Friday, August 21, 2009

சிறுகதை: ட்ரேடு


என் அப்பாவை பொருத்தவரை உலகில் இரண்டு வகை மனிதர்கள் மட்டுமே உண்டு. ஒன்று பணம் உள்ள மனிதர்கள், மற்றொன்று பணமில்லாதவர்கள். அவர் உலகில் மற்ற உயிரினங்களாக நாம் நினைக்கும் மரம், செடி, பாம்பு, பல்லி, பறவைகள் சித்தர்கள், முனிவர்கள், கலைஞர்கள் என்று யாரும் கிடையாது. எல்லோரும் அந்த இரண்டு வகைக்குள் தான்.



நான் கும்பகோணம் வந்து இறங்கிய போது மீண்டும் அந்த ட்ரேடைப் பற்றி நினைத்துக் கொண்டேன். இந்த நினைப்பு எப்போது வரும் என்று சொல்லமுடியாது அல்லது எப்போது போகும் என்றும் சொல்லமுடியாது. என் சின்ன வயதிலிருந்தே இந்த நினைப்பு என்னை சுற்றி வந்த படியே இருக்கிறது.


என் அப்பாவிற்கு அடிக்கடி ஊர் மாறும் வேலையில் ஒரு வேலை, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது ஊர் மாறிவிடுவோம். அப்போது நாங்கள் மடப்புரத்தில் கீழத் தெருவில் இருந்தோம். தெரு முனையில் முக்தி வினாயகர் கோவிலும், பக்கத்தில் ஒரு குளமும் உண்டு. கோவிலின் பின் பக்க தெருவான மேலத் தெருவின் ஒரு புது மாடிவீட்டில் இளங்கோ இருந்தான்..அவன் என் பள்ளியில் என் வகுப்பில் படித்து வந்தான். படிப்பில் மிக கெட்டிகாரனாக இருந்தான். நிறைய விசயங்கள் தெரிந்திருந்தன அவனுக்கு. அவனிடமிருந்து தான் இந்த ட்ரேடை பற்றி தெரிந்து கொண்டேன். அந்த ட்ரேடு அவனின் ஐந்தாம் வகுப்பிலிருந்து ஆறாம் வகுப்பின் தேர்ச்சிக்காக அவன் அப்பா அவனுக்கு வாங்கி கொடுத்தது. பள்ளியில் ஒவ்வொரு நாளும் அதை பற்றிய செய்தி ஒன்றை கூறிக்கொண்டிருந்தான். எனக்கும் என் மற்றொரு நன்பனான ராஜாவிற்கும் மிகுந்த ஆர்வம் ஏற்பட வைத்தது அவன் பேச்சு. அதற்காகவே அவன் அப்படி பேசி இருக்கவேண்டும். 'அதை எங்களுக்கு காட்டேன்' என்றதற்கு, வீட்டிற்க்கு வாங்க என்று உடனே கூறிவிட்டான். அவன் கூறியபடி அன்று மாலை நானும் ராஜாவும் அவன் வீட்டிற்கு சென்றோம்.


மேலத் தெரு நடுவில் அவன் வீடு இருந்தது. எங்கள் வீட்டை விட நன்கு பெரியதாக வெளிச்சமாக இருந்தது. மேஜைக்கு விரிப்பு, சன்னல்களுக்கு திரைகள் என்று அழகு படுத்தப்பட்டிருந்தன. சேரில் அமரச் சொல்லிவிட்டு உள்ளே சென்றான் இளங்கோ. ஒயர்களால் பின்னப்பட்ட இரும்பு சேர் அது. அதன் கைப்பிடி வட்டவடிவமாக இருந்தது. ராஜா சேரின் மையத்தில் அமராமல் வட்டவடிவக் கைப்பிடியின் ஒரு பக்கத்தில் அமர்ந்து மற்றொரு பக்கத்தை பிடித்துக் கொண்டிருந்தான். "அங்க பாருடா யானை", "இங்க ஒரு மானு", என்று சுவரில் மாட்டபட்டிருந்த மூங்கில் பொருட்களால் செய்யப்பட்டிருந்த யானையையும், ஒயர்களால் பின்னப்பட்ட சிறிய மான், ஒட்டக சிவிங்கிகளையும் காட்டிக்கொண்டிருந்தான். நான் அவன் வரவை ஆவலுடன் எதிர்பாத்திருந்தேன்.


இளங்கோவும் அவன் அப்பாவும் ஒர் அறைலிருந்து திரைசீலைய விலக்கிகொண்டு வெளிவந்தர்கள். அவன் அப்பா தடிமனான கண்ணாடி ஒன்றை அணிந்திருந்தார். நன்கு ஷேவ் செய்து ஏதோ ஒர் இந்தி நடிகரை ஞாபக படுத்தும் விதமாக, படிய வாரிய தலையுடன், பக்கத்தில் வந்தபோது லேசான வாசனையுடன் இருந்தார். அவர் எங்களிடம் என்ன படிக்கிறீர்கள்? எங்கே இருக்கிறீர்கள்? அப்பா என்ன செய்கிறார்? என்று கேட்டு தெரிந்துகொண்டார். ஏதோ வாய்க்கு வந்ததை உளறிக் கொட்டினோம். அவருக்கு புரியாத போது இளங்கோ எடுத்து கூறினான். அவன் அப்பாவிற்கும் அவனுக்கும் இடையே ஒரு நல்ல இணக்கம் இருந்தது. என் அப்பா இதையெல்லாம் கேட்கமாட்டார், எவனையாவது வீட்டிற்று கூட்டி சென்றால், விரட்டி விட்டுவிடுவார். என்னையும் அவர்கள் முன்னால் திட்டி மானத்தை வாங்குவார்.


இளங்கோவின் கையில் ஒரு டப்பா பெட்டி இருந்தது. 'இது தான் ட்ரேடு' என்றான். அதை திறந்து, அதிலுள்ள பகுதிகளை எங்களுக்கு விளக்கி கூறினான். நாங்கள் புரிந்துகொள்ள முடியாத போது அவன் அப்பா எங்களுக்கு விளக்கினார். 'ட்ரேடுன்னா என்ன' என்றேன் அவர் பேச்சின் நடுவில் புகுந்து. அப்போதைய காலகட்டத்தை பொருத்து 'வியாபாரம்னு சொல்லாம் இல்ல வணிகம்னு சொல்லாம்' என்றர். ஏதோ கொஞ்சம் புரிந்தது, இருந்தாலும் நன்றாக தலையாட்டி வைத்தோம். பிறகு நான், ராஜா, இளங்கோ, அவன் தங்கை கிருத்திகா நால்வரும் சேர்ந்து விளையாடினோம். நடுநடுவே எழுந்து போயி அவரிடம் சந்தேகம் கேட்டேன், பொருமையாக விளக்கினார். ஊர் பெயர்கள், ரயில் நிலையம், விமான நிலையம் என்று அதில் உள்ள பெயர்கள் எனக்கு அதிசயமாக இருந்தது. இதையெல்லாம் தெரிந்துகொண்டால் நானும் இளங்கோ மாதிரி அறிவாளியாக ஆகிவிடலாம் என நினைத்து கொண்டேன். அவன் அப்பாவிடம் இது எங்கே கிடைக்கும் என்றதற்க்கு, 'உன் அப்பாவிடம் கேள் அவர் வாங்கி வந்துவிடுவார்' என்றார்.


இதை கேட்டால் உதைதான் கிடைக்கும், இருந்தாலும் 'சரி' என்று கூறிவிட்டேன். தினமும் நானும், ராஜாவும், இளங்கோவும் விளையாடிக்கொண்டிருந்தோம். நாளாக ஆக எனக்கு அதன் மீது மோகம் அதிகரித்தது. என் பிறந்த நாளுக்கு என் அப்பா வாங்கி தந்தால் எப்படியிருக்கும், எப்படி நன்பர்களிடம் பெருமையாக கூறிக்கொள்ளலாம், அதை எப்படி மாரோடு அனைத்துகொண்டு நடந்து செல்லலாம் என்றெல்லாம் யோசிக்க ஆரம்பித்தேன். கனவில் ட்ரேடு வந்து, தூக்கத்தில் உளற ஆரம்பித்தேன். என்னவென்று புரியாமல் இந்த உளரலை அம்மா எல்லோரிடமும் கூறிக்கொண்டிருந்தாள்.


முழு ஆண்டு விடுமுறையில் வரும் என் பிறந்த நாளுக்கு ட்ரேடை பரிசாக கேட்டால் என்ன? ஐத்தாம் வகுப்பிலிருந்து ஆறாம் வகுப்பிற்க்கு சென்றதற்க்கு கேட்டால் என்ன? வாங்கி கொடுப்பாரா? தெரியவில்லை. கேட்பதற்கே இவ்வளவு யோசிக்க வேண்டியிருக்கிறது. ஒரு நாள் மாலை அன்றைய பேப்பரோ ஏதோ படித்துக் கொண்டிருந்த அப்பாவிடம் இதைப் பற்றி கூறினேன். அவருடைய நல்ல மூடிற்காக காத்திருந்து கேட்கவேண்டியிருந்தது. அதுவும் தயங்கி தயங்கியே கேட்டேன். கேட்டதும் மின்சாரம் தாக்கியது மாதிரி அல்லது வெந்நீரில் கைவிட்டது மாதிரி என்னை திரும்பி பார்த்தார். அது என்ன என்றுகூட கேட்காமல் பண்ணகூடாத தப்பை பண்ணிவிட்டது மாதிரி நீ படிப்பில் கவனம் செலுத்தவேண்டும், படித்து சம்பாதிக்கிற வழியை பார் என்றெல்லாம் கத்த ஆரம்பித்தார். ஏதோ பெரும் சினம் கொண்டது மாதிரி இரவு வரை இருந்தார். இது இளங்கோவின் ‘பிறந்த நாள் பரிசு’ என்றேன் நடுவில் மெல்லிய குரலில். யார் இளங்கோ, எப்போது என் பிறந்த நாள் என்கிற ஞாபகம் கூட இல்லாமல், உன் பிறந்த நாள் ஒரு கேடு, என் பிறந்த நாளுக்கு யாரும் எதுவும் வாங்கி தந்ததில்லை, உன்னை ஐஸ் விக்க அனுப்பவேண்டும், அப்போது தெரியும் என்றெல்லாம் பேச ஆரம்பித்தார். இனி இதைப்பற்றி பேசிப் பயனில்லை என்றாகிவிட்டது.


தினமும் விளையாட ஆரம்பித்தோம். சதுரங்கம், பரமபதம் என்று வேறு சில விளையாட்டுகள் அவனிடம் இருந்தன, ஆனால் எனக்கு இதுதான் பிடித்திருந்தது. வீட்டிற்கு எடுத்துச் சென்று விளையாட எனக்கு கொடுப்பாயா என்றேன் ஒருநாள் இளங்கோவிடம் . ஓ... என்று உடனே கொடுத்துவிட்டான். நானாயிருந்தால் கொடுத்திருக்க மாட்டேன், கொடுத்தால் காணாமல் போய்விட்டது எனக் கூறி தராமல் இருந்துவிட்டால் என்கிற பயம்.


எடுத்து போய் நானே தனியாக விளையாடிக் கொண்டேன். அதனுடன் 'டைஸ்' அல்லது தாயக்கட்டை இருந்தால் போதுமானது. அப்போது தான் எனக்கு ஓர் எண்ணம் தோன்றியது. நானே தயாரித்தால் என்ன? என்னிடம் சீட்டுகட்டுகள் மாதிரி செவ்வக வடிவ அட்டைகள் இருந்தன. ஓரு நாள் ஞாயிற்றுக் கிழமையில் அமர்ந்து அனைத்தையும் அதைப்போலவே தயாரித்தேன். இதில் என் சுய அடையாளம் வெளிப்படதாக பெருமை பட்டுக் கொண்டேன். என் தங்கையிடம் காட்டி பார் எப்படி தயாரித்திருக்கிறேன் என்று மீண்டும் பெருமை பட்டுக் கொண்டேன். குறைந்தது இருவர் விளையாட வேண்டிய அதில், நான் ஒருவனே விளையாடி சந்தோசம் அடைந்தேன். அவள் கேட்டபோது, கொடுக்க மறுத்து, என் பெட்டியில் வைத்து பூட்டி விட்டு, அன்று மதியமே இளங்கோவிடம் பத்திரமாக அவன் ட்ரேடை திருப்பி கொடுத்தேன்.
அவனிடம் நான் புதியதாக தயாரித்திருப்பதை கூறினேன். ஏன் புதியதாகவே வாங்கிவிடலாமே என்றான். அவனிடம் எப்படி விலக்குவது என்று புரியவில்லை, சரி நான் போகவேண்டும் என்று கூறி விட்டு உடனே திரும்பி வந்துவிட்டேன். வீடு வந்தால் என் தங்கை நான் தயாரித்த டிரேடை தரையில் விரித்து என்ன பண்ணுவது என்று தெரியாமல் பார்த்துகொண்டிருந்தாள். என் பெட்டி திறந்து கிடந்தது. என்னை கண்டதும் கீழுதட்டை மடித்து 'கிளுக் கிளுக்' என பழிப்பு காட்டி முகத்தை திருப்பிக் கொண்டாள். 'எப்பட்றீ திறந்த' என்று சத்தம் போட்டேன். அதற்குள் அடிக்க வருவது மாதிரி பயந்து 'அப்பா...' என கத்தி எல்லாவற்றையும் வாரிக் கொண்டு உள்ளே ஓடினாள். உள்ளே சேரில் அமர்ந்திருந்த அப்பாவின் பக்கத்தில் பாதுகாப்பாக நின்று கொண்டு தோள்களை உயர்த்தி மீண்டும் கிளுக் கிளுக் என்றாள். 'என்னடா...' என்றார் தலையை உயர்த்தாமல், கடிதம் எழுதிக் கொண்டிருந்தார். என் ட்ரேடை மார்போடு அணைத்தபடி நின்றிருந்ததை பார்க்க வெறுப்பாக இருந்தது. என் பெட்டியை அவளுக்கு திறக்க தெரியாது. இவள் கேட்டிருக்கிறாள் என்று அவர்தான் திறந்து கொடுத்திருக்க வேண்டும். அவள் கேட்டால் கொடுத்துவிடுவதா? எத்தனை துரோகம் செய்திருக்கிறார் எனக்கு? அவளை அடிக்கமுடியாமல் பார்த்துகொன்டிருந்தேன். 'அப்பா... நான் தயாரிச்ச ட்ரேடை அவள் எடுத்திருகாப்பா.' என்றேன். 'பரிச்சைக்கு ஏதோ படிக்கிறேன்னு பாத்தா, இத வெச்சு விலையாடிகிட்டு இருக்கியா நீயி... போடா போயி வெலைய பாருடா'. என்றார். 'அப்பா, அது எனக்கு வேணும்' என்றேன் மீண்டும். 'தருவா போடா'. என்றார் அதே வேகத்துடன்.


இரண்டு நாட்கள் உம்மென்றிருந்தேன். கோபமாக இருந்து காட்டி காரியம் சாதித்துகொள்ளும் பழக்கம் என்னிடம் இல்லை. ஏனெனில் என் அப்பாவிடம் இதெல்லாம் பலிக்காது. இருந்தாலும் இந்த விசயம் எனக்கு மிகுந்த வருத்தத்தை தந்தது. 'ஏன் உம்னு இருக்கான்' என்று அவ்வப்போது அம்மாவிடம் கெட்டுக்கொண்டிருந்தார். 'என்னவோ யாருக்கு தெரியும்' என்றாள் அம்மா. ‘அந்த பேப்பரை கொடுத்துட்டேன்ல அதான் இப்படி இருக்கான்’ என்று கூறிக் கொண்டார். அது பேப்பராம் அவருக்கு என நினைத்துக் கொண்டேன். அதற்கு பின்னால் அந்த ட்ரேடை நான் தொடவே இல்லை. என் தங்கை ஆசைக்காக வைத்துக்கொண்டு, பின் எங்கே போட்டாளோ தெரியவில்லை. கொல்லையில் வெந்நீருக்காக உள்ள பாய்லரில் எரிப்பதர்காக அதை அம்மா பயன் பயன்படுத்தியிருக்கலாம்.


இப்படி செய்துவிட்டதன் பொருட்டு மனம் வருந்தி, என் பிறந்தநாள் அன்று பரிசாக வாங்கி வந்து 'இதோ பார்..' என அப்பா அதிர்ச்சியளிப்பாரோ என்று நினைத்துக் கொண்டேன், அல்ப ஆசை தான். பிறந்தநாள், பள்ளி தேர்ச்சி, தீபாவளி, பொங்கல், என்று வரிசையாக போனது எந்த ஆச்சரியமும், அதிர்ச்சியும் ஏற்படவில்லை. வெறும் தினங்கள் தான் கழிந்து போயின.
ஒரு சமயத்தில் என்னகே மறந்து போனது. ஆனால் அதன் வலி எப்போதும் தொடர்ந்தபடியே இருந்தது. எப்போதாவது நினைப்பு வரும், ஒவ்வொரு முறையும் தோற்கடிக்கப்பட்டவன் போல் உணர்ந்தேன். யோசித்து பார்த்தபோது நான் ஆசைபட்டதை மனமுவந்தோ, என் ஆசை நிறைவேறும் பொருட்டோ எதையும் அவர் செய்ததில்லை என புரிந்தது. என் கண்களை சந்தித்து பேசியதாக கூட நினைவில்லை.


படிப்பு, வேலை என சென்னை, தில்லி, புனே, பங்களூர், என்று ஊர் ஊராக செல்லவேண்டியிருந்தது. பல இனமொழி மக்களிடம் பழகி, வேலையை தக்கவைத்து கொள்ளும் பொருட்டு பல சாகசங்கள் புரிந்து, பனியிலும், வெய்யிலிலும் அலையவேண்டியிருந்தது. மாதங்கள், வருடங்கள் என்று பல நாட்கள் வீட்டைவிட்டு வெளியே இருந்திருக்கிறேன். அப்பாவிற்கு, நான் எப்போது ஊருக்கு வருகிறேன் என்ன செய்கிறேன், எதுவும் தெரியாது. அதில் எதிலும் அவருக்கு பெரிய ஆர்வமிருந்ததில்லை.


பல தினங்களுக்கு பின் கும்பகோணம் வந்திறங்கியபோது நினைவிற்கு வந்தது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. கும்பகோணம் கூட வளர்ச்சி அடைந்துவிட்டிருந்தது, சாமான்களுடன் ஆட்டோவில் வந்திறங்கியபோது, அம்மா எதிர்கொண்டு வாசல்வரை வந்து 'வாடா..' என்றாள். ஊர் இன்னும் முழுசாக விழிப்பு கொள்ளவில்லை, தெருவில் பெண்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக, வாசல் பெருக்கிக் கொண்டிருந்தார்கள்.


சாமான்களை உள்ளே வைத்தபோது 'அப்பா வாக்கிங் போயிருக்காங்க' என்றாள். குளித்துவிட்டு வெளியே வந்து பார்த்தபோது வாசலில் தள்ளுவண்டியில் காய்கறி வாங்கிக் கொண்டிருந்தாள் அம்மா. 'இது வாங்கிக்கவா, இது வாங்கிக்கவா' என்று எனக்கு பிடித்தவற்றை திரும்பி பார்த்து கேட்டுக் கொண்டாள். 'ஆரது' என்றாள் காய்கறிகாரி மிகுந்த அக்கறையுடன், 'எங்க புள்ளதான் ஊர்லெந்து வந்திருக்கு' என்ரதும், 'அப்படியா,... நல்ல இருக்கிங்களா தம்பி..' என்றாள் என்னை பார்த்து. யாரென்று நினைவில்லை, முன்பு பார்த்திருக்கலாம். 'ம்.. நல்லா இருக்கேன்' என்று மட்டும் கூறினேன். தங்கை வீட்டிற்காக கொடுக்க வைத்திருந்த பொருட்களை தனியே வைத்து, மற்றவற்றை மேஜை மீது வைத்து விட்டு உள்ளே சென்றேன்.


அப்பாவின் பேச்சரவன் கூடத்தில் கேட்டது. நான் திரும்பி போனபோது, முன்பக்கம் குனிந்து, கண்களை சுருக்கி வைத்திருந்தவைகளை பார்த்துகொண்டிருந்தார், வயதானதினால் ஏற்பட்ட பார்வை குறைவிலிருந்து அவர் இப்படிதான் பார்க்கிறார். அவர் பார்வைக்கு படும்படி சற்று தொலைவில் கைகட்டி நின்ற போது, 'என்னடா.. எப்படா வந்தே..' என்றார் என்னை பார்த்து சிரித்தபடியே.



கே.ஜே. அசோக்குமார்
kuppamailto:kuppa.ashok@gmail.com

Thursday, August 20, 2009

அறிமுகம்

எழுது. எழுத்தே அதன் ரகசியம். - சுந்தர ராமசாமி.

எழுதுவதென்பது வாசிப்பு திறன் கொண்ட அனைவருக்கும் மிக உவப்பான செயல். அதிலும் மற்றவகளிடமிருந்து பெறும் அங்கீகாரம், அவ்வெழுத்தின் மீதான நம் நம்பிக்கையை அடுத்த படிநிலைக்கு கொண்டு செல்கிறது. அங்கீகாரத்தின் பலநிலைகளின் ஒன்றாக இப்பிளாக்கை எடுத்துக்கொள்ளலாம் அல்லது எனக்கு நானே கூறிக்கொள்ளும் மனன செய்யுளாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

எதுவாகினும் அது உங்கள் கையில் உள்ளது. எத்தனை பேரை சென்றடையும் என்று தெரியாது. ஆனால் சென்றடையும் ஒவ்வொருவரையும் ஏதோ ஒரு வகையில் மனஎழுச்சி கொள்ள வைக்குமெனில் அதுவே நான் பெற்ற பெரும் அங்கீகாரம்.

இச்சிறு அறிமுகத்துடன் ஆரம்பிக்கிறேன், வாருங்கள் சேர்த்து பயணிக்க உங்களை அன்புடன் அழைக்கிறேன்.

கே.ஜே. அசோக்குமார்.