நான் கல்லூரி விடுதியில் தங்கி படித்துக்கொண்டிருந்தபோது
நண்பர்கள் எல்லாம் சேர்ந்து விடுமுறைக்கு அதில் இருந்த இருவர் சேர்ந்த ஒரு கிராமத்திற்கு
செல்லலாம் என்று முடிவானது. பசுமையான கிராம பயணம் செல்லவேண்டும் என்பது எங்களின் அனைவரின்
விருப்பம். நான் படித்தது திருச்சியில். அங்கிருந்து ஒரு 300 கிமீ தொலைவில் இருந்தது அந்த கிராமம். பஸ்ஸைப் பிடித்து காலையில்
இறங்கியதும் அங்கிருந்த கிராமமக்கள் எங்களை பிடித்துக்கொண்டார்கள். எங்கிருந்து வருகிறீர்கள் யாரை காணவேண்டும்
என்று அன்புடன் விசாரித்தார்கள். சொன்னது அவர்களுக்கு தெரிந்திருந்தது. அவரின் மகன், அவரின் பேரன் என்று சொல்லி அவர்களின் குடும்பத்தை சொன்னார்கள்.
அவர்கள் மட்டுமல்ல எல்லோரையும் தெரிந்தே இருந்தது. ஒவ்வொருவரின் பூர்வீகம் அவர்களின்
கையில்தான். சிலர் வந்து நண்பர்களின் வீட்டிற்கு கூடவந்து விட்டு பேசிவிட்டு சென்றார்கள். அத்தனை அன்போடு அவர்கள் நடந்துக்
கொண்டது ஆச்சரியமாக இருந்தது. சிறு நகரத்திலிருந்து வந்த எங்களுக்கு பக்கா கிராமமான
ஊரில் ஏற்படும் எந்த அனுபவமும் புதிதுதான்.
மாலை எங்களை கிராம உலா அழைத்து சென்ற அந்த இருநண்பர்கள், ஏரி, ஊருணி, வயல்கள், தென்னந்தோப்பு என்று அனைத்தையும் காட்டினார்கள்.
வயல்களின் பசுமையை காணக்காண தீரவேயில்லை. தென்னந்தோப்பில் எங்களுக்காக சொல்லி புதிதாக
இறக்கிய இளநீர்களை தந்தார்கள்.