Thursday, November 25, 2010

நகரத்தின் மறுபக்கம்




சுந்தர்சி நடித்த நகரம் மறுபக்கம் என்ற திரைபடத்தை பற்றி இணையத்திலும் போதாததற்கு முகநூலிலும் அன்பர்கள் சிலாகித்து எழுதியதைக்கண்டு அதைப் பற்றிய விமர்சனங்களை இணையத்தில் தேடி படித்தது நான் செய்த தவறாக இப்போது நினைக்கிறேன். முதலில் சுந்தர்சி படங்கள் அது நடிப்பாக இருந்தாலும் சரி, இயக்கமாக இருந்தாலும் சரி, கொஞ்சம் வருடங்களுக்கு முன் வெளியான தமிழ்படத்தின் அல்லது வேறு மொழிப்படத்தின் அப்பட்டமான தழுவழோ அல்லது உரிமை பெறாத ரீமேக்காகவோ இருக்கும் என்பதற்கு மாற்றுகருத்து இருக்க முடியாது. அதை மறந்து தேடியதை தவற்றின் முக்கிய அங்கமாக எடுத்துக்கொள்ளவேண்டும்.
எல்லா விமர்சன எழுத்திலும் இணையஎழுத்து அன்பர்களின் எழுத்திலும் பல்லவியை மாற்றாமல் எழுதியிருந்தது சற்று ஆச்சரியம் தான். கதை ஆரம்பத்தை கூறக்கேட்டதுமே இது அல்பசினோ நடித்த‌ The Carlito’s way எனும் படத்தின் கதையல்லவா என எண்ணத்தோன்றியது. மேலும் தேடியபோது ஆமாம் இது அந்த படத்தின் கதைதான் என்று தெரிந்தது. அதில் தொழிலை விட்டு விலகிவிட நினைக்கும் கடத்தல்காரன், இதில் தாதா, அதில் காதாநாயகி கிளப்களில் ஆடும் டான்சர், இதில் சினிமாவில் குரூப் டான்சர், அப்புறம் வடிவேலுவின் காமடி ட்ராக்கை இணைத்திருப்பது, இவைகள் தான் வித்தியாசம். ஆரம்பத்தில் ரயில்நிலையத்தில் கூடஇருந்தவனே கத்தியால் குத்தப்பட்டு, நிலைதடுமாறி பழைய நினைவுகளை அசைப்போட்டபடி மருத்துவமனையில் இறக்கும் அதே கதைதான் இங்கும்.

அல்பசினோ, கமலஹாசனுக்கு குரு மாதிரி அவரை நினைத்து தமிழில் பலபடங்களை செய்திருக்கிறார். அல்பசினோவின் வசன உச்சரிப்பும், நடையும் சினிமா உலகில் மிகவும் பிரபலமானவை. அவற்றை, மொக்கையாக வரும் சுந்தர்சி எப்படி செய்திருப்பார் என்பதை நினைக்கும்போது சிரிப்பாகத்தான் இருக்கிறது. ஆங்கில, சீன சண்டைப் படங்களை பார்க்காத/பார்த்திராத ஒரு ரசிகர் கூட்டமொன்று விஜயகாந்த் படத்தின் சண்டைக் காட்சிகளை அற்புதம் என்று கூறுவது போலத்தான் நகரம் படத்தை அற்புதம், அருமை என்று சிலாகிப்பது. நடுநடுவே அய்யய்யோகளும் அம்மம்மாக்களும் வேறு. தமிழ் சினிமாவில் நல்ல ஒரிஜினல் படங்கள் வருவது எப்போதாவதுதான் நிகழ்கின்றன, மற்ற நேரங்களில் இந்தமாதிரி 'சுட்ட' படங்கள்தான் வரும், அதையும் சிலாகித்து குதிப்பதை 'அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா' என்பது மாதிரியானது என்று தெரிந்ததுதானே?

_o0o_

No comments: