Wednesday, December 30, 2009

கால்கள்: சிறுகதை



பெண்களின் கால்களை எப்படிப் படிக்கவேண்டும் என்று கற்றுக் கொடுத்தது ராமசுப்புதான். குட்டைக் கால்கள், நெட்டைக் கால்கள் தவிர பூனைமுடி கால்கள், கரடிமுடி கால்கள், பாம்புத்தோல் கால்கள் என்று பல கால் வகைகளைப் பற்றிக் கூறுவார்.

கடந்து செல்லும் பெண்ணின் காதில் விழாதபடி, 'கால பாத்தியா... இது அதுல ரொம்ப வீக்கு டே' என்பார். அல்லது அதிர்ந்து நடந்து செல்லும் பெண்ணைக் காட்டி 'இது அடியில கட்டி டே' என்று எதாவது கூறுவார். சில நேரங்களில் காதில் விழுந்து விடும். திரும்பிப் பார்கையில், நாங்கள் மூலைக்கு ஒருவராக தெறித்திருப்போம். ராமசுப்பு அதற்கெல்லாம் கவலைப்படாமல் 'என்ன மதனி.. எப்படி இருக்காப்பல?' என்பார் எதுவும் நடக்காத மாதிரி.
ராமசுப்புவை முதலில் பார்த்தது பிள்ளையார் கோவிலில் வைத்துதான். பிள்ளையார் கோவிலிலிருந்து பார்த்தபோது ஆரம்பப்பள்ளிக்குப் போகும் தெருவில் தூரத்தில் சண்முகம் வருவது தெரிந்தது. கூடவே ஏதோ ஒரு மிருகம் ஒன்றை நடத்தி வருகிறானே என நானும் முரளியும் பயந்துவிட்டோம். பக்கத்தில் வந்தபோது சண்முகத்திடம், 'என்னடா இவரு இப்படி நடந்து வராரு..' என்றேன். சட்டேன முகம் மாறி 'டேய்...' என்று இழுத்தான். 'இருக்கட்டு டே... எல்லாம் நம்ம பிரன்ஸ்ங்கதானே' என்று சண்முகத்திடம் கூறிக்கொண்டே பிள்ளையார் கோயில் கட்டையில் ஏறியமர்ந்து வெள்ளையும், கருப்பும் கலந்து ஒரு மாதிரி காய்ந்து போன முட்டிகளை பிடித்து மேலே தூக்கி வைத்துக் கொண்டார். பேசிக்கொண்டே தோளில் கைபோட்டுக்கொண்டார் அவ்வளவு எளிதாக எல்லோரையும் நட்பாக்கி கொள்ளக்கூடியவர் என்பது பிறகுதான் தெரிந்தது.

காக்கி கலர் டவுசர்தான் எப்போது அணிந்திருப்பார். மேலே பேருக்கு வேட்டியை சுற்றியிருப்பார். உட்காரும் போது அதையும் தூக்கி விட்டுக்கொள்வார். கொஞ்சம் வேர்த்தாலே போதும் உடனே சட்டையை கழட்டி பக்கத்தில் வைத்துக்கொள்வார். முருகன், அம்மன் டாலர்கள் கொண்ட வெள்ளையாக மாறி நைந்துபோன கயிறுகள் ரெண்டு மூணு கழுத்தில் பின்னிக்கொண்டிருக்கும். வற்றலான உடம்பு, பாத்தி கட்டியது மாதிரி நடுநெஞ்சில் முடியுடன் கூடிய உள்ளடங்கிய வயிறு. பாம்பு வயிறு என்று அவர் கூறிக்கொள்வார். 'நடக்கும்' நேரம் தவிர மற்ற நேரங்களில் அந்தப்பக்கம், எந்தப்பக்கமாக ஆடும் சூம்பிப்போன கால்கள்.

எங்கள் காலனி தெருவின் எதிர்சாரியில் சண்முகம் வீடு இருந்தது. அந்த வீட்டின் ஒரு பகுதியை தான் சண்முகத்தின் உறவுக்காரரான ராமசுப்பு வாங்கி இருந்தார். அந்த வீட்டிற்குக் கிழக்கே வெறும் தோப்பு தான். அந்த வீடு முன்பக்கம் ஓடாகவும், பின்பக்கம் கீற்றாகவும் இருக்கும். அதற்கு பின்னால் தோட்டமும் கிணறும் உண்டு. வீட்டின் நடுவில் தடுப்புச் சுவர் எழுப்பி கிழக்குப் பக்கத்தை அவருக்கு விற்றிருந்தார்கள். அவ்வீட்டிற்கு ராமசுப்புவும் அவரின் பெரியம்மா கிழவியும் வந்தார்கள்.
அவர் வந்தபிறகு அவர் வீட்டுத் திண்ணையிலும் தோட்டத்திலும்தான் எங்கள் அரட்டை நடக்கும். கணேசன், முரளி, இளவரசு, ராஜா இவர்களுடன் நான். உலகவிசயங்கள், அரசியல், மலைப் பயணம், பெண்கள், நீச்சல், உணவு வகைகள் என்று பல விசயங்களைப் பற்றி கூறுவார் ராமசுப்பு. எந்த அவசர வேளையாகப் போய்க் கொண்டிருந்தாலும் கூட, பக்கத்தில் உட்கார வைத்து எதைப் பற்றியாவது சொல்லிக் கொண்டிருப்பார். சொல்லும் ஒவ்வொரு விசயத்திலும் தனக்கு எல்லாம் தெரியும் என்கிற நினைப்பை விட மற்றவர்களுக்கு நாலு விசயம் கற்றுக் கொடுக்கிறோம் என்கிற பெருமிதம் மேலோங்கி நிற்பதாகத் தோன்றும். அதேசமயம் எதிர்வினைகள் எப்படிப்பட்டதாக இருந்தாலும் ஏற்றுக்கொள்வார். சொல்லப்போனால் அவற்றை மிகவும் விரும்புவார். அவற்றைப் பேசி வெற்றி கொள்வது அவரின் சாகசங்களில் ஒன்று. வேறு இடத்தில் நடந்த பேச்சு சாகசங்களையும் எங்களிடம் பகிர்ந்துகொள்வார்.

ஆனால் இளவரசுக்கு எப்போதும் அவர் மேல் சந்தேகம் உண்டு. 'சின்னப் பசங்கன்னு, நல்லா கத விடறீங்களா...?' இப்படி வீராப்பாக ஏதாவது கூறுவான். பொதுவாகவே அவன் கொஞ்சம் உணர்ச்சிப் பிளம்பானவன். சின்ன விசயதிற்குக்கூட நாக்கை மடித்துக்கொண்டு சண்டைக்கு வருவான்.
ஒரு முறை அவன் தங்கையை அழைத்துக்கொண்டு பள்ளி செல்லும்போது, 'என்னம்மா பள்ளியோடம் போறியா' என்று கன்னத்தை கிள்ளி முத்தம் கொடுத்தார், இளவரசுக்கு வந்ததே கோபம் 'பொம்பளிகிட்ட பேசுற முஞ்ச பாரு...' என்று கூறி அவளை அழைத்துப் போனான். ராமசுப்பு விழுந்து விழுந்து சிரித்தார். 'டே... அதுக்கு இன்னும் பத்து வருஷம் ஆவனும்டே' என்றார். என்னைப் பார்த்து 'என்ன மாப்ளே, இப்படி சொல்றான்' என்றதற்கு, இளவரசின் பார்வைக்குப் பயந்து - பெரும் கோபக்காரன் வேறு - தோளைக் குலுக்கிக்விட்டு கம்மென்று இருந்துவிட்டேன். அவனுக்கு ஒரு தங்கை தவிர இரண்டு அக்காக்களும் உண்டு. அவன் அம்மா சின்ன வயதிலேயே இறந்துவிட்டாள். பெரிய அக்காள் தான் அவனையும் அவன் தங்கையும் வளர்த்தாள். அதனாலேயே அவன் எங்களில் வித்தியாசமாக இருப்பதாகப்பட்டது. எங்கேயாவது உட்காரும்போது சட்டையை தூக்கிவிட்டு தான் உட்காருவான். சட்டை அழுக்காகிவிடும் என்பான். சிலநேரங்களில் சட்டை காலரின் உட்பக்கத்தில் பெரியாள் மாதிரி கர்சீப் வைத்திருப்பான். பவுடர் கலையாத முகத்தின் நெற்றியில் விபூதியும் கும்குமமும் கலையாது இருக்கும். சைக்கிளில் பாரில் உட்காரமாட்டான், சீட்டில்தான் உட்காருவான். எல்லாம் அவன் அக்கா சொல்லிக் கொடுத்த பாடங்கள்.

ராமசுப்பு கால்களை பற்றி சுவராஸ்யமாக கூறிக்கொண்டிருந்தபோது, 'ஆங்... உங்க கால் மட்டும் ரொம்ப அழகோ.' என்று கூறிவிட்டான். அடிக்கத்தான் போகிறார் எனப் பயந்துக்கொண்டிருந்தோம், 'பொம்பளக்குதான்டா காலப் பாக்கணும், ஆம்பளைக்கு முட்டியதண்டா பாக்கணும், இதல்லாம் உனக்கு வயசுக்கு வந்த போறவுதான்டே தெரியும், ம் முட்டிய பாரு, முட்டியில நடந்து நடந்து எப்படி சொசொனு இருக்குதுன்னு பத்தியா, இதுதான்டே தேவை' என்றார். அவருடைய விளக்கம் அவனுக்கு திருப்திப்படுத்தியதாக இல்லை. இருந்தாலும் பேசாமல் இருந்தான். பெண்களைப் பற்றி இப்படி கூறுவது கொஞ்சமும் பிடிக்கவில்லை அவனுக்கு.
பேச்சு சுவரஸ்யமாக நீண்டுகொண்டே செல்லும். போன தீபாவளி சமயத்தில் நடுஇரவுவரை சென்றுவிட்டது. பிறகு கிழவி வந்து சத்தம் போட்டாள். ராமசுப்புவை வைதாள் கிழவி, 'விடு கிழவி, என்னாயி போச்சு' முகத்தில் சிரிப்போடு சமாதானப் படுத்தினார்.
'களிசால போறவனே... ஏன்டா நடுராத்திரியில கூத்தடிக்கிற, உனக்கு புலிவலத்த விட்டு மடப்புரம் வந்தது போறாதா மானங்கெட்ட பயலே.'
'நீயஞ்சாமி, இவன்கூடல்லாம் சேர்ற, உங்கப்பாரு பார்த்தாருன்னா வையப் போறாரு பாத்துக்க...' என்று என்னையும் எல்லோரையும் அனுப்பி வைத்தாள்.

பின்மாலையில் நாங்கள் என்றால், காலையும், மதியமும் வடிவு டீக்கடையில் அரட்டை அடிப்பார் ராமசுப்பு. எப்போதாவது அங்கு இட்லி வாங்கச் செல்வேன். நான் போனாலே ராமசுப்பு, 'நமக்கு வேண்டப்பட்ட தம்பி. முதல்ல கொடுங்க' என முதலில் வாங்கி கொடுத்துவிடுவார். புகையால் கறுத்துப்போன கூரைகளை உடைய டீக்கடை அது. இரண்டு நீள பெஞ்சுகள் இருக்கும்; ஒன்றின் ஓரத்தில் ராமசுப்பு அமர்ந்து போவோர் வருவோரிடம் கதை அளந்துகொண்டிருப்பார். பலமான அரசியல் விவாதங்களும், வாய்ச்சவடால்களும், சிலசமயம் அடிதடிகளும் எனப் பரபரப்பாக இருக்கும் இடம். ஒருமுறை மீன்காரர் ஏழுமலை ஒரு பொது சவால் ஒன்றை விட்டார் உண்மையில் அது ராமசுப்பை வம்பிழுக்கதான் ராமசுப்பு துள்ளி எழுந்தார். ஏழுமலை விருப்பம் போலவே சவாலை அவர் தான் முதலில் ஏற்றுக் கொண்டார். ஏழுமலைக்கு நூற்றிஐம்பது டீ, ராமசுப்புக்கு நூற்றிஐம்பது பரோட்டா சாப்பிடவேண்டும். இது தான் போட்டி. இப்படி வாடிக்கையாக எதாவது நடக்கும். வடிவு கடைபொன்னுசாமிக்குக் கொண்டாட்டமாக இருந்தது. அந்த தெருவே போட்டியை நின்று வேடிக்கை பார்த்தது. ராமசுப்பு சப்ளை பையனிடம் 'டே, எம்பக்கத்தில தண்ணியே காட்டாத', மிரட்டும் தொனியில் சொல்லிவிட்டு குருமாவை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி ஒன்று விடாமல் காலிசெய்து காட்டினார். ஏழுமலையால் நினைத்துபோல முடியவில்லை, தொண்ணுற்றி ரெண்டுலே வாந்தி எடுத்தார். பிறகு பந்தய பணம் ஐநூறை வாங்கிட்டேன்லஎன்று எல்லோரிடம் கூறிக்கொண்டிருந்தார் ராமசுப்பு.
மறுநாள் பேச்சில் 'ந் தண்ணிய வைக்ககூடாதுன்னு சொன்னிங்கஎன்றான் முருகேசன். 'அது வந்துடே...' என்று ஆரம்பித்து ஒரு பெரிய விளக்கத்தைக் கூறினார். முருகேசன் வாயில் ஈ போவது தெரியாமல் கேட்டு வியந்து போனான். எடுத்தகாரியம் எதையும் முடிக்காமல் அவர் விட்டதில்லை. அதனாலேயே ராமசுப்புவின் மீது ஒரு வியப்பு எல்லோருக்கும் இருந்தபடியே இருந்தது.
காலையில் எழுந்ததும் ராமசுப்பு ஒரு வேலை செய்வார். சுருட்டு குடிப்பது. அதுவும் முதலியார் தோப்பில் போய்தான் குடிப்பார் பிள்ளையார் கோயில் குளத்தின் மேல்கரை முழுவதும் தோப்புடன் இணைத்திருந்தது. ஒரு நாள் மதியம் என்னை அங்கு அழைத்து சென்றபோதுதான், ஏன் இங்கு வருகிறார் என்று தெரிந்தது.

குளத்தின் வடகரை பெண்களுக்கானது. மற்ற இருகரைகளும் பொதுவானது. தோப்பிலிருந்து பார்த்தால் பெண்கள் குளிப்பது தெளிவாக தெரிந்தது. ஆனால் தோப்பில் இருப்பவர்களை அவர்கள் காண வாய்ப்பில்லை. பாவடை கட்டி குளிக்கும் பெண்களின் கால்களை ரசித்து ஒவ்வொன்றாக வர்ணிக்க ஆரம்பித்தார். கொஞ்சம் கொஞ்சமாக வர்ணனை உயர்ந்து 'அங்கெல்லாம் புள்ளி புள்ளியாக இருக்கும், எந்தெரியுமா...' என ஆரம்பித்தார். இம்மாதிரி நேரங்களில் அவர் முகம் ஒரு கொடுர பாவனை கொண்டுவிடும். உற்று நோக்கும் கண்களோடு எதிராளியை வேறு பக்கம் கவனபடுத்தவிடாமல் பேச ஆரம்பிப்பார். 'அண்ணே... சும்மா இருங்கண்ணே' யாராவது பார்த்த அடித்தான் விழும் என்றேன். 'எவனாவது ஒரு வார்த்த கேட்டுடுவானா நம்பல', என்றார் ஏதோ நகைச்சுவை கூறும் பாவனையோடு.

ராமசுப்புவிற்கு மடப்புரதிலுள்ள எல்லா ஆண்களும் நண்பர்கள் மாதிரி பெண்களும் நண்பர்கள். பெண்களுக்கு வேறு மாதிரியான ஜோக்குகள் வைத்திருப்பார். அவரது கம்பீரம் அப்போது மாறிப்போய்விடும். பேச்சில் அழுத்தம் குறைத்து மென்மையாக பேசுவார். அதே நேரத்தில் பெண்களில் ஆளுக்கு தகுந்த மாதிரி பேசுவார். ஆத்தா கடை வாசுகியிடம் ஒருமாதிரியும், பாரவண்டி ராசு மகளிடம் ஒருமாதிரியும் பேசுவார். சில பெண்கள் கோபப்பட்டு ஏதாவது பேசுவதும் நடக்கும், அப்போது அவர் முகபாவனையே மாறி அது அவர்தானா என்கிற சந்தேகம் வந்துவிடும். இளவரசுவின் அப்பா அந்தத் தோப்பிற்கு காவலாளியாக உள்ளார். வீடும் குளக்கரையின் தெருவின் முனையிலேயே உள்ளது. என்னை எப்போதும் காலனி தெருப் பையன் என்று மரியாதையாக நடத்துவார். அதை கெடுத்துக்கொள்ள விரும்பாமல். ஓடி வந்து வந்துவிட்டேன்.

அந்த மாதத்திலேயே புலிவலத்தில் ராமசுப்புவிற்கும் அவரது உறவுகாரப் பெண்ணிற்கும் திருமணம் நடந்தது. இரண்டு நாள் கழித்து அழைத்துவந்தார். பெண் வெளுப்பாக வட்ட முகத்துடன் இருந்தாள். அவளையும் காலைப் பார்த்துத்தான் கட்டியிருப்பார்.

அன்று மதியம் கல்யாணத்திற்கு வராத டீகடை நண்பர்கள், சைக்கிள் கடை நண்பர்கள், காலனி நண்பர்கள் அனைவருக்கும் விருந்து கொடுத்தார். அவர் மனைவி ஓடி ஓடி வேலை செய்தார். பெரியம்மா கிழவிதான் கொஞ்சம் கடுப்பில் இருந்தாள்.
சாப்பிட்டு முடிக்கும் போது ஒருவன் வந்து இளவரசை அழைத்துக் கொண்டு போனான். நான் ரோட்டிற்கு வந்தபோது வடகரையில் ஒரே கும்பலாக இருந்தது. சில வினாடிகளில் அக்கூட்டம் பெரிதாக ஆரம்பித்தது. நான் அங்கு ஓட்டமாக ஓடிப்போய் நின்றபோது ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைத்து போனேன்.

உடல் முழுதும் புழுதியுடன் இளவரசு தரையில் விழுந்து புரண்டு கொண்டிருந்தான். எழுந்து சுற்றிச் சுற்றி ஓடினான். குளக்கரை கட்டையில், புளியமரத்திலும் இடித்துக்கொண்டான். கூடவே 'அய்யய்யோ, அய்யய்யோ' என்று குரல் வெளியே வராத ஒருவினோத ஒலியுடன் அடித்தொண்டையிலிருந்து கத்திக் கொண்டிருந்தான். அதைப் பார்த்தபின் எல்லோரும் சிலையாக நிற்பது மாதிரி தெரிந்தது. முடிதிருத்தும் முனியாண்டிதான், 'கொளத்துல விளுந்துடபோறான் பார்' என ஓடிவந்து பிடித்தார், நழுவி நழுவி ஓடினான். கடைசியில் ஓரிடத்தில் அவனைப் பிடித்தார். அப்போதும் கால்களைத் தளர்த்தியும் இறுக்கியும் இழுத்தபடி இருந்தான். முனியாண்டி பலமாகப் பிடித்திருந்தார். இளவரசு 'யக்கோவ், யக்கோவ்' என்று கத்திகொண்டே இருந்தான். அவன் வீட்டு குறுகிய வாசல்படி வழியே, பக்கத்து வீட்டு அம்மா அவன் தங்கையை மாரோடு அணைத்து அவள் முகத்தை மூடியபடி வெளிவந்தாள். வாசலை நோக்கி கூடியிருந்த மக்களை நகரு நகருஎன்று கூறியபடி கதவை திறந்தார் ஒருவர். வெளிர் நீல புடவையில் இடுப்புவரை தெரிந்தது. குனிந்து பார்த்தபோது, எந்தவித பிடிமானமும் இல்லாமல் தன்னிச்சியாக கொடுக்காபில்லி காய் மாதிரி, மல்லிகா அக்கா தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தாள். சட்டெனக் கதவைச் சாத்தி, 'பசங்களா எல்லாம் ஒடுங்க ஒடுங்க', என்று விரட்டினார்.
பதற்றம் அதிகரித்தது. நெஞ்சுக்குக் குறுக்கே கைகளைக் கட்டியபடி விலகி நின்றேன் சிறிது நேரம். இதயம் துடிக்கும் வேகத்தை அதிர்ச்சியோடு கவனித்தேன். பதற்றம் மேலும் அதிகரித்தபடியே இருந்தது. யார் எங்கே போகிறார்கள் யாரை நோக்கி பேசுகிறார்கள் என்று புரியவில்லை. திடீரென ஒரு கட்டத்தில் வீட்டை நோக்கி ஓட ஆரம்பித்தேன். எதிரே வந்த சைக்கிளை இடித்துக்கொண்டு எதையும் கவனிக்காமல் ஓடினேன். வீட்டிற்கு சென்று சேரில் அமர்ந்தபோது தொடைகள் நடுங்கிக் கொண்டிருந்தன. அம்மாவின் பார்வைக்கு விலகியபடியே இருந்தேன். கண்ட நிகழ்வுகளை அப்போது ஒருங்கிணைக்க முயன்றேன் முடியவில்லை. வெளிர் நீல புடவையில் மஞ்சள் பூசிய, பூனைமுடி கொண்ட, பச்சை ரத்தம் பரவிய, முட்டிவரை தெரிந்த அழகான கால்களே என் நினைவுக்கு வந்தன.



வார்த்தை செப்டம்பர் 2009 இதழில் வெளியானது.

No comments: