தமிழகத்தின் உண்மையான பிரச்சனைகள் என்ன என்பதை யாராவது நமக்கு
சொன்னால்தான் உண்டு. அதுவரை நமக்கு தெரியப்போவதில்லை.
தொலைக்காட்சி செய்தி சேனல்களில் சில குறிப்பிட சேனல்களை
மட்டுமே தினம் நாம் கவனிக்கிறோம் என நினைக்கிறேன். அல்லது மற்றவைகளை முழுமையாக ஒரு
அரைமணி நேர செய்திகளின் தொகுப்பை பார்ப்பதில்லை என தோன்றுகிறது. ஒரு நாள் சன், கலைஞர், ஜெயா டிவிகளை தவிர்த்து புதியதலைமுறை, தந்தி, ராஜ், ஜீ, போன்ற டிவி சேனல்களைப் பார்க்கும்போது
எவ்வளவு விஷயங்களை தவற விடுகிறோம் என்று தெரிகிறது. ஒரு இரண்டு மணிநேரம் தொடர்ந்து இந்த சேனல்களைப்
பார்க்கும்போது அவைகள் கூறும் செய்திகளின் பரப்பு மேற்சொன்ன டிவிகளின் பரப்பை விட
மிக அதிகம். சன்,
கலைஞர், ஜெயா போன்ற டிவி சேனல்கள் தங்களின் கொள்கை/நிலைப்பாட்டை
பரப்பும் ஊடகமாக மட்டுமே இருக்கின்றன அத்தோடு அவர்களின் வழக்கு நிலைகளை கூறாமல் மற்றவர்களின்
வழக்கு செய்திகளை கூறுவதில் அதிக ஆர்வம் காட்டுவதாக இருக்கும்.
தமிழகத்தில் நிலவும் தண்ணீர், மின்சாரம், டாஸ்மார்க், கொசுக்கள், ஆற்றுமணல்/குவாரி கொள்ளை, ரியல் எஸ்டேட், கிரானைட்/மலைக் கொள்ளை, வட்டிகாரர்களின் கொள்ளை போன்ற என்ற பிரச்சனைகளைப்
பற்றியும் இந்த மூன்று சேனல்கள் சொல்வதில்லை. ஆனால் உண்மையில் இவைகள்தாம் தமிழகத்தில்
நிலவும் மிக நீண்ட நாளைய பிரச்சனைகள். இவைகளை தீர்க்காமல் எந்த பிரச்சனைகளைப் பற்றி
பேசுவதும் மிகப் பெரிய தவறு என்று நினைக்கிறேன்.