவந்த படைப்புகள். இந்திய மொழிகளில் சிறந்த பத்து நாவல்கள் என்னும் க.நா.சு.வின் தொடரைக் கணையாழி வெளியிட்டது. முஸ்தபா என்னும் பெயரில் கஸ்தூரிரங்கன் தொடர்ச்சியாக பல கட்டுரைகள் எழுதிவந்தார்.
தி.ஜா. மறைவையொட்டி கணையாழி குறுநாவல் திட்டம் ஒன்றை அறிவித்தது. கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கும் மேலாக இத்திட்டம் செயல்பட்டு வந்தது. பெயர்பெற்ற எழுத்தாளர்கள் முதல் அறிமுக எழுத்தாளர்கள் வரை இத்திட்டத்தில் பங்கேற்று குறுநாவல்களை எழுதினார்கள். தமிழில் குறுநாவல்கள் வளர்ச்சியில் கணையாழிக்கு பெரும்பங்குண்டு.
கஸ்தூரிரங்கன் தினமணி நாளேட்டுக்கு சில ஆண்டுகள் ஆசிரியர் பொறுப்பேற்று நடத்தினார். அச்சமயத்தில் தினமணி கதிரில் ஒரு தொடர் எழுதவும் செய்தார். ஆனாலும் அந்தப் பங்களிப்பைவிட எல்லோருடைய நெஞ்சிலும் நிறைந்திருப்பது அவருடைய கனவுகளையும் ஈடுபாடுகளையும் தாங்கி வெளிவந்த கணையாழி இதழ் மட்டுமே. கணையாழி இதழை ஓர் இலக்கிய இயக்கம் என்றே அழைக்கலாம். எழுத்து, கசடதபற போல கணையாழியும் ஓர் இயக்கம். ஒரு கட்டத்தில் அது நின்றது. பிறகு அறக்கட்டளை ஒன்றின் வழியாக மீண்டும் உயிர்த்தெழுந்தது. மீண்டும் நின்றது. கடந்த சித்திரைத்திங்கள் மீண்டும் அது ம.ராஜேந்திரன் முயற்சியால் உயிர்த்தெழுந்தது. புத்துயிர்ப்போடு அது மீண்டும் தோன்றியிருப்பதைப் பார்ப்பதற்காகவே காத்திருந்த்துபோல, பார்த்துவிட்டு மறைந்துவிட்டார் கஸ்தூரிரங்கன். அவருக்கு நம் வணக்கத்துக்குரிய அஞ்சலி.