Sunday, July 25, 2010

தோழி: சிறுகதை

  நான் வீட்டிற்கு வந்தபோது ஆச்சர்யம் காத்திருந்தது. எல்லா நேரங்களிலும் இது மாதிரியான ஆச்சரியங்கள் காத்திருப்பதில்லை. மிக அபூர்வமான ஆச்சர்யமாகவே இது தோன்றியது. சுனிதாவின் அம்மாவும் அத்தையும் வந்திருக்கிறார்கள். சுனிதாவின் திருமணத்திற்கு அழைப்பதற்காக. பத்திரிக்கையை பார்க்க பார்க்க ஆச்சரியங்கள் அதிகரித்தபடியே சென்றன.
'இன்னும் ஞாபகம் வைத்து கூப்பிட்ராங்க பாரேன், உன்ன எங்க எங்கனு கேட்டாங்க, கண்டிப்பாக பொண்ணோட வரணும்னு சொல்லிட்டாங்க' என்றார் அம்மா. அம்மாவின் முகமெல்லாம் சிரிப்பாக இருந்தது. நான் இல்லாதது அவர்களுக்கு வருத்தமாக இருந்தாலும் கல்யாணத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்ற சமாதானத்துடன் போயிருப்பதாக தோன்றியது. ஆறாண்டுகளுக்கு பின் சுனிதாவை பார்க்கப் போவதை நினைத்து இப்போதே மகிழ்ச்சியாக இருந்தது. என் சந்தோசத்தை விட அம்மாவின் சந்தோசம் அதிகமாக இருந்தது. நான் வரவில்லை என்றாலும் கல்யாணத்திற்கு போய்விடுவார் போலிருந்தார். சுனிதாவின் குடும்பத்துடன் வெறும் நட்பை தாண்டி அம்மாவிற்கு வேறு என்ன இருக்க முடியும்?
ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தான் வீடுதேடி அவள் அம்மாவும் அப்பாவும் வந்தார்கள். அப்போது நாங்கள் திருச்சியில் இருந்தோம். ஜன்ஷனிலிருந்து பஸ் பிடித்து வீட்டிற்கு வந்தார்கள். வந்ததுமே 'உங்க பொண்ணு பண்ண உதவிய மறக்க முடியாது சார்'. என்று ஆரம்பித்ததும் உதற ஆரம்பித்து விட்டது எனக்கு. அப்பா அம்மாவிருக்கு எதுவும் தெரியாது. எப்படி கூறமுடியும்? இன்னும் சின்னக் குழந்தையாக பாவித்துக் கொண்டிருப்பவர்களிடம் இம்மாதிரியான விஷயங்கள் என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படுத்துமென்று தெரியவில்லை. அவசர அவசரமாக வேறு பேச்சுக்கு மாற்றி காப்பி குடிக்க வைத்து வெளியே அழைத்து வந்து 'அங்கிள், இதையெல்லாம் அப்பாஅம்மாவுக்கு தெரியாது' என்றதும். அப்பா அம்மாவிற்கு கூட தெரியாம வச்சிருக்கியம்மா கண்கலங்கி கைகூப்பியபடியே விடைபெற்று சென்றார்கள்.
பத்தாம் வகுப்பில்தான் அந்த பள்ளியில் வந்து சேர்ந்தேன். ஆரம்பத்தில் சுனிதா என்னுடைய தோழியாக இல்லை. சொளசொளவென்று அவள் தலையை ஆட்டி ஆட்டி பேசிக் கொண்டிருப்பது எனக்கு அதிகமாக பிடிக்கவில்லைதான், என்றாலும் அகரவரிசைப்படி, என் பக்கத்தில் அமர்ந்து பயிற்சி தேர்வு எழுதும்போது பழக்கம் ஏற்பட்டு தோழியாகிவிட்டாள்.
படிப்பில் மிகப் பெரிய அக்கறை ஏதுமில்லை. ஒவ்வொரு நாளும் சந்தோசமாக கழித்தால் அதுவே போதுமானது அவளுக்கு. அதற்கு என்ன காரணமென்று இப்போது யோசித்தால், அவள் அம்மாவும் அப்பாவும் வேலை, கோவில், பஜனையென்று, அவள் மேல் அக்கறையில்லாமல் அலைந்தது ஒரு காரணமாக கூறமுடிந்தாலும், அப்போது இதை யோசித்துக் கொண்டிருக்க முடியவில்லை.
அவளுடைய வீடு ரயில்வே குவார்ட்டஸ் தண்டவாளங்களுக்கு பக்கத்திலேயே இருந்தது. தாழ்வாக ஒன்றன் பக்கத்தில் ஒன்றாக அமைதியான சூழ்நிலையில் அமைந்த வீடுகள், ரயில்கள் போகும் நேரங்கள் தவிர மற்ற நேரங்களில், காகங்கள், குயில்கள் போடும் சத்தங்கள்தான் கேட்கும். அந்த ரம்மியமான சூழ்நிலையை நினைக்க இப்போதும் இனிமையாக இருக்கிறது. ரயில்கள் எப்படி ஒரு தண்டவாளத்திலிருந்து மற்றொரு தண்டவாளத்திற்கு போகின்றன என்று ஆர்வமாக அவளிடம் கேட்டிருக்கிறேன், அவளுக்கு பழசாகிப் போன விசயமானதால், சினிமா, கிசுகிசு போன்ற வேறு சுவாரஸ்யமான விசயங்களே பேசுவாள்.
பள்ளிக்கு வரும்போது அமைதியாக வருவாள் போகும்போது அவள் செய்யும் அளும்பு தாங்கமுடியாது. அப்போது தாவனியை ஒத்தையில் அணிந்து செல்வாள். ரவிக்கையின் கட்டு மிக கிழே இறங்கி இறுக்கமான சதை பிளவை மெல்லிய தாவணி வெளிக்காட்டியபடி இருக்கும். வெளியே வந்ததுமே அவள் வெளிப்படையாக பேசும் வார்த்தைகளும் செய்கைகளும் எங்களுக்கு அதிர்ச்சியை அளித்தாலும் ரசிக்கவேசெய்தோம். எல்லாத்தையும் வெள்ளேத்தியாக எல்லோரிடமும் கூறிவிடுவது அவள் வழக்கம். யார் பக்கத்தில் இருக்கிறார்கள் இல்லை என்பதை அவள் கவனிப்பதில்லை குவார்ட்டஸில் இருக்கும் ஒரு பையனோடு ஏற்பட்ட பழக்கத்தை ஒருநாள் கூறும்போது அதிகமாகவே அதிர்ச்சியாக இருந்தது. அது சாதரணமாக காதலாகவோ நட்பாகவோ இருந்திருந்தால் பெரியதாக தோன்றியிருக்காது. அதைவிட அதிகமானது எனக் கூறக்கேட்டதும் என்ன சொல்வதென்றே தெரியாமல் இருந்தோம். ஆனால் அவள் எதற்கும் அலட்டிக் கொள்ளவில்லை.
ஒருநாள் பஸ்ஸில் வந்து இறங்கும்போது ஒரு பையனை அறிமுகப் படுத்தினாள். என்னவோ ஒரு பெயரை சொன்னாள். அவனை பார்த்ததும் பெரிய அதிர்ச்சியாக இருந்தது. என் மாமா ஒருவர் தன் பையனை திட்டும்போது 'காடுப்பயலே' என்று திட்டுவார். அதன் அர்த்தம் அவனைப் பார்த்தபோது தோன்றியது. நல்ல உயரத்தில் கட்டுமஸ்தான பெரிய ஆள் மாதிரியிருந்தன். அவசர அவசரமாக விலகிஓடியது நினைவிருக்கிறது. அப்படி அவனிடம் என்ன கண்டுவிட்டாள் என்பது தெரியவில்லை.
மிட்-டெர்ம் தேர்விற்காக குழுவாக உட்கார்ந்து விவாதித்து கொண்டிருந்தபோது, கைபிடித்து இழுந்து தனியே அழைத்துச் சென்றாள். மிகமுக்கியமாக பாடத்தை பற்றி பேசிக் கொண்டிருந்தபோது அவள் இப்படி செய்தது எரிச்சலாக இருந்தது. ஒரு கழிவறைக்கு பக்கத்தில் நிற்கவைத்து கண்டதையும் பேசிக்கொண்டிருந்தாள். நிலைகொள்ளாமல் இப்ப என்னவேணும் உனக்கு என்றேன். 'தள்ளிப் போயிருக்குபா' என்றாள். 'என்ன?', ‘ஆமா, மூணுமாசமா இருக்குப்பா' என்றாள். என்ன கூறுகிறாள் என்பதை புரிந்துகொள்ள சிலநிமிடங்கள் ஆகியது. அவள் முகத்தில் எந்த சலனமும் இல்லை. உண்மை சொல்கிறாளா அல்லது விளையடுகிறாளா என்று கண்டுகொள்ளவும் முடியவில்லை. நடந்து செல்லும் வேறு பெண்கள் காதில் விழுந்துவிடக்கூடும் என்ற பயமில்லாமல் உளறிக்கொண்டிருந்தாள். அந்த இக்கட்டான சூழ்நிலையை அருவருப்பாக உணர்ந்தேன்.
'இதெல்லாம் என்கிட்டே ஏன் சொல்ற, உங்கமாகிட்ட போய் சொல்லு'
'அது... சொல்லமுடியாதுப்பா ' என்றாள்.
'என்னமோ செய், எனக்கு தெரியாது' என்று போய்விட்டேன்.
அம்மாவிடம் சொல்லிவிட்டதை வந்து சொல்வாள் என்று இருநாளாக நினைத்துக் கொண்டிருந்தேன்.
அவள் எப்போதும்போல் சுற்றிக் கொண்டிருந்தாள். அவளைப் பார்க்க கூடாது, பேசக் கூடாது என்றேண்ணியிருந்தேன். ஆனால் மனசு கேட்காமல் அவளிடம் சென்று 'என்ன சொன்னியா' சென்றேன்.
'இல்லப்பா', என்றால், குழந்தைத்தனமான முகத்துடன்.
'ஏன்'
'சொல்லி என்னப்பா ஆவப் போவுது'.
'ஏன்'
'அவன காணல, எங்க இருக்கண்ணே தெரியல, குவாட்டர்ஸ்லே இல்ல'.
சிறிது மௌனத்திற்குபின் 'பின்ன என்னபன்றதா நினைப்பு?'
ம்..என்ன பண்றது... நா, புள்ள பெத்துகிறதா இருக்கேன்', என்றாள்.
லேசாக கண் கலங்கினாள். கையால் கண் ஓரங்களை தாவணியால் துடைத்தாள். அவனை கல்யாணம் கட்டிக்கலாம் என்கிற அவள் நினைப்பு மாறிப்போயிருந்தது. அவளிடம் என்ன சொன்னாலும் புரியாதுபோல் தோன்றியது. நாட்களை கணக்கிட போது மே அல்லது ஜூனில் பிரசவம் இருக்ககூடும் என நினைத்தேன்.
'அப்பா வயித்த தள்ளிக்கிட்டு வந்து பரிச்சை எழுதப் போறியா' என்றேன்.
சட்டென தலை தூக்கி 'ஏன் எழுதுனா என்ன' என்றாள்.
ஓங்கி அறையலாம் போல் இருந்தது. 'சீ... போடி' என்று எழுந்து போய்விட்டேன்.
மாலை ஆவளுடன் பஸ்சில் என் வீட்டையும் தாண்டி அவள் வீடுவரை சென்றேன். 'எங்க வீட்டுக்கா வர்ற' என்று கேட்டுக் கொண்டிருந்தாள். 'எல்லா வேறு ஒருத்தர் வீட்டுக்கு போறேன், அப்படியே உங்க வீட்டையும் பாத்துடலாமே' என்று அவளுடனேயே சென்றான்.
அவள் வீடு போனபோது அவள் அம்மா கடலை தின்றுக் கொண்டிருந்தார். எப்படி கூறுவதென்று தெரியாமல் மெதுவாக விஷயத்தை ஆரம்பித்து, கூறிவிட்டேன். முதலில் புரியாமல் முழித்துவிட்டு திடிரென மயக்கம் வராத குறையாக கடலை பொட்டலத்தை தூக்கிப் போட்டுவிட்டு தரையில் அமர்ந்துவிட்டார். 'என்னம்மா சொல்ற' கண்கள் கலங்கி ஒரு மாதிரி ஆகிவிட்டார். 'என்னடி இது' என்று அவளிடம் கேட்க உம்மென்ற முகத்துடன் 'ஆமாம்' என்றாள். அவள் தங்கையும் கூடவே அவளையும் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அன்று அவள் வீட்டில் என்ன நடந்ததோ தெரியவில்லை. மறுநாள், நான் வந்து சொல்லிவிட்டதற்காக கோபப்படுவாள் என நினைத்தேன். ஆனால் எப்போது போல‌வேயிருந்தாள். மாலை அவள் அம்மாவும் அத்தையும் வந்து விட்டார்கள். அந்தப் பையன் ஓடிவிட்டதாகவும், அவர்கள் வீட்டில் சென்று கேட்ட‌தற்கு அடிக்க வருகிறார்கள் என்றும், அவர்கள் பேச்சில் புரிந்து கொள்ள முடிந்தது. கருகலைப்பிற்கு அவள் சம்மதிக்க வில்லை. 'நீ சொல்லம்மா' என்பதுதான் அவர்கள் வேண்டுகோள். முடிந்தவரை எடுத்துக்கூறினேன். இந்த தேர்வு மிக முக்கியமானது, மற்றதையெல்லாம் அப்புறம் முடிவு செய்துகொள்,நாளை கடத்தாதே என்றேன். பேசாமல் நின்றாள். 'நா அவகிட்ட நாளைக்கு பேசுறேன், நீங்க அழைச்சுக்கிட்டு போங்க' என்றேன்.
'அடுத்த நாள் அவளிடம் நீ பண்ணப்போற இந்த காரியத்தால உங்க குடும்பத்துக்கு எவ்வளவு அவமானம் யோசிச்சுப்பாரு உங்க அப்பா அம்மாவுக்கு எவ்வளவு தலைகுனிவு, நா சொன்னமாறியே அவன் ஒடிப் போயிட்டான் பாத்தியா, இனிமேலும் அவன் மேல நம்பிக்கை வைச்சிருக்கியா' நீண்ட இடைவெளிக்குப்பின், கடைசியாக அவள் ஒத்துக்கொண்டு போனாள். கண்கள் கலங்கியிருந்ததுபோல் இருந்தன. எப்போதும் இருக்கும் துள்ளல் குறைந்துபோய் எழுந்து போனாள்.
அவள் எடுத்துக் கொண்ட 15 நாள் விடுமுறையை மலேரியா, பேதி என்று பள்ளி ஆசிரியர்களிடம் கூறிவந்தோம். 15 நாள் கழித்து வந்தபோது, அவள் முகம் வெளுத்திருந்தது. அவள் விசயம் தெரிந்த இரண்டொரு பெண்கள் அவளை சூழ்ந்து ஆறுதலாய் பேசிக் கொண்டிருந்தார்கள். நானும் பேசினேன், என் கண்களை சந்திக்க அவளிடம் ஒரு தயக்கம் இருந்தது. பின்னாலில் சிங்காரிப்பதில் அவள் ஆர்வம் குறைந்து, படிப்பில் கொஞ்சம் கவனம் செலுத்த ஆரம்பித்தாள்.
சுனிதா நீங்களாக, மற்ற பெண்கள்கூடிப் பேசும்போது அவளைப்பற்றிய வார்த்தை இல்லாமல் இருப்பதில்லை. அவளைப் பற்றிய பேச்சு இல்லையென்றால் அப்பேச்சு சுவாரஸ்யமாக அமைவதில்லை. அதில் முக்கியமானது அவள் வருங்காலத்தைப் பற்றியது.
இனிமே குழந்தை பெத்துக்க முடியாதம்பா, ரொம்ப சின்ன வயசிலேயே கலச்சிட்டதால, இருதய பிரச்சனை இருக்கிறதால இன்னிமே குழந்த பெத்துக்க முடியாதம்பா, அப்படியே உண்டானாலும் அது அவ உயிருக்கு ஆபத்தாம்பா' என்று விஜயா நீளமாக கூறிக்கொண்டிருந்தாள்.
அவளைப் பற்றிய விசயங்கள் சுவாரஸ்யம் இழப்பதற்கு கொஞ்ச நாள் ஆகியது.
கூட்டு படிப்பிற்காக விஜயாவுடன் சுனிதா விட்டிற்காக வந்தபோது அவளின் அன்றைய பேச்சு மிக அந்தரங்கமாக அவள் மனக்குறையை வெளிப்படுத்துவதாகவும் இருந்தது. இனிமே நா குழந்தையே பெத்துக்க முடியாதாம்பா' என்பதுதான் அதில் முக்கியமான விசயம். சாதாரணமாக சமாதானப் படுத்திவிட முடியவில்லை. 'இப்போதைக்கு படிப்பில் கவனமாயிரு, பின்னாடி அதைப்பத்தி யோசிச்சிக்கலாம்'. என்று அவள் மனதை திசைதிருப்ப மட்டுமே முடிந்தது. இந்நிலையிலும் விஜயா 'நா இவகூட படிக்கிறேன்னு எங்கம்மாகிட்ட சொல்லிறாதப்பா' என்றாள். அனைத்தையும் அவள் அம்மாவிடம் கூறிவிட்டிருக்கிறாள். 'இதுதான் என்வேல பாரு, நீ வந்தது எங்கம்மாகூட கதையடிக்க, அதைப்போயி செய்யி'
கானாமல் போன அந்தபையன் அடுத்த வருடமே அவளை பின் தொடர்ந்தான். 'அவன் பின்னாடியே வாறாம்பா அவன போ சொல்லுப்பா' ஒருநாள் என்னிடம் வந்து கூறிக்கொண்டிருந்தாள். பஸ் ஸ்டாப்பில் வைத்து அவனைப்பார்த்த போது முன்னிலும் கம்பீரமாகிவிட்டதுபோல் தெரிந்தது. நாங்கள் போன பஸ்ஸிலேயே இரண்டுநாள் எங்களைபின் தொடந்து வந்தான். மூன்றாம் நாள் வந்தபோது முதல் நிறுத்தத்திலேயே இறங்கிக் கொண்டோம். அவனும் இறங்கினான்.
நேராக அவனிடம் சென்று 'ஏன் அவ பின்னாடியே வரீங்க உங்களுக்கு வேற வேல இல்லையா'
'அது எங்களுக்குள்ள பிரச்சனை நீங்க பேசாதிங்க' என்றான்.
அப்ப பிரச்சனை வரும்போது எங்க போயிருந்திங்க, அவ இனிமேலாவது நல்லாயிருக்கட்டும், அவள இனிமே தொந்தரவு பண்ணாதிங்க' என்று கூறி விறுவிறுவென்று அவளை அழைத்து வந்தேன்.
'என்னப்பா இப்படி பேசிட்ட, அவன் முரடன்பா, ஒன்னைய அடிச்சாலும் அடிப்பான்'.
'இனிமே அவன் ஒம்பின்னாடி வரமாட்டான் பயப்படாதே' என்றேன்.
பள்ளிப்படிப்பு முடியும் வரை அவன் வரவேயில்லை. அப்பாவிற்கு மாற்றலாகி வேறு ஊர் வந்துவிட்டோம். அப்புறம் அவளிடம் தொடர்பேயில்லை. அப்பாவின் அலுவலகம் மூலமாக் இந்த ஊர் விலாசத்தை கண்டுபிடித்திருக்கிறார்கள்.
கல்யாணத்திற்கு எப்போதும்போல் அப்பா வரவில்லை. நானும் அம்மாவும் மட்டும் சென்றோம். எங்களை கண்டதுமே சுனிதாவின் அம்மாவிற்கும் அத்தைக்கும் சந்தோஷம் தாளவில்லை. அவள் அம்மாவிற்கு வெள்ளைமுடி அதிகமாகிவிட்டிருந்தது. அத்தை கண்ணாடி போட்டு வேறுமாதிரி ஆகியிருந்தார். அவர் மகனைத்தான் திருமணம் செய்கிறாள் சுனிதா.
கொஞ்ச நேரம் பேசியபின் 'சுனிதா அந்த ரூமிலே இருக்கா, போய் பாரும்மா' என்றார். மணப்பெண் அறைக்கு சென்றபோது, நெத்திசுட்டி பில்லாக்கு வைத்து பாவாடை ரவிக்கையுடன் நின்று கொண்டிருந்தாள் சுனிதா. அவளுக்கு புடவை உடுத்திக் கொண்டிருந்தாள் ஒரு பெண்.
என்னைப் பார்த்துமே பெரிய திறந்த வாயுடன், 'ஏ... எப்ப வந்த' என்றாள், சேலை கட்டுபவளுக்கு ஈடுகொடுத்தபடியே என்னிடம் பேசிக் கொண்டிருந்தாள். இன்னும் அழகாகிவிட்டிருந்தாள். சற்று பெருத்து முடிநல்ல‌ அடர்த்தியுடன் லச்சணமாக மாறியிருந்தாள். அவள் அலங்காரத்திற்கு கொஞ்சம் உதவி செய்துவிட்டு, 'சரி நா வெளியில போய் உட்காந்திருக்கேன்' என்றுகூறி கிளம்பினேன்.    [உயிர் எழுத்து இதழில் வெளியான கதை] -o0o-

4 comments:

கமலேஷ் said...

சிறுகதை ரொம்ப நல்லா வந்திருக்குங்க.

கதை நகர்த்திய விதமும், நடையும் ரொம்ப நல்லா இருக்கு.

கே.ஜே.அசோக்குமார் said...

உயிர் எழுத்தில் வந்த கதை. இதேபோல் இரு சகோதரிகளின் கதை எழுதியிருக்கிறேன் வேறோரு பார்வையில். கதை ‍'வாசமில்லா மலர்'. 'சிறுகதை' பகுதியை கிளிக் செய்தால் கிடைக்கும்.
நன்றி.

M. Md. Hushain said...

Nice one. Ending is really good.

கே.ஜே.அசோக்குமார் said...

Thank you Mr M. Md. Hushain