Monday, July 26, 2010

சிறுகதை ரகசியங்கள்




சிறுகதையின் ரகசியங்களை அறிந்துகொள்வதற்கு நம் மனம் எப்போதும் ஏங்கியபடியே இருக்கிறது. தெரிந்தோ தெரியாமலோ பிரபலமான எழுத்தாளர் கூறியதை கவனித்தபடி இருக்கிறோம். அமெரிக்காவின் பிரபல எழுத்தாளர் கர்ட் வானகட் (Kurt vonnegut) கூறிய 8 விதிகளை இப்போது பார்ப்போம். இணையத்தில் கிடைத்த அந்த விதிகள் இதோ.

வானகட் கூறுகிறார்:

சிறுகதைப் படைப்பின் ரகசியங்களைச் சொல்லப் போகிறேன். உங்கள் காதுகளைத் தீட்டிக்கொள்ளுங்கள்:
1) உங்களைப் படிக்கப்போகும் அந்த முகம் தெரியாத அந்நியர், உங்களைப் படித்ததால் நேரம் வீணாகிவிட்டதாக வருத்தப்படாத அளவிற்கு எழுதுங்கள். வாசகரின் நேரத்தை நீங்கள் மதிப்பது மிக முக்கியம்!
2) கதையின் ஒரு பாத்திரத்துடனாவது வாசகர் தன்னைத் தொடர்பு படுத்திக்கொள்ள முடிவதாக இருக்க வேண்டும்.
3) ஒவ்வொரு கதாபாத்திரமும் எதையாவது ஒன்றை விரும்ப வேண்டும் - குறைந்தபட்சம் ஒரு கோப்பைத் தண்ணீரையாவது!
4) ஒவ்வொரு வாக்கியமும் பின்வரும் இரண்டில் ஏதாவது ஒன்றைச் செய்ய வேண்டும் - பாத்திரத்தை வெளிப்படுத்துதல், கதையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துதல்!
5) முடிவிற்கு எவ்வளவு அருகில் முடியுமோ அவ்வளவு அருகில் கதையை ஆரம்பியுங்கள்!
6) குரூர மனப்பான்மை கொண்டவராக இருங்கள். உங்கள் கதாபாத்திரங்கள் எவ்வளவு இனிமையான அப்பாவிகளாக இருந்தாலும் பரவாயில்லை, அவர்களுக்கு வாழ்வில் மிக மோசமான விஷயங்கள் நடைபெறட்டும்!
7) ஒருவரை மட்டுமே மகிழ்விப்பதற்காக எழுதுங்கள். உலகத்திலிருக்கும் அத்தனை பேரையும் திருப்திப் படுத்துகிறேன் பேர்வழி என்று கிளம்பினால் உங்கள் கதைக்கும் விஷக்காய்ச்சலுக்கும் பெரிய வித்தியாசம் இருக்காது!
8) உங்கள் வாசகர்களுக்கு எவ்வளவு விஷயத்தை எவ்வளவு சீக்கிரம் கொடுக்கமுடியுமோ, அவ்வளவு சீக்கிரம் கொடுங்கள். சஸ்பென்ஸைத் தூக்கிக் குப்பையில் போடவும்! கதையைத் தாங்களே முடிக்குமளவிற்கு வாசகர்களுக்கு என்ன, எங்கே, எப்படி நடந்ததென்று கதை புரிந்திருக்க வேண்டும். கடைசிப் பக்கங்களை கரையான்கள் தின்னட்டும்!

-o0o-

2 comments:

கமலேஷ் said...

//ஒருவரை மட்டுமே மகிழ்விப்பதற்காக எழுதுங்கள். உலகத்திலிருக்கும் அத்தனை பேரையும் திருப்திப் படுத்துகிறேன் பேர்வழி என்று கிளம்பினால் உங்கள் கதைக்கும் விஷக்காய்ச்சலுக்கும் பெரிய வித்தியாசம் இருக்காது!///


கல்வெட்டில் பொறிக்கப்படவேண்டிய வரிகள்தான் இது தோழரே.

நெருக்கம், நெருக்கம், அத்தனை நெருக்கம்.

கே.ஜே.அசோக்குமார் said...

அந்த ஒருவர்கூட எழுதும் நாம் தான் என்பது என் எண்ணம்.
நன்றி.