Wednesday, April 22, 2026

கலை இலக்கியங்கள் மீது நமக்கு ஏன் ஆர்வமிருப்பதில்லை

 


ஒவ்வொரு சமூகமும் தன்னை புதுப்பித்துக் கொள்ள கலை இலக்கியங்களின் மீதான நமது பேரார்வம் மிக முக்கியமானது. கலை இலக்கியங்கள் என்பவை பணம் சம்பாதிக்கும் ஆர்வத்திற்கு எதிரானது என கருதப்படுகிறது. சமூக சூழலில் எப்போதும் பணம் ஒரு பிரதானமான சேர்க்கை நோக்கம்.

கலை இலக்கியத்தில் ஆர்வம் கொண்டவர்கள் மது, மங்கை என்று கெட்டுப் போகிறவர்கள் என்ற எண்ணம் இருக்கும். அதற்கு சந்திரபாபு, கண்ணதாசன் போன்றவர்களை உதாரணமாக சொல்வார்கள். குடித்துச் செத்தவர்கள் அல்லது பெண்களின் பின்னே அலைபவர்கள் என்று சொல்லகேட்கலாம். உண்மையில் சினிமா, கலையின் முக்கிய வடிவம் அல்ல என்று பலருக்கு தெரிவதில்லை.

கவிதை, நாவல், நாடகம், ஓவியம், சிற்பம், பாட்டு, இசை போன்றவைகள் கலையின் முக்கிய வடிவங்கள், தனிப்பட்ட ஆர்வமும், கலையின் மீதான தீவிர உணர்ச்சியும் (passion) ஆளுமையும் இல்லாமல் இத்துறைகளில் ஒருவரால் ஜொலிக்க முடியாது. அவை மிக இளம்வயதிலிருந்து தன்னுள்ளே வளர்த்து, பயிற்சிப் பெற்று அதை தன் வாழ்வின் ஒரு பகுதியாக ஆக்கிக் கொள்ளாமல் வெற்றி பெறமுடியாது.

மிக இளம் வயதில் கவனத்தோடு படிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படும். பாடத்திட்டம் தவிர மற்ற செயல்பாடுகள் இன்ப நுகர்ச்சியாக கருதப்படும். கவிதை எழுதியதற்காக கட்டிவைத்து உதைக்கப்பட்ட மாணவர்கள் உண்டு. பெண் பிள்ளைகளுக்கு ஒரு வயதிற்கு மேல் இசை, நாட்டியம் போன்றவற்றில் அனுமதி மறுக்கப்படுகிறது. கலை, இசை அதற்கு பின் தடுக்கப்படும் ஒரு துறை விளையாட்டு. செஸ் போன்றவைகளை அனுமதிக்கும் நபர்கள், ஹாக்கி, தடகள போட்டிகளுக்கு சுத்தமாக அனுமதி அளிப்பதில்லை.

கலை இலக்கியமற்ற ஒரு சமூகம், கொஞ்சம் கொஞ்சமாக தன் முனை மழுங்களை விரைவில் அடைவதை காணலாம். எந்த உயிர்ப்புமின்றி ஜடமாக இருப்பதை காணமுடியும். ஜப்பான், சீனா போன்ற நாடுகள் கலை இலக்கியத்தை புறந்தள்ளி வெறும் தொழிற்நுட்பத்திற்கு பின்னே சென்றதன் விளைவு அச்சமூகங்கள் நீரற்ற பாலைவனம் போல ஆகிவிட்டன. அங்கு இருக்கும் தொழிற்நுட்பங்கள் அனைத்தும் பிற சமூகங்கள் கண்டுபிடித்தவை. அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகள் தங்களை கலை இலக்கியங்களின் வழியாக எழுத்து சமூகமாக தன்னை மாற்றிக் கொண்டுவிட்டன. தொழிற்நுட்பங்கள் மாறி கற்பனைகளின் வளர்ச்சியில் இருக்கின்றன.

கலை இலக்கியத்தின் வழியாக கிடைக்கும் கற்பனையின் துணைதான் அவர்களின் புதிய கண்டுபிடிப்புகளாக தொடர்கின்றன். இன்றிருக்கும் புதிய கண்டுபிடிப்புகளின் பேட்டன்கள் இந்த நாடுகளில் மட்டுமே உள்ளன. நொபல் பரிசின் எல்லா துறைகளிலும் பரிசு பெறும் அளவிற்கு இந்த நாடுகள் மட்டுமே வளர்ச்சியை பெற்றுள்ளன.

தொழிற்நுட்பங்கள் காலாவதி ஆகும். கலை இலக்கியம் காலாவதி ஆவதில்லை.

வெற்றிகரமான வாழ்விற்கு தொழிற்நுட்பம் தேவை, ஆன்ம‌ நிறைவான வாழ்விற்கு கலை இலக்கியம் அவசியம்.


 

No comments: